privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம்!

பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம்!

-

பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம் !குலேபகாவலி என்றொரு பழைய திரைப்படத்தில் இப்படியொரு காட்சி வரும்.  ஒரு வீட்டின் திண்ணையில் உட்காரப் போகும் கதாநாயகனின் நண்பனிடம் அவ்வீட்டின் உரிமையாளர், “திண்ணையில உட்காரதீங்க, அப்புறம் திண்ணை வரி போட்டு விடுவாங்க” என்று எச்சரிப்பார்.  இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் சேவை வரியை விரிவாக்கியதன் மூலம், அப்படிப்பட்டதொரு வரிக் கொள்ளையை, மக்கள் மீது ஏவிவிட்டுள்ளது, மன்மோகன் சிங் அரசு.

தனியார்மயம்  தாராளமயத்தின் பின் அறிமுகப்படுத்தப்பட்ட சேவை வரி, இன்று ஆக்டோபஸ் போல மக்களைச் சுற்றிவளைத்து நெறித்து வருகிறது.  இந்த பட்ஜெட்டில் 17 இனங்களைத் தவிர, மற்ற அனைத்தையும், ஏறத்தாழ 119 இனங்களைச் சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள மைய அரசு, அவ்வரி விதிப்பையும் 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்திவிட்டது.  சேவை வரியோடு, சுங்க வரி, உற்பத்தி வரிகளையும் உயர்த்தியிருப்பதன் மூலம், கடந்த ஆண்டைவிடக் கூடுதலாக 45,940 கோடி ரூபாயைப் பொதுமக்களிடமிருந்து கறந்துவிடும்படி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வரிக் கொள்ளை ஒருபுறமிருக்க, பெட்ரோலியப் பொருட்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தில் 25,000 கோடி ரூபாயையும், யூரியாவிற்குக் கொடுத்து வந்த மானியத்தில் 7,000 கோடி ரூபாயையும் வெட்டித் தள்ளியதன் மூலமும்; 30,000 கோடி ரூபாய் அளவிற்குப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியார் முதலாளிகளுக்கு விற்பதன் மூலமும் கஜானாவை நிரப்பிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது, மைய அரசு.

மன்மோகன் சிங் கும்பல் சாமானிய மக்களை என்றுமே ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.  அக்கும்பல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினைக் கட்டுப்படுத்தாததோடு, அப்பொருட்களின் விலை மேலும் உயரும் எனத் தெரிந்தேதான், எரிகிற நெருப்பில் எண்ணெயை எடுத்து ஊற்றுவது போலத்தான், இந்தக் கூடுதல் வரி விதிப்பையும் மானிய வெட்டையும் கொண்டு வந்திருக்கிறது; இது மட்டுமின்றி, பட்ஜெட்டை அறிவித்த கையோடு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதாகவும் திமிரோடு அறிவித்திருக்கிறது.

விவசாய இடுபொருட்களுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரி வரும் வேளையில், மன்மோகன் சிங் கும்பல் அக்கோரிக்கையை ஒரு பொருட்டாக மதிக்காமல், தெனாவட்டாக யூரியாவிற்கான மானியத்தை வெட்டியிருக்கிறது.  இதுவொருபுறமிருக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாவட்டங்களில் யூரியாவிற்கான மானியத்தை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தையும் இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.  இந்நடவடிக்கை, யூரியாவின் விலையை கார்ப்பரேட் முதலாளிகளும் வர்த்தகச் சூதாடிகளும் தீர்மானிக்கும்படி விட்டுவிடும் முன்னோட்டம் தவிர வேறில்லை.  அம்மோனியா, பொட்டாசியம் உரங்களுக்கு மானியம் வழங்குவதையும், அவற்றின் விலையைத் தீர்மானிப்பதையும் நேரடியாகக் கைகழுவிய மைய அரசு, யூரியா விசயத்தில் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் சதியில் இறங்கியிருக்கிறது.  இப்படியொரு நிலை இந்தியா முழுவதும் விரிவாக்கப்படும்பொழுது யூரியாவிற்கு மானியம் வழங்குவது பெயரளவில் மட்டுமே இருக்கும்; அதே சமயம், யூரியாவின் விலையில் பெரும்பகுதி விவசாயிகளின் தலையில் சுமத்தப்படும்.

‘‘அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்” என பட்ஜெட் உரையில் கொள்கைப் பிரகடனம் செய்திருக்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.  இதற்கு இராணுவச் செலவு உள்ளிட்ட அரசின் ஊதாரிச் செலவுகளையும் மேல்தட்டு கும்பலுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் வரித் தள்ளுபடி, வரிச் சலுகைகளையும் கட்டுப்படுத்தினாலே, அரசின் செலவைக் குறைத்துவிட முடியும்.  ஆனால், வழக்கம் போலவே இந்த பட்ஜெட்டும் மேல்தட்டுக் கும்பலின் நலனை முன்னிறுத்தியும், உழைக்கும் மக்களின் நலனைப் பலியிட்டும்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1,93,407 கோடி ரூபாய் நிதியில், 79,500 கோடி ரூபாய் ஆயுதங்களும் நவீன போர் விமானங்களும் வாங்க ஒதுக்கப்பட்டுள்ளது.  ஊழலில் ஊறிப் போன அதிகாரிகளுக்கும் ஆயுத பேரத் தரகர்களுக்கும் இதைவிட இனிப்பான செய்தி வேறெதுவும் இருக்க முடியாது.

நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு 4,500 கோடி ரூபாய் அளவிற்கு வருமான வரிச் சலுகையினை வாரி வழங்கியிருக்கிறார், நிதியமைச்சர்.  உழைக்கும் மக்களுக்கு மானிய விலையிலோ இலவசமாகவோ அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை ஓட்டுவங்கி அரசியல் எனத் திட்டித் தீர்க்கும் இக்கும்பல், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த வருமான வரிச் சலுகை போதாது எனக் கூப்பாடு போடுகிறது.

இந்த ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 5,21,980 கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம், கடந்த ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 5,29,432 கோடி ரூபாய்க்கான வரிச் சலுகைகளுள் ஒன்றைக்கூட நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் ரத்து செய்யவில்லை. நிதிப் பற்றாக்குறை பூதகரமாக வளர்ந்து நிற்பதற்கு இந்த ஊரான் வீட்டு நெய்யே என்ற வள்ளல்தனம்தான் காரணம்.  ஆனால், பற்றாக்குறையைச் சமாளிக்க மானியத்தை வெட்டிய கையோடு, தொழிலாளர் வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த வட்டியை 9.5 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாகக் குறைத்து, 4.5 கோடி தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் களவாடிவிட்டது, காங்கிரசு கூட்டணி அரசு.  இந்த வட்டிக் குறைப்பு மன்மோகன் சிங் கும்பலின் வக்கிரப் புத்தியையும் அற்பத்தனத்தையும் ஒருசேர எடுத்துக் காட்டுகிறது.

பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம் !திருவாளர் மன்மோகன் சிங் சமீபத்தில், “இந்தியாவில் உள்ள குழந்தைகளுள் 42 சதவீதத்தினர் ஊட்டச்சத்து இன்றி நோஞ்சான்களாக வளருவதாகவும், இதுவொரு தேசிய அவமானம்” என்றும் கூறினார்.  அடித்தட்டு மக்களை எந்தளவிற்கு வறுமையும் ஏழ்மையும் வாட்டி வருகின்றன என்பதை உறுதிப்படுத்தும் புள்ளிவிவரம் இது.  மன்மோகன் சிங் திடீர் ஞானோதயம் வாய்த்தவரைப் போல இப்படிக் கூறியிருக்கும் அதே சமயம், அவரது அல்லக்கையும் திட்ட கமிசனின் துணைத் தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா, “நகர்ப்புறத்தில் தனிநபர் வருமானம் நாளொன்றுக்கு ரூ.28.65க்குக் கீழாகவும், கிராமப்புறத்தில் தனிநபர் வருமானம் ரூ.22.42க்குக் கீழாகவும் இருப்பதுதான் வறுமைக் கோட்டின் அளவுகோல்.  இதன்படி வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் இந்திய மக்களின் எண்ணிக்கை 37.2 விழுக்காட்டிலிருந்து 29.8 விழுக்காடாகக் குறைந்துவிட்டதென” தற்பொழுது தடாலடியாக அறிவித்திருக்கிறார்.  ஒருபுறம் நோஞ்சான் குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடித்துவிட்டு, மறுபுறம் வறியவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டதாகக் கணக்குக் காட்டுவது எப்பேர்பட்ட கயமைத்தனம்!

திட்ட கமிசன் தற்போது அறிவித்துள்ள வறுமைக் கோட்டின் அளவுகோல், அக்கமிசன் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்த அளவுகோலைவிட, ஏறத்தாழ நான்கு ரூபாய் குறைவானது.  விலைவாசி உயர்ந்துகொண்டே செல்லும் சமயத்தில், வறியவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட வறுமைக் கோட்டின் அளவுகோலை வெட்டும் சில்லறைத்தனமான குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளது, மன்மோகன்  அலுவாலியா கும்பல்.  இந்தக் குறுக்குப்புத்திக்கு எதிராக நாடெங்கும் கண்டனங்கள் எழுந்த பிறகும் அதைப் பொருட்படுத்தாத அலுவாலியா, “இந்தக் கணக்கு வேண்டுமானால் துல்லியம் இல்லாமல் இருக்கலாம்.  நாட்டில் வறுமை குறைந்திருக்கிறது.  பட்டினிச் சாவுகள் இல்லை என்பது உண்மையே” என இறுமாப்பாகப் பதில் அளித்திருக்கிறார்.

மன்மோகன்  அலுவாலியா  சிதம்பரம் கும்பல் தேர்ந்தெடுத்து அமல்படுத்தி வரும் பொருளாதார வளர்ச்சிப் பாதை, வறுமை, ஏழ்மை, சமூக ஏற்றத்தாழ்வை மட்டும் தீவிரமாக்கவில்லை; நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்து நாசப்படுத்தி வருகிறது.  குறிப்பாக, நாட்டின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர்கள் எதிர்பார்த்த 8 சதவீத வளர்ச்சியை எட்டமுடியாமல் முடங்கிப் போய்விட்டது.  விவசாயம் போலவே, உற்பத்தி சார்ந்த தொழிற்துறையும் நீண்ட கோமா நிலைக்குச் சென்றுவிட்டது.  இவையனைத்தும் தனியார்மயம்  தாராளமயம் மிகப்பெரும் தோல்வி அடைந்துவிட்டது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

ஆனால், மன்மோகன் சிங் கும்பல் மண்ணுக்குள் தலை புதைக்கும் நெருப்புக் கோழியைப் போல, இந்த உண்மையைக் காண மறுப்பதோடு, தனியார்மயம்  தாராளமயத்தை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் இந்த நெருக்கடியிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற ஆகாயக் கோட்டையைக் கட்டி காட்டுகிறது.  இந்தச் செக்குமாட்டுத் தனத்தற்கு ஏற்றபடியே, பட்ஜெட்டில் நிதி மூலதனத்திற்கும், பங்குச் சந்தை முதலீட்டிற்கும், விமான சேவை, மின்சாரம் போன்ற துறைகளில் நுழைந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.  பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளைக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தாமல்,  சில்லறை வணிகத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பது உள்ளிட்டுப்பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.

நாட்டையும் மக்களையும் மீள முடியாத பேரழிவில் தள்ளாமல் ஓய்வதில்லை எனக் கங்கணம் கட்டிக் கொண்டு மன்மோகன் சிங் கும்பல் வேலை செய்து வருவதைத்தான் இந்த பட்ஜெட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது.  ஆனால், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ, துடப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவது போல, “பட்ஜெட்டில் இந்த அளவிற்கு மானியத்தை வெட்டியிருக்கத் தேவையில்லை; மக்கள் நலத் திட்டங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக நிதி ஒதுக்கியிருக்கலாம்” என ஆலோசனைகளை அள்ளிவிட்டு வருகிறார்கள்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்