privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்மூவர் தூக்கை ரத்து செய்! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்!!

மூவர் தூக்கை ரத்து செய்! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்!!

-

பேரறிவாளன், சாந்தன், முருகன் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரியும், ஈழம் மீதான போர்க்குற்றம் புரிந்த காங்கிரசு அரசை மக்களிடம் அம்பலப்படுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகள் தமிழகம் முழுவதும் மக்களிடையே பிரச்சாரம் செய்தும், ஆர்ப்பாட்டம் நடத்தியும் போராடி வருகின்றன. அவற்றின் சில போராட்டக் காட்சிகளை இங்கே பதிவு செய்கிறோம்.

 

விழுப்புரம்:

விழுப்புரத்தில் வி.வி.மு, பு.மா.இ.மு சார்பாக 150 பேருக்கும் மேற்பட்டோர் நடத்திய ஆர்ப்பாட்டம் நகர மக்களிடம் இப்பிரச்சாரத்தை வீச்சாகக் கொண்டு சென்றது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் ம.க.இ.க மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். இதை ஒட்டி மூன்று நாட்களாக தஞ்சை வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

விருத்தாசலம்:

விருத்தாசலம் திரு. டி.காளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லரியில் மாணவர்களை திரட்டி சாலை மறியல் போராட்டமும் ஊர்வலமும் மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தால் நடத்தப்பட்டது. முதல் நாள் விடுதியில் சென்று பகத் சிங் பற்றி விளக்கி பேசப்பட்டது. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் தூக்கில் தொங்காமல் இருக்க வேண்டுமென்றால் அது மாணவர்களால்தான் முடியுமென்று பேசியதை புரிந்து  கொண்ட மாணவர்கள் முழுமனதுடன் போராடினார்கள்.

ஓசூர்:

21- ஆண்டுகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோர் சிறைதண்டனையும் சொல்லமுடியாத கொடுமைகளையும் அனுபவித்துள்ளனர். இவ்வளவு பெரிய தண்டனையை வழங்கிய பின்னரும் மரண தண்டனை என்பது என்னவகை நீதி?  என்ற  கேள்வியின் அடிப்படையில் ஓசூரில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியுடன் இணைந்து, மாவட்டத் தலைநகரமான கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில், மாலை 5.30 மணியளவில் செங்கொடிப் பதாகையுடன், குழந்தைகள், பெண்கள், பெரியவர்களுமாக ஒன்று திரண்டு விண்ணதிரும் முழக்கங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  இவ்வார்ப்பாட்டத்திற்கு  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமைத்தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட தலைவர் தோழர் பரசுராமனும், விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர்  சரவணனும்  எழுச்சிகர கண்டன உரையாற்றினர். இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் ஆதரவளித்தனர்.

மதுரை:

மதுரை, 27 ஆகஸ்ட் தலைமை தபால் நிலையம் முன்பு  காலையில்  ம.க.இ.க., பு.ஜ.தொ.மு, வி.வி.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது தோழர் மருது தலைமை தாங்கினார். உசிலை விவிமு தோழர்,குருசாமி, மகஇக மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் ஆகியோர் உரையாற்றினர்.

திருச்சி:

இந்திய அரசே! பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்! அனைவரையும் விடுதலை செய்! என்ற தலைப்பில் 27.8.2011 இன்று காலை திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பிரசுரம் நூற்றுக்கணக்கான சுவரொட்டி என தயாரித்து விரிவாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.

கருணை அடிப்படையில் தூக்கு தண்டனனையை ரத்து செய்ய கோரும் தமிழின ஆர்வலர்கள் மத்தியில், பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனை என்பதே சட்ட விரோதம் என்றும் அடித்து துன்புறுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டு, 21 ஆண்டுகள் சிறையில் தள்ளி அதன் பின் தூக்கு தண்டனை அறிவித்து இருப்பது அயோக்கியத்தனமானது என்பதை விளக்கியும் ராஜீவை கொன்ற கொலையாளிகள் என காங்கிரசு பேடிகள் கூக்குரல் இடுவதை ஒரு வாததிற்கு உண்மையென்றே எடுத்துக் கொண்டாலும் அது காங்கிரசு, ராஜீவ் கும்பலின் குற்ற செயலுக்கான எதிர்வினையே என்பதை விளக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் ம.க.இ.க.தோழர்கள், பு.மா.இ.மு.அமைப்பை சேர்ந்த மாணவ-மாணவிகள்,பெண்கள் விடுதலை முன்னணியினர், பு.ஜ.தொ.மு.வை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள், தரைக்கடை வியாபாரிகள், பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் தோழர்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

உடுமலை:

உடுமலை பகுதியில் தூக்கு தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு சார்பில் தோழர் காஞ்சனா தலைமையில் ஆர்பாட்டம்  நடைபெற்ற்து. இதை ஒட்டி பகுதி முழுவதும் வீச்சான பிரச்சாரம் நடத்தப்பட்டது.

கோவை:

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து  செய் அனைவரையும் விடுதலை செய் என்ற முழக்கத்துடன்  கோவை  தமிழ்நாடு  உணவகம் முன்பு ம.க.இ.க,  மற்றும் பு.ஜ.தொ.மு சார்பில் ஆர்ப்பாட்டம் 27 -8 -2011 அன்று  நடந்தது. தோழர் விளவை ராமசாமி தலைமை வகிக்க தோழர் மணிவண்ணன் உரையாற்றினார் .  ஆர்ப்பாட்டத்தில்  தடா எனும் கொடிய சட்டத்தின் கீழ் சித்திரவதை செய்து பேற்ற வாக்குமூலத்தை வைத்து தூக்கு தண்டனை அளித்து 21 ஆண்டுகள் சிறை தண்டனை அதுவும் போதாதென்று மரண தண்டனையா ?   அமைதிப்படை முதல் முள்ளிவாய்க்கால் வரை பல்லாயிரம் ஈழ தமிழர்களை  படுகொலை செய்த காங்கிரஸ் போர்க்குற்றவளிகளுக்கு என்ன தண்டனை என்று எழுப்பப்பட்ட வினாக்கள் மக்கள் மத்தியல் நல்ல வரவேற்ப்பை தந்தது.

கோவை ம.உ.பா.மை:

ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வலியுறுத்தி. ராஜீவ் கொலைவழக்கின் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு நகல் எரிப்புப்போராட்டம். கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலைய வாயில் முன்பு 29 8 2011 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தால் எழுச்சியுடன் நடத்தப்பட்டது.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் கோவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் T வெங்கடேசன் மாவட்ட தலைவர் தோழர் ராஜன், பொருளாளர் தோழர் அபுதாகிர் மற்றும் செயற்குழு உறுப்பினர் தோழர் ஹைதர் கலந்து கொண்டு கைதாகினர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் அனைத்து சாதி அர்ச்சக மாணவர் சங்கம், மற்றும் மனித உரிமைப்பாதுகாப்பு மையம் சார்பில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை:

சென்னையில் பனகல் மாளிகை அருகே ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விண்ணதிரும் முழக்கங்களுடனும் செங்கொடிகள், பதாகைகள், முழக்கத்தட்டிகளுடனும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் கணிசமான அளவில் பெண்களும், குழந்தைகளும் உண்டு.

வீடியோ:

ம.க.இ.க மாநில இணைச் செயலாளார் தோழர் காளியப்பன் மதுரையில் நடந்த புதிய கலாச்சாரம் இதழ் வாசகர் வட்டத்தின் கூட்டத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் மீதான தூக்குத்தண்டனையை எதிர்த்து பேசிய பேச்சின் ஒரு பகுதி

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: