privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஐந்தாம் ஆண்டில் வினவு!

-

ஐந்தாம் ஆண்டில் வினவு

2008 ஜூலை 17-ல் ஆரம்பிக்கப்பட்ட வினவு தளம் இன்றிலிருந்து ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நான்காண்டு அனுபவத்தை எடை போட்டு என்னவென்று எழுதுவது?

ஒரு பொருள் அல்லது நிகழ்வின் இயக்கத்தை, அந்த இயக்கம் தோற்றுவிக்கும் மாற்றத்தை அளவிடும், புரிந்து கொள்ளும் அளவுக்கு காலக்கணக்குத் தேவைப்படுகிறது. இதன்றி நாளும், கோளும், வருடப் பிறப்பும், பிறந்த நாள் கொண்டாட்டங்களும் என்ன செய்து விட முடியும்?

பொருளைப் பேசுவதற்கு முன்னர் புள்ளிவிவரங்களை பார்த்து விடலாம்.

பதிவுகள் – 1434
மறுமொழிகள் – 58,439
பார்வையாளர்கள் – 59 இலட்சம்
மின்னஞ்சல் சந்தாதாரர்கள் – 3507
பேஸ்புக்   5000
பேஸ்புக் பக்கம்  3718
ட்விட்டர் – 2848
கூகிள் பிளஸ் – 4106

இந்த நான்காண்டு பயணத்தில் வினவு அடைந்திருக்கும் இடத்தினை இந்த எண்ணிக்கைகள் தெரிவிக்கின்றன. என்றாலும் எண்ணிக்கைகள் மட்டும் உண்மையினை உரைப்பதில்லை. அந்த எண்கள் இணைந்து இசைக்கும் வரலாற்றுணர்வை மீட்டிப் பார்ப்பதற்கு கணக்கு மட்டும் போதுமானதல்ல.

சமூக மாற்றம், புரட்சி எனும் பேரியக்கத்தின் திசையில் நமது பௌதீக வெளிப்பாடு – அது எத்தனை சிறியதாக இருந்தாலும் எத்தனை அடி நகர்ந்திருக்கிறது, தடுமாறியிருக்கிறது, சோர்ந்திருக்கிறது, உற்சாகத்தைப் பெற்றிருக்கிறது என்பதை செயலூக்கமுள்ள நடைமுறையின் உதவியோடு அசை போட்டுப் பார்ப்பது முக்கியம். இத்தகைய ஆண்டு தினங்களில் சொந்த வாழ்க்கை அல்லது கட்சி வாழ்க்கை குறித்து தோழர்கள் இவ்வாறுதான் பரிசீலனை செய்வார்கள். ‘தீ.கம்யூனிஸ்டான’ வினவும் தனது பிறந்த நாளை அப்படி பகுத்துப் பார்க்கிறது.

கருணாநிதியின் குடும்ப ஆட்சி உச்சத்திலிருக்கும் போது நடத்தப்பட்ட மகுடாபிஷேகம் செம்மொழி மாநாடு. பேரரசனது தர்பாரை எதிர்க்கத் துப்பற்று முன்னாள் பேரரசியின் அ.தி.மு.க வினரெல்லாம் அறிக்கை எதிர்ப்போடு அடங்கிய நேரத்தில், தோழர்கள் கோவை உள்ளிட்டு தமிழகம் முழுவதும் சீறிப்பாய்ந்தார்கள். கைது, சிறை, வழக்கு பாய்ந்தன. அப்போது வினவில் வந்த கட்டுரைகள் குறித்து தொலைபேசியில் பேசிய வாசகர் ஒருவர் கேட்டார்,” இதுனால உங்களுக்கு ஏதும் ஆபத்தில்லையா?”.

பார் போற்றும் கண்ணியத்துக்குரிய பொருளாதார மேதை மன்மோகன் சிங்கை நிலக்கரித் திருடன் என்று கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட கட்டுரையை வாசித்திருப்பீர்கள். இந்திய அரசாங்கத்தின் பிரதமரையே இப்படி அழைப்பதை எப்படி விட்டு வைத்திருப்பார்கள் என்று கூட சிலருக்குத் தோன்றலாம். எனினும் முன்பை விட இந்தக் கோணத்தில் வினவை பார்ப்பவர்கள் தற்போது குறைவுதான். ஒரு விதத்தில் ஊழலும், அநீதியும் நாள்தோறும் பூத்துக் குலுங்கும் வேளைகளில் அதிகார மட்டங்களை அப்படி கேள்வி கேட்பது ஒன்றும் தவறில்லை என்று கூட சூழல் கொஞ்சம் இன்று மாறியிருக்கலாம்.

வினவின் ஆரம்ப மாதங்களில் தொடர்பு கொண்ட ஒரு பிரபல ‘அதிரடி’ பதிவர் – தற்போது அதிகம் எழுதுவதில்லை – ஒரு செய்தியினைக் கூறினார். வினவு கட்டுரைகளில் அவர் அவ்வப்போது பின்னூட்டமிடுவதை கண்காணித்த ஒரு பதிவர் எச்சரித்தாராம்: ” அவங்களெல்லாம் தீவிரவாதிகளாயிற்றே, ஏன் சகவாசம் வைத்துக் கொள்கிறீர்கள்?” இந்த எச்சரிப்பின் சொந்தக்காரர் ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி, பார்ப்பனர், கொஞ்சம் சி.பி.எம் அரசியலை ஆதரிப்பவர் என்பதெல்லாம் தற்செயலான உண்மைகள் மட்டுமல்ல. பின்னூட்டங்களில் கருத்தைச் சொல்வது கூட அது ஆதரித்தோ, எதிர்த்தோ இருப்பினும் வினவோடு அணிசேரும் நபராகவே இத்தகைய பெரியண்ணன்கள் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

காலம் மாறிவிட்டது. தற்போது அப்படி பின்னூட்டம் இடுபவர்களை இந்தப் பெரியண்ணண்கள் எச்சரிக்க விரும்பினாலும் அவையெல்லாம் வயசு காலத்தில் பேசும் ஒரு பெரிசின் புலம்பலாகவே எடுத்துக் கொள்ளப்படும். இளைமையின் சொந்தக்காரர்களை முதுமையின் தவிப்பு முடக்கி விடுமா என்ன? விதவிதமான சமூக, அரசியல், பண்பாட்டு பிரச்சினைகளுக்கு அகத்திலும், புறத்திலும் மாற்றத்தை தீடும் இளமைத் துடிப்பான மார்க்சியத்தின் புத்தாக்க சிந்தனையை நிலவுகின்ற சமூக அமைப்பின் தேங்கிப் போன சிந்தனையையும் நடைமுறையையும் விடாமல் பற்றி வாழும் முதியவர்கள் புலம்பலாகத்தான் கரிக்க முடியும்; வெறுக்க முடியும்; நிச்சயமாக வேரறுக்க முடியாது.

வினவின் ஆரம்ப வருடங்களிலேயே காத்திரமாக எழுதக்கூடிய பதிவர்கள் கொஞ்சம்தான் இருந்தனர். தற்போது பலர் பதிவுகளை எழுதுவதில்லை. முன்னாள் பதிவர்களும், இலக்கிய குருஜிக்களும், கூகிள் ப்ளசிலும், ட்விட்டரிலும் ‘அறிவார்ந்த அரட்டை’ என்ற பெயரில் ஒதுங்கி விட்டனர். அதிலும் பழையவர்கள் மெல்ல மெல்ல ஓய்வு பெற்றுக் கொள்ள, அவர்களது அடியொற்றியபடியே புதியவர்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். அரசியலும், இலக்கியமும், திரைப்படமும் சென்சேஷன் தரத்திலேயே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

இடைக்காலத்தில் சூடுபிடித்த முகநூல் – ஃபேஸ்புக் அறிவுஜீவிகளுக்கும் கருத்துரிமையாளர்களுக்கும் கருத்தாழமற்ற உரையாடலை கற்றுக் கொடுத்து ஏதோ கொஞ்சம் வாழ வைக்கின்றது. முகநூலில் நான்கு வரியில் பகிறப்படும் நிலைச்செய்தியினைத் தாண்டி வாசிப்பதற்கு விருப்பமற்ற மனங்களோடு அவர்கள் காலந்த தள்ள வேண்டிய நிலையில் வினவு அப்படி மாறியோ, சோர்ந்தோ வீழ்ந்து விடவில்லை. அரசியலை மேலும் மேலும் ஆழமாக கற்றுக் கொள்ளும் நெடிய கட்டுரைகளோ, நீண்ட விவாதங்களோ வினவில் மட்டும்தான் அரங்கேறுகின்றன.

ட்விட்டரிலும், முகநூலிலும் அறிமுகமாகி அரசியல் ஆர்வத்தோடு தேடி வரும் நண்பர்களை நாங்கள் வினவு தளத்திற்குள் அழைத்துச் செல்கிறோம். வாசகரையும் வாசிப்பையும் உயர்த்துதல் எங்களது நோக்கமாக இருக்கிறது. ஆனால் பின்நவீனத்துவ அறிஞர்கள், இலக்கியவாதிகள், சிறுபத்திரிகைகாரர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி ஆர்வலர்கள் அனைவரும் தங்களது ‘அறிவார்ந்த’ படைப்புகளை ஆளில்லாத டீக்கடையில் ஆறவிட்டுவிட்டு சூடான பாப்கார்ன் கடையில் வார்த்தைகளை கொறித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவான வாசக வெளிக்கு பாப்கார்னே போதுமானது என்றாகி விட்டது.

தமிழின் அரசியல் தளங்களில் வினவு முன்னணியில் இருக்கிறது என்பது ஒரு நெடிய போராட்டத்தின் விளைவே அன்றி யாரோ மனமிறங்கி அருளிய ஒன்றல்ல. அரசியல், பண்பாட்டு கருத்துப் போராட்டங்களில் அமெரிக்கா துவங்கி தமிழுலகின் பதிவர் வரை தலையிட்டு பேசுகிறோம். யாரையும் அறிவின் மேட்டிமைத்தனத்தோடு அணுகி விவாதிப்பதில்லை. அவர்கள் பயன்படுத்தும் ஆயுதத்தையே அடிப்படையாக்கி உரையாடுகிறோம். ஒரு பிரச்சினையில் எங்களோடு வேறுபடுபவர்கள் கூட பிறிதொன்றிலோ, பலவற்றிலோ ஒன்றுபடுவார்கள். இந்த ஐக்கியமும், போராட்டமும் தொடர்ந்து நடப்பதற்கேற்ப வாசகர்கள் வளருகிறார்கள். அது சாத்தியப்படுகிறது, இல்லை என்பதை பகுத்தாய்வதற்கேற்ப நாங்களும் வளர்கிறோம். இதுதான் வினவு.

எனினும் வினவை நடத்துவதற்கு நோக்கமென்ன? ஓய்வு பெற்ற பதிவர்களைக் கேட்டால் “ஆள் பிடிப்பதற்கு” என்பார்கள். பல்துறை பார்வை, படைப்புக்களால் நிரம்பி வழிந்த தமிழ்ப் பதிவுலகை அரசியல் கருத்தின்பாற்பட்டு ஒரு தனிக் கோஷ்டியை உருவாக்கி பிரித்து விட்டார்கள் என்று கூட அவர்கள் முன்பு பேசிவந்தார்கள். ஆள் பிடிப்பதும், அணி சேர்ப்பதும் ஏதோ அநாகரிகமான ஒன்று என்று கருதும் அளவுக்கேற்ப அவர்களது அரசியலின் இடம் தீர்மானிக்கப்படுகிறது. மற்றபடி ஆள் பிடிப்பதும், அணிசேர்ப்பதும், சேர்த்த அணியை நடைமுறையில் இறக்கி விடுவதும்தான் எங்களது நோக்கம் என்பதை பகிரங்கமாகவே தெரிவிக்கிறோம்.

ஆனால் புரட்சி, சமூக மாற்றம் என்ற நோக்கத்திற்காக நாங்கள் ஆள்பிடிக்கும் செயல் மற்ற பிரிவினரிடத்தில் காரணங்கள் மாறுபட்டாலும் இல்லாமல் போய்விடுகிறதா என்ன? அநேக இணைய தளங்களில் இருக்கும் விளம்பரங்கள் ஆள் பிடிப்பதற்காகத்தான் காத்திருக்கின்றன. நீங்களே விரும்பவில்லை என்றாலும் தினமணியில் ஒரு செய்தியை அழுத்திய மாத்திரத்தில் அந்த ஆள்பிடிப்பு நிறுவனங்களுக்குள் விழுந்து விடுகிறீர்கள். உங்களது ஒரு கிளிக் அவர்களுக்கு வர்த்தகம். கேட்காமல் வந்து விழும் அந்த விண்டோவை நீங்கள் பார்த்து விட்டால் இலாபம். இணையத்திலோ, சமூகவெளியிலோ யார்தான் ஆள் பிடிக்கவில்லை?

இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் இருப்பதாக கூறுப்படுவது ஒரு மாயை. யூ டியூபில் உங்களுக்கு பிடித்த பாடலை கேட்கும் சுதந்திரத்தினோடு கூடவே தொடர்புடைய இடுகைகள் மற்றும் அடிக்குறிப்பு விளம்பரங்கள் உங்களது திசையை தீர்மானிக்கின்றன. இறுதியில் உங்களது தேடல், ஆர்வம், இடம் எல்லாம் ‘அவர்களால்’ தீர்மானிக்கப்படுகின்றன. ஊடகங்கள் உருவாக்கி இருக்கும் பரபரப்பு மலினம் கலந்த செய்தி நாட்டத்தைத்தான் இணைய தந்தியான தட்ஸ்தமிழ் ஒரு ஃபார்முலாவாக தயாரித்து வெளியிடுகிறது. அந்த தளத்தில் படிப்பவற்றை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள் என்றால் அது நகைக்கத்தக்கதா இல்லையா?

அதனால்தான் முகநூல், ட்விட்டர், பதிவர்கள் உள்ளிட்ட இணைய சூழிலில் இருப்பதாக கூறப்படும் இணையப் புரட்சியில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. சரியாகச் சொன்னால் இணையத்தில் புரட்சியெல்லாம் துளியும் சாத்தியமில்லை. எகிப்திலும், துனிஷியாவிலும் இருந்தாக கொஞ்சம் கற்பனை கலந்து கூறப்பட்ட இணையப் புரட்சியின் அபத்தத்தை அதாவது புரட்சியின்  வீழ்ச்சியை தற்போது பார்க்கிறோம். கணினியில் விசைப்பலகையின் உதவி கொண்டு புழங்கப்படும் ஒரு மாய உலகம் எங்ஙனம் புரட்சியை உருவாக்க முடியும்?

இணையத்தில் ஒரு பதிவரோ, டிவிட்டரோ, பேஸ்புக்கில் சாதனை இலக்கான 5000 நண்பர்களை எட்டிய நட்சத்திரங்களோ தங்களுக்குத் தோன்றிய கருத்தை எழுதும் சுதந்திரம் இருப்பதாக கூறலாம். நல்லது, உண்மையில் அப்படி ஒரு சுதந்திரம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது குறித்த அங்கீகாரத்தை யார் வழங்குவது? அல்லது உங்களது சுதந்திரம் என்ன நடைமுறையை பொதுவெளியில் உருவாக்கி விட்டது? ஒரு ட்ராபிக் போலீஸ் கான்ஸ்டபிளிடம் கூட நான் பிரபல முகநூல் நட்சத்திரம் என்று கூறி அபராதத்தை கட்டாமல் தப்பித்துக் கொள்ளும் சாத்தியம் உண்டா? அதற்கு வட்டச் செயலாளர், ஏன் தலயின் ரசிகர் மன்றத் தலைவர் கூட கூடுதலான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி சமூகப் பெருவெளியில் சிறியதாகவோ, பெரியதாகவோ செய்யப்படும் நடைமுறைதான் நமது சுதந்திரத்தை தீர்மானிக்கின்றன. ஆதிக்க சாதியின் அதிகாரம் தொழிற்படும் கிராமங்களில் அம்பேத்காரை பேசுவதற்கும் இணையத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டு சாதி ஒழிப்பு போராளியாகக் காட்டிக் கொள்வதற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. முன்னதில் அடி, உதை, சிறை, வழக்கு எல்லாம் உண்டு. பின்னதில் நூறு லைக்கும், ஐம்பது ரீஷேரும், 55 மறுமொழிகளும் உண்டு. முன்னதில் ஈடுபடும் ஒருவர் சாதி ஒழிப்பின் வலி நிறைந்த பாதையை கண்டறிந்து அதில் முன்னேறும் போராட்டத்தை கற்றுக் கொள்கிறார். பின்னதில் ஈடுபடும் ஒருவர் தன்னைத்தானே தளபதியாக நியமித்துக் கொண்டு ஃபேஸ்புக்கின் உதவியால் போராளியாக சுய இன்பம் காணுகிறார்.

இணையத்தின் சாத்தியத்தில் காதலித்தோர் பலர் இருக்கலாம். ஆனால் சாதிவெறியும், பார்ப்பனியமும் கோலேச்சும் சமூகத்தில் அதை எதிர் கொண்டு வாழ்வதற்கு இரத்தமும், சதையுமாய் இருக்கும் நடைமுறை போராட்டத்தில் இறங்க வேண்டும். இணையம் ஒருவரை தெரிவு செய்வதற்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் உங்களது சமூக நடைமுறையின் தரம்தான் அதை செய்து காட்டுவதற்கு நிபந்தனை. அந்த நிபந்தனையை சொந்தப் புரிதலில் செரித்துக் கொண்டு களமிறங்குவதற்கு மெய்யுலகோடு வினை புரிய வேண்டும்.

கார்ப்பரேட் ஊடகங்கள் உருவாக்கி வரும் சிந்தனை முறைதான் இணையத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது, செலுத்த முடியும். சான்றாக அம்பேத்கார் கார்ட்டூன் விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பள்ளிக்கூடப் புத்தகத்தில் அம்பேத்கரை இழிவு படுத்திவிட்டார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த நாட்களில்தான் பதனிடோலா தீர்ப்பு வந்திருக்கிறது. ரன்பீர் சேனாவின் கொலைகாரர்களை விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பீகாரின் மண்ணில் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் இந்திய நீதிமன்றங்களால் கொலை செய்யப்பட்ட இந்த செய்தி எத்தனை இணைய புலிகளை அசைத்திருக்கிறது?

ஆக அம்பேத்காரையோ, திராவிட இயக்கத்தையோ கேலிச் சித்திரத்தில் இழிவு படுத்திவிட்டார்கள் என்ற பரபரப்பு வெறும் அடையாள அரசியல்தான். அதில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் நடுத்தர வர்க்கமாகி நிலைபெற்றுவிட்ட தருணத்தில் அவர்களது அரசியல் நடைமுறையாக இத்தகைய மேம்போக்கான செய்திகள் மாற்றப்படுகின்றன. இதன் உச்சத்தை அண்ணா ஹசாரேவில் கண்டோம். கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை, ஊழலை மறைத்து விட்டு வெறும் கலெக்டர் ஆபிஸ் குமாஸ்தாவின் லஞ்சம் மாபெரும் பிரச்சினையாக முன்வைக்கப்பட்டது. மாஃபியாவுக்கு நிகரான லீலைகள் புரிந்து முதலாளியான ரிலையன்சின் பிச்சைக் காசை வைத்து அமீர் கானின் இந்திய சோகங்கள் சத்யமேவ ஜயதே வழி மலிவாக நடுத்தர மக்களை அழவைக்கின்றன.

ஆக இணையத்தின் கட்டற்ற சுதந்திரம் என்பதெல்லாம் இத்தகைய திட்டமிட்ட முதலாளித்துவ ஊடகங்களால் கட்டியமைக்கப்படுவைதான். இதில் விகடன், ரிப்போர்ட்டர், நக்கீரன் போன்ற பத்திரிகைகளெல்லாம் இணைய அக்கப்போர் புலவர்களை பெயர் போட்டு அங்கீகாரம் கொடுக்கின்றன. புலவர்களும் விகடனால் ஆசிர்வதிக்கப்பட்ட சான்றிதழை வைத்து ஒரு நூறு லைக்குகளை தேற்றுகிறார்கள். இதன்படி கருத்தும், சுதந்திரமும் உண்மையில் தேய்ந்து போகின்றது.

கொஞ்சம் எழுதும் திறன், சில மாதங்கள் பதிவு, சில வருடங்கள் முகநூல், பின்னர் எழுத்தாளர், அப்புறம் வெளிநாடு பயணம்,  இறுதியில் சினிமா உரையாடல் எழுதுபவர் என்பதாகத்தான் இங்கே முன்னோடிகள் பரவலான வட்டத்தின் பார்வையில் முன்னுதாரணங்களாக வலம் வருகின்றார்கள். ஊடக – சினிமா முதலாளிகளுக்கும் அவர்களது மசாலா ஃபார்முலாவுக்குத் தேவையான ‘திறமைகளை’ அடையாளம் காணும் வாய்ப்பை இணையத்தின் கட்டற்ற சுதந்திரம் வழங்குகிறது. முன்பு மதுரையிலிருந்து மஞ்சள் பையோடு வடபழனியின் வீதிகளில் பசியோடு சுற்றி வந்த உதவி இயக்குநர்கள் இனி இல்லை. முதலில் உங்களுக்கு இணையக் கணக்கு வேண்டும். குறும்படம் ஒன்றை யூடியூபில் ஏற்றியிருக்க வேண்டும். கவிதைகளும், கதைகளும், மொக்கைகளால் ஆராதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இடையில் கிழக்கின் அருள் கிடைத்தால் ஒரு எழுத்தாளராகவும் அடையாளம் பெறலாம். சென்னைப் புத்தகக் கண்காட்சியின் போது புத்தகம் வெளிவந்தால் கட்டவுட்டில் ஜோலிப்பதோடு உலகப்புகழும் பெறலாம். ஆனால் இந்த படிநிலை வளர்ச்சி தமிழுக்கோ, இல்லை படைப்புலகத்திற்கோ எதையும் கொடுத்து விடுவதில்லை. ஆனால் கொஞ்ச நஞ்சமிருக்கும் திறமையையும், சமூக நேயத்தையும் இவை செல்லரித்துக் கொன்று விடுகின்றன. மீறி வைத்திருப்போர் என்று அடம்பிடிப்பவர்களையும் வென்று விடுகின்றன.

எந்திரனோ இல்லை பில்லா 2  திரைப்படங்களோ பொதுவெளியில் பார்த்தே ஆகவேண்டுமென்ற பரபரப்பை ஊடக, மூலதன, விளம்பர வலிமையால் உருவாக்கி விடுகிறார்கள். முதல் வாரத்தில் சென்று பார்ப்போர் இந்த அலையில் வீழ்ந்தவர்கள்தான். வீழ்ந்தவர்களை வைத்து இலாபத்தினை கோடிகளில் சுருட்டிக் கொள்கிறார்கள். ஆனால் பில்லா வரும் முன்னரும், வந்த பின்னரும் அதை எழுத வேண்டுமென்ற இணையப் பரபரப்பு எங்கிருந்து வருகிறது? எதை எழுத வேண்டும் என்ற சுதந்திரம் தனக்கிருப்பதாக விடைப்புடன் கூறிக் கொள்ளும் இணையப் புலிகள் பில்லா குறித்து ஏதாவது எழுதித்தான் ஆகவேண்டும் என்ற அரிப்பை எங்கிருந்து பெற்றார்கள்? ஆண்களுக்கு பிகினி உடை போட்டு பில்லாவில் ஏமாற்றி விட்டார்கள், எனக்கு குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள்தான் பிடிக்கும் என்பதெல்லாம் கிரியேட்டிவான நகைச்சுவைகளா? இல்லை கிழடுதட்டிய அவலச்சுவைகளா?

இதனால் இணையத்தில் சினிமா, நகைச்சுவை, இதர இதரவெல்லாம் இருக்கக்கூடாது என்று ‘கலாச்சாரப் போலிஸ்’ போல நாங்கள் கூறவில்லை. அரசியல் பொதுவெளியில் அடிமைத்தனம் கோலேச்சும் சமூகத்தில் இவை மட்டும் தனித்து ஒரு ரசனை மேம்பாட்டை அடைந்து விடாது என்பதையே வலியுறுத்துகிறோம். வினவில் வரும் சினிமா விமரிசன, பண்பாட்டு கட்டுரைகள் அத்தகைய முயற்சிகள்தான். அடிமைத்தனத்தை வென்று கடக்கக் கூடிய அரசியல் உணர்வு தோன்ற வேண்டுமானால் நீங்கள் அதற்காக களப்பணியும் செய்ய வேண்டும். இதன் போக்கில்தான் உண்மையான திறமைகளும், ரசனை உயர்வும், ஆயிரம் மலர்களும் பூத்துக் குலுங்கும்.

அமெரிக்க இராணுவ தளவாடங்களை இலவசமாக பயன்படுத்திக் கொண்டு கடைவிரிக்கும் ஹாலிவுட் படங்களின் திரைக்கதைகள் அதே இராணுவத்தாலேயே திருத்தப்படுகின்றன. இந்த கலை அடிமைத்தனம் கொண்ட நாட்டில் கருத்துரிமை இருப்பதாக பெருமைப்படுவது எவ்வளவு  பாமரத்தனமோ அவ்வளவு மடத்தனம்தான் இணையம் புரட்சியை செய்துவிடும் என்று நம்புவதும்.

மெய்யுலகில் நடக்கும் போராட்டங்களின் துணை கொண்டுதான் சமுகமும், தனிமனிதனும் நாகரீக நோக்கில் முன்னேற முடியும். அத்தகைய நோக்கத்தைத்தான் வினவு அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. வாசகர்கள் அரசியல் ரீதியாக வளர்ச்சி அடைவதும், தோழர்களாக நடைமுறையில் பணியாற்றுவதும், புரட்சிக்கு எதிரான பலவண்ண சமரசவாதிகளை கருத்து ரீதியாக முடக்குவதும் மட்டுமே எமது நோக்கங்கள். இவற்றில் சில சாதனைகள் உண்டென்றாலும் போதிய அளவு இல்லை என்பதே எமது நான்காண்டு சுயவிமரிசனம்.

எதிரிகளின் பலத்தோடு ஒப்பிடும் போது வினவு தளத்தின் செல்வாக்கு இன்னும் பலபடிகள் வளரவேண்டிய தேவை இருக்கிறது. வினவு கட்டுரைகள் பல நண்பர்களாலும், தோழர்களாலும் நகலெடுத்தும், இணையத்திலேயே பல வடிவங்களில் கொண்டு செல்லப்பட்டும் வருகின்றன. பல வாசர்கள் தொடர்ந்து விவாதிப்பதினூடாக தங்களது அரசியல் நோக்கை வளர்த்து வருகிறார்கள். பல புதியவர்கள் வினவினூடாக தங்களது எழுத்தை மேம்படுத்தி வருகிறார்கள். எனினும் பாதையின் தூரம் அதிகம்.

அதை உங்கள் துணையோடு கடப்போம் என்று உறுதி கூறுகிறோம்.

வாசகர்கள், பதிவர்கள், கூகிள் ஃப்ளஸ் நண்பர்கள், துவிட்டர்கள், பேஸ்புக் நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் எமது தோழமையான நன்றிகளும், வாழ்த்துக்களும்!