privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயா பிளஸ் வழங்கும் ''தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2''

ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2”

-

ஜெயா பிளஸ் வழங்கும்  தாலியறுக்கும் டாஸ்மாக் – சீசன் 2
கருணாநிதி அரசின் இலவசத் திட்டங்களைச் சாடிய ‘அம்மா’வின் படத்தைப் பெட்டியில் ஒட்டிக் கொண்டு, ‘அம்மா’வுடன் இலவச கவர்ச்சி பட்ஜெட்டை சமர்ப்பிக்க வரும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.

ழைகளின் கோவணத்தைப் பிடுங்காத குறையாக வரிவிதிப்பைத் தீவிரப்படுத்துவது, தமிழனைப் போதையில் தள்ளி சாராயத்தின் மூலம் கிடைக்கும் கொழுத்த வருவாயிலிருந்து எலும்புத்துண்டு போல கவர்ச்சித் திட்டங்களுக்கு வாரியிறைப்பது என்ற உத்தியுடன் கிளம்பியிருக்கிறது, பாசிச ஜெயா அரசு. தமிழச்சிகளின் தாலியறுத்து இலவச கலர் டிவிக்களை கருணாநிதி கொடுத்தார் என்றால், அதே சாராய உத்தியோடு கலர் டிவிக்களுக்குப் பதிலாக மிக்சி, கிரைண்டரைக் கொடுக்கக் கிளம்பியிருக்கிறார், ஜெயலலிதா. மதுபானங்கள் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 6,246 கோடி கிடைத்த விற்பனை வரி, இந்த ஆண்டு ரூ. 7,755 கோடியாக அதிகரிக்கும் என்றும், கடந்த ஆண்டைவிட கலால் வரி மூலம் ரூ. 2,076 கோடி கூடுதலாகக் கிடைக்கும் என்றும் ஜெயா அரசின் 201112ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில்(பட்ஜெட்டில்) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முந்தைய கருணாநிதி ஆட்சியைப் போலவே தமிழக மக்களைக் குடிபோதையில் ஆழ்த்தி, சாராய விற்பனை மூலம் கூடுதலாகக் கொள்ளையடிக்க ஜெயா அரசு தீர்மானித்துள்ளது.

இலவசத் திட்டங்களை தி.மு.க. அரசு அறிவித்தபோதெல்லாம், மக்களை ஏழைகளாக வைத்திருக்கும் திட்டங்கள் என்று கேலி செய்த ஜெயலலிதா, இப்போது 6ஆம் வகுப்பு முதலாக மாணவர்களுக்கு பேண்ட் சர்ட், மாணவிகளுக்கு சல்வார் கமீஸ், ஏழைகளுக்கு மிக்சிகிரைண்டர், மின்விசிறி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்  என 8,900 கோடி ரூபாய்க்குப் புதிய திட்டங்களையும் சலுகைகளையும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளதோடு, வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஆடுமாடுகள் தரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

போலி கம்யூனிஸ்டுகளால் அன்றாடம் துதிபாடப்படும் ஜெயா, பட்ஜெட்டுக்கு முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் அரசு வருவாயைப் பெருக்குவது என்ற பெயரில், இதற்கு முன் 4 சதவீதமாக வசூலிக்கப்பட்டு வந்த மதிப்புக் கூட்டு வரியை(வாட் வரியை) 5 சதவீதமாக அவசர அவசரமாக உயர்த்தினார். இக்கூடுதல் வரி விதிப்பால் சமையல் எண்ணெய் விலை கிலோ ரூ.2 முதல் 3 வரையிலும், சிகரெட் விலை பாக்கெட்டுக்கு ரூ.5 வரையிலும் அதிகரித்துள்ளதோடு, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென அதிகரித்துள்ளன. இக்கூடுதல் வரி விதிப்பால் மொத்தமாக அரசுக்கு ரூ.5200 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி, பட்ஜெட்டுக்கு முன்னதாக வரிகளைப் போட்டுவிட்டு, இப்போது வரிகளே இல்லாத பட்ஜெட் என்று மாய்மாலம் செய்தும், இலவசக் கவர்ச்சித் திட்டங்களின் ஒளிவெள்ளத்தில் வரிக் கொள்ளையை மூடிமறைக்கவும் பாசிச ஜெயா கும்பல் எத்தணிக்கிறது.

வழக்கம் போலவே, “கருணாநிதி கஜானாவைக் காலியாக்கி ஒரு லட்சத்து ஓராயிரம் கோடி கடன் வைத்துவிட்டுப் போயுள்ளார்; அதைக் குறைக்கப் போகிறோம்” என்று சவடால் அடித்தார் ஜெயலலிதா. ஆனால், நிர்வாக சூரப்புலியாகப் பார்ப்பன ஊடகங்களால் சித்தரிக்கப்படும் ஜெயா, எந்த அளவுக்குக் குறைத்திருக்கிறார் என்று பார்த்தால், 31.3.2012இல் 1,18,801 கோடி ரூபாயாக மாநில அரசின் கடன் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நடப்பு நிதியாண்டின் கடன் மதிப்பு ரூ.17 ஆயிரம் கோடிக்கு அதிகரித்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையால் தமிழகத்தில் நீடித்துவரும் மின்வெட்டு 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும் என்று ஆரவாரத்துடன் அறிவிக்கிறார், அமைச்சர் நத்தம் விசுவநாதன். முந்தைய தி.மு.க. அரசின் மின்திட்டங்கள் நிறைவேறுவதால்தான் மின்தடை முற்றாக நீங்குகிறதே தவிர, இது ஜெயலலிதாவின் மூன்று மாத கால நிர்வாக சூரத்தனத்தால் விளைந்த சாதனை அல்ல.

“விலைவாசி உயர்வுக்கு மைய அரசுதான் காரணம்” என்றும், “தமிழக மக்களுக்கு நன்மை செய்ய விடாமல் மத்திய அரசு தடையாக இருக்கிறது, மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை” என்றும் ஆவேசமாகக் கூப்பாடு போடும் ஜெயலலிதா, “மைய அரசிடம் ரூ.2.5 லட்சம் கோடி கோரிய நிதியில் ரூ.10,000 கோடியாவது தமிழகத்துக்குக் கொடுத்திருந்தால், கூடுதலாக வரி போட்டிருக்க மாட்டோம்” என்று பழியை மைய அரசின் மீது சுமத்துகிறார். ஆனால், திட்டக்குழு விவாதத்தில் கலந்து கொண்டபோது, மாநில அரசு கேட்டதைவிட மத்திய அரசு அதிகமாகக் கொடுத்ததாகக் கூறியதும் இதே ஜெயாதான். இப்போது, கேட்டாலும் கொடுக்காதது மத்திய அரசு என்று சொல்பவரும் இவரேதான். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மைய அரசு அநியாயமாக உயர்த்தியபோது, மாநில அரசின் சார்பில் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் அளிப்பதாகப் பம்மாத்து செய்த ஜெயா, அக் கூடுதல் செலவை வாட் வரி விதிப்பின் மூலமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் விலையை ரூ.3 அளவுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாக உயர்த்தியும் மீண்டும் பறித்துக் கொண்டுவிட்டார்.

ஜெயா பிளஸ் வழங்கும்  தாலியறுக்கும் டாஸ்மாக் – சீசன் 2
தமிழச்சிகளின் தாலியை அறுக்கும் சாராயத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் ஜெயா.

முந்தைய கருணாநிதி அரசு “செம்மை நெல் சாகுபடி”, “ராஜராஜன்1000” என்றெல்லாம் பெயர் சூட்டிய ஒற்றை நாற்று நடவு என்று விவசாயிகளால் குறிப்பிடப்படுவதையே பெயர் மாற்றி “திருந்திய நெல் சாகுபடி” என்று அறிவித்துள்ள ஜெயா அரசு, திருந்திய நெல் சாகுபடித் திட்டத்தைப் பரவலாக்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இது தவிர, நவீன முறையில் கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தும் திட்டம், துல்லிய பண்ணையம், பி.டி. பருத்தியைப் பரவலாக்குதல், பயறு வகைகள்  எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் உகந்த பயிர் மேலாண்மையைக் கடைபிடித்தல், பசுமைக் குடில், துல்லிய பண்ணைய முறைகளில் காய்கறிகளைப் பயிரிடுதல், தோட்டக்கலைப் பயிர்களுக்கான அடர் நடவு முறை போன்றவை தீவிரமாகப் பரவலாக்குவது என்று அடுக்கடுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. பருத்தியைப் பரவலாக்கக் கூடாது என சில சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியதும், பி.டி. பருத்தியைப் பரவலாக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளாது என்று ஜெயா அறிவித்தார். ஆனால் தமிழக விவசாயிகள் பெரிதும் சார்ந்துள்ள தனியார் விதைக் கம்பெனிகள், பி.டி. பருத்தி விதைகளை விற்பதைத் தடுக்க அவரிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிற்சாலைப் பயன்பாட்டுக்காக அரசின் வசமுள்ள நிலங்களை ஒருங்கிணைத்தும், நில உரிமையாளர்களைப் பாதிக்காதவண்ணம் தனியார் நிலத்தைக் கையகப்படுத்தியும் நில வங்கி ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி அரசு சிப்காட் மூலமாக செய்து வந்த நிலப்பறிப்பு வேலையை, இப்போது ஜெயா அரசு நிலவங்கியின் மூலமாகச் செய்யப்போகிறது. பலியாட்டுக்கு மாலை போட்டுக் கொண்டு வருவதைப் போல, விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறித்து, விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றி நாடோடிகளாக்கும் இச்சதியை மூடிமறைத்துக் கொண்டு, விவசாய வளர்ச்சித் திட்டங்களை ஆரவாரமாக ஜெயா அரசு அறிவித்துள்ளது.

நேற்றுவரை ஜெயா ஆதரவு பார்ப்பன ஊடகங்கள், இலவசங்களே கூடாது, அதனால் மக்கள் சோம்பேறிகளாக்கப்படுகிறார்கள் என்று கூப்பாடு போட்டன. இப்போது ஜெயலலிதா அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களை “ஆக்கபூர்வமான திட்டங்கள்’’, “வளர்ச்சிக்கு வித்திடும் திட்டங்கள்’’, “கிராமப்புறத்துக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள்” என்றும் ஏற்றிப் போற்றி துதிபாடிக் கொண்டிருக்கின்றன. நிலத்தைப் பறிகொடுத்துவிட்டு ஜெயா அரசின் ஆரவார விவசாயத் திட்டங்களால் எந்த விவசாயி முன்னேற முடியும் என்பது இந்தக் கோயபல்சுகளுக்கே வெளிச்சம்.

_______________________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2011
__________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: