privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சிறுகதை: அபின்

-

ஏனங்குடிக்குப் புதிதாக மருத்துவனாக வந்தபோது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து சாலையை வேடிக்கை பார்ப்பது எனக்கு வழக்கம்.

மாட்டின் வாலை முறுக்கிவிட்டு அதன் பின்னே நடப்பவர்கள்; வெள்ளை வெளேரென்ற ஆட்டுக் குட்டியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடப்பவர்கள்; தெருவில் யாரையாவது பார்த்து விட்டால் தலையைக் குனிந்து செல்லம் இளம் பெண்கள்; என்னைப் பார்த்தால் நிறுத்தி வணக்கம் செலுத்திவிட்டுப் போகும் பால்காரர்கள்; புது டாக்டர் எப்படி இருக்கிறார் என ஆவலுடன் என் வீட்டை நோட்டமிடுபவர்கள்….

அப்போதுதான் முதல் முறையாக அப்பாசைக் கவனித்தேன். காற்றில் மிதப்பது போல மெதுவாக மண்ணெண்ணெய் வண்டியை மிதித்துக் கொண்டு செல்வார். அவரது வலது காலை அழுக்கான சேலைத் துணியால் சுற்றியிருந்தார்.

அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் நான் இருந்த போது அதே கட்டுடன் அப்பாஸ் ஒரு நாள் என்னைச் சந்தித்தார்.

”கால்ல என்னங்க?” என்றேன்.

”கால்ல புண்ணுங்க சார்” என்றவாறே தரையில் உட்கார்ந்து மெல்ல தனது துணிக்கட்டை அவிழ்க்க ஆரம்பித்தார்.

இரண்டங்குல அளவிற்குப் பெரிய புண் நடு உள்ளங்காலில் இருந்தது. ஆழமான அந்தப் புண்ணின் உள்பகுதி கறுத்து இருந்தது. டார்ச் விளக்குடன் நான் குனிந்தபோது புண்ணிலிருந்து ஒரு வித நாற்றம் பரவியதை உணர முடிந்தது. இத்தனைப் பெரிய புண்ணுடன் எப்படி இவர் மண்ணெண்ணெய் வண்டியை மிதிக்கிறார் என வருத்தமாக இருந்தது.

”புண்ல வலி இல்லீங்களா?” என்றேன்.

”அதெல்லாம் ஒண்ணுமில்லேங்க” என்றவாறு தனது இருகைகளாலும் புண்ணை அழுத்தி எனக்குக் காட்டினார்.

”அப்பாஸ் அண்ணனுக்கு நாலஞ்சு வருஷமா சக்கரை வியாதி இருக்கு சார். அதான் புண்ணு ஆற மாட்டேங்குது. நாங்களும் என்னன்னவோ மருந்து கொடுத்துப் பார்த்துட்டோம்” என்றார் மருத்துவனை ஊழியர் ராதாகிருஷ்ணன்.

அப்பாஸ் அண்ணன் என்று அவர் அப்பாசை மரியாதையாக விளித்தது எனக்கு வியப்பாக இருந்தது. வியப்பிற்கு விளக்கம் உடனே கிடைத்தது.

”சார் உங்களுக்கு ஏதுனா மண்ணெண்ணை வேணுமின்னா அண்ணங்கிட்ட சொல்லுங்க, வீட்ல வந்து கொடுக்கச் சொல்லறேன்” என்றார்.

அதற்குள் அப்பாஸ் ”இந்தப் புண் ஆறுமா சார்?” என்றார்; அவரது பார்வையில் நம்பிக்கையின்மை தென்பட்டது.

”ஆற வைக்கலாங்க. ஆனா தினம் நீங்க இன்சுலின் ஊசி போட்டுக்கணும்; அப்புறம் நீங்க மண்ணெண்ணெய் வண்டி மிதிக்கக் கூடாது. உங்க தொழிலை கொஞ்சம் மாத்திக்கணும். அப்போதுதான் சீக்கிரம் ஆறும்,” என்றேன்.

”ஊசி இங்கேயே போட்டுக்கலாமா?”

”இல்லீங்க இதமாதிரி கிராமப்புறத்து ஆஸ்பத்திரிக்கெல்லாம் இன்சுலின் தரமாட்டாங்க. நீங்கதான் வாங்கிட்டு வரணும்” என்றேன்.

தலையாட்டிய அப்பாஸ் அண்ணனை ஊழியர் அன்புடன் இழுத்துச் சென்றார். அன்று அப்பாசிடம் வாங்கும் மண்ணெண்ணெய்க்கு அவர் காசு கொடுப்பாரா என்பது சந்தேகம்தான்….

______________________________

எனினும் சில நாட்கள் தொடர்ந்து கட்டு கட்டி வந்ததில் புண் ஆறுவதைப் பார்க்க அப்பாசிற்கு என் மேல் நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும். எப்படியோ ஒரு நாள் இன்சுலின் ஊசியுடன் வந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எப்படியாயினும் ஒரு ஏழைத் தொழிலாளியின் நோய் குணமானால் சரி என்பது போல் ”இன்சுலின் நீங்களே வாங்கிட்டீங்களா பரவாயில்லை. ஆனா ஊசி 40 ரூபாய்க்கு மேல் இருக்குமே.”

”ஆமாங்க ஆனா புண்ணு இப்போ ஆறி வருதுங்க. நீங்க சொன்ன மாதிரி ஊசி போட்டுக்கிட்டா சீக்கிரமே நல்லாயிடுமில்ல.”

அப்பாஸ் ஊசி போட்டுக் கொண்டு கட்டும் அறைக்கு நகர்ந்ததும் ராதாகிருஷ்ணன் என் அருகில் வந்து கிசுகிசுப்பாக ”சார் வடக்குத் தெரு போயிருக்கீங்கல்ல. மூக்கா வீடுன்னு சொல்வாங்கள்ள,” என்றார். நான் புரியாது விழித்தேன்.

”சார் அந்த தெருவுல வீட்டு முன் பக்கம், காம்பௌண்டு சுவரு எல்லாத்திலேயும் கறுப்பு கலர்ல டைல்ஸ் பதிச்சிருப்பாங்கல்ல சார்.”

”ரெண்டு பேருக்கும் ஒரே அம்மா. ரெண்டு அப்பா சார்” என்றார்.

இதைக் கேள்விப்பட்டதும் எனக்கு கஷ்டமாக இருந்தது. ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். ஒருவர் தனது வீட்டின் சுற்றுச் சுவர்களைக் கூட ராஜஸ்தானத்து டைல்ஸ்களால் அழகுபடுத்துகிறார். இன்னொருவர் ஆறாத புண்ணுடன் கூட வண்டியோட்டிப் பிழைக்கிறார். ஏன் இப்படி?

எல்லோரும் ஒரே தட்டில் உணவு உண்ணும் சகோதரத்துவம் எங்கே போனது? நான் சந்தேகத்தை எழுப்பிய உடன் ராதா ”அதெல்லாம் சும்மா சார்! சும்மானாச்சுக்கும் கல்யாணம்னா எல்லாம் அப்படி செய்வாங்க. அவ்வளவுதான்; ஏனங்குடியில் எவ்வளவு முசுலீம்கள் ஏழைகளா இருக்காங்க. எல்லாம் சொல்லுவாங்க சார். ஆனா நம்பள மாதிரிதான்” என்று என்னையும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

­­­­­­­­­­­­­­­_________________________________

ஓரிரு மாதங்கள் கழித்து அப்பாஸ் தன் மனைவியோடு மருத்துவமனைக்கு வந்திருந்தர். ”ரொம்ப நன்றிங்க சார். புண்ணு இப்போ நல்லா ஆறிடுச்சு சார்,” அப்பாஸின் கண்களில் ஈரம். ”நீங்க எந்தம்பி மாதிரி, ஆறு மாசமாக இந்த புண்ணை வச்சிகிட்டு வண்டி ஓட்றதுக்கு சிரமப்பட்டார். நீங்க நல்லா இருக்கணும்” என்றார் அப்பாசின் மனைவி.

தொடர்ந்து அப்பாசின் மனைவி ”இன்சுலின் ஊசி போதுமா? இல்ல இன்னும் போடணுங்களா?” என்றார்.

அவருக்கு மாத்திரையில ரத்தத்தில் சர்க்கரை குறையறது இல்ல,அதனால ஊசிய தொடர்ந்து போடுறதுதான் நல்லது” என்றேன்.

”ரொம்ப கஷ்டமாக இருக்கது தம்பி; ஊசி ரொம்ப வெலையாவுது; நீங்கதான் எப்படியாவது அரசாங்கத்துல சொல்லி ஊசி வாங்கி போட்டுவுடுங்க” என்றவாறு கையெடுத்துக் கும்பிட்டார்.

நான் அரசாங்கத்தின் பிரதிநிதி அல்ல; கையாலாகாத ஒரு அரசாங்க ஊழியன் என அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

__________________________________

அன்று இரவு ஜான் முகமதுவைப் பார்க்க அவரது வீட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. ஜான் முகமது என்னைப் பொறுத்தவரையில் ஒரு அற்புதமான மனிதர். சற்றும் களங்கமில்லாத சிரிப்பு அவர் தாடிக்குப் பின்னிருந்து வந்து கொண்டேயிருக்கும். என்னை மதிப்பவர். என்மேல் பிரியம் உள்ளவர். ஐந்து வேளை தொழுகை செய்யும் அவர் நாத்திகனான என்னுடன் கை கோர்த்துக் கொள்வார். என் தந்தையின் வயதையொத்த ஒருவருடன் சமமாக கைகோர்த்துப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

அவர் வீட்டின் எதிரிலிருக்கும் சந்தில் அப்பாஸ் திரும்புவதை தற்செயலாக கவனித்தேன்.

”என்ன மண்ணெண்ணெய்க்கார அப்பாஸ் இங்க போறாரு” என்றேன் அவரிடம்.

”உங்களுக்குத் தெரியாதா, அப்பாஸ் வீடு அங்கதான் இருக்கு” என்றார் ஜான் முகமது.

அந்த இருளில் சந்திற்கு அப்பால் இருந்த அப்பாசின் வீடு எனக்குப் புலப்படவில்லை.

”அப்பாசின் அண்ணன் வீடு வடக்குத் தெருவில இருக்குன்னாங்களே?” என்றேன்.

”ஆமா பாகப் பிரிவினையிலே அவங்க கொஞ்சம் மோசடி செஞ்சுட்டாங்க.”

”நீங்க இருந்துமா இப்பிடி செஞ்சுட்டாங்க” என்றேனே.

”இல்ல, நான் ஏனங்குடி ஜமாத்துல்ல. அது கரைப்பாக்கம் ஆதலையூர் ஜமாத்” என்றார் ஜான் முகமது.

”எல்லோரும் சகோதரர்ன்னு சொல்றீங்க ஆனா ஜமாத்துக்கு ஜமாத் இப்படி வேறுபாடா?”

புன்னகையுடன் “என்ன செய்யிறது, காலம் மாறிப் போச்சு. தப்புப் பண்றவங்க எல்லா இடத்துலயும் இருக்காங்க. நாங்கூட அவன் அண்ணன்கிட்ட சொல்லிப் பார்த்தேன். கேக்கலை, சரி நம்ம வீட்டுக்கு எதிரில இருக்கிற சந்துல அந்த பழைய வீடு சும்மா கெடந்துச்சு. அதான் இங்க கொண்டு வச்சுருக்கேன்” என்றார். அவரின் பணிவு என்னை நெகிழ வைத்தது.

”அப்பாசுக்கு தினம் இன்சுலின் போடணும், பாவம் ஊசி வாங்க காசு இல்ல போலிருக்கு. நீங்க உங்க ஜமாத்துல சொல்லி கொஞ்சம் ஊசி வாங்கி கொடுக்க முடியுமா?” என்றேன்.

”ஜமாத் என்னங்க, ஜமாத் இதுக்கு, நானே வாங்கி தர்றேன்” என்றார். சொன்னபடியே ஊசியும் வாங்கிக் கொடுத்தனுப்பினார். பலமுறை ஏழை முஸ்லீம் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி தேவைப்படும்போதெல்லாம் அவரை நாடியிருக்கிறேன். மனம் கோணாமல் அவரும் உதவியிருக்கிறார். ஆனால் எத்தனைக் காலம்தான் அடுத்தவர் தயவில் வாழ முடியும்? அப்பாஸ் ஊசி போட வருவது மெல்ல மெல்ல நின்று போயிற்று.

அதிகமான வேலைப் பளுவின் காரணமாகவும், மனிதர்களை அறைக்குள் மட்டுமே சந்திக்கும் வாழ்க்கை முறையின் காரணமாகவும் நானும் அப்பாசை மறந்து போனேன்.

____________________________________

ஓரிரு வருடங்கள் கழிந்திருக்கலாம். ஒரு நாள் மருத்தவமனையின் வெளி நோயாளிகள் பிரிவில் இருந்தபோது வாசலில் திடீரென ஒரே கூட்டம். கூச்சல். மருத்துவமனை ஊழியர்கள் கட, கடவென வாசல் பக்கம் ஓடினார்கள். கூட்டத்தை விலக்கியவாறு ஒரு சிலர் ‘வழியவிடுங்க’ என்றவாறு ஒரு பெண்ணை இரத்தம் ஒழுக தூக்கி வந்தனர். நிறம் மங்கிய அப்பெண்ணின் துப்பட்டா முழுவதும் ரத்தம் நிறைந்திருந்தது. அருகில் வந்ததும் தெரிந்தது அந்தப் பெண் அப்பாசின் மனைவி என்று.

மருத்துவமனை வராண்டாவில் படுக்கச் செய்து ”என்னவாயிற்று” எனக் கேட்டேன். ”நம்ம ரெண்டாம் நம்பர் பஸ்ல அடிபட்டுட்டாங்க சார்” என்றார் ஒருவர். புடவையை சற்று விலக்கி கால்களைப் பார்த்தேன். வலது கால் முழுக்க சிதைந்து போயிருந்தது. கூட்டத்திலிருந்து பலர் ‘உச்’ கொட்டினார்கள். ஏதும் செய்ய இயலாத நிலையில் அவரை உடனடியாக நாகப்பட்டினம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு நாற்காலியில் வந்து அமர்ந்தேன். மருத்துவமனை வளாகத்தில் இருந்து கூட்டம் கலைந்து கூச்சல் ஓய்ந்து அமைதி நிலவியது.

”எப்படி ஆச்சுங்க ஆக்சிடெண்ட்?” என்றேன் ராதாவிடம். அதற்குள் கடைத்தெருவிற்குப் போய் நிறைய தகவல்கள் சேகரித்து வந்திருந்தார்.

”அப்பாசுக்கு ரொம்ப முடியாம போய் நாகப்பட்டணம் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில சேத்துட்டாங்களாம். இது அவருக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு போயிருக்கு. ஏறுறதுக்குள்ளே பஸ்ஸை எடுத்துட்டானாம் அந்த டிரைவர். ரொம்ப மோசம் சார். எப்பவுமே ஓவர் ஸ்பீடு. பஸ்ஸ எடுத்த வேகத்துக்கு இந்தம்மா கீழே விழுந்து கால் பின் சக்கரத்துல மாட்டிக்கிச்சு.” நேரில் பார்த்தவர் போல் இதைச் சொன்னார்.

”அப்பாசுக்கு என்னவாம்” என்றேன் மெதுவாக.

”ரொம்ப மோசமா இருக்காராம் சார். அன்னிக்கு ஒரு நாள் நானே பார்த்தேன். மூஞ்சி, கை, காலெல்லாம் வீங்கி கிடந்தது. பிழைக்க மாட்டார் சார். கஷ்டம்! ஆனா பாவம் சார் ரெண்டும் சின்ன சின்ன பிள்ளைங்க. அதுங்களை காப்பாத்த வேண்டியது இந்த அம்மாதான் அதுக்குள்ள இவங்களுக்கு இப்படி ஆயிருச்சே” என்றார்.

சமூகத்தின் அவலம் ஒரு சிலருக்கு வெறும் செய்தியாகவே உள்ளது. இந்தச் சமூகத்தின் மீது மக்களை கோபம் கொள்ளாமலிருக்கச் செய்வது எது என யோசிக்கச் சொன்னது. யோசிக்க யோசிக்க தலைவலி அதிகமாக மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்றேன்.

என் மனைவி எனது முகவாட்டத்தைப் பார்த்தும் முகம் மாறினாள். மருத்துவமனையில் நடைபெறும் சோகங்களை அங்கேயே மறந்துவிட வேண்டும் என்பது அவளது கட்சி. வாழ்க்கையில் வசதியான வீட்டில் பிறந்து செல்லப் பெண்ணாக வளர்ந்து வாழ்பவளுக்கு வாழ்வின் துன்பங்களும் துயரங்களும் தெரிந்திருக்க நியாயமில்லையோ? வருத்தத்திலேயே படுத்து உறங்கிப் போனேன்.

________________________________

பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் உட்கார்ந்து ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஐப்பசி மாதமாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் தமிழ் மாதங்கள் எங்கே தெரிகிறது. ஆனால் வெளியே மழை மட்டும் ஐப்பசி மாதத்தை நினைவில் வைத்துக்கொண்டு கொட்டு, கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. மழையைப் பார்த்தபோது எனக்கும், நோயாளிகளுக்கும் இடையில் திரை விரித்தது போல இருந்தது. எனக்கு இது போன்றவையே ஓய்வு நாட்கள். அப்போது அந்த மழையிலும் குடை பிடித்துக் கொண்டு ஒருவர் வருவது தெரிந்தது. ஜான் முகமதுவின் வீட்டு வாசலில் அடிக்கடி பார்த்த முகமாக தெரிந்தது. ”என்ன விஷயம்?” என்றேன். அவசரமாக வரச்சொல்லி ஜான்முகமதுதான் சொல்லி அனுப்பியிருந்தார்.

வாசலில் ஆட்டுக் குட்டிகளுடன் உட்கார்ந்து மழையை ரசித்துக் கொண்டிருந்தார் ஜான் முகமது. என்னைக் கண்டதும் பரபரப்பானார். ”என்னது நடந்தே வந்துட்டீங்க. செல்லியிருந்தா நான் ஆட்டோ அனுப்பியிருப்பேன்ல” என்று அன்புடன் கடிந்து கொண்டார்.

காப்பி கொடுத்தவாறே ”நம்ம அப்பாசிற்கு ரொம்ப சீரியசா இருக்கு. நீங்க கொஞ்சம் வந்து பாக்க முடியுமா? அதுக்குத்தான் கூப்பிட்டு அனுப்பிச்சேன்” என்றார்.

”ஏன்? என்னவாச்சு? அவரோட பெண்டாட்டி கூட பஸ்ஸில அடிபட்டாங்களே? அவங்க எப்படி இருக்காங்க?”

”அப்பாசுக்கு உடம்பு முடியாம இருந்து நாகப்பட்டினம் ஆஸ்பத்திரில சேத்து இருந்துச்சு. இடையே இந்த அம்மா வேற பஸ்ஸில அடிப்பட்டு அங்கேயே சேர்த்துருந்தாங்க. பாக்கிறதுக்கு ஆளில்ல, பணமும் இல்ல. அதனால ரெண்டு பேரையும் இங்கு கொண்டு வந்துட்டாங்க. பிள்ளைங்க ரெண்டு பேரும் சின்ன பசங்க அதுலயும் பெரிய பொண்ணு வயசுக்கு வந்துருச்சி.  அதுதான் ஆத்தாவுக்கும் அப்பனுக்கும் கஞ்சிவைச்சு கொடுக்குது; இடையில ஒரு வாரமா பெய்யிற மழையில அவங்க குடியிருக்கிற வீடு பாதி இடிஞ்சி விழுந்துடுச்சி; ரொம்ப பாவமா இருக்கு சார்.”

அப்பாசின் வாழ்க்கையில் நடை பெற்ற சம்பவங்களைக் கோர்வையாக நினைவுபடுத்திப் பார்க்கும் போது எனக்கு வாழ்க்கை மீதே வெறுப்பு உண்டாயிற்று. மெல்ல எழுந்து ஒரே குடையின் கீழ் இருவரும் அப்பாசின் வீட்டை நோக்கி நடக்கலானோம்.

இப்போதுதான் அப்பாசின் வீட்டை முதன் முதலாகப் பார்க்கிறேன். வீட்டினுள் நுழைந்து பார்ப்பதற்கு கதவுகளும், ஜன்னல்களும், தேவைற்றது என்பது போல முன் சுவர் இடிந்து பார்வைக்கு வழிவிட்டிருந்தது. கிழிந்து கையால் தைக்கப்பட்டிருந்த ஒரு சாக்கின் உதவியால் வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த மறைவுக்குப் பின்னாலிருந்து அப்பாசின் வயதுக்கு வந்த பெண்ணின் முகம் எட்டிப் பார்த்தது.

எந்த பிரக்ஞையும் இல்லாமல் குப்பை போன்று அப்பாஸ் படுத்திருந்தார்; படுக்க வைக்கப்பட்டிருந்தார். முகம் வெள்ளை வெளேரேன வெளிறிவிட்டிருந்தது. கை, கால்கள் முகம் முழுவதும் அளவுக்கு அதிகமாக வீங்கியிருந்தது. அப்பாசின் அருகில் அமர்ந்து ”அப்பாஸ்! அப்பாஸ்!” என தட்டி எழுப்ப முயற்சி செய்தேன்.

மிகவும் பிரயத்தப்பட்டு கண்களைத் திறக்க முயற்சி செய்தார். கண்களின் இமைகள் மிகவும் வீங்கியிருந்தன. அப்பாஸ் கண்களைத் திறக்கச் சிரம்ப்பட்டார். கடைசியில் பிறை போன்று மெல்லிய கீற்றாக கண்களைத் திறந்தவர் என்னை அடையாளம் கண்டு கொண்டது போலத் தோன்றிற்று. நான் நாடித்துடிப்பைப் பார்க்க கை வைத்தேன். நாடியினைத் தொட்டு அறிய முடியாத அளவிற்கு கை வீங்கி இருந்தது. நான் மெல்ல எழுந்தேன்.

”டயபடிக் நெப்ரோபசி வந்து ரீனல் பெய்லியர் ஆயிடுச்ச. சிறுநீரகம் முழுவதும் வலுவிழந்து பழுதடைந்துவிட்டது. என்னைவிட மரணம் அவருக்கு நெருக்கமாக உள்ளது. இனி ஏதும் செய்வதற்கில்லை” ஜான்முகமதுவிடம் தனியே தெரிவித்தேன்.

”சரி போகலாம் வாங்க” என்றார் அவர். அப்பாசிடம் சொல்லிக் கொள்வதற்காக அவரை மீண்டும் எழுப்பினேன். இந்த முறை சற்று உடனேயே கண்களைத் திறந்தார்.

”அப்பாஸ் நான் போயிட்டு வர்றேன்; கவலைப்படாதீங்க நல்லாயிடும்” என்று பொய் சொல்லி வைத்தேன்.

சட்டென்று அப்பாஸ் முகத்தில் ஒரு புன்சிரிப்பு பரவியது. ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லக் கூடியது அந்தச் சிரிப்பு. மெல்ல வாயைத் திறந்து அரபியிலோ, உருதிலோ ஏதோ கூறினார். வார்த்தைகள் தெளிவாக வந்து விழுந்தன. அதுதான் அப்பாஸ் உச்சரித்த கடைசி வார்த்தைகளாக இருக்கும். எனக்கு அப்பாஸ் என்ன சொன்னார் என அறிய ஆவலாக இருந்தது.

ஜான் முகமதுவின் வீட்டிற்குத் திரும்பியதுமே அப்பாஸ் கூறியது என்ன என அவரிடம் கேட்டேன்.

”இன்னா லில்லாஹி லஇன்னா இலைஹி ராஜிஹன்; தவக்கல்லத்து அலல்லாஹ்; அல்ஹம்மது இபில்லாஹ்!” என்றார்.

அப்படியென்றால்?”

”நாம் அல்லாவுக்கே உரியவர்கள். அவனிடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம். இப்போதும் அந்த அல்லாவின் மீது நம்பிக்கை கொண்டேன். எல்லாப் புகழும் அல்லாவுக்கே” என்பதாகக் கூறினார். எனக்கு அவரிடம் விடைபெற மனமில்லை.

மெல்ல எழுந்து தெருவில் நடக்கலானேன. அவருக்கும் என் மனதின் கேள்விகள் புரிந்திருக்க வேண்டும். மௌனமாக ஆட்டுக் குட்டிகளுடன் அமர்ந்து விட்டார். எனக்குள் மீண்டும் மீண்டும் அதே கேள்விகள்.

இத்தனைக் கஷ்டத்திலும் அப்பாசுக்கு ஏன் கோபம் வரவில்லை?

வசதியான மகனுடன் சேர்ந்து கொண்டு பெற்ற தாய் மறந்த போதும், வளமற்ற சகோதரன் வண்டியிழுத்துப் பிழைத்தபோதும் வருத்தமுறாத சகோதரனை நினைத்த போதும், வாழ வழியற்று விரட்டும் சமூகத்தினை நினைத்த போதும், இறுதி நேரத்தில்கூட ஆறுதல்தராத உறவுகளை நினைத்த போதும், அடிமேல் அடிஅடித்த விதியின் மீதும், அல்லாவின் மீதும், அவர் கூறிய சகோதரத்துவத்தின் மீதும், அதைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் தன் மதத்தின் மீதும் ஏன் கோபம் வரவில்லை. எப்படி அவருக்கு இந்த நிலையிலும் அல்லாவுக்கு நன்றி சொல்ல முடிந்தது?

யோசித்தவாறு ஏனங்குடியின் நடுத்தெருப் பள்ளி வாசலைக் கடந்த போது அந்த மழையிலும் பகல் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

இது நஞ்சல்லவா? இந்த நஞ்சு அபின் அல்லவா? இது கிறங்க வைக்கும், மயங்க வைக்கும், ஏங்க வைக்கும் நஞ்சல்லவா?

இதைச் சொன்ன கம்யூனிசத் தத்துவத்தையா தோற்றுப் போனதாகக் கூறுகிறார்கள்? உண்மை எப்படித் தோற்கும்?

மழையின் இரைச்சல் கூடியது. பாங்கோசை அதில் நனைந்து அடங்கியது.

____________________________________________________

–   மருத்துவர். சிவசுப்பிரமணிய ஜெயசேகர்புதிய கலாச்சாரம், டிசம்பர் 1999.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்