privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதி கோரி மாணவர் ஆர்ப்பாட்டம்!

அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதி கோரி மாணவர் ஆர்ப்பாட்டம்!

-

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் குடி நீர், கழிவறை வசதி, உணவக வசதி மற்றும் போதிய கட்டிடங்கள், நூலகம் போன்ற அடிப்படை தேவைகள் இல்லாமல் உள்ளன. மேலும் அக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் கலை பண்பாட்டு விழாக்களோ,விளையாட்டு விழாக்களோ நடத்தப்படுவது இல்லை. இதனை உடனே கல்லூரிகளில் நடத்த தமிழக அரசை உத்தரவிட வலியுறுத்தியும், மாணவர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காக போராடும் போது அவர்கள் மீது அரசு நடத்தும் தாக்குதலை முறியடிக்க மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி, சார்பில் ஆர்ப்பாட்டம் 01.03.2012 அன்று மெமோரியல் ஹால் அருகில் நடைபெற்றது.

காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் முழக்கங்களோடு தொடங்கியது.

செய்து கொடு ! செய்து கொடு!
அரசுக் கல்லூரிகள் அனைத்திலும்
அடைப்படை வசதிகளை
உடனடியாக செய்து கொடு!

லட்சக் கணக்கில் மாணவர் படிக்கும்
அரசுக் கல்லூரிகள் எதிலுமே
குடிநீர் இல்லை  கேன்டீண் இல்லை
கழிவறை வசதிகள் எதுவும் இல்லை!
கல்லூரி என்று சொல்வதே
வெட்கக் கேடு! மானக்கேடு!

வகுப்பறை இல்லை வாத்தியார் இல்லை
கல்வி கற்கும் சூழலும் இல்லை
பட்டம் வாங்க வழி சொல்ல
வக்கில்லாத கவர்மெண்டு
அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு
வெளி நாட்டுப் பல்கலைக்கழகத்தில்
பாடம் பயிற்சி என்று சொல்லி
வேசம் போடுது! வேடிக்கை காட்டுது!
வெட்கக் கேடு !  மானக்கேடு!

பள்ளிக் கல்லூரி மாணவர்களின்
மதியை மயக்கும் டாஸ்மாக்கு
தெருவுக்கொன்று திறந்துகிடக்கு!
சிந்தனையை சீரழிக்கும்
சினிமாக்களோ சுண்டி இழுக்குது!
ஆபாச அறுவருப்பை
அள்ளி கொடுக்குது தொலைக்காட்சி!

மாணவர்களுக்கு வெறியூட்ட
புதுசு புதுசா கடைவிரிக்குது
நுகர்வு வெறி கலாச்சாராம்!
அடியாட்களாக விலை பேசுது
ஓட்டுக்கட்சிகளின்  பிரியாணி!

அசிங்கத்தை எல்லாம் அப்புறப்படுத்த
துப்பில்லாத நீதிபதிகள்!
அறிவுரை சொல்லும் அதிகாரிகள்!
ஆதங்கப்படும் அறிவு ஜீவிகள்!
மாணவர்கள் சமுதாயத்தை
ரவுடிகள் என்றும் பொறுக்கிகள் என்றும்
அவதூறாக பேசுவது
அயோக்கியத்தனம்! அயோக்கியத்தனம்!

தன்மானமுள்ள மாணவர் நாங்கள்
ரவுடிகள் அல்ல! பொறுக்கிகள் அல்ல!
இந்தி திணிப்பை எதிர்த்து நின்றோம்!
ஈழத்தமிழர்களுக்காக களம் கண்டோம்!
கல்விக் கொள்ளையர்களின் கொட்டம் அடக்க
வீதியில் இறங்கினோம்! சிறை சென்றோம்!
தன்மானமுள்ள மாணவர் நாங்கள்
ரவுடிகள் அல்ல! பொறுக்கிகள் அல்ல!

குயின்மேரிஸ் பச்சையப்பன்
கலை அறிவியல் கல்லூரிகளை
கணப்பொழுதில் இடிக்க நினைத்த
ஜெயா- கருணா கனவுகளை
தவிடு பொடியாக்கினோம்! தடுத்து நின்றோம்!

சமச்சீர்பாட புத்தகத்தை
முடக்க நினைத்த  ஜெயா அரசின்
சதியை எதிர்த்து வெற்றி கண்டோம்!
தன்மானமுள்ள மாணவர் நாங்கள்
ரவுடிகள் அல்ல! பொறுக்கிகள் அல்ல!

மகிழ்ச்சிக்குரிய கல்லூரி வாழ்வை
மயானமாக்கியது அரசுக் கொள்கை
வணிகமயக் கல்விக் கொள்கை!
மாணவர்சங்கத் தேர்தலை இழந்தோம்
உடற் கல்வி- விளையாட்டு
கவிதை-கட்டுரை-கலாச்சாரவிழா
கனவுகள் அனைத்தும் களைந்துபோனது
இருக்கும் விழா ஒன்றே ஒன்று
அது பஸ்டே என்று பறைசாற்றுவோம்!

இனியும் இழக்க கேணைகள் அல்ல
இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம்!
பஸ்டே விழாவை காத்து நிற்போம்!

தடையை நீக்கு ! தடையை நீக்கு!
மாணவர் எங்கள் உரிமையான
மாணவர் சங்கத் தேர்தல்
தொழிலாளர்-மாணவர் ஒற்றுமைக்கு
அடையாளமான பஸ்டே மீதான
தடையை நீக்கு! தடையை நீக்கு!

தன்மானமுள்ள மாணவர்களே!
புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்!
ஓட்டுப் பொறுக்கிகள் –சினிமா கழிசடைகளை
புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்!
எதிர்த்து நிற்போம்! எதிர்த்து நிற்போம்!
மாணவர் மீதான அடக்குமுறைகளை
எதிர்த்து நிற்போம்! எதிர்த்து நிற்போம்!

கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
மாணவர்கள்- ஆசிரியர்கள்
உழைக்கும் மக்கள் ஒற்றுமையை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!

முறியடிப்போம்! முறியடிப்போம்!
வணிகமயக் கல்வியை ஊக்குவிக்க
அடிப்படை வசதிகள் இல்லாமல்
அரசுக்கல்லூரிகளை சீரழிக்கும்
தனியார்மயம்-தாராளமயம்
உலகமயக் கொள்கைகளான
மறுகாலனியாக்க கல்விக்கொள்கையை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பு.மா.இ.மு சென்னைக்கிளைச் செயலாளர், தோழர்.வ.கார்த்திகேயன் ”அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில்  குடி நீர், கழிவறை, நூலகம் , போதிய ஆசிரியர்கள் இல்லாதது மற்றும் பல ஆண்டுகளாக இக்கல்லூரிகளில் கலாச்சார பண்பாட்டு விழாக்களை நட்த்தப்படாமல் உள்ளதையும் அதேவேளையில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவனின்  நிலையையும் ஒப்பிட்டு இதற்கு காரணமான  அரசின் வணிகமயக் கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தியும் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாத அரசு 24 மணி நேரமும் தடையற்ற டாஸ்மாக்கைவழங்குவதையும் ” அம்பலப்படுத்தி பேசினார்.

அடுத்ததாக பேசிய மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் தோழர் மில்டன் “மாணவர்கள் மீது மட்டுமல்ல போராடுகின்ற மக்கள், வழக்கறிஞர்கள், தொழிலாளிகள் என அனைவரையும் அரசு போலீசு கொண்டு தாக்கி ஒடுக்குகிறது. போராடுகின்ற அனைவரையும் பொறுக்கிகளாகவும் ரவுடிகளாகவும் சித்தரிக்கிறது ஊடகங்களும் அரசும். குறிப்பாக பச்சையப்பன் கல்லூரியில் சமீபத்தில் கல்லூரிக்குள் புகுந்து தாக்கிய போலீசு 13 பேர்களை கைது செய்தது. அதில் மூன்று பேர் அப்பகுதியில் டீ அருந்திக்கொண்டிருந்த பகுதி இளைஞர்கள். ஆனால் அவர்கள்தான் பஸ்டேவில் கலவரம் செய்த மாணவர்கள் என்று கூறுகிறது போலீசு மேலும் 200 பேர்களை கைது செய்யவும் எத்தணிக்கிறது. நீதிமன்றமும் மாணவனின் கருத்தைக் கேட்காமல் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. அதை எதிர்த்து மனித உரிமை பாது காப்பு மையம் நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக போராடிக்கொண்டுள்ளதை ” விளக்கிப்பேசினார்.

அடுத்ததாக சென்னைக்கிளை செயற்குழு உறுப்பினரும் சட்டக்கல்லூரி மாணவருமான தோழர் மருது”தமிழகம் முழுவதுமுள்ள அடிப்படை வசதிகள் இல்லாமல் சீரழிந்து போன அரசு கல்லூரிகளுக்கு ஒரு சான்று வேண்டுமானால் அது சென்னை அரசு சட்டக்கல்லூரிதான். மாடு மேய்ப்பதற்கு கூட லாயக்கற்ற இந்த இடத்தில் தான் மேன்மைக்குரிய சட்டம் கற்பிக்கப்படுகிறது. பாலாஜி நாயுடு மோசடியாக முதல்வர் பதவியைப் பெற்று வந்த அயோக்கியத்தனத்தனத்தை பு.மா.இ.மு போராடி சட்ட ரீதியாக அம்பலப்படுத்தியுள்ளதையும் இதற்காக கல்லூரி முதல்வர் மீது போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை. போராடுகின்ற மாணவர்கள் மீது மட்டுமே தாக்குதலைத் தொடுக்கும் இந்த அரசை மாணவர்கள் அனைவரும் இணைந்து மட்டுமே முறியடிக்க முடியும்” என்று கூறினார்.

பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர். த. கணேசன் தனது கண்டன உரையில் “அரசும் போலீசும் மாணவர்கள் ரவுடிகள், பொறுக்கிகள் மாணவர்களால் வன்முறை கலாச்சாரம் பரவுகிறது என்ற பொய்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அனைத்துக் கல்லூரி வாசல்களிலும் காக்கிச் சட்டைகள் காவல் காக்கின்றன. ஆனால் மொத்த சமூகம் எப்படி இருக்கிறது? கொலை கொள்ளை என திரும்பிய பக்கமெல்லாம் இருப்பதற்கு என்ன அடிப்படை என்பதை அரசு ஆராய்வதில்லை. மாணவனின் தரப்பினைக் கேட்காமலேயே அவனை குற்றவாளியாக்குகிறது.

அரசு கல்லூரிகளில் மாணவனின் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட சூழலில் ,அவனுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத சூழலில், கலாச்சார விழாக்கள் நடத்தப்படாத சூழலில் அவனாக அவனுக்கு என்று  ஏற்படுத்திக்கொண்ட விழா என்றால் அது பஸ்டேதான். ஆண்டு முழுக்க தன்னை சுமந்த  பேருந்து தொழிலாளர்களுக்கு புது உடை எடுத்துக்கொடுத்து, தனது சொந்தப் பணத்தில் கொண்டாடி மகிழும் விழாதான் அது. பல ஆண்டுகளாக பஸ்டேவும், ட்ரெயின் டேவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ்டே விழாவை கயிறு கட்டி நடத்தியும் இருக்கிறார்கள் அது வரலாறு. ஆனால் ஓட்டுப்பொறுக்கி கட்சிகளோ தங்களுக்கு அடியாள் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு பங்கு சீரழிவை பரப்பியது எனில்  சினிமாக்கள் தன் பங்கிற்கு சீரழிவைப்பரப்பியது.

சங்கரன் கோயிலில் இடைத்தேர்தல் என்ற பெயரில் அந்த ஊரையே நாசாமாக்கி வரும் அரசியல் கட்சிகளை தடுக்க வக்கில்லாத அரசும் போலீசும் எப்படி மாணவனை நேர்வழிக்கு கொண்டுவரும்?.  சாலையில் பேருந்தினை விழாவாக கொண்டு செல்வது பிரச்சினை என்று தடுத்து அடித்து துவம்சம் செய்யும் போலீசு எந்த அரசியல் கட்சி ஊர்வலத்தையோ கோயில் திருவிழாவையோ தடுப்பது இல்லை. ஆக மாணவனை பொறுக்கியாக ரவுடியாக சித்தரிக்க பஸ்டே ஒரு வாய்ப்பு மட்டுமே அரசுக்கு . பச்சையப்பன் கல்லூரியாகட்டும் குயின்மேரீஸ் கல்லூரியாகட்டும் மாணவர்கள் தங்களில் கல்லூரியைக்காக்க நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் ஜெயா, கருணா அரசுகளை அசைத்துப் பார்த்து இருக்கிறது.

இந்தி எதிர்ப்பு, சமச்சீர் பாட்த்திட்டம், ஈழத்தமிழர் என அனைத்து போராட்டங்களிலும் முன் நிற்பது மாணவர்கள் தான் அவர்களை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி ஒடுக்குவதே அரசின் முதல் வேலை . அதற்குதான் இந்தப் பொய்ப்பிரச்சாரம். இதனை முறியடிக்க உண்மையான எதிரியான போலீசு, அரசை மாணவர்கள் போராடி வீழ்த்துவார்கள்.” என கூறினார்.

தோழர்.வ.கார்த்திகேயன்  நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் – மாணவிகள், பெற்றோர்கள், இளைஞர்கள்என 150பேர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் ரவுடிகள், பொறுக்கிகள் என்று அரசு,  நீதிமன்றம், போலீசு, ஊடகங்கள் என அனைவரும் பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்ட வேளையில் மாணவர்கள்தான் வருங்காலத்தூண்கள் அவர்கள் வரலாற்றை மாற்றியவர்கள், மாற்றப்போகிறவர்கள் என்பதையும் தற்போதைய சூழலில் மாணவனுக்கு ஆதரவாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மட்டுமே இருப்பதையும் பறைசாற்றியது.

________________________________________________________

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,  சென்னை

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

______________

_____________________

_______________________