privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது!

மூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது!

-

மூவர் தூக்கு நிறுத்தி வைப்பு! மக்கள் போராட்டம் வென்றது! -

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அநீதியாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராக வந்திருந்தனர். மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர். மற்றும் வைகோ, பேரறிவாளன் பெற்றோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அரசியல் ஆர்வலர்களும், தோழர்களும் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இடைக்காலத் தடை உத்திரவு வந்ததும் நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் உற்சாகத்தை முழக்கங்களால் வெளிப்படுத்தினர்.

இதுவே இறுதி வெற்றியல்ல என்றாலும் முக்கியமான வெற்றிதான். ஏனெனில் நீதிமன்றங்களும், நீதிபதிகளும் எப்போதும் சட்டப்படி மட்டும் தீர்ப்புகள் வழங்குவதில்லை. சட்டங்களுக்கான விளக்கங்களே ஆளும் வர்க்கங்களுக்கேற்ப மாற்றி மாற்றி அளிக்கப்படும். இந்த வழக்கில் கூட இது ஒரு முக்கியமான அரசியல் ரீதியான வழக்கு, இந்திய இறையாண்மைக்கு சவால் விட்டிருக்கும் வழக்கு என்று கூட சொல்லி இந்த விசாரணை மனுக்களை நிராகரித்திருக்கலம். அப்படி செய்திருந்தால் அதுவும் சட்டப்படி சரிதான் என்று நீதிபதிகள் பொழிப்புரை அளித்து நியாயப்படுத்தலாம்.

எனில் இப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏன் இத்தகைய தீர்ப்பை வழங்க வேண்டும்? இதற்கு ஒரே நியாயமான பதில் தமிழக மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்கள்தான். அந்தப் போராட்டங்கள் உருவாக்கிய அரசியல் மேலாண்மைதான் இத்தகைய இடைக்கால உத்திரவு வந்ததற்கு காரணம் என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ளலாம். ஆகவே இறுதி வெற்றி நமக்கு கிடைக்க வேண்டுமென்றாலும் நாம் இந்த போராட்டங்களை தொடர்வது அவசியம். பெரிய அரசியல் கட்சிகளெல்லாம் கை விரித்து விட்ட நிலையில் மாணவர்கள், இளைஞர்கள், வழக்குறைஞர்கள், பெண்கள் என தமிழக மக்கள் அனைவரும் அவர்களில் கட்சி சார்பு உள்ளவர், இல்லாதவர் அனைவரும் போராடியிருக்கின்றனர்.

ஆயினும் இந்த அரசியல் ரீதியாக திரட்டப்படாத தன்னெழுச்சியான போராட்டங்கள் திசை திரும்புவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த வகையில் சிலர் அரசியலே வேண்டாம் என்று இந்தப் போராட்டங்களை பார்க்கிறார்கள். அநேகமான தமிழின ஆர்வலர்கள் கூட இந்தப் போராட்டங்கள் எதுவும் தீவிரமாக நடக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்தனர். ஆனால் அந்த சமரசத்தை அவர்களது அணிகளே ஏற்கவில்லை. கோவையில் நடந்த ரயில் மறியல், மத்திய அரசு அலுவலங்கள் முற்றுகை என்று போர்க்குணமிக்க முறையில் நடந்த போராட்டத்தை அதற்கு சான்றாக கூறலாம்.

இந்தப் போராட்டத்தின் வீச்சால்தான் இன்று சட்டசபையில் ஜெயலலிதா சிறப்புத் தீர்மானம் ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றியிருக்கிறார். நேற்று வரை எனக்கு அதிகாரமில்லை என்று துண்டித்துக் கொண்டு பட்டும்படாமலும் பேசியவர் இன்று மாற்றி பேசுவது ஏன்? அதிலும் கூட ஜெயலலிதா உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதன்படி தமிழக மக்களின் உணர்வை கருத்தில் கொண்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைப்பதாக கூறியிருக்கிறார். இதன்படி இந்த முடிவு அவரது விருப்பத்தின்பாற்பட்டதல்ல. தமிழக மக்கள் ஏற்படுத்தியிருக்கும் நிர்ப்பந்தம். அதுவும் மக்கள் போராட்டங்களை தடுத்து நிறுத்த முடியாத போலீசு அதிகாரிகளின் கருத்தாகக் கூட இருக்கலாம். பாசிச ஜெயாவின் ஆட்சி என்பது அதிகார வர்க்கம், போலீசின் ஆட்சிதானே?

ஏற்கனவே ஈழத்தாய், கருணைத் தாய், சமூக நீதிகாத்த வீராங்கனை என்ற பட்டங்களோடு இனி மூவரைக் காத்த தாய் என்ற அருவருப்பான பட்டமும் கூட கிடைக்கலாம். ஆனால் ஜெயலிலிதா அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதால் எந்தப் பலனும் இல்லை என்று சோ, சு.சுவாமி, பா.ஜ.க , காங்கிரசு கும்பல்கள் கூறியிருக்கின்றது. அதாவது குடியரசுத் தலைவரின் முடிவை மாற்றுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள். தற்போது உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தடையைக் கூட இவர்கள் கசப்பாக விழுங்க முடியாமல் திணறுகிறார்கள்.

சென்னை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு தடை கொடுக்கும் என்பதை நான் நம்பவில்லை, ஆச்சிரியமாக இருக்கிறது என்கிறார் சோ. அவரும் கூட சட்டங்களை கரைத்துக் குடித்தவர்தானே. அவருக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றால் அது சட்டம், வழக்கறிஞர்களின் திறமை மட்டுமல்ல. ஏற்கனவே கூறியது போல இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நீதிமன்றத்திற்கே கூட ஒரு அரசியல் அழுத்தத்தை கொடுத்ததற்காக கிடைத்த வெற்றி.

எனினும் பார்ப்பனக் கும்பல், காங்கிரசு கும்பல், பா.ஜ.க கும்பல் மூன்றுமே இத்தீர்ப்பை ஏற்கவில்லை என்பதோடு இறுதியில் மூவரும் தூக்கில்போடப்படுவார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள். இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு கொண்ட இரு கட்சி தலைவர்களும் இப்படித்தான் கூறியிருக்கிறார்கள்.

மறுபுறம் பாசிச ஜெயாவின் மீதான பிரமைகளை வளர்த்துக் கொண்டு தமிழினி ஆர்வலர்கள் சட்ட வாதத்தையும், சமரசத்தையுமே முன்வைத்து பேசுவார்கள். ஆனால் இவை நமது இறுதி வெற்றிக்கு பயன்தராது.

ஆகவே இறுதி வெற்றி பெறவேண்டுமானால் மக்கள் அரங்கிலும், அரசியல் அரங்கிலும் போராட்டங்கள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற வேண்டும். அதை எள்ளி நகையாடும் அரசியல் அற்ற கோமான்களின் கையில் இந்தப் போராட்டம் சிக்கிவிடக்கூடாது. தற்போதைய நிலைமை அத்தகைய அபாயத்தைக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுகிறோம். தற்போது தமிழக அளவில் நிர்ப்பந்தம் ஏற்படுத்தியிருக்கும் இந்தப் போராட்டங்கள் இனி மத்திய அரசை நிர்ப்ந்திக்கும் வண்ணம் வளர வேண்டும்.

எனவே இந்த இடைக்கால வெற்றிகளின்பால் நாம் அதிகம் மகிழாமல் இறுதி வெற்றி கிடைக்கும் வரை போர்க்குணமிக்க போராட்டங்களை தொடருவோம். மூவர் மீதான தூக்கை ரத்து செய்வோம்.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: