privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇசைசாமக்கோழி கூவும் நேரத்திலே.... பாடல்!

சாமக்கோழி கூவும் நேரத்திலே…. பாடல்!

-

அறுவடை செய்யும் விவசாயத் தொழிலாளிக்கு விளைச்சலில் உரிமை இல்லை, அது நிலச் சொந்தக்காரருக்கு உரிமையானது. கட்டிடம் கட்டும் தொழிலாளிக்கு கட்டிடத்தின் மீது உரிமை இல்லை, அது முதல் போட்ட முதலாளிக்கு உரிமையானது. தொழிற்சாலையில் உழைக்கும் தொழிலாளிக்கு உற்பத்திப் பொருளின் மீது உரிமை இல்லை, அது வேலை வாங்கிய முதலாளிக்குச் சொந்தமானது.

இதுதான் மனித வரலாற்றின் மிகப்பெரிய மனித உரிமை மீறல். ‘தனிச் சொத்தும் லாபமும் இல்லா விட்டால் வேலை செய்ய ஊக்கம் இருக்காது’ என்கிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள். உண்மையில் உற்பத்தி எல்லாமே, விளைபொருளாலிருந்து சொத்து, லாபம் சேர்க்க முடியாத தொழிலாளர்களின் உழைப்பில்தான் உருவாகிறது.

ஒரு விவசாயத் தொழிலாளரின் எண்ணங்களாக இந்த நிதர்சனத்தின் சோகங்களை இந்தப் பாடலில் கேட்கலாம். இதைக் கேட்கும் போது ‘நாம் போடும் வெள்ளைச் சட்டை, எத்தனையோ உழைக்கும் மக்களின் வியர்வையின் பலன்’ என்ற குற்ற உணர்வு எழாதவர்கள் இருக்க முடியாது.

எரின் புரோக்கோவிச் என்ற திரைப்படத்தில் கணவனைப் பிரிந்த தாயாக நடிக்கும் ஜூலியா ராபர்ட்ஸ், செய்த வேலைக்குத் தனக்குச் சேர வேண்டிய பணம் மறுக்கப்படும் சூழலில் ‘நான் என் குழந்தைகளுடன் செலவிட வேண்டிய நேரத்தில் உழைத்து செய்த வேலை, அதன் பலனை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று பொங்கி எழுவார். இந்தப் பாடலில் வரும்

‘கத்துற பிள்ளைய தொட்டில்ல போட்டுட்டு கால் கடுக்க நின்னு நாத்து நட்டோம்’

என்ற வரி ஒரு தாயின் அத்தகைய சோகத்தை வெளிப்படுத்துகிறது. அந்த உழைப்பின் பலன் அவருக்கும் இல்லை, தாயின் அருகாமையை இழந்த குழந்தைக்கும் இல்லை. ஏனென்றால் நிலம் அவர்களது சொத்து இல்லை. விவசாயத் தொழிலின் கடும் உழைப்பு, உடல் வருத்தம் இவற்றைச் சொல்லும் வரிகள் கேட்பவரையும் அந்த வலியை உணர வைக்கின்றன.

 “ஏ ஊரையே வளச்சிப் போட்டுக்கிட்டு நம்ம உழப்பச் சொரண்டி சேர்த்துக் கிட்டு
உல்லாச போகமா வாழுற கூட்டத்த இல்லாம ஒழிக்க வாருங்கம்மா”

தனது உழைப்பின் பலனை சுரண்டி உல்லாசமாக வாழும் கூட்டத்தின் மீதான அவரது கோபம் நியாயமானது, புரிந்து கொள்ளக் கூடியது, ஆதரிக்கப்பட வேண்டியது.

விவசாயத் தொழிலாளரை வைத்துப் பாடப்படும் இந்தப் பாடல் உழைப்பை விற்று கூலி வாங்கி வாழ்க்கை நடத்தும் அனைத்துத் தொழிலாளருக்கும் பொருந்தும். கட்டிடத் தொழிலாளர்கள், தொழிற்சாலை உழைப்பாளிகள், ஓட்டுனர்கள் என்று உடலுழைப்பு செலுத்துபவர்களுக்கு தமது உழைப்பின் கருவிகளும் சொந்தமில்லை, பலனும் சொந்தமில்லை.

புரிதலுக்காக நடுத்தர வர்க்கம், அதிக சம்பளம் என்று ‘பொறாமைக்குள்ளாகும்’ ஐடி ஊழியர்களை எடுத்துக் கொள்ளலாம். பல ஆண்டுகளாக உழைத்து ஒரு மென்பொருளை உருவாக்கியிருக்கலாம் அல்லது கண் போல பராமரித்து ஒரு வாடிக்கையாளர் உறவை வளர்த்திருக்கலாம். குறிப்பிட்ட கட்டத்தில் வேலையை விட்டுப் போக நேர்ந்தால், அத்தனையையும் இறக்கி வைத்து விட்டு வெறுமையுடன் அடுத்த நிறுவனத்துக்கு நகர வேண்டியதுதான். அங்கும் தனது உழைப்பைச் செலுத்தி அதன் பலனிலிருந்து விலகியே வாழ வேண்டியிருக்கும்.

கூலிக்கு உழைப்பை பரிவர்த்தனை செய்யும் சமூகத்தின் மிகப்பெரிய சோகம் இது. இதனால் ஏற்படும் மன அழுத்தங்கள், வாழ்வின் வெறுமை யாராலும் கணக்கிடப்படவில்லை. இதற்கு தீர்வுதான் என்ன? வயலில் விவசாயக் கூலித் தொழிலாளி சொல்கிறார் கேட்போம்.

=================

சாமக்கோழி கூவும் நேரத்திலே

தை மாதத்துப் பின்னிரவின் கரிய இருளில் உதறி எடுக்கும் பனியையும் குளிரையும் உதறி எறிந்து கூடைக்குள் முடங்கிக் கிடக்கும் கோழியையும் எழுப்பி கொக்கரக்கோ பாடச் சொல்லி விட்டு அறுவடைக்குச் செல்வான் எங்கள் கூலி விவசாயி. அறுவடை செய்யப் போகும் விளைச்சலில் தனக்குப் பங்கில்லை என்பது தெரிந்தும் மகிழ்ச்சியோடு உழைக்கிறான். அந்த மகிழ்ச்சி உழைத்து வாழும் ஒழுக்கத்தால், பெருமிதத்தால் வந்த மகிழ்ச்சி.

சாமக்கோழி கூவும் நேரத்தில….ம.க.இ.க பாடல் – ஆடியோ!ஏ தானே னன்னே னானே னானே
ஏ தானே னானே னானே
தானே னானே
தானே னானே

ஏ… சாமக்கோழி கூவும் நேரத்திலே – நாங்க
சம்பா அறுவட செய்யப் போனோம்
விளக்கு வக்கிர நேரம் வர – ரத்த
வேர்வையும் காயாம பாடுபட்டோம்

கோரஸ் : விளக்கு வைக்கிற நேரம் வர – ரத்த
வேர்வையும் காயாம பாடுபட்டோம்

ஏ… கையுக்குள்ள தூரை சேர்த்து வைத்து – கோணக்
கருக்கருவாள வீசி வீசி
பண்ண வயலில நெல்லறுத்தும் – நம்ம
மண்ணுக் குடிசையும் மாறவில்ல

கோரஸ் : மண்ணுக் குடிசையும் மாறவில்ல

ஏ… அள்ளிப் போட்டு நெல்லக் கட்டுகட்டி – நாங்க
ஆளும் பேருமாக தூக்கிக்கிட்டு
ஊசி வரப்புல போகையிலே – ஏங்கி
மூச்சு விட எம்மா… முடியல..,

கோரஸ் : மூச்சு விட எம்மா முடியல

ஏ… கொட்டும் மழையில கொடலங்கீத்துப் போட்டு
குறுவைப் பயிருக்கு களையறுத்தோம்
கத்துற புள்ளைய தொட்டில போட்டுட்டு
கால் கடுக்க நின்னு நாத்து நட்டோம்

கோரஸ் : கால் கடுக்க நின்னு நாத்து நட்டோம்

ஏ.. ஊத்தும் பனியில தூங்காம – பண்ண
வூட்டு வயலுக்கு நீர் பாய்ச்சி…
மாட்டப் போல தெனம் பாடுபட்டோம் –  நம்ம
வாட்டும் வறுமையும் தீரவில்ல

கோரஸ் : வாட்டும் வறுமையும் தீரவில்ல

ஏ.. ஊரையே வளச்சிப் போட்டுக்கிட்டு – நம்ம
ஒழப்பச் சொரண்டி சேத்துக் கிட்டு
உல்லாச போகமா வாழுற கூட்டத்த
இல்லாம ஒழிக்க வாருங்கம்மா

கோரஸ் : இல்லாம ஒழிக்க வாருங்கம்மா

ஏ.. ஆள மாத்தி ஆளு ஓட்டுப் போட்டு – அய்யோ
என்ன கண்டோமம்மா நீயே சொல்லு
ஆளுற கூட்டத்த பாடைக்கு அனுப்ப
ஆயுதம் ஏந்துவோம் வாருங்கம்மா!

கோரஸ் : ஆயுதம் ஏந்துவோம் வாருங்கம்மா!
ஆயுதம் ஏந்துவோம் வாருங்கம்மா!