privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்!

கொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்!

-

கொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்!
மூடுதிரையின் மாதிரி

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் லண்டனில் நடக்கப்போவது தெரிந்த விஷயம்தான். கண்கவர் அம்சமாகவும், அதே சமயம் பாதுகாப்பிற்காகவும் ஒலிம்பிக் அரங்கைச் சுற்றி ஒரு மூடுதிரை அமைக்கப்பட உள்ளது. அந்த திரைக்காக பிரத்யேக பிசின்கள் உபயோகப்படுத்த உள்ளது. மற்ற திரைகளோடு ஒப்பிடும்போது, இந்த கலைநயமிக்க திரை 35 சதவீதம் லகுவானது. முக்கியமாக, அதில் உள்ள கார்பனின் அளவும் குறைவானது. மேலும், அந்த திரையின் முக்கிய அம்சமே,  மறுசுழற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உள்ளடக்கியிருப்பதுதான். அது மட்டுமா? அந்த திரையை தொங்க விடுவதற்கான பொருட்கள் கூட மறுசுழற்சியாலானதுதான்.

அந்த திரையைச் செய்யும்போது, வெளியேறும் மாசுப்பொருட்களை குறைப்பதற்குக்கூட கவனமெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்காகவே, புற-ஊதா கதிர்களை நிவர்த்தி செய்யும் மைதான் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.  லண்டன் ஒலிம்பிக் அரங்கம் எந்த சுழலையும் தாக்குபிடித்து நிற்க வேண்டுமென்பதற்காக இத்தனை மெனக்கெடல்கள். இதனை அந்த திரை கச்சிதமாக செய்துமுடிக்கும்.

விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் அமைச்சர்களை அசத்தியுள்ள இந்த திரை பார்வையாளர்களையும் பரவசமடையச் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த திரை மட்டுமல்ல, திரையை தயாரிப்பது யார் என்ற செய்தியே நம்மை பரவசமடையச் செய்கிறதே! ஆம், மக்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும், பூவுலகின் மீது இவ்வளவு அக்கறையோடு இந்த திரையை டௌ கெமிக்கல்சை தவிர வேறு யார் செய்யக்கூடும்?

கொலைகார டௌ கெமிக்கல்ஸ் தயவில் இலண்டன் ஒலிம்பிக்ஸ்!டௌ கெமிக்கல்ஸ் – யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியிருக்கும் நிறுவனம் என்று சொன்னால் தரம் எளிதில் விளங்கும். அப்படியும் விளங்கவில்லையென்றால், உங்கள் நினைவுச்செல்களைத் தேடிப்பாருங்கள். பிறந்து சில மாதங்கள் கூட ஆகியிராத குழந்தையின் முகம், மண்ணில் புதையுண்ட அந்த முகத்தை வருடும் கரங்கள் – நினைவுக்கு வருகிறதா போபால் விஷ வாயுக்கசிவு! ஆம், குப்பைகளைப் போல மண்ணுக்குள் தள்ளி புதைக்கப்பட்ட பிஞ்சுக்குழந்தைகளுள் ஒன்று அது.

இந்த படுகொலைகள் நடந்து 27 ஆண்டுகளுக்கு முடிந்துவிட்டன.  யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய நச்சு வாயுக்கசிவு 23000க்கும் அதிகமானோரை காவு கொண்டது. அந்த நஞ்சும், நச்சுக்காற்றும் மாண்டு போனவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. இன்றும் போபாலில் குழந்தைகள் மரபணு மாற்றத்துடன் மண்டைகள் வீங்கி, விழிகள் பிதுங்கி, கை கால்கள் வளைந்து  ஊனத்துடன் பிறக்கின்றன,. கருவிலேயே அழிந்தும் போகின்றன.

அன்று நஞ்சினால் பாதிக்கப்பட்டவர்கள், இன்றும் நடைபிணமாகவே வாழ்கின்றார்கள். நடந்து முடிந்த அந்த படுகொலைக்கு நீதி வழங்கப்படவே இல்லை. அதை விபத்து என்று சொல்லி  வழக்கை இழுத்து மூடியது, இந்திய நீதிமன்றம். இந்த ரத்தக்கறை படிந்த கைகளோடுதான் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனம் ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பு கவசத்தை தயாரிக்கப் போகிறது என்பது கொடூரமாகக இல்லையா?

ஒலிம்பிக் அரங்கு தயாரிப்பில் டௌ கெமிக்கல் நிறுவனம் பங்கேற்பதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக 5000 பேர் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்திய விளையாட்டு வீரர்கள் சம்மேளனமும் தனது எதிர்ப்பை காட்டியது. விளையாட்டில் கலந்துக்கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகவும் தெரிவித்திருக்கிறது.

இதற்கெல்லாம்  டௌ கெமிக்கல்ஸ்  நிறுவனத்தின் பதில் என்ன? போபால் விஷ வாயு கசிவின்போது யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கும் டௌவுக்கும் எந்த சம்ப்ந்தமும் இல்லையென்றும், 1989-ல் யூனியன் கார்பைடு நிறுவனம் மக்களுக்கு போட்ட பிச்சைக்காசுதான் நிவாரணம் என்று முடித்துக்கொண்டது.

போபால் விஷவாய் படுகொலை நிறுவனத்தை வாங்கியதோடு மட்டுமல்லாமல் டௌ கெமிக்கல்சின் வரலாறே படுகொலைகளோடு சம்பந்தப்பட்டதுதான். வியட்நாமில் மக்கள் மீது வீசுவதற்கு நாபாம் குண்டுகளையும், வயல்வெளிகள் மீது வீசுவதற்கு ஆரஞ்சு குண்டுகளையும் தயாரித்து வழங்கியது டௌதான். அமெரிக்காவின் பேரழிவு ஆயுதங்களை வழங்குவது இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனம்தான் இன்று ஒலிம்பிக் அரங்கத்துக்காக 11 மில்லியனில் திரையை தயாரித்துக்கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலை பற்றியும், மக்களின் பாதுகாப்பைப் பற்றியும் முதலைக்கண்ணீர் விடுகிறது.

போபாலில், இன்றும யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கழிவுகள் அகற்றப்பட வில்லை. எந்த பாதுகாப்புமின்றி மக்கள் அந்த தொழிற்சாலையின் அருகில்தான் வசிக்கின்றனர். அசுத்தமான தண்ணீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர். சரியான மருத்துவ வசதிகளின்றி, கிட்டதட்ட 1 லட்சத்துக்கும் அதிகமானோர், நோய்வாய்ப்பட்டும், பாதிக்கப்பட்டும் வேறுவழியின்றி வாழ்க்கையை தள்ளிக்கொண்டிருக்கின்றனர். எனில், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சொத்தில் மட்டும்தானா டௌவுக்கு பங்கு? கழிவுகளை அகற்றுவதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நிவாரணத்தையும் கொடுப்பதும் டௌவுக்கு கடமையில்லையா?

கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்குமான கணக்கை நேர் செய்துவிட்டு ஒலிம்பிக் அரங்கின் பாதுகாப்பை பற்றி கவலைப்படட்டும், டௌ கெமிக்கல்ஸ். அதுவரை, கொலைகார கரங்களிலிருந்து கண்ணுக்கினிய திரையை போர்த்திக்கொண்டு ஒளிர்வதை விட, திரையற்ற ஒலிம்பிக் அரங்கமே அழகு மிக்கது!

______________________________________________________

–    ஜான்சி

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்