privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கநாட்டுப் பற்றாளர்களே கேளுங்கள்., நக்சல்பாரியே ஒரே மாற்று!

நாட்டுப் பற்றாளர்களே கேளுங்கள்., நக்சல்பாரியே ஒரே மாற்று!

-

இழப்பதற்கு ஏதுமற்ற, உற்பத்திக் கருவிகள் எதனையும் உடைமையாகக் கொண்டிராத, தனது உழைப்புச் சக்தியைத் தவிர விற்பதற்கு ஏதுமில்லாத பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை திரும்பும் திசையெல்லாம் பெருகிக் கொண்டிருக்கிறது. நசிப்பிக்கப்பட்ட விவசாயத்திலிருந்தும், பறிக்கப்பட்ட காடுகளிலிருந்தும், தோற்றுச் சரிந்த  கைவினைத் தொழில்களிலிருந்தும் உடைமை நீக்கம் செய்யப்பட்ட மக்கள், கிராமத்திலிருந்து நகரம் நோக்கி விசிறியடிக்கப்பட்டுத் தொழிலாளி வர்க்கமாக உருமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை அமைப்புரீதியாகத் திரட்ட வேண்டியிருக்கிறது.

ஏற்கெனவே அமைப்பு ரீதியாகத் திரண்டிருக்கும் தொழிலாளி வர்க்கப் பிரிவினரோ போலி கம்யூனிஸ்டுகளால் தொழிற்சங்கவாதத்தில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். பிற ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரைக் காட்டிலும் முன்னேறிய வர்க்கம் என்ற தனது தகுதியையும், மற்றெல்லா வர்க்கங்களுக்கும் தலைமை தாங்கவேண்டிய பொறுப்பையும் இவர்கள் உணரவில்லை. பொதுத்துறைகளைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பலி கொடுக்கும் நடவடிக்கைகள், இயற்கை வளங்களைத் தரகு முதலாளிகளுக்கு இரையாக்கும் சட்டங்கள், ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்துக்கு வழங்கப்படும் சலுகைகள், அவர்கள் நேரடியாகவே அரசின் அங்கமாக மாறிவரும் நிகழ்ச்சிப்போக்குகள் போன்றவை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுடன், மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு எதிராகத் தன்னெழுச்சியாக நடக்கும் போராட்டங்களிலிருந்தும்கூட இவர்கள் விலகியே நிற்கிறார்கள்.

இன்னொருபுறம், தொழிலாளி வர்க்கத்தின் அணிவரிசையில் புதிதாகச் சேர்ந்து கொண்டிருக்கும் இளம் தொழிலாளர்கள், தங்கள் மீது திணிக்கப்படும் நவீன கொத்தடிமைத்தனத்துக்கு எதிராகப் போர்க்குணமிக்க போராட்டங்களில் இறங்குவதைக் காண்கிறோம். பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகின்ற, ஏற்கெனவே அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட, சலுகை பெற்ற மேட்டுக்குடி தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கை முறையிலிருந்தும், சிந்தனை முறையிலிருந்தும் பெரிதும் வேறுபட்ட இந்தத் தொழிலாளர்கள், விலை உயர்வு, கட்டண உயர்வு மற்றும் தனியார்மய நடவடிக்கைகள் உள்ளிட்ட மறுகாலனிய பொருளாதாரத் தாக்குதல் ஒவ்வொன்றாலும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். போராட்டத்தின் முன்னணியில் நிற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

மீள முடியாத நெருக்கடியில் உலக முதலாளித்துவம் மூழ்கி வரும் இன்றைய சூழலில், தொழிலாளி வர்க்கத்திற்கு அதன் வரலாற்றுப் பாத்திரத்தைப் புரிய வைப்பதும், புரட்சியின் முன்னணிப் படையாக அதனை அணிதிரட்டி நிறுத்துவதும் புரட்சியாளர்களின் கடமை.

இதனை உணர்த்தும் வகையில், ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இந்த மே தினத்தையொட்டி வெளியிட்டுள்ள பிரசுரம், பு.ஜ.வாசகர்களுக்காக, முழுமையாக வெளியிடப்படுகிறது.

ஆசிரியர் குழு

புதிய ஜனநாயகம்

 

“தனியார்மயக் கொள்ளையைத் தடுக்க மறுகாலனியாக்கத்தை மாய்க்க நக்சல்பாரியே ஒரே மாற்று” புரட்சிகர அமைப்புகளின் மே தினச் சூளுரை

நக்சல்பாரிஅன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மே தினம்  முதலாளி வர்க்கத்திற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கம், தனது உரிமைகளை இரத்தம் சிந்திப் போராடி நிலைநாட்டிக் கொண்ட நாள். எட்டு மணி நேர வேலை என்ற உரிமை மட்டுமல்ல; குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை உலகெங்கிலும் உழைக்கும் மக்கள் போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு போராடிப் பெற்ற பல உரிமைகள் இன்று நேரடியாகப் பறிக்கப்படுவதுடன், பல மறைமுகமான வழிகளிலும் நம் மீதான சுரண்டலும் அடக்குமுறையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது பால், பேருந்து, மின் கட்டண உயர்வு என்ற பெயரில் மாதம் தோறும் ஏழை, நடுத்தரக் குடும்பம் ஒவ்வொன்றிடமிருந்தும் ரூ.2000/ க்கும் மேல் கசக்கிப் பிழிந்து கஜானாவை நிரப்பும் திட்டத்தை அறிவித்திருக்கிறார், பாசிச ஜெயலலிதா. கஜானாவை கருணாநிதி காலி செய்துவிட்டதாகவும் அதனை நிரப்புவதற்கும் போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரியம் போன்றவற்றை இலாபத்தில் நடத்துவதற்கும் கட்டண உயர்வு தவிர்க்க இயலாதது என்றும் நியாயப்படுத்துகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே கட்டண உயர்வு என்ற பெயரில் இந்த வழிப்பறிக் கொள்ளையை கருணாநிதி நடத்தியிருக்க வேண்டுமென்றும், அவர் செய்யத் தவறிய இந்தப் புனிதக் கடமையைத் தான் நிறைவேற்றியிருப்பதாகவும் சொல்லிப் பூரிக்கிறார். இந்த வழிப்பறியை ஜெயலலிதாவின்  துணிச்சல் என்றும் நிர்வாகத் திறமை என்றும் போற்றுகின்றன  ஊடகங்கள்.

கஜானா காலி என்றவுடனே நாமும் அதிர்ச்சி அடைகிறோம். கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று எண்ணிக் கொள்கிறோம். நம் வீட்டின் கஜானா காலியாகி, கடனில் தவிக்கிறோமே, அதிரடியாக நாம் நமது சம்பளத்தை உயர்த்திக் கொள்ள முடியுமா? அரசாங்கம்தான் உயர்த்திக் கொடுக்குமா? இரண்டுமில்லை. எனவே, அதிரடியாக நம் வாழ்க்கைத் தரத்தைத்தான் குறைத்துக் கொள்கிறோம். இனி குறைக்கக்கூடிய செலவு எதுவும் இல்லை என்பதால், கூடுதலாக உழைக்கத் தொடங்குகிறோம். வீட்டு வேலை செய்யும் பெண்கள் கூடுதலாக இரண்டு வீடுகளில் வேலை செய்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள் மேலும் சில மணி நேரம் உழைக்கிறார்கள், பலர் மனைவி, பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள், கடன் வாங்குகிறார்கள், அடைக்க முடியாதவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

பால், தண்ணீர், உணவு, கல்வி, மருத்துவம், மின்சாரம், பேருந்து போன்றவையெல்லாம் சேவைத்துறைகள். மக்களுக்கு இச்சேவைகளை வழங்குவது அரசாங்கத்தின் கடமை. இலாபம் ஈட்டுவது இவற்றின் நோக்கமாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. இலாபமீட்டி கஜானாவை நிரப்புவதையே நோக்கமாக கொண்ட நிறுவனத்தின் பெயர் அரசாங்கமல்ல  கம்பெனி. ‘காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்தடி’ என்று கூறுபவரின் பெயர் முதல்வர் அல்ல  முதலாளி.

கஜானாவை நிரப்பி, தொழில் தொடங்கி, வேலைவாய்ப்பைப் பெருக்கித் தமிழகத்தை முதல் மாநிலமாக்கும் உன்னதமான நோக்கத்துக்காகத்தான், இன்றைக்கு மக்களின் தாலியை அறுப்பதாக விளக்கமளிக்கிறார் அம்மா. ஆட்டுக்குத் தீனி போட்டு வளர்ப்பது கறிக்காகத்தான். கட்டணத்தை ஏற்றுவதும், பொதுத்துறை நிறுவனங்களின் இலாபத்தை உயர்த்துவதும் அவற்றைத் தனியார்மயமாக்குவதற்குத்தான். கணிசமாக இலாபமீட்டுகின்ற பொதுத்துறை வங்கிகள், காப்பீடு, பெல், என்.எல்.சி போன்ற நிறுவனங்கள் அறுத்துக் கூறு கட்டப்பட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்கப்படுவதை நாம் காணவில்லையா?

நக்சல்பாரிஇந்தக் கட்டண உயர்வால் உண்மையில் ஆதாயம் அடைபவர்கள் யார்? ஏற்கெனவே இலாபமீட்டிக் கொண்டிருந்த பேருந்து, பால்பண்ணை முதலாளிகளும் விலையை உயர்த்தி விட்டார்கள். அவர்களது இலாபம் பன்மடங்காகிவிட்டது. டாடா, அம்பானி, அடானி, அப்போலோ போன்ற கார்ப்பரேட் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்துக்கு என்ன விலை கேட்கிறார்களோ, அதனை மக்களிடமிருந்து வசூலித்துக் கொடுப்பதற்காகத்தான் மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது.

பத்து இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் தள்ளுபடி செய்து, அடிமாட்டு விலையில் நிலக்கரிச் சுரங்கங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தந்திருக்கிறது மன்மோகன் சிங் அரசு. நிலக்கரியை இலவசமாகக் கொடுத்து விட்டு, முதலாளிகள் சொல்லும் விலைக்கு அவர்களிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது. எண்ணெய்க் கிணறுகளை அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்குத் தந்து விட்டு, நம் பொதுச்சொத்தான எண்ணெயைச் சர்வதேசச் சந்தை விலையில் அம்பானியிடமிருந்து வாங்குகிறது. தமிழகத்தில் முதலீடு செய்திருக்கும் ஜப்பானிய முதலாளிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சென்னையில் தனியாக ஒரு நகரத்தையே அமைத்துக் கொடுக்கிறார் ஜெயலலிதா. பன்னாட்டு நிறுவனங்களுக்கு மானியமாகவும் வரிச்சலுகையாகவும் பல ஆயிரம் கோடிகளை தி.மு.க. அரசும் வாரி வழங்கியிருக்கிறது.

எனினும், முதலாளிகளுக்கு வாரிக்கொடுத்து கஜானாவைக் காலி செய்துவிட்டார் என்று ஒருபோதும் ஜெயலலிதா கருணாநிதியை குற்றம் சாட்டியதில்லை. கஜானாவை நிரப்புவதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கருணாநிதி வழங்கிய சலுகைகளை ரத்து செய்ததும் இல்லை. பன்னாட்டு நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் மக்களைக்  கொள்ளையிடுவதற்கு வழிவகை செய்து கொடுக்கும் தரகனாகவும், கங்காணியாகவுமே ஜெ.அரசு செயல்படுகின்றது.  முதலாளிகளுக்கு வாரிக் கொடுப்பதற்காகவும், தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை எதிர்த்துப் போராடும் மக்களை ஒடுக்க, போலீசு படைகளை நவீனமயமாக்குவதற்காகவும்தான் அரசு கஜானாவின் பணம் பயன்படுத்தப்படுகிறது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்றழைக்கப்படுகின்ற மறுகாலனியாக்க கொள்கையை அமல்படுத்துவதில் ஓட்டுக்கட்சிகளிடையே எந்த வேறுபாடும் இல்லை. அது மட்டுமல்ல; இக்கட்சிகளின் உள்ளூர் தலைவர்களில் தொடங்கி, அமைச்சர்கள், உயர் அதிகார வர்க்கத்தினர் வரை அனைரும் இந்த மறுகாலனியாக்கக் கொள்கையில் தொழில்ரீதியில் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள். காண்டிராக்டர்களாக, மணல் மாஃபியாக்களாக, ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக, தண்ணீர் வியாபாரிகளாக, பேருந்துபால்பண்ணை முதலாளிகளாக இருக்கும் இவர்கள், கட்டண உயர்வு, விலை உயர்வு ஒவ்வொன்றிலும் ஆதாயம் அடைகிறார்கள். இன்றைக்கு ஆயிரம் கோடி, இலட்சம் கோடி எனத் தினந்தோறும் சந்தி சிரிக்கும் ஊழல்கள், தனியார்மயம் என்பதே பகற்கொள்ளைதான்  என நிரூபித்திருப்பதுடன், தரகுமுதலாளிகளுடன் ஓட்டுப் பொறுக்கிகள் வைத்திருக்கும் தொழில்  ரீதியான கூட்டையும் அம்பலமாக்கியிருக்கின்றன.

நக்சல்பாரி

உழைக்கும் மக்களிடமிருந்து கசக்கிப் பிழிந்து எடுக்கப்படும் பணம் அரசாங்க கஜானாவை மட்டுமல்ல, முதலாளிகளின் பணப்பெட்டியையும் நிரப்புகிறது. டாடா, அம்பானி, மிட்டல் போன்ற கோடீசுவரர்களின் சொத்து என்ன வேகத்தில் உயர்கிறதோ, அதே வேகத்தில் ஏழைகளின் எண்ணிக்கையும் உயர்கிறது. எனினும், பன்னாட்டு கம்பெனிகளின் பொருட்களையும், ஆடம்பரங்களையும் நுகரும் வசதி கொண்ட மேல்தட்டுப் பிரிவினரைப் பற்றி மட்டுமே அரசு கவலைப்படுகிறது. இவர்களுக்கான மால்களும், புதுப்புது கார்களும், கேளிக்கை விடுதிகளும், நவீன நுகர்பொருட்களும் பெருகுவதைக் காட்டி, நாடு முன்னேறுகிறது என்று நம்மையும் நம்பச் சொல்கிறது.

நாமும் நம்புகிறோம். கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகிய அனைத்துக்கும் ஏதோ ஒரு நியாயம் இருப்பதாகவும் கற்பித்துக் கொள்கிறோம். நம்மை நாமே வருத்திக் கொள்வதன் மூலம் இந்தத் துன்பத்திலிருந்து மீள முயல்கிறோம். நூறில் ஒரு நபருக்கு அரிதாக அடிக்கும் ‘அதிருஷ்டத்தை’ பார்த்து, அப்படி ஒரு வாய்ப்பு நமக்கும் கிடைக்காதா என்று ஏங்குகிறோம். 99 சதவீத மக்களின் நிரந்தரமான ‘துரதிருஷ்டத்துக்கான‘ காரணத்தைக் காண மறுக்கிறோம். தி.மு.க., அ.தி.மு.க. என்று மாற்றி மாற்றி ஓட்டுப் போடுவதன் மூலம் நமது கோபத்தைக் காட்டுகிறோம்

மக்களின் இந்த ஏமாளித்தனத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இன்று தி.மு.க. அடுத்த வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. மற்ற ஓட்டுப் பொறுக்கிகளும் தேர்தல் எனும் பம்பர் குலுக்கலுக்காகக் காத்திருக்கிறார்கள். நம்மைக் கொள்ளையிடும் தனியார்மயம்தாராளமயம்தான் எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் கொள்கை. ஓட்டுப் பொறுக்கி அரசியல் மூலம் இந்தத் தனியார்மயத்தை ஒழித்துவிடப் போவதாக யாரேனும் சொன்னால், அதைவிடப் பெரிய பித்தலாட்டம் இல்லை.  அப்படிப் பேசிவந்த போலி கம்யூனிஸ்டுகளும், தனியார்மயத்துக்கு எதிராக சவடால் பேசும் எல்லா ஓட்டுப்பொறுக்கிகளும் அம்பலமாகி நிற்கிறார்கள்.

இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளின் மூலம் மக்கள் தமது பிரச்சினைகள் எதற்கும் தீர்வு காண முடியாது என்ற உண்மைக்கு கூடங்குளம் மக்கள் போராட்டமும், முல்லைப்பெரியாறு உரிமைக்காகத் தமிழக மக்கள் நடத்திய போராட்டமும் சான்று பகர்கின்றன. வெற்றியோ தோல்வியோ ஓட்டுப் பொறுக்கிகளை நம்பக்கூடாது என்கின்ற மக்களின் பொதுக்கருத்தை இப்போராட்டங்கள் பிரதிபலிக்கின்றன.

சட்டத்தின் ஆட்சி, நீதிமன்றத்தின் மூலம் நீதியைப் பெறுவது என்ற முயற்சிகள் எல்லாம் தோற்றுப் பல்லிளித்துப் போய்விட்டன. காவிரி, முல்லைப் பெரியாறு தீர்ப்புகளை மீறிய கருநாடக, கேரள அரசுகளின் ஒரு முடியைக் கூட உச்ச நீதிமன்றத்தால் அசைக்க முடியவில்லை. தங்களைப் பணிநீக்கம் செய்தது செல்லாது என்று உயர்நீதி மன்றத்தில் வாதாடி வெற்றி பெற்ற மக்கள் நலப் பணியாளர்கள், இன்னும் தெருவில் தான் நிற்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தை ஜெயலலிதா மதிக்கவில்லை. எந்த மாநில அரசும் எங்கள் தீர்ப்புகளை மதிப்பதில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கோமாளிகளைப் போலப் புலம்புகிறார்கள்.

நக்சல்பாரிபொய், பித்தலாட்டம், சட்டவிரோதம், கிரிமினல் வேலைகள் ஆகிய அனைத்தையும் சட்டம் ஒழுங்கு என்ற பெயரால் அரங்கேற்றுகின்றது போலீசு. குற்றம் நிரூபிக்கப்படாமலேயே போலி மோதலில் சுட்டுக்கொன்றுவிட்டு, செத்தவர்கள் கொள்ளையர்கள் என்று சாதிக்கிறது. சட்டத்தின் ஆட்சியை மதிக்காத கேரள அரசை எதிர்த்துப் போராடினால், போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள் இந்த ‘சட்டத்தின் காவலர்கள்’. ‘அணு உலை வேண்டாம்‘  என்று உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் மீது ராஜத்துரோகம், சதி, அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் போன்ற ஆயுள்தண்டனைக் குற்றங்களைச் சுமத்திச் சிறையில் அடைக்கிறது போலீசு.  அறவழி, அமைதி வழி என்பதெல்லாம் காரியத்துக்கு ஆகாதவை மட்டுமல்ல, அவை நம்மைக் காயடிக்க மட்டுமே பயன்படுபவை என்றே நம் அனுபவங்கள் காட்டுகின்றன.

மாற்றுப் பாதை எது, மாற்றுப் போராட்ட முறை எது என்பதே நம் முன் உள்ள கேள்வி. கம்யூனிசத்துக்கு எதிராகக் கடைவிரிக்கப்பட்ட காந்தியம் உள்ளிட்ட எல்லா இசங்களும் பல்லிளித்துவிட்டன. தலித்தியம், பெரியாரியம் என்ற பேச்செல்லாம் ஓட்டுப்பொறுக்கிப் பிழைப்பதற்கும், ஒடுக்கப்பட்ட மக்களை விற்பதற்குமே என்பது அம்பலமாகிவிட்டது. சொல்லிக் கொள்ளப்படும் தேர்தல் ஜனநாயகம் கிழிந்து கந்தலாகித் தொங்குகிறது.

நம்மையும் நம் உரிமைகளையும் இந்த நாட்டையும் காப்பாற்ற வல்ல மாற்றுப் பாதை நக்சல்பாரி புரட்சிப் பாதை ஒன்றுதான். தொழிலாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் மீது பற்று கொண்ட அனைவருக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர்கள் நக்சல்பாரிகள் மட்டும்தான். ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளித்துவம் நடித்து வந்த நாடகம் அதன் கடைசி காட்சிக்கு வந்துவிட்டது. உலக முதலாளித்துவத்தின் தலைமையான அமெரிக்காவிலேயே ‘முதலாளித்துவம் ஒழிக’  என்ற மக்களின் போர்க்குரல் முன் எப்போதும் இல்லாத கோபத்துடன் ஒலிக்கத்தொடங்கிவிட்டது. பிரான்சு, பிரிட்டன், கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின்  என காட்டுத்தீயைப் போல ஐரோப்பா கண்டம் முழுவதும் பற்றிப் படர்கிறது மக்கள் போராட்டம்.

முதலாளி வர்க்கம் மூர்க்கத்தின் கொடுமுடியில் வீற்றிருந்த அதன் துவக்க காலத்தில், தங்கள் இன்னுயிர் தந்து உலகத் தொழிலாளி வர்க்கத்தின் உரிமையை நிலைநாட்டினார்கள் மேதினத் தியாகிகள். இன்று மரணப் படுக்கையில் கிடக்கும் முதலாளித்துவம், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தொழிலாளி வர்க்கத்தின் உதிரத்தை உறிஞ்சுகிறது. விலை உயர்வு, உரிமை பறிப்பு, சுரண்டல், அடக்குமுறை, பொதுச்சொத்துகள் அபகரிப்பு, ஆக்கிரமிப்புப் போர்கள் ஆகிய அனைத்தும் காட்டும் உண்மை இதுதான்.

அன்று உலகத் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்காக, நெஞ்சுரத்துடன் தூக்கு மேடையை மிதித்தனர் சிகாகோ தொழிலாளர்கள். இன்று மரணத்திலிருந்து மீளத் துடிக்கிறது முதலாளித்துவம் எனும் மிருகம். அதன் நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து, குரல்வளையை நெரித்து, அதனைச் சவக்குழிக்கு அனுப்புவோம்!

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

மேதினம் 2012 பேரணி காட்சிப்பதிவுகள் சில…