privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைபூக்காயம்...

பூக்காயம்…

-

பூக்களை சும்மா
புகழ்ந்து தள்ளாதீர்கள்
ரெண்டுவேளை பாடுக்காய்
மணிக்கணக்கில் பூ கட்டி
நகக்கணுக்கள் வலியெடுக்க
அதைவிட பயங்கர ஆயுதம்
அப்போது வேறேதுமில்லை.

மல்லிகையை சரம் தொடுத்து
மரிக்கொழுந்தை காம்பொடித்து
சில்லரைக்கு ஏங்கி நிதம்
வெய்யலிலே காய்கையிலே
மனம் வாடும், பூ சுடும்.

கருவகுச்சி ஒடிச்ச கையில்
கனகாம்பரம் கட்டும்போது
உரசும் பூ இதழ்கள்
உள்ளங்கையை நோகடிக்கும்.

முல்லரும்பு எனக்கூவி
முடுக்கெல்லாம் சுற்றி வந்து
நல்லவிலை விற்பதற்குள்
நாடி நரம்பெல்லாம் – பூ வலிக்கும்.

ஈரவிறகை ஊதி ஊதி
இடையிடையே பூத்தொடுத்து
சோறுதிங்க கையெடுத்தால்
பூவாசம் குமட்டும்.

தண்ணீர் தெளித்துவைத்து
தருகின்ற பூக்களெல்லாம்
கண்ணீரால் கட்டியதால்
கசங்காமல் இருக்குதென்று
காரணம் அறிவீரா!

பூத்தொடுக்கும் போதே
முரண்டு பிடிக்குது மொட்டுகள்
வாழ்க்கை போர் தொடுத்த போதும்
பொறுமையாய் இருக்கச் சொல்லி
யாரும் எங்களுக்கு பூ சுற்ற வேண்டாம்.

_________________________________

•துரை. சண்முகம் ( புதிய கலாச்சாரம், ஜனவரி’1997 )
படம் – நன்றி – ஜோ

_________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: