privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஇந்திய இராணுவம்: ஊழலில் நம்பர் 1

இந்திய இராணுவம்: ஊழலில் நம்பர் 1

-

“இந்திய இராணுவம்” என்றாலே பலருக்கும் பலவும் நினைவுக்கு வரும். பொதுவாகப் பார்த்தால் இந்திய நடுத்தர வர்க்கத்துக்கு தேசப்பற்று நினைவுக்கு வரும்;  மேட்டுக்குடி / ஐ.டி துறை இளைஞர்களுக்கு சாகசங்கள் நினைவுக்கு வரும்;  வடகிழக்குப் பெண்களுக்கு கற்பழிப்புகள் நினைவுக்கு வந்து ஆத்திரம் தோன்றும்;  காஷ்மீரிகளுக்குக் கொலைகள் நினைவுக்கு வந்து வன்மம் தோன்றும்;  தண்டகாரண்யக் காட்டின் பழங்குடி மக்களுக்கு மண் பறிபோகும் சோகம் நினைவுக்கு வந்து வீரம் பிறக்கும்;  விவசாயம் பொய்த்துப் போன வட மாநிலங்களில் பள்ளி முடித்த இளைஞர்களுக்கு சுட்ட ரொட்டியும் பருப்புக் கூட்டும் வறுத்த கறியும் நினைவுக்கு வந்து ஏக்கம் பிறக்கும்;  மொழி-இன வேறுபாடு இல்லாமல் மொக்கைகளுக்கு மலிவான மிலிட்டரி சரக்கு நினைவுக்கு வந்து எச்சிலூறும்..

பிறருக்குத் தோன்றுவதிருக்கட்டும் – அதே இராணுவத்தின் மேல் மட்டத்திலிருந்து கடைநிலைவரை உள்ள அதிகாரிகளுக்கு தாம் பணிபுரியும் பிரம்மாண்டமான இயந்திரத்தைப் பற்றி என்ன மாதிரியான சித்திரம் இருக்கும்?

அது என்னவென்பதைப் புரிந்து கொள்ள அவர்கள் வாழ்க்கையையும் அது உத்திரவாதப்படுத்திக் கொடுத்திருக்கும் அதிகார வர்க்கத் தன்மையையும் புரிந்து கொள்வது அவசியம். இராணுவத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு சுமார் அறுபத்தோரு வகையான சலுகைகள் வழங்கப்படுகின்றது. துவக்கச் சம்பளமாக மாதம் ரூ 15,600-ல் இருந்து 39,100 வரை வழங்கப்படுகிறது. இது போக, சேவைச் சம்பளம் 6,000, போக்குவரத்து அலவன்சாக 1,600-ல் இருந்து 3200 வரை தரப்படுகிறது, சியாச்சின் போன்ற பகுதிகளில் பணிபுரிய தனியாக மாதம் 14,000, தரமான உணவுப் பொருட்கள் அனைத்தும் மலிவான விலைக்கு, வருடத்திற்கு இரண்டு மாதங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, இலவச ரயில் பயணம், குடும்பம் மொத்தத்திற்கும் இலவச மருத்துவம், கண்டோன்மென்ட் பகுதிகளில் மலிவு விலைக்குத் தங்குமிடம், பெருநகரங்களில் சொந்த வீடு வாங்க ஒதுக்கீடு, சீருடைக்கு படி, செருப்புக்கு படி, அதற்குப் பாலீஷ் போட்டுக் கொள்ள படி… ஓய்வு பெற்ற பின்னும் வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம், அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு… இன்னும் சொல்லி மாளாது நண்பர்களே.

சுருங்கச் சொன்னால் இராணுவம் என்பது காயடிக்கப்பட்டு நன்றாக ஊதிப் பெருத்த பங்களா நாய். அளவற்ற அதிகாரம், கேள்விகளுக்கப்பாற்பட்ட போலிப் புனிதம், துப்பாக்கியேந்திய வெட்டிப் பெருமிதம், மக்களுக்கு இவர்கள் மேல் இருக்கும் அச்சம், செயலற்ற பலம் – இவை மொத்தமும் சேர்ந்து வழங்கும் ஒருவகை விசேடமான திமிர் – இவையெல்லாம்தான் ஒரு இராணுவ அதிகாரியின் ஆளுமையை தீர்மானிக்கின்றன.  2012-ம் ஆண்டு மட்டும் இந்திய இராணுவத்துக்கான அதிகாரப்பூர்வமான பட்ஜெட் ஒதுக்கீடு ஒரு லட்சத்து என்பத்தெட்டாயிரத்து எழுநூற்றுப் பத்து கோடிகள்(37.65 பில்லியன் டாலர்கள்)..!

இராணுவச் செலவினங்களைப் பொருத்தமட்டில் இந்திய இராணுவம் உலகளவில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. ஆயுத இறக்குமதியைப் பொருத்தவரை இந்தியா உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது. பிரம்மாண்டமான இராணுவ பட்ஜெட்டின் பெரும்பகுதி புதிய தளவாடங்கள் வாங்கவும், இருக்கும் உபகரணங்களை மேம்படுத்தவும் செலவிடப்படுகிறது. 2007 – 2012 கால அளவில் மட்டும் சுமார் 50 பில்லியன் டாலர்கள் புதிய தளவாடங்கள் வாங்க செலவிடப்பட்டதாக சுயேச்சையான மதிப்பீடு ஒன்று கூறுகிறது.

முன்பே குறிப்பிட்ட கேள்விகளுக்கப்பாற்பட்ட அளவற்ற அதிகாரமும் அதிகாரத் திமிரும் உள்ள ஒரு இடத்தில் இப்படி வரைமுறையின்றி நிதியைக் குவித்தால் என்னவாகும்? இதைத் தான் சமீபத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் தண்டோரா போட்டு உலகத்துக்கு அறிவிக்கின்றன.

இராணுவத் தலைமை தளபதி வி.கே. சிங்
இராணுவத் தலைமை தளபதி வி.கே. சிங்

மார்ச் 25-ம் தேதியிட்ட இந்துப் பத்திரிகையில் இராணுவத்தின் தலைமைத் தளபதி வி.கே சிங்கின் பேட்டி ஒன்று வெளியாகிறது. அதில், சுமார் ஒரு வருடத்திற்கு முன் அவரது சக அதிகாரி ஒருவர் (பின்னர் இது லெப்டினென்ட் ஜெனரல் தேஜிந்தர் சிங் என்று உறுதிப்படுத்தப்பட்டது), 600 இராணுவத்திற்கான மாறுபட்ட புவியியல் பரப்பிலும் இயங்கங்கூடிய கனரக வாகனங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடக்காமலிருக்க 14 கோடிகள் லஞ்சமாக அளிக்க முன்வந்தார் என்றும், மேற்படி வாகனங்கள் தரமற்றதென்றும் குறிப்பிடுகிறார். தற்போது அதே கம்பெனியைச் சேர்ந்த சுமார் 7000 வாகனங்கள் இராணுவத்தின் பயன்பாட்டில் இருக்கின்றது. இப்படி தலைமைத் தளபதியிடமே லஞ்ச பேரம் பேசும் சூழல் இராணுவத்தில் உண்டானது குறித்து அவர் குறிப்பிடும் போது, “எங்கோ எப்படியோ நமது தரம் தாழ்ந்து வீழ்ந்து விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உடனே இந்தச் செய்தியைக் கையில் எடுத்துக் கொண்ட தேசிய ஊடகங்கள், இதற்கு மசாலா சேர்க்கும் விதமாக சமீப காலமாய் இராணுவத் தளபதிக்கும் அரசுக்கும் இடையே அவரது பிறப்புச் சான்றிதழ் குறித்து எழுந்துள்ள உரசல் போக்கோடு சம்பந்தப்படுத்தி, இதை அரசுக்கும் தளபதிக்குமான ‘மானப்’ பிரச்சினையாக ஊதிப் பெருக்கியது. இந்தியளவிலான ஆங்கில ஊடகங்களில் நடந்த விவாதங்களில், அரசும் தளபதியும் லஞ்ச விவகாரத்தை போதிய கவனத்துடன் கையாளவில்லையென்றும், தளபதியும் இது போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை பொதுவெளியில் வைத்திருக்கக் கூடாது என்றும் ஒரு பஞ்சாயத்தை நடத்தி இது சம்பந்தப்பட்ட ஆளுமைகளுக்கிடையேயான ஈகோ பிரச்சினை என்பதாக மட்டும் சுருக்கி விட முயன்றன.

ஆனால் விஷயம் அத்தோடு ஓய்ந்து விடுவதாக இல்லை. இது தொடர்பாக தற்போது வெளியாகியிருக்கும் விவரங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஊழல் முறைகேட்டுப் பூதத்தை ‘உசுப்பி’ விட்டுள்ளது. 1986-ம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கிய நாட்டைச் சேர்ந்த டாட்ரா நிறுவனத்தோடு இராணுவத் தளவாட வாகனங்களை வாங்க இந்திய இராணுவம் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடுகிறது. எண்பதுகளின் இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் சிதைவு, செக்கோஸ்லோவாக்கியாவையும் விட்டு வைக்கவில்லை. அந்த நேரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த டாட்ரா நிறுவனத்தை லண்டனைச் சேர்ந்த வெக்ட்ரா நிறுவனம் கையகப்படுத்துகிறது. வெக்ட்ரா நிறுவனம் வெளிநாடு வாழ் இந்தியரான  ரவி ரிஷி என்பவருக்குச் சொந்தமானது.

டாட்ராவை இணைத்துக் கொண்ட வெக்ட்ரா, டாட்ரா சிப்பாக்ஸ் என்கிற வர்த்தக நிறுவனம் ஒன்றைத் துவக்குகிறது. டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனம் டாட்ரா வாகனங்களின் நேரடி உற்பத்தியாளராகத் தன்னைப் பதிவு செய்து கொள்ளவில்லை. டாட்ராவிடமிருந்து வாங்கி விற்கும் இடைநிலை நிறுவனம் தான் டாட்ரா சிப்பாக்ஸ். இங்கிலாந்து நாட்டின் கம்பெனி விவகாரங்களுக்கான இலாக்காவில் தனது தொழில் நடவடிக்கையாக டாட்ரா சிப்பாக்ஸ் குறிப்பிட்டுள்ளது இது தான் – “ஆன்மீகம் மற்றும் மதம் சார்ந்த சேவைகள்”. அதன் செயல்பாட்டு மூலதனம் (Working Capital) அன்றைய தேதியில்  வெறும் 30,000 பவுண்டுகள் தான். வேறு வகையாகச் சொல்லப் போனால், டாட்ரா சிப்பாக்ஸ் ஒரு உப்புமா கம்பெனி.

2003-ம் ஆண்டு வாக்கில் டாட்ராவில் அமெரிக்காவைச் சேர்ந்த டெரக்ஸ் நிறுவனம் பெருமளவு முதலீடு செய்கிறது. பின் 2006-ம் ஆண்டு தனது 80% பங்குகளை ப்ளூ ரிவர் என்கிற நிறுவனத்திற்கு டெரக்ஸ் கைமாற்றி விடுகிறது. ப்ளூ ரிவர் நிறுவனத்தின் நான்கு முக்கிய பங்கு நிறுவனங்கள் – வெக்ட்ரா, சாம் அய்ட், கே.பி.சி ப்ரைவேட் ஈக்விட்டி, மெடாவ்ஹில் மற்றும் ரொனால்ட் ஆடம்ஸ். வெக்ட்ரா, ரஷியாவைச் சேர்ந்த கமாஸ் என்கிற நிறுவனத்துடன் இணைந்து ஹொசூரில் கமாஸ் வெக்ட்ரா என்கிற அசெம்ப்ளி யூனிட்டை நடத்துகிறது.

கமாஸ் வெக்ட்ராவின் 51% பங்குகள் கமாஸிடமும், 49% பங்குகள் வெக்ட்ராவிடமும் உள்ளது. கடந்த 2010 டிசம்பர் மாதத்தில் கமாஸ் BEML நிறுவனத்திடம் ஒவ்வொரு வருடமும் 6000 ட்ரக்குகள் ( 4 X 4) சப்ளை செய்யும் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டிருக்கிறது. இந்திய ராணுவம் வெளியிடும் தளவாடக் கொள்முதலுக்கான டெண்டரில் ஒரு பக்கம் வெக்ட்ரா சிப்பாக்ஸ் BEML மூலம் கலந்து கொள்ள அதற்கான போட்டி டெண்டரை கமாஸ் வெக்ட்ரா மூலமாக தாக்கல் செய்து வேறு போட்டி நிறுவனங்கள் போட்டியில் தேர்வாகி விடாதவாறு பார்த்துக் கொண்டு தமது ஏகபோகத்தை நிலைநாட்டியுள்ளனர்.

டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனத்துடன் இராணுவத் தளவாடங்கள் பெற இராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட BEML ( Bharath Earth Movers Limited) 1992-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் BEML  இராணுவப் பயன்பாட்டுக்கான தளவாடங்கள் வாங்குவதில் மிக முக்கியமான வழிகாட்டி விதிமுறை ஒன்றை அப்போதே மீறியுள்ளது. அதாவது, இந்திய ராணுவத்துக்கான தளவாடம் எதுவானாலும், அதை நேரடி உற்பத்தியாளரிடம் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டும் – மூன்றாம் தரப்பிடம் இருந்து கொள்முதல் செய்யக் கூடாது என்கிற விதி அப்போதே மீறப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான ஜோஸப் மிஜெஸ்க்கி என்கிற ஸ்லோவாக்கிய தேசத்தைச் சேர்ந்த நபர் நிதி முறைகேடுகளுக்காக சிறை தண்டனை அனுபவித்தவர்.

மேற்படி சந்தேகத்துக்குரிய நிழல்கள் டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனத்தின் மேல் இருக்கும் போதே BEML அதனோடான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் 2003-ம் ஆண்டு காலகட்டத்தில் இறங்குகிறது (அமெரிக்காவின் டெரக்ஸ் வெக்ட்ராவுடன் கைகோர்த்த அதே காலகட்டம்). இந்த புதிய ஒப்பந்தத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த இராணுவ தளவாடப் பிரிவு டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனத்துக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பிவிட்டுப் பின் எந்த முகாந்திரமோ விளக்கமோ இன்றி அந்தக் கடிதத்தைத் திரும்ப வாங்கிக் கொள்கிறது.

டாட்ரா-டிரக்
டாட்ரா டிரக்

தற்போது சுமார் 7000 டாட்ரா டிரக்குகள் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தரம் குறைந்த இந்த வாகனம் ஒன்றில் விலை சுமார் 1 கோடி.  இதன் தரம் பற்றி புரிந்து கொள்ள ஒரு சிறிய உதாரணம் – பொதுவாக இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்களின் ஸ்டியரிங் வலதுபுறத்தில் அமைந்திருக்கும்; ஆனால், டாட்ரா ட்ரக்குகளின் ஸ்டியரிங்கோ இடது புறமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ரக வாகனங்களை நெருக்கடி நேரங்களில் கையாள்வது சிரமமானது. இதைக் கொண்டு ‘தீவிரவாதிகளைத்’ துரத்தி.. பிடித்து.. சண்டை போட்டு… விஜயகாந்த்தால் மட்டுமே முடியும்.

டாட்ராவின் போட்டி நிறுவனமான உரால்ஸ், இதை விட திறன் மிக்க வாகனங்களை 40 லட்சம் ரூபாய்க்கே தர முடியும் என்கிறது ( இதே திறன் கொண்ட வாகனங்களை டாடாவும் அசோக் லைலேன்டு கம்பெனியும் 16-18 லட்சத்துக்கே சந்தையில் விற்று வருகிறது). டாட்ரா டிரக்கின் விலை மட்டுமல்ல, அதில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களும் மிக அதிக விலைக்கு இராணுவம் கொள்முதல் செய்கிறது. உதாரணமாக வெறும் 5,000 ரூபாய்களுக்கு வெளிச்சந்தையில் கிடைக்கும் தார்பாயை 30,000 ரூபாய்க்கு இராணுவத்திற்கு விற்கிறது டாட்ரா.

தேஜிந்தர் சிங் இராணுவ தளபதி வி.கே.சிங்கிடம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக சொல்லப்படுவது 2010 செப்டெம்பர் மாதம். சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து இப்போது தான் அதை வெளியே எடுக்கிறார் வி.கே.சிங். இத்தனை மாதங்களாக இராணுவ அமைச்சரிடம் ‘வாய்ப்பேச்சாக’ சொன்னதைத் தாண்டி நடை பெற்ற ஊழலை அம்பலப்படுத்த ஒன்றும் செய்யவில்லை – சம்பந்தப்பட்ட நிறுவனத்தோடு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதோடு வெக்ட்ரா சம்பந்தப்பட்ட நிறுவனங்களை இராணுவத்தோடு பொருளாதார உறவு வைத்துக் கொள்ள தடை விதிக்கவும் ( Blacklist) இல்லை. இதே தளபதி தான் தனது வயதுச் சான்றிதழைத் திருத்தவிலை என்கிற ஆத்திரத்தில் நீதிமன்றம் வரை அரசை இழுத்தவர். தனது சொந்த விஷயத்துக்காக அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாடும் துணிச்சல் கொண்டவர், கண்ணுக்குத் தெரிந்து நடந்த ஊழலை மட்டும் அமைச்சரிடம் போகிற போக்கில் வாய்ப்பேச்சாக சொல்லியிருக்கிறார்.

தனது பதவியை நீட்டிக்க அரசு உதவவில்லை என்கிற நிலையில் தான் பதிலடியாக ஊழல் முறைகேடுகளை வெளிக்கொணருகிறார் தலைமை இராணுவ தளபதி. அதோடு சேர்த்து, வி.கே சிங் உரால்ஸ் நிறுவனத்தோடு கொண்டிருக்கும் நட்புறவும் கவனத்திற்குரியது. டி.ஆர்.டி.ஓவின் ஒப்புதலின்றியே அவர் வடகிழக்குப் பிராந்தியத் தளபதியாக இருந்த போது, அதிகாரப்பூர்வமற்ற முறையில் உரால்ஸ் நிறுவனத்தின் டிரக்குகளைச் சோதித்துப் பார்த்துள்ளார் என்கிற செய்தியும் தற்போது வெளிவந்துள்ளது.

இராணுவத்தில் ஒரு இயந்திரத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமென்றால் கடுமையான விதிமுறைகள் உண்டு. அதையெல்லாம் மீறி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உரால்ஸ் டிரக்குகளை வி.கே.சிங் சொந்த ஆர்வத்தில் மட்டும் தான் சோதித்துப் பார்த்திருப்பார் என்று ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. வெளிவரும் தகவல்களை வைத்துப் பார்த்தால், இராணுவத்தின் ஒரு சாரார் வெக்ட்ரா லாபியோடும் வி.கே.சிங் உரால்ஸ் லாபியோடும் நெருக்கம் காட்டியிருப்பது தெளிவாகிறது.சொந்தக் காரணமாகவோ அல்லது கார்ப்பரேட் லாபியின் எதிர் முனையில் நிற்பதாலேயோ தான் வி.கே.சிங் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறார் – அவரே பீற்றிக் கொள்வது போல் நியாய தர்மத்துக்குக் கட்டுபட்டு அல்ல.

இது ஒருபுறமிருக்க, இராணுவத் தளபதி லஞ்ச விவகாரத்தைக் கிளப்பியவுடன் களமிறங்கிய எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் இதைப் பற்றி விவாதிக்கக் கோரி ரகளையில் ஈடுபடுகின்றன. இராணுவத்தில் லஞ்சம் என்பது தேசியளவில் விவாதத்திற்குள்ளாவதோ, அதைத் தொட்டு ஒவ்வொரு பூதமாக வெளிக்கிளம்பி வருவதென்பதோ ஆளும் வர்க்கத்திற்கு பாரதூரமான விளைவுகளை உண்டாக்கி மூலத்தில் ஆப்பறைந்தது போலாகி விடக்கூடும். எனவே விவாதத்தை மடை மாற்றும் நோக்கில் மத்திய அரசு, இராணுவத்தின் தயார் நிலை பற்றி தளபதி பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தை ஊடகங்களில் கசிய விடுகிறது.

இதைத் தொடர்ந்து லஞ்ச ஊழல் புகார்கள் பற்றிய விவாதங்கள் பின்னணிக்குப் போய் இராணுவ தளபதியின் ‘அடாவடித்தனம்’ முன்னுக்கு வருகிறது. நாட்டின் மானம் மரியாதை, இராணுவத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை என்று சகலமும் பறிபோய் விட்டதாக ஒப்பாரி வைக்கும் ஓட்டுக் கட்சிகள், இராணுவத் தளபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன. இந்த விஷயத்தில் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா மட்டுமல்லாது வலது இடது போலி கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸோடு கரம் கோர்க்கிறார்கள்.

இந்த கூச்சலில் அகஸ்டா வெஸ்ட்லாண்டு என்கிற இத்தாலி நிறுவனம் இராணுவத்திற்கு ஹெலிகாப்டர்கள் சப்ளை செய்ய அமெரிக்க இடைத்தரகு கம்பெனி ஒன்றின் மூலம் 15% லஞ்சம் கொடுத்ததாக வெளியான செய்தி ஓசையின்றி அமுக்கப்பட்டு விட்டது. சாதாரணமாக தற்போது வெக்ட்ரா நிறுவனத்தின் மேல் சி.பி.ஐயை வைத்து ஒரு கண்துடைப்பு விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் ஊழல் வரலாறு மிக நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. ‘சுதந்திர’ இந்தியாவின் முதல் ஊழலே இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்கியதில் நடந்தது தான். அந்த வகையில் 1948-ம் ஆண்டே இந்தியாவில் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தவர் வி.கே கிருஷ்ணன் மேனன். அதைத் தொடர்ந்து, போபர்ஸ் ஊழல், ஜெர்மன் நீர்மூழ்கி ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஊழல், கோல்ப் கார்ட் ஊழல், சுக்னா ரியல் எஸ்டேட் ஊழல்,  என்று சகலத்திலும் ஊழல் தான். சர்வதேச அளவில் ஆயுத பேரங்களைக் கட்டுப்படுத்தும் பலமான வலைப்பின்னல் கொண்ட மாஃபியா கும்பல்கள் தான் இந்திய இராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலையும் கட்டுப்படுத்துகின்றன.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்பெற்ற உயரதிகாரிகள் ஆயுத பேர இடைத்தரகு கம்பெனிகளில் ‘வல்லுனர்களாக’ சேர்ந்து ஆயுத மாஃபியாவின் அங்கங்களாகிறார்கள். ஆயுதக் கம்பெனிகளின் வலுவான லாபியிங் இயந்திரத்தின் நட்டு போல்ட்டுகளாய் மாறும் இவர்களுக்கு ஆயுதக் கொள்முதலில் பின்பற்றப்படும் டெண்டர் நடைமுறைகளும், எங்கே எதைத் தள்ளினால்  எப்படி காரியம் சாதிக்க முடியும் என்பதும் அத்துப்படி. அந்த வகையில் அவர்களை ‘கேடி கிரிமினல்கள்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

இந்திய இராணுவத்தின் ஆயுதக் கொள்முதல் இவர்கள் மூலமாகவே நடக்கிறது. உண்மையில் இந்திய இராணுவத்தின் ஆயுதக் கொள்முதல் கொள்கையை பாகிஸ்தானின் இராணுவத் தயாரிப்புகளோ சீனத்தின் இராணுவத் தயார்நிலையோ தீர்மானிப்பதில்லை – சர்வதேச ஆயுத பேர மாஃபியா கும்பலும், மேற்கத்திய நாடுகளின் ஆயுத உற்பத்திக் கார்ப்பரேட்டுகளும் தான் தீர்மானிக்கின்றனர்.

கடந்த பல பத்தாண்டுகளாக லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மக்களின் வரிப்பணத்தை விழுங்கி ஏப்பமிட்டு விட்டு ஒரு பகாசுர பூதம் போல் நீட்டிப் படுத்துக் கிடக்கிறது இராணுவம். இராணுவத்தின் அதிகார வர்க்கம், ஊழலிலும் உல்லாச சொகுசு வாழ்க்கையிலும் ஊறித் திளைத்துக் கிடக்கிறது. இராணுவம் என்கிற வார்த்தை நமது சிந்தனையில் என்னவிதமான சித்திரத்தை உண்டாக்குமோ – ஆனால், அதன் அதிகாரிகளுக்கு கண்களும், காதுகளும், உணர்ச்சிகளும் அற்ற ஒரு காமதேனுவின் சித்திரத்தை தான் அது உண்டாக்குகிறது. வேண்டும் மட்டும் கறந்து கொள்ளலாம், கேள்வி முறை கிடையாது, கட்டுப்பாடும் கிடையாது, தணிக்கை கிடையாது.

இந்த தேசத்தின் எல்லைகளை விட அளவில் ஊதிப் பருத்த மாபெரும் ஊழல் பெருச்சாளியாக ராணுவம் மக்களின் மேல் அழுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு அடியாள் படைக்கு இந்தத் தகுதியும் தராதரமுமே போதுமானதாக இருப்பதால் ஆளும் தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ கும்பல் இதைத் தெரிந்தே விட்டு வைத்திருக்கிறது. ‘கொல்’ என்றால் கொல்ல வேண்டும்; ‘அடி’ என்றால் அடிக்க வேண்டும் – ஏன் எதற்கு என்கிற கேள்விகள் அனாவசியம். தமது நடவடிக்கைகளால் ஏமாற்றமடையும் மக்களை மிதித்து நசுக்க இது போன்ற யானைக் கால்களே போதும் என்பதால் தான் அதன் ஊழல்கள் கண்டுகொள்ளப் படாமல் போகின்றன.

1948-ம் ஆண்டு நடந்த ஜீப் ஊழலின் விசாரணை எப்படி முடிவுற்றது தெரியுமா? அந்த ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட அனந்தசயனம் அய்யங்கார் கமிட்டியின் பரிந்துரைகளை புறம் தள்ளிய அப்போதைய உள்துறை மந்திரி கோவிந் வல்லப பந்த், ஊழல் விசாரணைகளை தமது அரசு மேற்கொண்டு தொடராமல்  இழுத்து மூடவிருப்பதாகவும், எதிர்கட்சிகளுக்கு இதில் உடன்பாடில்லையென்றால் அதைத் தேர்தல் பிரச்சினையாக மாற்றிக் கொள்ளட்டும் என்று செப்டெம்பர் 30 – 1955 அன்று திமிர்த்தனமாக அறிவிக்கிறார். ஊழலில் ஈடுபட்ட கிருஷ்ணன் மேனன், அதற்கடுத்த வருஷமே நேருவின் அமைச்சரவையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்.

மக்களுக்கு நேரடியாக பதில் சொல்லக் கடமைப்படாத திமிரிலிருந்தே புனிதம், பெருமிதம் போன்ற காலாவதியான சொற்களுக்குப் பின்னே ஒளிந்து கொண்டு ஊழல் செய்யும் துணிச்சல் இராணுவத்துக்கு வாய்க்கிறது. இதை ஊட்டி வளர்க்கும் அரசும், முதலாளிகள் இருக்கும் வரை அது ஊழலில் பெருத்து, அடக்குமுறையில் ஆட்டம் போடும். உழைக்கும் மக்களுக்கு ஆயுதம் ஏந்தும் உரிமை இருக்கும் போது உருவாகும் மக்கள் இராணுவம் இத்தகைய அதிகார வர்க்க பொறுக்கி இராணுவத்தினை இல்லமலாக்கும். அதுவரையிலும் நமது கோபம் இந்த பங்களா நாயை ஊட்டி வளர்க்கும் அரசுக்கு எதிராக திரும்பட்டும்.

______________________________________________

தமிழரசன்.
______________________________________________

தகவல் மூலம் மற்றும் இணைப்புகள் –

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. விறு விறுப்பான ஒரு மர்ம நாவலை போல தகவல்களை வழங்குகிறது கட்டுரை.

    ராணுவத்தில் டிரக் வாங்குவதில் ஊழல் என்ற சிக்கலான இன்டர்நேஷனல் கார்பொரேட் டெரர், ஒரு வருஷம் கூடுதல் பதவி கிடைக்காத ஜெனரலின் பழிதீர்க்கும் படலம், கட்சிகள் சுற்றி நின்று கும்மியடிக்க டூயட் பாடும் பாதுகாப்பு அமைச்சரும் ஜெனரலும், ஊடகங்களின் காமெடி டிராக் என்று பக்காவான திரைப்படத்தின் தெளிவான விமர்சனத்துக்கு பாராட்டுக்கள்.

  2. இந்திய இராணுவம் குறித்த விரிவான பார்வையும், சரியான புரிதலையும் கட்டுரை வழங்குகிறது.
    சரியான நேரத்தில் சிறப்பான கட்டுரை.
    நன்றி வினவு.

  3. எல்லாத்துறையிலும் ஊழல் செய்த பெருமை காங்கிரஸ்காரனையே சாரும்..

    • ஆமா பீஜேபீ காரங்களு எங்கே உழல் பண்ண நேரம் இருக்கு பிட்டு படம் பாக்கவே நேரம் போதல.. ஆனா அப்படியும் கரநாடகவுல பிட்டுபடம் + ஊழல்ன்னு ராமராஜ்யம் தான் போலே

      • கார்கில் புகழ் சவப்பெட்டி ஊழல் இந்த தேசபக்தர்களின் ஆட்சிலதான் நடந்ததுங்கறத நினைவு படுத்திக்கோங்க!

    • பங்காரு லட்சுமணன் எப்பொ காங்கரசில் சேர்ந்தார். சொல்லவேயில்லை….

  4. //மக்களுக்கு நேரடியாக பதில் சொல்லக் கடமைப்படாத திமிரிலிருந்தே புனிதம், பெருமிதம் போன்ற காலாவதியான சொற்களுக்குப் பின்னே ஒளிந்து கொண்டு ஊழல் செய்யும் துணிச்சல் இராணுவத்துக்கு வாய்க்கிறது. இதை ஊட்டி வளர்க்கும் அரசும், முதலாளிகள் இருக்கும் வரை அது ஊழலில் பெருத்து, அடக்குமுறையில் ஆட்டம் போடும். உழைக்கும் மக்களுக்கு ஆயுதம் ஏந்தும் உரிமை இருக்கும் போது உருவாகும் மக்கள் இராணுவம் இத்தகைய அதிகார வர்க்க பொறுக்கி இராணுவத்தினை இல்லமலாக்கும். அதுவரையிலும் நமது கோபம் இந்த பங்களா நாயை ஊட்டி வளர்க்கும் அரசுக்கு எதிராக திரும்பட்டும்.//

  5. //பொதுவாக இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்களின் ஸ்டியரிங் வலதுபுறத்தில் அமைந்திருக்கும்; ஆனால், டாட்ரா ட்ரக்குகளின் ஸ்டியரிங்கோ இடது புறமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ரக வாகனங்களை நெருக்கடி நேரங்களில் கையாள்வது சிரமமானது. இதைக் கொண்டு ‘தீவிரவாதிகளைத்’ துரத்தி.. பிடித்து.. சண்டை போட்டு… விஜயகாந்த்தால் மட்டுமே முடியும்.//

  6. It is really great to note that from 1948 onwards the corruption in Indian Army is going on and the Political Leaders are following the same….A very detailed report..Hats off to you and your team…THANGAL PANI THODARATTUM…

  7. மிகச்சிறந்த கட்டுரை. ஊழல் பற்றி ஒன்னுமே தெரியாதவர்கள் போல என்ன விவாதம். யோக்கியத்திலகம் அந்தோணி பற்றி ஒன்னும் சொல்லவே இல்லை.

  8. வணக்கம்.இந்திய இராணுவத்தின் ஆயுத தளவடங்கள் குறித்து மட்டும் பேசுனா எப்படி சார்?இந்த வி கே சிங் வண்டி வாங்குன சமச்சாரத்தை மட்டும் பேசுராறே அப்படியே அவங்களுக்கான மருத்துவ உபகரணங்கள் பக்கம் போகலாம்னு சிலபேரு பேசிக்குறாங்க. ஆனா எனக்கென்ன தோணுதுன்னா,இவங்களுக்கு மணிப்பூர்ல பெண்களை சீரழிப்பதற்க்கும்,மருதமலை சிரிப்பு போலீஸ் மாதிரி கூடங்குளம் பகுதியில் அணிவகுப்பு நடத்தவும் மக்களை பயங்காட்டுவதற்குமே நேரம் சரியாய் இருக்கிறது.அதுல இவ்ளோ சீரியஸான மேட்டர் எல்லாம் பாக்க முடியாது.அப்புறம் இன்னொரு விஷயம் அப்பப்ப இவங்க இருக்குறத காட்டுறதுக்கு பாஜக பாக்குற பிட்டு படம் மாதிரி எல்லையில் பதட்டம்,இராணுவம் தயார்நிலை,இந்த மாதிரி சுவரசியாமான மாறாத வசனங்கள். ஒரே தமாஷ் தான் போங்க.

  9. பெண்சாமியாருடன் கூட்டு சேர்ந்தகுண்டு வைத்த வழக்கில் ராணுவம் சிக்க வில்லையா?மேலும் அவர்கள் குண்டு வைக்க ரானுவத்திடமிருந்துதான் ஆடிஎக்ஸ் போன்ற வெடி மருந்துகள் வாங்கி யுள்ளனர்.அதற்கு எவ்வளவு ராணுவத்திற்கு அள்ளி வீசினார்களோ?

  10. இந்த ராணுவ அமைச்சர் அடைக்கடி பேசுற வாக்கியமே “நம்மந ராணுவம் பெருமை வாய்ந்த ஒன்று அதன் மேல் விமர்சனம் செய்ய கூடாது. ” அதே போல அணு உலை பத்தி கேள்வி கேட்டா அட்குநாட்டின் பாட்குகாப்பு சம்பந்தப்பட்டட்கு, வெளியில் பேசக் கூடாட்கு. ” இப்படி சொல்லியே உள்ளூக்குள்ள எல்லா பயல்களும் நல்லா ஊழல் செய்யறானுங்க! அதே போல இந்தநாடு முழுசும் ஆராய்ச்சி பண்ரன்ன்ற பேர்லநம்ம அப்டதுகலாம் மாதிரிநிறைய பேர் வெளிநாட்டுல இருந்து பொருள வாங்கி இங்கே அசெம்பிள் பண்ற வேலைய அதாவட்கு வெட்டி வேலை சென்சிட்டு இருக்குரானுங்க! இவனுக எவனையும் யாரும் கேள்வி எழுப்ப கூடாட்கு. ஒய்யால !

  11. Hi,

    I am a low caste dalit guy.I living in poverty.But still i love indian military.You dont have any rights to complain against army.You got the information only from north indian english media but still you are criticizing them.Who told the indian militry weapon acquisition has been decided by foreign buisness man and internation mafia.you are a mafia or a foreign business man.you are telling that normal soldier who is standing in the border is corrupted person and who rapes girls .If he is not standing there right now you will be dead or now the country will be under chinese rule.Dont ever cricitize the whole military.You have any anger show them to politicians.Everyone knows what Soviet military (your military) did in afghanistan.Every military some one will do such things.Are you trying to tell that common soldier who working in the remote part of india without seeing his family is taking bribes to buy weapons.Dont do such claims.If you want to change something please give the real information.not the false information.Because of the indian military , i am not living a life like srilankan tamils, pakistanis,iraq,afghanistan,and countries which dont have any strong military.

    Thank you
    Vignesh

    • விக்னேஷ், இராணுவ அதிகார வர்க்கத்தின் ஊழலைச் சொன்னால் அதை நைசாக கீழ்நிலை வீரர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று மடை மாற்றி அந்த ஊழல் பெருச்சாளிகளை காப்பாற்ற நினைக்கிறீர்களே? இது சரியா?

    • Mr Vignesh, your reply is full of wrong ideas. Unfit for any argument?
      Please read newspapers daily, and try to look deep into things around you.
      Our nation’s poverty in man-made; if u divert half of the military budget, the most basic needs of vast majority our people can be easily solved.

      Army is not for people buddy, it is meant for itself.

      Strong military will not feed you. To get the first hand experience of army’s atrocity, you should live in Kashmir or Northeast states.
      Then only you can utter like ” i am not living a life like srilankan tamils” etc.

  12. /பொதுவாக இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்களின் ஸ்டியரிங் வலதுபுறத்தில் அமைந்திருக்கும்; ஆனால், டாட்ரா ட்ரக்குகளின் ஸ்டியரிங்கோ இடது புறமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ரக வாகனங்களை நெருக்கடி நேரங்களில் கையாள்வது சிரமமானது. இதைக் கொண்டு ‘தீவிரவாதிகளைத்’ துரத்தி.. பிடித்து.. சண்டை போட்டு… விஜயகாந்த்தால் மட்டுமே முடியும்.//

  13. […] இந்தியா ராணுவத்தின் கோவணம் கிழிந்து தொங்கும் நிலையில் அதனை மூடிமறைக்கும் விதமாக அக்னி5 வெற்றி குறித்து பேசப்படுகிறது. இந்நிலையில் நாட்டையே அடகு வைத்துவிட்டு எவனை பாதுகாக்க ஏவுகனைகள் விடப்படுகின்றன என்ற உண்மையினை உணர்த்தும்விதமாக இதற்கு முன்னர் அக்னி ஏவுகனைப் பரிசோதனை செய்யப்பட்டபோது புதிய ஜனநாயகம் இதழில் வந்த கட்டுரையினை மறுபிரசுரம் செய்கிறோம். […]

  14. ஊழல் பண்றமோ பிட்டு படம் பாக்குறமோ… நாம வல்லரசுடா

Leave a Reply to அக்னி ஏவுகனைப் பரிசோதனை : சாதனையா? வேதனையா? « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க