privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைகேள்வி-பதில்பெருகி வரும் கேரள நகைக்கடைகள் - பின்னணி என்ன? கேள்வி-பதில்!

பெருகி வரும் கேரள நகைக்கடைகள் – பின்னணி என்ன? கேள்வி-பதில்!

-

சமீக காலமாக கேரளாவைச் சார்ந்த நகைக்கடைகள் மற்றும் தங்கநகை அடகு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் கிளைகளை அதிகமாக திறந்து வருகின்றனவே இதன் உண்மையான பின்னணி குறித்து விரிவாக விளக்க முடியுமா?

லிவிங்ஸ்டன்

__________________________________

அன்புள்ள லிவிங்ஸ்டன்,

தமிழகத்தில் கேரள நகைக்கடைகள் மற்றும் தங்கநகை அடகு நிறுவனங்கள் சமீப காலமாக அதிகரித்திருப்பதன் பின்னணி குறித்து பார்க்கும் முன், இதைப் பற்றிய அடிப்படைப் புரிதலுக்காக வேறு சில விஷயங்களை பார்த்து விடுவோம். குறிப்பாக நமக்கெல்லாம் அதிகம் அறிமுகமாகாத கேரள மக்களின் ‘மஞ்சள் பித்து’ குறித்து புரிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவின் வருடாந்திர ஆபரணத் தங்க நுகர்வு அளவான சுமார் 800 டன் தங்கத்தில் (2010ம் ஆண்டுக் கணக்கு) ஒவ்வொரு வருடமும் மூன்றில் ஒரு பங்கு அளவு கேரளாவில் மட்டும் நுகரப்படுகிறது. சின்னஞ்சிறு மாநிலமான கேரளத்தில் ஆலுக்காஸ், ஜோஸ், ஜோய், மலபார் கோல்ட், பீமாஸ், ஆலாபட் போன்ற பிரம்மாண்ட சங்கிலித் தொடர் நகைக்கடைகள் திரும்பிய சந்து பொந்துகளிலெல்லாம் கடைகளைத் திறந்துள்ளன.

இதெல்லாம் போக, ஆர்ரென்ஸ் கோல்டு சவுக் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தற்போது கொச்சியில் ஒரு பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் ஒன்றை உருவாக்கி வருகிறது. சுமார் 33 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக இருக்கும் இந்த ஷாப்பிங் மாலில், மேலே பட்டியலிடப்பட்டுள்ளதைப் போன்ற சங்கிலித் தொடர் நகை சாம்ராஜ்ஜியங்கள் தமது கடைகளைத் திறக்க உள்ளன. அவை மட்டுமல்லாமல், நகை உருவாக்கம், வடிவமைப்பு, தரச் சோதனை மற்றும் ரத்தினக்கற்கள் பற்றிய தொழில்நுட்பங்களை கற்றுத் தரும் பயிற்சி நிறுவனம் ஒன்றும் இதில் துவங்கப்படவுள்ளது.

சுதந்திரத்துக்குப் பின் மற்றய இந்திய மாநிலங்களை விட கல்வி அறிவு சதவீதத்தில் முன்னணியில் இருந்த கேரளம், ஓரளவுக்கு வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் முன்னணியில் இருந்தது. எண்பதுகளின் இறுதியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதிலும் கேரளமே முன்னணியில் இருந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கு ஒன்றின் படி, நூற்றுக்கு சுமார் 25 சதவீத வீடுகளில் யாரேனும் ஒருவராவது வெளிநாட்டில் பணிபுரிகிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவுக்குள் வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் அன்னியச் செலாவனியில் 25 சதவீதம் கேரளாவுக்கே செல்கிறது.

வரலாற்று ரீதியாகவே உற்பத்தித் தொழில் சாராத வணிகப் பின்புலம் கொண்ட கேரளாவில், இப்படி வெளியிலிருந்து வரும் பணம் இரண்டே வழிகளில் தான் முதலீடு செய்யப்படுகிறது. ஒன்று நிலம் மற்றது தங்கம். மேல் நடுத்தர வர்க்க மலையாளிகளின் திருமணங்களில் மணப் பெண்ணை நடமாடும் தங்க நகை ஸ்டாண்டு போல ‘அலங்கரிக்கும்’ கோமாளிக் கூத்துகள் சாதாரணம். அதே போல் கேரளப் புறநகர்ப் பகுதிகளில் பயணிக்கும் போது அலங்காரமான பிரம்மாண்டமான மாளிகைகளையும் காணலாம். இப்படி வீடு கட்டிக் கொள்வதும், நகைகளை வாங்கிக் குவிப்பதும் கௌரவத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

இந்தப் போக்கு இரண்டாயிரங்களில் மத்தியப் பகுதி வரை நீடித்தது. மேற்கில் துவங்கிய பொருளாதாரப் பெருமந்தம் மத்திய கிழக்கு நாடுகளையும் விடாது போட்டு உலுக்கியதில் கேரளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஒரே மாதத்தில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து ஊர் திரும்பவிருப்பதாக அம்மாநில தொழிலாளர் துறை அமைச்சரே தெரிவித்துள்ளார்.

ஒரு பக்கம் கேரளா போன்ற ஒரு சிறிய மாநிலத்திற்கு இத்தனை நகைக் கடல்கள் திரும்பிய திசையெல்லாம் தமது பிரம்மாண்டமான கடைகளைத் திறப்பதென்பது அதீதமான போட்டியை உண்டாக்கவல்லது.  இன்னொரு பக்கமோ இவர்களின் வாடிக்கையாளர்களே வருமானமற்று ஊர் திரும்பும் நிலை. மூன்றாவதும் முக்கியமானதுமான வேறு ஒரு காரணமும் இருக்கிறது. தங்க நகை விற்பனைக்கான மதிப்புக் கூட்டு வரி கேரளாவில் 4 சதவீதம் – இதே பிற மாநிலங்களில் 1 சதவீதம் தான். இந்த அதிக வரி விதிப்பை இத்தனை நாளும் மலையாளிகளின் தங்க நூகர்வு வெறிக்குத் தீணி போடுவதன் மூலம் ஈடுகட்டி வந்த நிலையில், அதில் விழுந்த அடி தான் இவர்களைக் கேரளத்தை விட்டு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறது.

சாமானிய இந்தியர்களைப் பொருத்தவரையில் நகையும் அடகும்,  உடலும் நிழலும் போலப் பிரிக்க முடியாதது. அந்த வகையில் கேரளாவில் நகைக்கடைகள் எந்தளவுக்கு அதிகமோ அதே அளவுக்கு நகை அடகு நிறுவனங்களும் அதிகமே. அதில் முன்னணில் இருப்பது, முத்தூட் பைனான்ஸ், முத்தூட்டு மினி மற்றும் மணப்புறம் கோல்ட் பைனான்ஸ். இவர்களும் நமக்குப் பரிச்சியமான ‘சேட்டு’கள் மட்டும் ‘செட்டிகளை’ப் போன்ற அடகுக்கடைக்காரர்கள் தான். ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்த நிறுவனங்கள் வங்கிகளைப் போன்றே மையப்படுத்தப்பட்ட வலைப்பின்னல் கொண்டவை. இதன் ஒவ்வொரு கிளையும் கணினி மயமாக்கப்பட்டு தலைமையகத்தோடு இணைக்கப்பட்டிருக்கும்.

கொச்சியைத் தலைமையகமாகக் கொண்ட முத்தூட் பைனான்ஸ்க்கு, 2011 ஆண்டு வாக்கில் 3,369 கிளைகள் இருந்தன. 2009-ம் ஆண்டு வாக்கில்  985 கிளைகளாக இருந்து இரண்டே வருடத்தில் நான்கு மடங்காக வளர்ந்துள்ளது. முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளைகளது எண்ணிக்கை தற்போது நாட்டிலேயே மூன்றாவது அதிகக் கிளைகளைக் கொண்ட பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் எண்ணிக்கையை எட்டியுள்ளது. இந்தக்  கிளைகளில் சுமார் 85 சதவீதமானவை தென்னிந்திய மாநிலங்களில் தான் அமைந்துள்ளது.

தற்போது தங்க நகைக்கடன் சந்தையில் சுமார் 19.5 சதவீத அளவை முத்தூட் பைனான்ஸ் நிறுவனமே கட்டுப்படுத்துகிறது. கடன் அளிப்பதில் பொதுததுறை வங்கிகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் ஏதுமில்லாத முத்தூட், அடகுக்காக நகைகளை எடுத்துவரும் ஒருவருக்கு பத்தே நிமிடத்தில் கடன் தொகையை அளித்து விடுகிறது. பொதுத்துறை வங்கிகள் கடனளிக்கவும் புதிய கிளைகள் துவங்கவும் ரிசர்வ் வங்கியின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள  அரசு, இது போன்ற தனியார் வட்டிக்கடை நிறுவனங்களுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலும் இல்லை. கடந்தாண்டு ஜனவரி 31-ம் தேதி அன்று ஒரே நாளில் மட்டும் முத்தூட் 103 புதிய கிளைகளைத் துவக்கியுள்ளது.

கேள்வி - பதில் : பெருகி வரும் கேரள நகைக்கடைகள் – பின்னணி என்ன ?

இந்நிறுவனங்கள் தென்னிந்தியாவில் பிரதானமாகத் துவக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, மலையாளி நிறுவனங்கள் தமது கிளைகளை விரிவாக்க அக்கம் பக்கத்து மாநிலங்கள் என்றால் வசதி. மொழி, கலாச்சாரம், உள்ளூர் அரசியல் போன்ற காரணிகளை சுலபத்தில் சமாளிக்கலாம். இரண்டாவதும் முக்கியமானதுமான காரணம், வடஇந்திய மாநிலங்களைக் காட்டிலும் தென்மாநிலங்கள் தொழில் வளர்ச்சி, சிறுதொழில் முனைவு, தனிநபர் வருமானம் போன்றவற்றில் வளர்ந்த மாநிலங்கள். அந்த வகையில் வளர்ந்து வருகிற நடுத்தர வர்க்கம் ஒப்பீட்டளவில் அதிகம். இங்கே தங்க ஆபரண நுகர்வு வடக்கை விட அதிகம் என்பதோடு, சிறிய தொழில்களுக்கு உடனடியாக பணம் புரட்டவோ அல்லது ஆத்திர அவசரத்திற்கு அடகு வைக்கவோ இந்நிறுவனங்கள் ஒரு வசதி.

மேலும் தற்போது அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி, சிறு தொழில் முனைவோரிடம் நிலவும் செலாவாணி வறட்சி, சாமானிய மக்கள் எதிர் கொள்ளும் சம்பளக் குறைப்பு, வேலையிழப்பு போன்ற நெருக்கடிகள் இது போன்ற நிறுவனங்கள் வளர வாய்ப்புகளை வழங்குகிறது. அந்த வகையிலும் தென்னிந்தியா மாநிலங்களில் அடகுக் கடைகள் நிறைய வளர முடியும்.

வடக்கே தொழில் வளர்ச்சியில் முன்னேறியுள்ள ஒரு சில மாநிலங்களும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மார்வாரி, பனியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு ஊடுருவி கடைகளைத் திறப்பது ஒப்பீட்டளவில் சவாலானது. ஆனாலும், தென்னிந்தியாவினுள் மட்டும் சுருங்கிக் கிடப்பது தமது நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தானது என்பதை உணர்ந்துள்ள முத்தூட் சகோதரர்களில் மூத்தவரும் அந்நிறுவனத்தின் சேர்மனுமான ஜார்ஜ் முத்தூட், தனது அலுவலகத்தை தில்லியில் அமைத்துக் கொண்டு வட இந்தியாவில் கிளை பரப்பும் திட்டத்தை சொந்த முறையில் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆக, முத்தூட், மணப்புரம் போன்ற மலையாள அடகுக் கடைகளும், கேரளத்தை மையமாகக் கொண்ட பிற சங்கிலித் தொடர் நகைக் கடைகளும் தமிழகம் என்றில்லாமல் பிற மாநிலங்களிலும் தமது கிளைகளைத் திறந்தே வருகிறார்கள். அதற்கான சூழலும் தற்போது அனைத்து மாநிலங்களிலும் நிலவுகிறது. இந்தியர்களுக்கே உரித்தான தங்கத்தின் மேலான பித்தும், அதை வாங்கி பதுக்கி வைப்பதில் இருக்கும் அற்பத்தனமான பெருமிதமும், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியுமே மலையாளி தங்க முதலாளிகளுக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே நகைக் கடைகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக் கொண்ட இந்த நிறுவனங்கள் அண்டைய மாநிலங்களில் விரிவு படுத்துவது சாத்தியம்தான். அதற்கு தோதாக மறுகாலனியாக்கத்தின் விளைவாக வளரும் நடுத்தர வர்க்கமும், பெருகி வரும் அதன் வாழ்க்கைப் பிரச்சினைகளும் ஒருங்கே சேர்ந்து இத்தகைய நகைக்கடைகளுக்கான சமூக அடிப்படையை தோற்றுவிக்கின்றன. இதை நாம் தமிழர், மலையாளி என்ற இனவாத அரசியலுக்கு அப்பால் உள்ள பொருளாதார அடிப்படைகளின் மூலம்தான் புரிந்து கொள்ள முடியும்.

  1. இது கம்யூனிஸ்ட் கட்சிகாரனை மாதிரியே நழுவுற பேச்சு வினவு. நாம அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மட்டும் தானே எதிர்க்க காப்புரிமை பெற்றிருக்கோம். மலையாளி என்ன வேணுமானாலும் பண்ணிட்டு போகட்டும்.

    • சரி தமிழன்டா, நீங்களே சொல்லுங்க ஏன் சமீபத்துல கேரள நகைக்கடையும் அடகு கடையும் தமிழ்நாட்டிலேயும் மத்த மாநிலங்களிலேயும் அதிகமா திறக்கறாங்க?

      • பல காரணங்கள் இருக்கு, பாஸ்.

        தமிழ்நாட்டுல ஏகப்பட்ட NRI பணம் வந்துகிட்டிருக்கு. வீட்டுக்கு ஒரு ஆள் அமேரிக்கா, துபாய், சிங்கப்பூர், மலேசியான்னு இருக்காங்க. என்னதான் வெளிநாட்டுல போயி வேலை பாத்தாலும், யாருக்கும் தங்க மோகம் கொஞ்சங்கூட குறையல. பார்க்கபோனால் அதிகமாயிட்டிருக்கு. எந்த நெருக்கடியிலும் மவுசு குறையாத பிசினஸ்னு பாத்தா கல்யாண மண்டபமும் தங்கமாளிகையும்தான்.

        பொருளாதாரம் வளர்ந்தது போல் ஊழல், கொள்ளை இவையெல்லாமும் கூட பெருகிவிட்டன. இப்போ கோடிகளில் பேசுவது சகஜமா போச்சு. அந்த பணமெல்லாம் எங்கேயாவது போட்டு வைக்கணும் இல்லையா? வீடு, நிலம், பங்கு, கட்டிடங்கள்னு பல வழிகள் இருக்கு. அவற்றில் தங்கமும் ஒன்று. முக்கிமான ஒண்ணுன்னே சொல்லலாம்.

        ஆலுக்காஸ் முன்னாடி ஒரு நிறுவனமாக இருந்தது. இப்போ குடும்பத்துல சொத்தை பிரிச்சதனால் ஏழு அண்ணன் தம்பிகளும் தனிதனிய கடை நடத்தறாங்க.

        கல்யாண் கோடிக்கணக்குல தமிழ்நாட்டிலே பிசினஸ் பண்றது காஞ்சி சங்கர மடத்தோட பணத்துல.

        • நல்ல இருக்கு உங்க நியாயம்… இதைபோலதனே வால் மார்ட் இங்கே வந்து வியாபாரம் செய்ய கேட்கிறான்.. என்ன இது கேரளா , அது அமெரிக்கா…இரெண்டுக்கும் பெரிய வித்யாசம் இல்ல பாஸ். அடிக்கிறது கொள்ள..

          • பதில் இருக்கா
            வினவு ????வினவின் கம்முநிசதிர்க்கு விடப்பட்ட சவால் ??? நமக்கு அமெரிக்காவும் சீனாவும் கேரளாவும் அந்நியர்கள் தான் ???

            • ‘அந்நியர்கள்’ என்பதைக் காட்டிலும் ‘முதலாளித்துவவாதிகள்’ எங்கிருந்தாலும் அவர்கள் கொள்ளையர்களே என்பதுதான் பொருந்தும். அது அமெரிக்காவோ, சீனாவோ, பிரேசிலோ, போர்ச்சுகலோ, வாடிகனோ, சவூதியோ, கேரளாவோ, மியான்மரோ, ராஜஸ்தானோ, தமிழ்நாடோ…. எதுவாயினும் சரி.

        • No NRI’s don’t buy gold here. This is all making the block money to white. Allukas group working with Dawood ibrahims money, and some other group works with some Christian churches who brought money from our Soniajis money diverted from swiz via roman catholic churches. Vinavu Please investigate and expose this culprits.

          Thanks,
          Insider

  2. தமிழர் மலையாளி-னா இனவாதப் பேச்சா?

    அப்புறம் என்ன ம__த்துக்கு தமிழர்களே ஒன்று திரளுங்கள்னு முல்லைப் பெரியாறு சிக்கலில் போராட ‘இனவாத’ அறைகூவல் விடுத்தீங்க..?

    ஆள்புடிக்கணும்னா என்ன வேணும்னா பேசுவீங்களா?

    • தமிழர்களே ஒன்று திரளுங்கள்னு முல்லைப் பெரியாறு சிக்கலில் போராட ‘இனவாத’ அறைகூவல் விடுத்தீங்க..?>>>

      பாரத்துன்னு பேரு வச்ச தமிழினவாதியா,,இஃகி இஃகி
      சரி இந்த தமிழர்களே அரைகூவல் வினவுல எங்க வந்திச்சுங்க?

  3. வக்காலி… வாங்குறது அவன்கிட்ட தான்… வைக்கிறதும் அவன்கிட்ட தான்…!!!

    • அவன் இவன்னு ஏன் பிரிச்சு பாக்கறீங்க பொன்னு? எல்லோரும் இந்நாடு மக்கள்/மன்னர் தானே.

      • //அவன் இவன்னு ஏன் பிரிச்சு பாக்கறீங்க பொன்னு? எல்லோரும் இந்நாடு மக்கள்/மன்னர் தானே.//

        நீங்க முல்லை பெரியாரு பிரச்சனை சமயத்தில் சந்திர மண்டலத்துக்கு டூர் போய் இருந்தீர்களா? எல்லாரும் ‘இந்தியன்’ என்று நினைக்காவிட்டால் கூட பரவாயில்லை… ஆனால் ‘தண்ணி வேணுமாடா தண்ணி… இந்தா எங்க மூத்திரத்தை புடிச்சி குடின்னு’ பேட்டி கொடுத்தவனை நேர்ல பாத்தா, ‘குடிக்கிறேன். காட்டுன்னு’ அறுத்தெறிய கத்தியோட காத்துகிட்டு இருக்கிறான் இங்க நெறைய பேரு. அப்படி கத்தியை சாணை பிடித்துகொண்டு இருக்கிறவன் கிட்ட ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்தான்’னு சொன்னா அவன் என்ன பதில் சொல்வானோ, அதுவே என் பதிலும்…!!!

  4. நீண்ட நாட்களாக இதைப்ப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்றிருந்தேன்….நன்றி வினவு….

  5. என்ன இது…. தினமணி வைத்தி மாமா, ஜெயா அரசை பற்றி எழுதுவது போல அல்லவா இருக்குது.. என்ன வினவு.. என்ன ஆச்சி.

  6. தங்கம் ஒரு டைனமைட். எப்போது யாரை பலி வாங்கும் என்பது தெரியாது. மலையாளியோ, தமிழனோ! எந்த முதலாளியாக இருந்தாலும் இவர்கள் வெடி மருந்துக் கூடங்களை பரவலாக்கி வருகிறார்கள்.இதன் விளைவு? இனி யாராலும் கணிக்கவும் முடியாது; கட்டுப் படுத்தவும் முடியாது.

    தங்கம் கடையோடு இருந்தால் பலி கடையோடு முடிந்துவிடும். ஆனால் கழுத்திலோ காதிலோ இருந்தால் உங்கள் காதையும் கழுத்தையும் யாரால்தான் காக்க முடியும்? கழுத்து போனால் அன்றோடு கதை முடிந்துவிடும். ஆனால் பீரோவில் பூட்டப்பட்டிருக்கும் வளமான எதிர்காலம் களவு போனால் உங்கள் வாழ்வும் சேர்ந்தே களவாடப்படுகிறது. களவு போன தங்கம் எப்படி மீள்வதில்லையோ அதே போல வாழ்வும் திரும்பாது.

    பீரோவை எப்போதும் திறந்தே வையுங்கள். வாழ்க்கை நிச்சயம் வசப்படும்.

  7. //2011 ஆண்டு வாக்கில் 3,369 கிளைகள் இருந்தன. 2009-ம் ஆண்டு வாக்கில் 985 கிளைகளாக இருந்து இரண்டே வருடத்தில் நான்கு மடங்காக வளர்ந்துள்ளது. //

    பிரமிக்க வைக்கிறது இந்தப் புள்ளிவிவரம்!

  8. ///இந்தியர்களுக்கே உரித்தான தங்கத்தின் மேலான பித்தும், அதை வாங்கி பதுக்கி வைப்பதில் இருக்கும் அற்பத்தனமான பெருமிதமும்,///

    வருடம் 20 சதம் வரை விலைவாசி உயர்வு முன்பு இருந்தது. அதாவது ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. (வட்டி விகிதம் அதை ஒட்டி தான் இருக்கும். அன்று வங்கி கடன்களே 18 சதம் மற்றும் அதை விட அதிகமாக இருந்தன). தம் சேமிப்பை சுலபமாக பாதுக்கவே இந்தியர்கள் பல ஆண்டுகளாக தங்கத்தில் முதலீடு செய்தனர். ஏனென்றால், தங்கத்தின் மதிப்பு மற்றும் விலை என்றும் நிலையாக இருக்கும் என்று ஒரு கோணம். The value of gold will increase in proportion to the rate of inflation.

    கிராமங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முன்பு அதிகம் இல்லா நிலை. எனவே சேமிக்க ஒரே வழி தங்க நகை வாங்கவது மூலம் தான்.

    மேலும் தங்க நகைகளை பெண்கள் தான் அதிகம் சொந்தமாக வைத்திருப்பர். ஆணாதிக்கம், தந்தை வழி சமூகத்தில், பெண்களுக்கு சொத்துரிமை பெரும்பாலும் இல்லை. முக்கியமாக நடுத்தர மற்றும் ஏழை பெண்களுக்கு தங்க நகைகள் மூலம் தான் personal wealth, personal savings,etc சாத்தியம். மகள்களுக்கு தம் சொத்தை நகையாக அளிக்க சாத்தியம். போர், வெள்ளம், பெரு நோய்கள் போன்ற பேரிடர் காலங்களில், ஊரை விட்டு திடிரென இடம் பெயர வேண்டிய சூழல்கள் அதிகமான காலங்களில், உடலில் நகைகளை அணிந்தபடி மிக சுலபமாக, வேகமாக புலம் பெயர்வாது முடிந்தது. தங்க நகைகள் இங்கு இத்தனை பிரபலமாக இதெல்லாம் காரணிகள்.

    ஆனால் இன்று பெரும் நகைகடைகளில் 22 காரட் தங்கம் என்று பொய்யாக, அதை விட குறைந்த தரம் கொண்ட நகைகளை தான் விற்க்கின்றனர். பெரிய ஏமாற்று வேலை நடக்கிறது. Resale market for old jewels and gold அநேகமாக இல்லை. அப்ப்டியே இருந்தாலும் நியாயமான விலை கிடைக்காத சூழல். எனவே தேவை மட்டும் அதிகரிக்கிறது.

  9. தான் தான் என்றும் சரி என்று பிதற்றி வந்த வினவவே ??? நீ எல்லாம் ஒரு தமிழனா ??எனக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் …பாசிசசம் கம்முநிசம் என்று கூறி விட்டு …இப்படி முல்லை பெரியாரில் நம்மை ஏமாற்றியே மலையாளிகளை உறவு செய்ய சொல்றியா ??உனக்கு வெக்கமா இல்லை ??? தமிழனால் தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருகிறார்கள் …கேரளா நாய்களும் தான் …இபோ தங்க கடைய பத்தி ஞாயமா …இந்த கட்டுரையை மலையாளிகளின் பித்தலாட்டம் என்று தலைப்பில் எழுதுவே நு நெனச்சா …இப்படி மலையாளிகளுக்கு கோடை பிடிகிரியா …?? உனக்கும் முல்லைப் பெரியார் சண்டயப்போ மலையாளி நகைக்கடை விளம்பரத்தில் தோன்றிய தமிழின துரோகி விஜய்க்கும் என்ன வித்யசாம் ??? இதற்கு பதில் இல்லனா ..உன்னை பற்றி நீயே அறிந்துகொள் ???

    • அண்ணே நெத்தியடி, கண்ணில்லாத குருடனாணே நீயி..,

      இப்படி கட்டுரையில எங்கனாச்சும் இருக்கா? எதுக்குண்ணே இவ்ளோ பீல் பண்ணி கூவுற?

      • இந்தக் கட்டுரை மலையாளிகளுக்கு ஆதரவாக எழுதப்பட்டதாக சிலர் புரிந்துகொண்டுள்ளனர். அது எப்படி என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. நெத்தியடி,கட்டுரையை நல்லாப் படிச்சுட்டு வாப்பா. அவதூற அள்ளி வீசக்கூடாதுப்பா.

        • அது ஒன்னுமில்ல சரவெடி, தமிழ்நாட்டுக்குள்ளேயும் பிற வெளி மாநிளங்கள்ள வாழுற தங்கநகை வாங்கும் தமிழனையெல்லாம் அழித்து ஒழிக்க ரூம் போட்டு யோசித்து மலையாள நகைகடை முதலாளிகள் வகுத்த சதித்திட்டம்தான் தமிழ்நாட்டுலேயும் பிற மாநிலங்களிலிலேயும் இத்தனை நகைக்கடையும் அடகுகடையும் திறப்பதுன்னு வினவு எழுதியிருந்தா இவங்க சந்தோசப்பட்டிருப்பாங்க, ஆனா வினவு அப்படி எழுதாம உள்ளதை உள்ளபடி எழுதியதுனால காண்டாயிட்டாங்க 😉

  10. ஊசி அண்ணே …உள்ளத உள்ளபடி எழுதுறதுக்கு வினவோன்னும் பத்திரிக்கை இல்லன்னே … வினவு இது வரைக்கும் செய்தி போட்டு விட்டு அது தப்ப செரியா நு ஒரு முடிவு கட்டுரையிலே இருக்கும் ..,…இங்கே அந்த மாறி அவனுங்க செய்றது தப்பு நு சொல்லிருந்த நல்லா இருந்துருக்கும் …இது வரைக்கும் செய்ற வேலையே வினவு எல்லாருக்கு செய்யணும் …

    • இவ்ளோதான் மேட்டரா! ஐயா, இது வழக்கமா வர்ற கட்டுரையில்லை. இது கேள்வி-பதில் பகுதி. ஒரு அன்பர் ஒரு விஷயத்தைச் சொல்லி விளக்கம் கேட்டிருக்கார். அதுக்கு பதில் சொல்லியிருக்காங்க. தெளிவாகவும் சொல்லிருக்காங்க. இது போல அடகுக்கடை நிறுவனங்கள் பெருகி வருதுன்னா அதுக்கு மக்கள் தங்கள் ஜட்டியைத் தவிர மிச்சத்தை அடகு வைக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்படறாங்கங்கற காரணம்தானே? உலகமயமாக்கலின், தாராளமயமாக்கலின் bye-product தான் இந்த அவலநிலை என்பதை தெளிவா சுட்டியிருக்காங்க. இதைப் புரிஞ்சிக்கத்தான் மனசு வேணும். எனக்கென்னவோ பிற கட்டுரைகள் மாதிரி ரொம்பவும் கனமான வார்த்தைகளைப் போட்டு தாளிக்காம சொல்ல வந்தத ஸ்ட்ரெயிட்டா சொன்னதாத்தான் படுது. மற்றபடி ஊசி சொன்னதுபோல எழுதினாத்தான் ஒத்துக்குவீங்கன்னா.. ஒன்னும் சொல்றதுக்கில்ல.

  11. கட்டுரைக்கும் அதன் தொடர்பான சில பதில்களுக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறதே. மலையாளிகள் அதிகமாக நகைகடை திறப்பதற்கான காரணத்தை மிக விரிவாக சொல்லியிருக்கிறார்கள். நாம் அதில் ஏன் விட்டில் பூச்சிகளைப் போல் போய் விழுந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் விளக்கியிருக்கிறார்கள். இவர்களாவது நகையை விற்பனை செய்து பணம் பண்ணுகிறார்கள். குஜராத்தி மார்வாடிகளோ வட்டி என்ற பெயரில் நமது இரத்தத்தை அல்லவா குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  12. மிகவும் விரிவாக விளக்கி எழுதியுள்ளீர்கள், குறைந்த வட்டி அதிக கடன் தொகை என்று அவர்கள் செய்யும் மோசடி விளம்பரங்களை குறித்தும் விரிவாக எழுதியிருக்கலாம்

  13. அரபி எண்ணெய் முதலாளிகளும்,இந்தநகைக்கடைகளுக்கு பின்னணியில் இருப்பதாக கேரளத்தவர் சொல்கின்ரனர்!

  14. It is to be noted that once in Maurai when a Gold Jewellery Shop was opened, DMK Azhagiri’s wife and his deties purchased som itmes of jewellery and when Bill was given, the deputies told that Azhagiri is ruling Madurai and went away witout paying…within two days Dawood’s men approached Azhagiri and the next day the payment was made …
    It can be seen that dons and NRIs are involvd in Gold Buiness…Kanchi Madam is also invested in Kalyan Jewellers..
    It is not Keralities/ Tamilians it is the Indins who are behind the purhase of Gold ornaments from the Jewellers…
    So long as the ambition of Indians to buy/ accumulate God ornaments, the mushroom growth of Jewellery shops will be growing…People should be very sensible in investing on Mutual Funds/ Shares so that nations development can be achieved..

  15. ONE FACT I LEARNT FROM YOUR ANSWER IS THESE GOLD LOAN SHOPS ARE NOT CONTROLLED BY RBI. SO ONE FINE DAY THEY WILL SHUT THEIR SHIPS AND YOU WILL BE IN TROUBLE. (REMEMBER THAT SO MANY FINANCE COMPANIES OFFERED HUGE RATE OF INTEREST ON DEPOSITS AND THEY ALL CLOSED THEIR SHOW ONE FINE MORNING AND MANY LOST THEIR LIFE SAVINGS)

  16. I really appreciate your valuable information on increasing Kerala based traders on gold related businesses in Tamilnadu and these details cannot be seen in other sources.

Leave a Reply to ஊசி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க