privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பெட்ரோல் விலை உயர்வு: ஐ.ஓ.சி அலுவலகம் முற்றுகை – படங்கள்!

பெட்ரோல் விலை உயர்வு: ஐ.ஓ.சி அலுவலகம் முற்றுகை – படங்கள்!

-

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக புரட்சிகர அமைப்புக்களின் போராட்டம்

பெட்ரோல் விலை  லிட்டருக்கு ரூபாய் 7.50 உயர்த்தப்பட்டு ஒரே அடியாக  உழைக்கின்ற ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தலையில் சம்மட்டி அடியாக விழுந்தது. இதற்கு காரணமான மறுகாலனியாக்கத்தை எதிர்க்காமல் எல்லா அரசியல் கட்சிகளும் ஒப்புக்கு சப்பாக  போராட்டங்களை அறிவித்து இருந்தன.

பால் விலை, மின் கட்டணத்தை ஏற்றிய ஜெயா மாட்டுவண்டி போராட்டமும், போலி கம்யூனிஸ்டுகள் வாகனத்திற்கு சடங்கு நடத்தும் போராட்டமும் கருணாநதியோ மத்திய அரசில் சொகுசாக இருந்து கொண்டே சேப்பாக்கத்தில் போராட்டம் என எண்ணை வளங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதற்கு எதிராக எதையும் பேசாமல் எதிர்ப்பை நாடகமாகக் காட்டிக்கொண்டிருக்கும் போது,

இந்திய ரூபாயின் சரிவும், கச்சா எண்ணையின் விலை ஏற்றமும் மறுகாலனியாக்கத்தின் கோரவிளைவு, இந்த தனியார்மயத்தை வேரறுக்க நக்சல்பாரிகள் தலைமையில் களமிறங்குவோம் என்ற முழக்கச் சுவரொட்டிகள் மே 29 காலை சென்னை நகர்ப்புறத்தில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. கூடவே மே 29 காலை 11 மணிக்கு நுங்கம்பாக்கம் ஐ.ஓ.சி அலுவலகத்தை மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்கள் சார்பில் முற்றுகையிட உள்ள சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு  இருந்தன.

சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதை அடுத்து எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் அந்த சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசு குவிக்கப்பட்டு சிலரை எதிர்பார்த்து இருந்தது. அந்த எண்ணத்தில் இடி விழுந்தது போல நான்கு பக்கத்திலிருந்தும் பெண்கள், மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் செங்கொடிகளுடன் சீறிப்பாய்ந்து வந்தனர்.

உழைக்கும் மக்களை கொள்ளையடித்து தனியாருக்கு எண்ணைவளங்களை தாரை வார்ப்பதற்காக உருவான ஐஓசி செஞ்சட்டைகளால் முற்றுகையிடப்பட்டது. மக்களிடம் இந்தப்பிரச்சினையை கொண்டு செல்லும் நோக்கில் முற்றுகை சாலைமறியலாக மாற்றப்பட்டது. தோழர்கள் தடுப்புச்சங்கிலியாக மாறி ஒரு புறம் சாலையை மறித்து நிற்க, மறுபுறமோ மக்கள் தன்னிச்சையாகத்  வாகனத்தை நிறுத்திவிட்டு சாலைமறியலை கவனித்தனர்.

எங்கிருந்து இத்தனை பேர் வந்தீங்க? என்று திகைத்துப்போய் கேள்விகேட்ட போலீசு “ நீங்க இத்தனைபேர் வருவீங்கன்னு தெரிஞ்சு இருந்தா, பக்கத்துல ஒரு கிரவுண்ட் இருக்கு, ஆர்ப்பாட்டம் நடத்த வசதியாக அதை ரெடி பண்ணியிருப்போம் “  என்று கூற,

“எங்க போராட்டம் நடத்த வேண்டும்னு நாங்க முடிவு செய்யறோம், அந்த வேலை உங்களுக்கு வேண்டாம் “ என்று தலைமை தாங்கிய  பு.மா.இ.மு சென்னைக் கிளை இணைச் செயலர் தோழர். நெடுஞ்செழியன் பதில் அளித்தார்.

”எல்லா கட்சி காரங்களும் நாங்க சொன்னா கேட்டுக்குறாங்க, ஏன் போன வாரம் சிபிஎம் ரங்கராஜன் வந்திருந்தாரு நாங்க சொல்லுற இடத்துல செஞ்சுட்டு போயிட்டாங்க, நீங்கதான்…” என்ற படி போலீசு புலம்பியது.

தோழர்கள் மற்றும் அங்கு சுற்றி இருந்த மக்களிடம் ;பேசிய தோழர் நெடுஞ்செழியன் “இந்த பெட்ரோல் விலைஉயர்விற்கு காரணம் எண்ணை வளங்கள் அனைத்தும் தனியார் முதலாளிகளிடம் தாரைவார்க்கப்பட்டதே. இதுதான் நாடு மீண்டும் காலனி ஆகிக்கொண்டு இருப்பதை காட்டுகிறது. இதற்கு எதிராக நாம் வீதியில் இறங்கி  நக்சல்பாரி தலைமையில்போராட வேண்டும்” என்று விளக்கினார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சாலை மறியலால் சென்னையின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது.  முதல்வன் பட பாணியில் போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்று ஒருவர் உதார் விட்டபோது “ பெட்ரோலே இல்லேன்னா ஏது போக்குவரத்து? உங்களுக்கும் சேர்த்து தான்  நாங்க போராடுகிறோம்” என்று  கூறியதற்கு “அது தான் போராட்டம் நடத்துறாங்கன்னு சொல்லுறாங்க இல்ல, ஏய்யா கத்தற என்று மக்கள் நமக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இளந்தோழர்களின் கம்பீரமான முழக்கத்தை கண்ட மக்கள் “இந்த வயசுல மக்கள் பிரச்சினைக்கு போராடுறது பெரிய விசயம்” என்று வியப்புடன் ஆதரித்தனர். ஒருவர் “சரியான விசயத்துக்குதான நியாயமா போராடுறீங்க” என்று கூறினார்.

இப்படி கிடைத்த மக்களின் ஆதரவால் உற்சாகமடைந்த தோழர்கள் கொளுத்தும் வெயில் என்றும் பாராமல் 1 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அனைத்துத் தோழர்களையும்  காவல் துறை கைது செய்தது, மண்டபத்தில் வைக்கப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். தோழர்கள் அனைவரையும் கைது செய்யும் வரை அப்பகுதியில் இருந்த மக்கள் அங்கேயே இருந்து ஆதரவளித்துள்ளனர். மற்ற ஓட்டுக்கட்சிகளின் போராட்டங்கள் எல்லாம் பித்தலாட்டம், உழைக்கும் மக்கள் வீதிக்கு வந்து போராடுவது ஒன்று தான் இந்த மறுகாலனியை மாய்க்க ஒரே வழி என்பதை அறிவிக்கும் விதமாக இந்த போராட்டம் அமைந்தது.

____________________________________________________

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை

____________________________________________________