privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பாண்டிச்சேரி கெம்பாப் கெமிக்கல் ஆலை: காத்திருக்கும் மற்றுமொரு போபால் விபத்து?

பாண்டிச்சேரி கெம்பாப் கெமிக்கல் ஆலை: காத்திருக்கும் மற்றுமொரு போபால் விபத்து?

-

பாண்டிச்சேரி கெம்பாப் ஆலையில்
பாண்டிச்சேரி கெம்பாப் ஆலை விஷவாயு கசிவை கட்டுப்படுத்தும் முயற்சி

றக்க முடியுமா? போபால் விஷவாயு படுகொலைகளை!

போபால் விஷவாயுக் கசிவால் ஏற்பட்ட கொடூரங்களை நம்மில் எவரும் மறந்திருக்க மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களின் வாரிசுகளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் (இரண்டாம் தலைமுறையினர்) அதன் கொடூரத்தை தனது கருவிலிருந்தே சுமக்கின்றனர். இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இது தொடரும் என்று தெரியவில்லை.

ஆனாலும் மக்கள் விரோத அரசாங்கமோ இது போன்ற ஆலைகளைத் தடை செய்ய தொடர்ந்து மறுத்து வருகிறது. “இது போன்ற பேரழிவுகளை விபத்து என்றும், எதிர்பாராமல் நடைபெறும் இவைகளுக்கு பாதுகாப்பு வழிகளை சரி செய்து கொண்டால் விபத்தினைத் தவிர்த்து விடலாம்; நாட்டுக்குத் தேவையானதை உற்பத்தி செய்ய வேண்டுமல்லவா?” என்றெல்லாம் சில அறிவுஜீவிகள் கூறுகின்றனர்.

இது விபத்தா? ஒரு விபத்தின் மூலம் முதலாளித்துவம் பாடம் கற்றுக் கொள்ளுமா? நாட்டின் தேவை என்பது உண்மையில் யாருக்கானது?

அழிவின் விளிம்பில் பாண்டிச்சேரி மக்கள்

போபால் போன்று ஒரு பெரும் அழிவுக்கு உட்பட வேண்டிய நிலையிலிருந்து பாண்டிச்சேரியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் தப்பித்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல‌. இது வெறும் பீதியூட்டலோ, ஊதிப்பெருக்கி வெறுப்பைக் காட்டுவதற்காகவோ இதனைக் குறிப்பிடவில்லை.

கடந்த ஜனவரி 26 அன்று காலை சுமார் 7-30 க்கு குடியரசு தின‌ அணிவகுப்புகளும் கலைநிகழ்சிகளும் பாண்டிச்சேரியின் கடற்கரையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும்போது பாண்டிச்சேரியின் இன்னொருபுறம் காலாப்பட்டு என்ற இடத்திலுள்ள மக்கள் அலறியடித்துக் கொண்டு அரசு பொது மருத்துவமனையை நோக்கிச் சென்றுள்ளனர்.

பாண்டிச்சேரி கெம்ஃபாப் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் வி.ஆர். ரகுராமன் கூறுவதைப் படியுங்கள்.

“குளோரின்  வாயுவைக் கொள்கலனுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத‌விதமாகக் கசிந்துள்ளது. இவ்வாறு கசிவு ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் “குளோரின் உணர்கருவி” அன்று வேலை செய்யவில்லை. ஆனாலும் அங்கு வேலைசெய்து கொண்டிருந்த தொழிலாளி அதை உணர்ந்து எச்சரிக்கை செய்துவிட்டு உடனடியாக அதை நிறுத்தி விட்டார். இரண்டு நிமிடங்களில் தவறு கண்டுபிடிக்கப்பட்டு கசிவை தடுத்து நிறுத்தி விட்டோம். காற்று சற்று பலமாக இருந்ததால் தென்பகுதியில் கொஞ்சம் பரவி விட்டது.”

பாண்டிச்சேரி கெம்பாப் ஆலை விஷவாயு கசிவை கட்டுப்படுத்தும் முயற்சி
மருத்துவமனைக்கு தூக்சிச் செல்லப்படும் தொழிலாளி

கெம்ஃபாப் அல்காலிஸ் லிமிடெட் (Chemfab Alkalis Limited) ,  பாண்டிச்சேரியிலுள்ள காலாப்பட்டு என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் கெமிக்கல் ஆலை இது. நாளொன்றுக்கு 106 டன் காஸ்டிக் சோடாவும், சுமார் 90 டன் திரவ குளோரினும், ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஹைட்ரோ ஹைப்போ குளோரைட், ஹைட்ரஜன் வாயு போன்றவை இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிறுவனத்திற்கு இதேபோல‌ பெரிய கெமிக்கல் ஆலை ஒன்று கடலூரில் உள்ளது. பாண்டிச்சேரி தவளக்குப்பம் என்னுமிடத்தில் இவர்களுக்குச் சொந்தமான ஒரு ஆலையும் பிரச்சினையால் மூடப்பட்டுவிட்டது.

போபால் விஷவாயுக் கசிவு எதனால் ஏற்பட்டது? கொள்கலனுள் வைக்கப்பட்ட மிதைல் சயனேட் என்ற வாயு குளிரூட்டப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும். அந்த குளிரூட்டும் எந்திரம் பழுதாகி வேலை செய்யவில்லை. தொழிலாளர்கள் இதனை முறையிட்டும் நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளது. சில டிகிரி வெப்பம் ஏற கொள்கலன் வால்வுகள் வெடித்து விஷவாயு வெளியேறி விட்டது. பல இலட்சம் மக்களின் வாழ்க்கையே அழித்தொழிக்கப்பட்டு விட்டது.

கெம்ஃபாப் நிறுவனத்திலுள்ள எச்சரிக்கை மணி குளோரின் கசிந்தால்தான் வேலை செய்யும். அதனால் அது வேலை செய்கிறதா இல்லையா என்பது யாருக்கும் முன்கூட்டியே தெரியாது. எதேச்சையாக அந்த தொழிலாளி கவனித்து விட்டதால் (அதுவும் இரண்டு நிமிடத்தில்) வால்வை அடைத்து நிறுத்தி விட்டார். காற்றின் போக்கு தொழிலாளியின் பக்கமாக திரும்பியிருந்தால், தொழிலாளி முதலில் மயக்கமடைந்து இங்கும் ஒரு போபால் நிகழ்ந்திருக்கும். இது வெறும் பீதியூட்டல் இல்லை. இரண்டே நிமிடம்தான் என்று சொல்ல ரகுராமன் கூட உயிருடன் இருந்திருக்க முடியாது.

பழுது பார்க்கச் சொன்னதையே பழுது பார்க்காத மூலதனம் பழுதா இல்லையா என்று தெரியாததை பழுது பார்க்குமா? முதலாளித்துவத்தின் இலாப விதிதான் அதனை அனுமதிக்குமா? அப்படி முறையாக பராமரித்திருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

இரண்டே நிமிடம்தான் என்றுச் சொல்லியுள்ளார் ரகுராமன். அந்த இரண்டு நிமிடக் கசிவு அருகிலுள்ள மரஞ்செடி கொடிகளின் இலைகளை பொசுக்கி விட்டது. அருகிலுள்ள‌ குடியிருப்புகளில் வசிக்கும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைசுற்றலும் குமட்டலும் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை பதிவுப்படியே 395 பேருக்கு பாதிப்பு என்று தினமலர் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. அதில் குழந்தைகள் 13 பேர்.

இந்தத் தொழிற்சாலையில் இருந்து ஏழு கிலோமீட்டர் சுற்றளவிலேயே பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துமனை, புதுவை பல்கலைக்கழகம், புதுவை பொறியியல் கல்லூரி. புதுவை சட்டக் கல்லூரி போன்றவை அமைந்துள்ளன. அந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள‌ நான்கு ஊர்களின் மக்களையும் சேர்த்தால் 30,000- பேர் இப்பகுதியிலேயே வசிக்கிறார்கள்

இது மக்கள் அரசாங்கமா?

புதுநகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இதுகுறித்த தகவலை தெரிவிக்க காவல் நிலையம் சென்றுள்ளார். மக்களின் நண்பர்களான போலீசு “நீ ஒருவன்தான் ஊரில் இருக்கியா, போயா போய் உன் வேலையைப்பாரு” என்று விரட்டி விட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் பயந்துபோய் அரசு பொது மருத்துவமனைக்கும், அருகிலுள்ள பாண்டிச்சேரி….(பிம்ஸ்)….. என்ற தனியார் மருத்துவமனைக்கும் பதறியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். கருணைமிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் “காசு வாங்குவதற்காக சும்மா நடிக்கிறீர்களா?” என்று மக்களைக் கேவலப்படுத்தியுள்ளனர். மேலும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல், புறநோயாளியாக வைத்திருந்து முதலுதவி மாத்திரம் செய்து அவர்களை அவசர அவசரமாக வெளியே விரட்டியுள்ளனர்.

மக்கள் அரசாங்கமாகவும், மருத்துவர்கள் அதன் ஊழிய‌ர்களாகவும் உண்மையாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? மருத்துவமனைக்கு வந்த மக்களுக்கு முறையான உடனடி தீவிர சிகிச்சையும், பாதிக்கப்பட்ட இடத்திற்கு மருத்துவக்குழுவாக சென்று அங்குள்ள அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியும் இருக்க வேண்டும். முதலாளிகளைக் காப்பாற்றி அவர்கள் போடும் எலும்புத் துண்டுக்காக அலைபவர்களிடம் இதனை நாம் எதிர்பார்க்கலாமா?

விபத்து நடந்த பிறகும் வழக்கம் போல அரசு எந்திரங்கள் எதன் மீதோ பெய்த மழையாக இருக்க, பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதும் ஓடோடி வந்தது அரசு. 144 தடையுத்திரவை பிறப்பித்து ஆலைக்கு அரண் அமைத்து அங்கே மறியலில் ஈடுபட்ட மக்களை கலைத்துள்ளனர்.

1990 களிலும் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பும் இதே போல விபத்து இந்த ஆலையில் நடந்துள்ளது. இந்த ஆலை வெளியேற்றும் கழிவு நீரால் கடலின் மீன் வளம் பாதிப்படைந்து பலமுறை இப்பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அன்றும் அரசு அதிகாரிகள் ஆலையை மூடி சீல் வைப்பதாக நாடகமாடியுள்ளனர். இன்றும் அதே நாடகம்.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களை ஏமாற்றுவதில் மக்கள் பிரதிநிதிகள், வாழ வழிவிடாத சகோதரன் எழவு வீட்டில் ஒப்பாரி வைப்பது போல ஓடோடி வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் தொழிற்சாலையை மூடி விட்டதாகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் புளுகி விட்டு கார்களில் பறந்து விட்டனர்.
அன்றாடம் பருகும் நகராட்சி குடிநீரில் கிருமிகள் உள்ளன என்று பன்னாட்டு “அக்வாபினாய’ பருகும் இந்த கன‌வான்கள், மக்கள் வசிக்கும் பகுதியில் ஆபத்தான விஷவாயுத் தொழிற்சாலையை அனுமதித்ததன் மூலம் மக்களின் உயிர்களை மயிரளவுக்கும் மதிக்கவில்லை என்பது அப்பட்டமான உண்மை.

காலாப்பட்டு எம்.எல்.ஏ.வும், கல்வி அமைச்சருமான ஷாஜகான் (இந்த உத்தமரின் அப்பா பரூக்மரைக்காயர் முதல்வராக இருந்த போதுதான், இந்தக் கொலைகார இரசாயன ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டது) இப்படி ஒரு ஆபத்தான இரசாயன தொழிற்சாலை தனது தொகுதியில் இருக்கிறதே; இதில் விபத்து ஏற்பட்டால் நமது தொகுதியில் வாழும் 30,000 மக்களின் உயிர்களும் போய்விடுமே என்ற அக்கறை கொஞ்சமும் இல்லாமல், விபத்து நடந்த நான்காவது நாளே (31-01-2011) தங்கத் தேரிழுத்து, பால்குடம் சுமக்க  விமரிசையாக தனது பிறந்தநாளை காலாப்பட்டில் கொஞ்சமும் அருவெறுப்பின்றி கொண்டாடினார்.

சீல் வைக்கப்பட்ட ஆலைக்குள் இரகசியமாக வேலைகள் நடைபெற்று, 14 டேங்கர் லாரிகளில் குளோரினை நிரப்பி இரவோடு இரவாக அனுப்பியுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டு ஆலைக்கு மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். மாவட்ட உதவி ஆட்சியர் அங்கு வந்து, “ஆலையில் உள்ள கெமிக்கல்களைப் பாதுகாக்க சில எந்திரங்கள் தொடர்ந்து இயங்க‌ வேண்டும் என்பதற்காகத்தான் சில எந்திரங்களை இயக்கினர். அது போல கெமிக்கல்களை அப்புறப்படுத்தவே டேங்கர் லாரிகளை அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

சீல் வைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை அரசாங்கம் கையக‌ப்படுத்திக் கொள்வது சரியானதா? அல்லது அந்த நிர்வாகத்தையே பராமரிக்க அனுமதிப்பதா? குறைந்த பட்சம் அரசு அதிகாரிகளின் முன்னிலையில் வெளிப்படையான‌ பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நடப்பதோ முதலாளிகளுக்கான விசுவாசம். முதலாளிகளுக்கான சிறு இழப்பைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் விற்றுக் காசாக்கிக் கொள்ள துணை போகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பான சூழ்நிலையில் இப்படிப்பட்ட ஆபத்தான கெமிக்கல்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று எண்ணுவது போன்ற‌ முட்டாள்தனம் வேறில்லை.

கொடூர இரசாயன ஆயுதம் : குளோரின்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீரில் குளோரின் மிகச் சிறிய அளவில் கலக்கப்படுகிறது, அதாவது, நமது நகராட்சி மற்றும் பேரூராட்சியால் வழங்கப்படும் குடிநீரில் 5000 லிட்டருக்கு ஒரு மாத்திரை வீதம் கலந்தே நமது வீடுகளுக்கான குடிநீர் குழாய்களில் வழங்கப்படுகிறது. இதனால் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது குளோரின் கலந்த குடிநீர்தான்.

குளோரின் வாயுவின் அளவு காற்றில் 0.2 முதல் 0.5 PPM  வரை இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. அதுவே, 2 PPM இருந்தால் இருமல், வாந்தி ஏற்படும். 30 PPM இருந்தால் நுரையீரல் பாதிக்கும். 60 PPM இருந்தால் உயிரையே குடித்து விடும். PPM என்பது PARTICLES PER MILLION – அதாவது 10,00,000 காற்று துகள்களில் வெறும் 60 குளோரின் துகள்கள் இருந்தாலே, அது நமது உயிரை குடித்துவிடும். நமது நாட்டின் சுகாதாரத் தேவை மற்றும் சாயப்பட்டறைகளில் துணிகளை பிளீச்சிங் செய்வதற்கு தேவையான அளவுக்கு மேல் உற்பத்தி செய்யப்படுதாக அறிய முடிகிறது.

அதிலும் திரவ குளோரின் முழுக்க முழுக்க ஏகாதிபத்தியத்தின் கொலைவெறிக்கு உதவும் இரசாயன‌ ஆயுதங்களை உற்பத்தி செய்யவே பயன்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் போது குளோரின் நச்சு வாயுவைப் பயன்படுத்தி ஜெர்மனி பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தது. ஈராக் (2007) போரின் போது அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கிற்கான குளோரின் சப்ளையை நிறுத்தி 5 இலட்சம் குழந்தைகளைக் கொன்றது, அதாவது. ஈராக் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் கலக்கப் பயன்படும் மிகச்சிறிய அளவிலான குளோரினையும் தடை செய்ததன் மூலம் சுகாதாரமற்ற. குளோரின் கலக்காத குடிநீரை குடித்த ஒன்றுமறியாத 5 இலட்சம் ஈராக் இளம் பிஞ்சுகள் வயிற்றுப்போக்கு மற்றும் காலரா நோயினால் துடிதுடித்து செத்தார்கள்.

திடநிலையிலுள்ள குளோரினையும் தமது ஆயுதமாக ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்த முடியும் என்பதை அறியும்போது முதலாளித்துவம் தன்னை நம்பியுள்ள தன் சொந்த மக்கள் மீது கொஞ்சம் கூட இரக்கம் காட்டாதா என்ற கேள்வி மனதைச் சுடுகிறது.

எங்களிடம் பேசிய புதுநகரைச் சேர்ந்த பெரும்பாலானோர், ‘சமையல் எரிவாயு உலையில் இருந்து வாயு கசிவதாகவே முதலில் நினைத்தோம்’ என்று கூறினார்கள். ஒருசிலர் பிளீச்சிங் பவுடர் வாச‌னை வந்ததாகவும், அதன்பின் மூச்சுத்திண‌றல் வந்ததாகவும் கூறினர். இதே புதுநகரைச் சேர்ந்த கிருத்திகா “எங்கள் வீட்டின் பின்பக்கத்தில் இருந்து பிளீச்சிங் பவுடர் வாசனை வந்தது. என்ன இது என்று பார்ப்பதற்குள், வீட்டின் பின்பக்கம் இருந்த மரம், செடி கொடிகள் எல்லாம் கருகியது. எனக்கும் தலைசுற்றல் வந்ததால் என் வீட்டுக்காரருடன் மருத்துவமனைக்குச் சென்று விட்டேன்’ என்றார்.

செல்வி என்ற மீன் விற்கும் பெண்  “இந்த கம்பெனி ஆரம்பிக்கும் போது சோடா கம்பெனி ஆரம்பிக்கிறோம் என்றுதான் சொன்னான்க. இப்ப என்னடான்னா எங்க எல்லாத்தையும் சாவடிச்சுடுவான்க போல’ என்று ஆத்திரப்படுகிறார். ஆண்டாள் என்ற வயதான பாட்டி ‘ஐயா, நாங்க எல்லாம் வாழ்ந்துட்டோம். எங்க புள்ளங்க எல்லாம் வாழ வேணுமில்ல. அதனால, தயவு செய்து இந்த கம்பெனிய எடுத்துடுங்க. வேற எந்த கம்பெனி வேணா வச்சுக்குங்க’ என்று பரிதாபமாக புலம்புகிறார்.

முதலாளித்துவ அரசு மக்கள் நலன் காக்காது என்பது தெள்ளத் தெளிவானது. நம் முன் உள்ள கேள்வி கெம்ஃபாப் போன்ற கொலைகார ஆலைகளை போராடி அகற்றப் போகிறோமா? அல்லது பல ஆயிரக்கணக்கான நம் மக்களை பலிகொடுத்து விட்டு, அய்யோ பாவம் என்று ஒப்பாரி வைக்கப் போகிறோமா? என்பதே.

_____________________________________________________________________________________________________
தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பாண்டிச்சேரி
______________________________________________________________________________________________________

  1. பாண்டிச்சேரி கெம்பாப் கெமிக்கல் ஆலை : காத்திருக்கும் மற்றுமொரு போபால் விபத்து? | வினவு!…

    பாண்டிச்சேரி கெம்பாப் ஆலையில் ஏற்பட்ட இரண்டு நிமிடக் கசிவில் அருகிலுள்ள மரஞ்செடி கொடிகளின் இலைகளை பொசுக்கி விட்டது. அருகிலுள்ள‌ குடியிருப்புகளில் வசிக்கும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைசுற்றலும் குமட்டலும் ஏற்பட்டுள்ளது….

  2. /*முதலாளித்துவ அரசு மக்கள் நலன் காக்காது என்பது தெள்ளத் தெளிவானது.*/

    ஐயா – சோவியத் ரஷ்யாவில் செர்நோபில் விபத்து நிகழ்ந்த போது கம்யுனிச அரசு மட்டும் எல்லாவற்றையும் காத்ததோ ?? ஏன் எடுத்த எடுப்பிலேயே பொய்களைச் சொல்லி ஆதாயம் தேடுகிறீர்கள் ?

    லஞ்சமும் அதிகார சீர்கேடும் இங்கே தலைவிரித்தாடுகிறது – இதில் முதலாளித்துவத்தையோ ஜனநாயகத்தையோ குறை சொல்லுவதில் பயன் ஏதும் இல்லை.

  3. இங்கு ஒரு வேகத்தடை கண்டிப்பாக இருந்தேயாகவேண்டும் என்று நிலைமைகளை அன்றாடம் கூர்ந்து பார்க்கிற ஒரு இள நீர்க் கடைக்காரனின் புலம்பல்கள் நேரடியாக ஒரு போக்குவரத்து அதிகாரியின் காதில் விழுந்தாலும் “உன் வேலையை ஒழுங்கா பாத்துக்கிட்டு மூடிக்கிட்டுப் போ, ஊத்த வாயைத் தெறக்காதே”, என்கிற எச்சரிக்கைதான் அவனுக்குக் கிடைக்கும்.
    ஒரு பத்து பிணம் விழுந்தபிறகு, அனுபவப் பாடம் கற்றபின், அந்த இடத்தில் ஒரு வேகத் தடை இடப்பட்டிருக்கும். அதற்குப் பக்கத்தில் ஒரு ஸ்டிக்கர் போர்டு கூட வைப்பார்கள் : எச்சரிக்கை : விபத்துக்கள் நடந்த பகுதி. கவனமாகச் செல்லவும்.

    இது போன்ற அனுபவப் பாடங்களுக்கு தேவைப்படுவது – மனித உயிர்கள்.
    இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது கெமிக்கல் கம்பெனி நிர்வாகமும், தங்கத்தேரிழுத்த தடிமாடும்.
    அப்படி ஏதாவது நடந்தால், ஒரே நாளிரவில் அமெரிக்காவில் இருப்பார் கம்பெனி முதலாளி – இழவுச் செய்திகளை பிபிசி யில் பார்த்துக்கொண்டு…!

  4. ஆபத்தான வாயுக்கள் உற்பத்தி, மக்கள்

    வாழும் குடியிருப்பு பகுதிகளில், செய்ய

    அனுமதிக்ககூடாது. போபால் போல

    இங்கும் விபத்துக்கள் நடக்கலாம் என

    ஏன் சிந்த்தித்து செயல்படவில்லை

    எல்லாம் இலாபம் என்ற ஒரெ

    மந்திரம்தான் .மக்களைப் பற்றி யாரும்

    கவலை கொள்வது இல்லை.

    போராடினால் மட்டுமே எதுவும்

    நடக்கும். போராடுவோம்.

  5. சிறந்த பதிவு என்று சொல்லமுடியாது. இது புதுச்சேரி மக்களுக்கான எச்சரிக்கை மணி.

    முதலாளிகளும், ஆட்சியாளர்களும் மக்களின் உயிரோடு விளையாடுகிறர்கள் என்பது உண்மை. அதுநேரத்தில் இந்தப் பகுதி மக்களின் முட்டாள்தனத்தையும் பொறுப்பற்றத்தனத்தையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

    இந்த ஆலை தொடங்கப்பட்டபோதே புதுச்சேரியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தப்பகுதி மக்களின் ஆதரவோடு கெம்பேப் இரசாயன ஆலையை வராமல் தடுக்க மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு பிராச்சரங்களையும் போராட்டங்களையும் நடத்தினார்கள்.

    ஒருநாள் மக்களின் துணையோடு பெரிய அளவில் முற்றுகைப்போராட்டம் நடத்த போராட்டக்குழுவினர் திட்டமிட்டு முதல்நாள் இரவுவரை அந்தப்பகுதியில் தங்கி ஆதரவை திரட்டினர் மக்களும் எழுச்சியோடு தயாராக இருந்தனர். மறுநாள் போராட்டக்குழுவினர் அந்தப்பகுதிக்குச் சென்றபோது அதே பொதுமக்கள் போராட்டக்குழுவினரை விரட்டியடித்தனர்.

    முதல்நாள் நல்லிரவு ஊர் பஞ்சாயத்தார், கட்சியினர் என அனைவரையும் சரிகட்டிய கெம்பேப் முதலாளிகள் அந்த ஊர் கோயிலை சீரமைத்துத்தருவதாகவும் இன்னும் பல்வேறு உதவிகளை செய்வதாகவும் வாக்குறுதிகளை அள்ளிவீசினர். அதுமட்டுமின்றி அரசியல் வியாபாரிகளும் ஆட்சியாளர்களும் தங்கள் பங்குக்கு வேலைவாய்ப்பு அது, இது என்று வாக்குறுதிகளை அள்ளிவீசி மக்களை ஒட்டுமொத்தமாக அன்று மயக்கமடையச்செய்தனர்.

    பணத்துக்கு விலைபோகும் மக்கள் திருந்தாதவரை இந்த நாட்டில் உங்களைப்போன்றவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீர்தான்….

    • //பணத்துக்கு விலைபோகும் மக்கள் திருந்தாதவரை இந்த நாட்டில் //

      உங்களது ஆதங்கம் புரிகிறது சீ. பிரபாகரன்.

      //உங்களைப்போன்றவர்களின் உழைப்பு //

      ஆனால் இது போன்ற நெகடிவ் அனுபவத்தையும் பரிசீலிக்கும் அதே நேரத்தில் மக்களை அணி திரட்டி நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள பல்வேறு பாசிடிவ் அனுபவத்தையும் கணக்கிலெடுத்திருந்தால் ‘உங்களைப் போன்ற’ என்பதற்குப் பதில் ‘நம்மைப் போன்ற’ என்று சொல்லியிருப்பீர்கள்.

    • இன்னொன்றை பற்றியும் விட்டுவிட்டீர்களே சீ.பிரபாகரன். கெம்ஃபேப் ஆலைக்கு அருகில் அமைந்துள்ள புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் இந்த ஆலையினால் ஏற்படும் அபாயத்தைக் குறிப்பிட்டும், ஆலைக்கு அருகில் அமைந்துள்ள பல்கலைகழகம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் ஆகியவற்றைக் குறிப்பிட்டும், இவைகளுக்கு கெம்ஃபேபினால் ஏற்படவிருக்கும் ஆபத்தைக் குறிப்பிட்டும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது, ஆலை அமைந்த பிறகுதான் கல்லூரியும், மருத்துவமனை வந்தது எனக் கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதே அதுபற்றி, ஆலை வருவதற்கு முன்பே அங்கு குடியிருப்புகள் அமைந்திருந்ததே எனக் குறிப்பிட்டபோது அதுபற்றிக் கருத்துக் கூறாது வாய் மூடி மௌனியாக இருந்த நீதிபதிகள் பற்றி…….

      • இதுபோன்ற பணிகளில் நேரம் காலம் பார்க்காமல் பத்தாண்டுகளுக்கு முன் நானும் வேலை செய்தவன்தான். இந்த ஆலை மூலமாக எனக்குத் தெரிந்த தோழர்கள் கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டார்கள். மக்களின் பொறுப்பற்றத்தனமும் முதலாளிகளுக்கு அவர்கள் விலைபோன நிகழ்வுகளே சலிப்பை ஏற்படுத்தின.

        • //இந்த ஆலை மூலமாக எனக்குத் தெரிந்த தோழர்கள் கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டார்கள்.//

          ஆங்… இது செல்லாது செல்லாது… நீங்க சோசலிச ரஷ்யாவில் நடந்த கொலை மிரட்டல் பற்றி நேரடி விவாதத்துக்கு வரத் தயாரா? (அதியமானை வைத்து பகடி செய்யப்பட்டுள்ளது.. ‘சிரி’யசாக எடுத்துக் கொள்ளவும்)

        • முதலாளிகளுக்கு அவர்கள் விலைபோன நிகழ்வுகளே சலிப்பை ஏற்படுத்தின.//

          முதலாளிகளுக்கு விலைபோனது மக்களல்ல. அவர்கள், விலைபோன துரோகிகளால் விலைபோனவர்களாக, காட்டப்பட்டவர்கள். அனைத்து மக்கள் பகுதிகளிலுமே ஜாதிரீதியாகவோ, மதரீதியாகவோ, இனரீதியாகவோ, வர்க்கரீதியாகவோ அம்மக்களை கட்டுப்படுத்தும் ஒரு தலைமை இருக்கும். பல்வேறு பிரச்சினகளுக்கும் அம்மக்கள் இத்தலைமையின் சொல்படிதான் செயல்படுவார்கள். தலைமை துரோகிகளால் நிறைந்திருக்கும் பட்சத்தில் அது தான் அடையப் போகும் ஆதாயத்திற்காக அப்பகுதியே நலனடையப்போவதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். ஊழலும், லஞ்சமும், துரோகமுமே முதலாளித்துவத்தின் இயக்குவிதியாக இருக்கும்போது, இவ்விதியே சமூகம் முழுவதும் நிறைந்திருக்கும்போது, இதில் யார் நல்லவன்? யார் நண்பன்? யார் துரோகி? என்பதனை பிரித்தறியமுடியாமல் திகைக்கும் மக்கள் இத்துரோகத்தை சகித்துக்கொண்டு வாழ பழகிக்கொள்கின்றனர் அல்லது நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதுதான் உலகம் என்றும் பதியவைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வுலகில் தனக்குக் கிடைக்கப்பெற்றவை அவ்வளவுதான் என திருப்திக்கொள்கின்றனர். இதன் காரணமாகவே, மக்களின் நலன் சார்ந்து உண்மையாகவே நாம் போராட அழைக்கும் போது அவர்கள் நம்மீது உடனடியாக நம்பிக்கை கொள்வதில்லை. அதனை எதிர்பார்ப்பதும் தவறு என்று கருதுகிறேன். நாம் எவ்வளவுதான் உண்மையாக வேலை செய்தாலும், சிறப்பான கருத்துக்களை கூறினாலும் அதன் மூலம் என்ன நன்மை கிடைக்கும் என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளாத வரையிலும் அவர்களை அணிதிரட்டுவது கடினம். எனவே அப்போராட்டத்தின் மூலம் என்ன நன்மை கிடைக்கும் என்பதை அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் வரையிலும் அவர்களிடம் நாம் வேலை செய்தாக வேண்டும். நான் அறிந்த வரையில் தனியார்மய, தாராளமய அபாயங்களை விளக்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ம.க.இ.க தமிழகத்தில் பிரச்சாரம் செய்து கொண்டுதானிருக்கிறது. எத்தனை நபர்கள் புரிந்திருக்கிறார்கள்? எத்தனை நபர்கள் அணிதிரண்டிருக்கிறார்கள்? அதற்காக சலிப்புற்று ம.க.இ.க பிரச்சாரத்தை கைவிட்டுவிடவில்லையே. தொடர்ச்சியாக மக்களிடம் செல்லவேண்டும். நிச்சயம் ஒருநாள் வென்றெடுக்கமுடியும்.

  6. நங்கள் அலையை அடுத்துள்ள ஊரில் வசிக்கும் மக்கள், உங்கள் அனுமதியுடன் எங்களுரின் இணையத்தளத்தில் பதிவிடிகிறோம், மக்களுக்கு விழிபுணர்ச்சி தேவை

  7. our country is very strange country. all evils are coming from government and court and wealthy people.
    people are helpless and forced to live with the cruelty of the government and court. in this case firstly the village people are committed the mistake . the innocent village peoples were cheated by the company by giving some money for their temple. After that the court is simply saying the company is working firstly, only after that the medical college and the university are coming there. so it is not ready to order to close the company .
    it indirectly saying to close medical college and university for the benefit of the company. it never care about the people staying in the medical college and university. It is very dangerous thing. where the people go to get justice.
    we cannot expect the company to take necessary safe guard to save the life of the nearby people.
    if any people , or organization take this the company people turn them very easily .
    the local people once again go to court to place the the latest accident in the company and request the court to close the company.
    only ——-

  8. ‘லாபம்’ எனும் ஒற்றைச் சொல்லால் முதலாளிகள் எல்லாவற்றையும் மதிப்பிடுவதுபோல், முதலாளித்துவ தாசர்கள் ‘விபத்து’ எனும் ஒற்றைச் சொல்லால் எல்லாவற்றையும் மதிப்பிடுகிறார்கள்.

    ஆம். விபத்து தான். மக்களில் பெரும்பாலானோர் முதலாளித்துவ பக்தர்களாகவே இருப்பது விபத்துதான். முதலாளித்துவம் திட்டமிட்டு நடத்தும் விபத்து.

  9. தொழிற்சாலை ஆய்வாளர் ,இவரின் பங்கு என்ன ?ஒரு தொழிலாளிக்கு இருக்கும் அடிப்படை அறிவு கூட, வாயு கசிவை உணரும் கருவி வேலை செய்யவில்லை என்று கொஞ்சம்கூட சொரணை இல்லாமல் பேசும் நிர்வாகம் தெரியாத மேலாளர் ரகுராமன் விபத்தை ஏற்படுத்த முயன்றவர் என்று முதலில் கைது செய்திருக்கவேண்டும் .அடிப்படை தொழில்சார்ந்த அறிவே இல்லாதவன் எல்லாம் மக்கள் பிரதிநிதி ஆனால் இப்படிதான் நடக்கும் .இது எல்லாவற்றையும் விட இவனுங்களைஎல்லாம் தேர்ந்தெடுத்த முட்டாள் ஜனங்கள் அனுபவிக்கத்தான் வேண்டும் .

  10. நமது மீனவர்கள் கடலில் சென்று தங்கள் தொழிலை செய்வதற்கு,இடையூறு செய்யும் இலங்கை

    கடற்படையினரிடமிருந்து தங்களை பாதுகாத்துகொள்வதற்கு துப்பாக்கி ஏந்தும் உரிமை

    வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர் வழக்கு

    தொடுத்துள்ளனர், வழக்கு விசாரனைக்கு வரும் 24 ம் தேதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

    அதுபோல பாண்டிச்சேரி கெம்பாப் இரசாயண ஆலையை மூடவோ வேறு இடத்திற்கு மாற்றவோ

    ஏன் வழக்கு தொடுக்க கூடாது.மக்களின் உயிர் வாழும் உரிமையை விட நச்சு வாயுவின்

    உற்பத்தி மேலாகாது. கோயில், பள்ளிக்கூடம் முதலியவை கட்டிக்கொடுப்பதாக சொல்லி

    மனிதர்களின் உயிர் மீது பணயம் வைத்துள்ளார்கள்.மக்களிடம் பரப்புரை செய்து இதற்கு

    ஆதரவு திரட்டவேண்டும்.HRPC இதனை முன்னெடுத்துச்செய்யும் என எதிர்பார்க்கிறேன்.

  11. //அதிலும் திரவ குளோரின் முழுக்க முழுக்க ஏகாதிபத்தியத்தின் கொலைவெறிக்கு உதவும் இரசாயன‌ ஆயுதங்களை உற்பத்தி செய்யவே பயன்படுகிறது//

    அப்பட்டமான பொய்.

    தண்ணீர் மூலம் பரவும் பாக்டீரியாக்களினால் உலகெங்கும் பல்லாயிரக்கண்க்கானோர் உயிரிழந்து கொண்டிருந்த நிலையில், குளோரின் உபயோகப்படுத்த தொடங்கியதும் இந்த சாவுகள் குறைந்தன.

    குளோரினை மூலப்பொருளாக உபயோகித்து உற்பத்தி செய்யப்படும் PVC பைப், பூச்சிக்கொல்லி மருந்துகள், பேப்பர் மற்றும் பலப், என்று அதன் உபயோகம் பலப்பல.

    குளோரின் வாயு கையாள்வதற்கு கடினமானது என்பதாலும் போக்குவரத்துக்கு எளிதானதல்ல என்பதற்காகவும் தான் “திரவ” படுத்தப் படுகிறது.

    சதாம் ஹுஸைனால் ஸ்கட் ஏவுகனை செய்ய முடியும் ஆனால் குடிநீரை சுத்திகரிக்கும் குளோரினை தயாரிக்க முடியாதாம். இது ஏகாதிபத்தியங்களின் சதியாம். கொஞ்சம் நம்புகிறா மாதிரி கதை எழுதுங்க சார்.

    • குளோரின் பல்வேறு துறைகளில் பயன்படுகிறது என்பது உண்மைதான். அதனுடைய உற்பத்தியும் தேவைதான். அதே நேரத்தில் கண்ணை விற்று சித்தரம் வாங்கமுடியாது. இந்த நிறுவனத்தால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு பாதிப்புகள் இருந்தாலும் இந்த ஆலை நிர்வாகத்தின் பொறுப்பற்றத்தனத்தாலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளர் நலத்துறை போன்ற அரசுத்துறைகளின் அயோக்கியத்தனத்தாலும் ஏராளமான உயிர்பலிகள் அந்த நிறுவனத்திற்கு உள்ளேயே நடந்துகொண்டிருக்கிறது. அந்த ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர் பலர் கணக்கு வழக்கு இல்லாமல் பலர் இறந்துள்ளனர் என்ற தகவலும் உள்ளது. அப்படி இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இது போன்ற தனியார் நிறுவனங்களில் வெளிமாநிலத்தவர்கள் அதிகமாக வேலைக்கு சேர்ப்பதற்கு காரணமும் இதுதான். இதை ஒழுங்குபடுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கு உண்டு.

  12. ///கொடூர இரசாயன ஆயுதம் : குளோரின்////

    இந்த மாதிரி அள்ளிவிடறதுதானே வேண்டாங்கறது. க்ளோரின் மனித வாழ்க்கையில் பல துறைகளில் பெரும் பயன் அளிக்கிறது :

    http://library.thinkquest.org/C004050F/use.htm

    இந்த பதிவு முக்கியமானதுதான். ஆலை நிர்வாகம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறது. Pollution control board அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு, பல மீறல்களை தொடர்ந்து அனுமதிக்கிறார்கள். ஆலை நிர்வாகமும், short cuts பல செய்கிறது. பாதுகாப்பு எற்பாடுகள் மறுபரிசீலனை நடக்க வேண்டும்.

    உடனே இது ‘முதலாளித்துவ கொடுமை’ என்று வழக்கம் போல பேசுவது தானே வாடிக்கை. கம்யூனிச நாடுகளிலும் ஆலை விபத்துகள் நடந்தன. செர்னோபில் அணு உலை விபத்தை விட பேரழிவு உருவாக்கிய விபத்து எதுவுமில்லை. போபாலை விட பல மடங்கு அழிவு. அதை பற்றி பேசமாட்டீங்க. அல்லது 80களில் சோவியத் ரஸ்ஸிய, போலி கம்யூனிச நாடு என்று தப்பித்துக்கொள்வீர்கள். அப்ப, பதிலுக்கு, அதே பாணியில், இந்தியாவில் நடப்பது போலி முதலாளித்துவம் என்கிறோம் ! ஓரளவு உண்மையும் அதுதான். வளர்ந்த நாடுகளில், உண்மையான லிபரல் ஜனனாயம் உள்ள நாடுகளில் இது போன்ற மீறல்கள் மற்றும் ஊழல்கள் சாத்தியம் இல்லை. பல கெமிக்கல் ஆலைகள் வளர்ந்த நாடுகளில் இதே களோரினை தயரிக்கின்றனர். அங்கு இந்தியா போல அக்கிரமங்கள், கழிவுகளை சுத்தீகரிக்காமல் திருட்டுத்தனமான வெளியேறுதல் இல்லை. அப்படி எங்காவது நடந்தால், உடனே பெரும் சர்ச்சை மற்றும் எதிர்ப்புகள். நீதி கிடைக்கும். அந்த நாடுகளையும் ’முதலாலித்துவ’ நாடுகள் என்றே அழைக்கின்றீர்கள் !

    • உங்களுடைய பிரச்சனை என்ன முதலாலித்துவ’ நாடுகள் என்றே அழைப்பதா? கெம்ஃபாப் நிறுவனத்தினை
      கண்டிப்பதா?

      • //கெம்ஃபாப் நிறுவனத்தினை கண்டிப்பதா?///

        அதை மட்டும் சரியாக செய்ய வேண்டியதுதான். இதில் என்ன பிரச்சனை ? வினவு எழுதிய சில ‘கருத்துக்களுக்கு’ விளக்கம் அளித்தேன். உடனே ஏன் இப்படி ஒரு எதிர்வினை ? அந்நிறுவனம் செய்வதை கண்டிக்க கூடாது என்று சொன்னேனா ? மேலும் லஞ்சம் விளையாடும் மாசுக்கட்டுபாட்டு வாரியம் பற்றியும் சொல்லியிருந்தேன். அவர்களை என்ன செய்வது ?

        • உங்க உண்மையான முதலாளித்துவ ஜனநாயகம் என்ன சொல்கிறது sir லஞ்சம் வாங்குவது தான் தப்பா,
          லஞ்சம் கொடுப்பது தப்பில்லைடயா?

        • //உங்க உண்மையான முதலாளித்துவ ஜனநாயகம் என்ன சொல்கிறது sir லஞ்சம் வாங்குவது தான் தப்பா, லஞ்சம் கொடுப்பது தப்பில்லைடயா?//

          ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைப்பா ? பெண்(கள்) பெயரில் யார் எழுதுகிறார்கள் என்று யூகிக்க முடிகிறது !!

          லஞ்சம் கொடுப்பதை நான் சரின்னு எப்ப சொன்னேன் ? உண்மையான முதலாளித்துவ ஜனனாயகம் இந்தியாவில் இருக்கு என்றும் எப்ப சொன்னேன் ? சும்மா விதண்டாவாதம் செய்யாதீங்க.

    • “உண்மையான முதலாளித்துவ ஜனனாயகம் இந்தியாவில் இருக்கு என்றும் எப்ப சொன்னேன் ? ”

      நீங்க உண்மையான முதலாளித்துவ ஜனனாயகம் இந்தியாவில் இருக்குன்னு சொன்னதாக நானும் சொல்லவில்லை.
      இது விதண்டாவாதம் அல்ல. பதில்.

      “மேலும் லஞ்சம் விளையாடும் மாசுக்கட்டுபாட்டு வாரியம் பற்றியும் சொல்லியிருந்தேன். அவர்களை என்ன செய்வது ?”

      என்னுடைய மையமான கேள்வி லஞ்சம் விளையாடும் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தை கண்டிக்கும் நீங்கள் ஏன் அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் முதலாளிகளை கண்டிக்க வில்லை?

      இது தான் என்னுடைய கேள்வி.

      “இந்த பதிவு முக்கியமானதுதான். ஆலை நிர்வாகம் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறது. Pollution control board அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு, பல மீறல்களை தொடர்ந்து அனுமதிக்கிறார்கள். ஆலை நிர்வாகமும், short cuts பல செய்கிறது. பாதுகாப்பு எற்பாடுகள் மறுபரிசீலனை நடக்க வேண்டும்.”

      மறுபரிசீலனை நடக்க வேண்டும். ஆலை நிர்வாகத்தை செல்லமாக கண்டிப்பது போல் உள்ளது. வினவு பல உயிர் இதில் போயிருக்கும் என்ற கோபத்தோடு எழுதியிருக்காங்க.

      “லஞ்சம் கொடுப்பதை நான் சரின்னு எப்ப சொன்னேன் ? உண்மையான முதலாளித்துவ ஜனனாயகம் இந்தியாவில் இருக்கு என்றும் எப்ப சொன்னேன் ? சும்மா விதண்டாவாதம் செய்யாதீங்க.”

      யார் விதண்டாவாதம் செய்யவது? ஏன், கேள்வி கேட்டாலே கோபப்படுறீங்க?
      பெண்கள் அரசியல் பேசமாட்டாங்க என்கிற பிற்போக்குத்தனம் உங்களிடம் உள்ளது. தயவு செய்து மாற்றி கொள்ளவும்.

      • /*உங்க உண்மையான முதலாளித்துவ ஜனநாயகம் என்ன சொல்கிறது sir லஞ்சம் வாங்குவது தான் தப்பா, லஞ்சம் கொடுப்பது தப்பில்லைடயா?*/

        உங்கள் கம்யுனிசம் என்ன சொல்கிறது அம்மணி, லஞ்சம் வாங்குவது தான் தப்பா, லஞ்சம் கொடுப்பது தப்பில்லையா?

        என் கேள்வி முட்டாள்தனமானது என்றால் உங்கள் கேள்வியும் அப்படியே. முதலில் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதை நிறுத்துங்கள் – எதற்கெடுத்தாலும் முதலாளித்துவத்தை திட்டுவது என்பது உங்களுக்கு பிடித்திருக்கலாம், ஆனால் கொஞ்சமாவது தொடர்பாக பேச வேண்டாமா ?

        லிபெர்டரியன் சொன்னதை தமிழில் திருப்பிச் சொல்கிறேன் – வினவு பதிவுகளிலும் உங்களைப் போன்ற போலி மனிதாபிமான கம்யுநிஸ்டுகளும் முதலாளித்துவத்தை சம்பந்தமே இல்லாமல் திட்டுகிறீர்கள். அதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

        லிபெர்டரியன் சொல்லாததையும் சொல்கிறேன் – உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லை. இதே போலத்தான் திவ்யா தற்கொலை விஷயத்திலும் உங்கள் உளுத்துப்போன கருத்துக்களுக்கு ஆதாயம் தேடப் பார்த்தீர்கள். சோவியத் செர்நோபில் கதையைக் கேட்டால் என்ன சொல்லப் போகிறீர்கள் ?

  13. நான் கடலூர சேர்ந்தவன்.இங்க பல பத்து ஆண்டுகளா சிப்காட் செம்பாஎப் செம்ப்லாஸ்ட் …Etc..etc..நு இந்தியா பூரா தடை செய்யப்பட்ட தொழிற்சாலைகள் இயங்கிகிட்டு இருக்கு.படு விஷமான ரசாயன தொழிற்சாலைகள் அடங்கும்.இங்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் போபால் போன்று விஷ வாயு ஆபத்து காத்திருக்கிறது.இங்க எம் எல் ஏ துட்டு வாங்கிகினு உதடுதான்.வினவு போன்ற மக்கள் இயக்கம்தான் எங்க மக்களை காக்க வேணும்

  14. அலட்சியம்….!

    இந்த ஒற்றை சொல்லின் விளைவுதான் இந்த பாதிப்பு…!

    பொதுவாக அரசியல் மற்றும் மக்கள் இடையிலான உறவு இங்கே கவனிக்க படவேண்டியுள்ளது.

    எங்கள் ஊரில், முன்னால் MLA ஒருவர் ஓட்டு சேகரிக்க வந்த போது ஊரில் நுழைவதற்க்கே அனுமதிக்க வில்லை. அதே அரசியல்வாதியை அடுத்த தேர்தலில் MLAவாக தேர்தெடுத்தார்கள். அவர் அமைச்சராகவும் பதவி வகித்தார். ஊழல் காரணமாக (மக்கள் அறியா வண்ணம்) பதவி பறிக்கப்பட்டது. இம்முறை தோற்கடிக்கப்பட்டார். மீண்டும் அவர் இந்தமுறை MLA வாக தேர்தெடுக்கப்பட்டாள் ஆச்சர்ய படுவதற்கில்லை.

    இரு கட்சியினரிடமும் தொகை பெற்றுகொண்டோம் ஆகவே நான்கு ஓட்டில் சரிபதியாக 2+2 என்று ஓட்டு தர்மம் பார்க்கும் வரை அரசியல்வாதிகள் மாறபோவதில்லை.

    மக்கள் செய்வது தவறா? – கண்டிப்பாக இல்லை….

    மக்களுக்கு ஏன் இந்த நிலை,

    1. அனைத்து கட்சியினரும் இலஞ்சம், ஊழல் மலிந்துள்ளது.

    2. புதிதாக இலஞ்சம், ஊழல் ஒழிப்போம் என்று வரும் கட்சிகளோ நீண்ட நாட்கள் தாக்கு பிடிப்பதில்லை. அரசியல் ஆதாயம் தேடி ஏதவது ஒரு பெரிய (ஊழல்) கட்சியில் தஞ்சம் புகுந்து விடுவர். பின் இது ஒரு தேர்தல் கூட்டணி மட்டுமே என்றும், இலஞ்சம், ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் அறிக்கை விடுவர் பனை மரத்தடியில் பசும் பால் குடிக்கும் பாலகர்கள்.

    3. குற்றசாட்டு உள்ள ஒரு அரசியல்வாதி தேர்தலில் போட்டியிட் முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிக்கை விடுகிறது. அப்படி பார்த்தால் இந்தியா முழுவதிலும் எண்ணி சொல்லும் அளவிற்கே அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்று தேர்தல் ஆணையத்திற்க்கே தெறியும். இதை கெடுபிடியாக பிடித்தால் தங்களுக்கு வேலையில்லாமல் போய்விடும் என்ற ஏண்ணத்தினாலோ என்னவோ, இந்த சட்டம் கடுமையாக்கப்படவில்லை.

    4. அடுத்தகட்டமாக வாக்களிப்பத்து உங்கள் கடமை என்றும், தேர்தலில் உங்கள் தீர்ப்பை காட்டுங்கள் என்று கூறும் தேர்தல் ஆணையமோ ஏதாவது ஒரு இலஞ்ச பேர்வளியை அல்லது ஒரு ஊழல் பேர்வளியை தேர்ந்தெடுக்கவே ஆவணாம் செய்கிறது.

    5. சரி ஒரு சுயேட்ச்சையை தேர்ந்தெடுக்கல்லாம் என்றால். அவர் யார்? அவர் மக்களுக்காக என்ன செய்தார்? என்ன செய்வார் என்று தேடிப்பார்த்தால், விடைகாண பொதிய அவகாசம் இருப்பதில்லை. சரி அப்படியே அவரை தேர்ந்தெடுதால் என்ன செய்வார், அர்பனுக்கு வாழ்வுவந்தால் கதையகிவிட்டல் என்னசெய்வது.

    சரி அரசு எந்திரஙகளான அரசுவுழிளியர்கள், அரசு சொத்துக்கள் ஆக்கரமிப்பை காண்டுகொள்வதில்லை. அதனால் மக்களுக்கு ஏற்படும் தீங்குபற்றி சிந்திக்க நேரம் இல்லை. அதில் வருமானம் தேராவிட்டால் மட்டும் நடவடிக்கை. இது ஒரு உதாரணம் மட்டுமே.

    வேகமாக காற்றடிதாள் பொறுப்பில்லாமல் கொட்டப்பட்ட குப்பை வீட்டுக்குள்ளே வரும் என தெரிந்தும், பொறுப்பில்லா மக்கள்.

    மக்கள் முதலில் தங்களை மாற்றி கொள்ளவேண்டு, பிறகு அனைத்தையும் மற்ற வேண்டும்.

  15. அரசியல்வாதிகளுக்கு தங்கள் வரிசுகளின் எதிர்காலத்திற்காக கொள்ளையடிபதிலேயே நேரம் போய்விடுகின்றது. பின்னே எப்படி மக்களை கவனிக்க. நம் நாட்டில் தான் உயிரின் மதிப்பு கேவலமாக உள்ளது. விளிப்புணர்வு கட்டுரைக்கு நன்றி!

  16. நடப்பது மக்களாட்சி அல்ல,மாக்களாட்சி,மக்கள்இறப்பதில்அதற்கு கவலைஇல்லை.

  17. கெம்ஃபாப் ஆலையின் தொடர் நிகழ்வு ஒன்று:
    கெம்ஃபாப் ஆலைக்கு அருகில் மத்தியரசு நடத்தும் கேந்திரா வித்தியாலயா பள்ளி உள்ளது. பிப்பரவரி 18 காலை மாணவ, மாணவிகள் வழிபாட்டுக் கூட்டத்திற்கு (Prayer) பள்ளித் திடலில் திரண்டிருந்தபோது மஞ்சல் நிறமுடைய ஏதோ ஒன்று அவர்கள் மேல் படிந்துள்ளது. உடனே அசிரியர்களும் மாணவர்களும் அலறியடித்துக்கொண்டு பள்ளிக் கட்டிடத்திற்குள் ஓடியுள்ளனர். அவர்களுக்கு உடல் முழுக்க அரிப்பு ஏற்பட அருகிலுள்ள பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிகல் சயன்ஸ் மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி செய்துள்ளனர். இதனை அமில மழை என்றும் அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்றும் கெம்ஃபாப் ஆலை கூறியுள்ளது.
    கெம்ஃபாப் ஆலையை அடுத்துள்ள பாண்டிச்சேரி பல்கலை கழகத்தின் வளாகத்தினுள் இப்பள்ளி உள்ளது. இவ்வளாகத்தினுள்ளேதான் சுற்றுச் சூழல் ஆய்வகமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச் சூழல் அதிகாரிகளோ, வானிலை ஆய்வு அதிகாரிகளோ இதுவரை எவ்வித ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. தமது இருக்கையில் இருந்தபடியே அறிக்கைகளை அளித்து, முதலாளிகளுக்கு தமது விசுவாசத்தை அளித்து வருகின்றனர். எத்தனை இலட்சங்கள் கைமாறியுள்ளன என்பது இனிமேல் தெரியவரும்.

  18. இதயம் அற்ற அரக்கர்கள். இவர்கள் செய்யும் தவறுகளுக்க இவர்களது சந்ததிகள் தண்டனையை அனுபவிக்கும்.

    – இப்படிக்கு இயற்கை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க