privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைபூக்காயம்...

பூக்காயம்…

-

பூக்களை சும்மா
புகழ்ந்து தள்ளாதீர்கள்
ரெண்டுவேளை பாடுக்காய்
மணிக்கணக்கில் பூ கட்டி
நகக்கணுக்கள் வலியெடுக்க
அதைவிட பயங்கர ஆயுதம்
அப்போது வேறேதுமில்லை.

மல்லிகையை சரம் தொடுத்து
மரிக்கொழுந்தை காம்பொடித்து
சில்லரைக்கு ஏங்கி நிதம்
வெய்யலிலே காய்கையிலே
மனம் வாடும், பூ சுடும்.

கருவகுச்சி ஒடிச்ச கையில்
கனகாம்பரம் கட்டும்போது
உரசும் பூ இதழ்கள்
உள்ளங்கையை நோகடிக்கும்.

முல்லரும்பு எனக்கூவி
முடுக்கெல்லாம் சுற்றி வந்து
நல்லவிலை விற்பதற்குள்
நாடி நரம்பெல்லாம் – பூ வலிக்கும்.

ஈரவிறகை ஊதி ஊதி
இடையிடையே பூத்தொடுத்து
சோறுதிங்க கையெடுத்தால்
பூவாசம் குமட்டும்.

தண்ணீர் தெளித்துவைத்து
தருகின்ற பூக்களெல்லாம்
கண்ணீரால் கட்டியதால்
கசங்காமல் இருக்குதென்று
காரணம் அறிவீரா!

பூத்தொடுக்கும் போதே
முரண்டு பிடிக்குது மொட்டுகள்
வாழ்க்கை போர் தொடுத்த போதும்
பொறுமையாய் இருக்கச் சொல்லி
யாரும் எங்களுக்கு பூ சுற்ற வேண்டாம்.

_________________________________

•துரை. சண்முகம் ( புதிய கலாச்சாரம், ஜனவரி’1997 )
படம் – நன்றி – ஜோ

_________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. மாக்சிம் கார்க்கியின் வார்த்தையில் சொல்வதென்றால் இதுபோன்ற அர்த்தமற்ற உழைப்பிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும்.

    • அர்த்தமற்ற உழைப்பா ஊரானுக்கு பூவித்தா எவ்வளவு லாபம் என்று தெரியாது போலிருக்கிறது|

      • அர்த்தமுள்ள உழைப்பா அல்லது அர்த்தமற்ற உழைப்பா என்பதை இலாபத்தைக் கொண்டு தீர்மானிக்கக்கூடாது. ஒரு உழைப்பிலிருந்து கிடைக்கும் பொருள் மக்களின் அடிப்படைத்தேவைக்கானதா என்பதிலிருந்தே அத்தகைய உழைப்பை தீர்மானிக்க வேண்டும். உடற்தேவைக்கே (physiological need) மக்கள் அல்லாடும்போது உளவியல் (psychological need) தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உழைப்பு அர்த்தமற்றதே.

        • உளவியல் தேவையும் பூர்த்தி செய்யப்பட வேண்டும், இல்லைன்னா பைத்தியம் தான் பிடிக்கும்.

          நல்ல கவிதை, உழைப்பாளர்களின் வலியை சொல்லும் கவிதை, ஆனால் பூ செய்த குற்றம் என்ன –பூக்களை சும்மா புகழ்ந்து தள்ளாதீர்கள்– என்ற வரி சரியானதாக படவில்லை. அந்த வரிகளை தவிர்த்து கவிதை அருமை.


          சோறுதிங்க கையெடுத்தால்
          பூவாசம் குமட்டு

          வலியை உணர்த்தும் அழகான் வரிகள்

          • உயவியல் தேவை எவ்வாறு எழுகிறது என்பதை சற்றே ஆழமாக பரிசீலனை செய்யுங்கள். பைத்தியத்திற்கும் உளவியலுக்கும் உள்ள தொடர்பு புரியும்.

    • சரி தோழர், அர்த்தமற்ற உழைப்புகளிலிருந்து இவர்களை விடுவித்து பூப்பறிக்கவும் நார்த்தொடுக்கவும் இயந்திரங்களை (கமிஷன் பெற்று) இறக்குமதி செய்தால் விடுவிக்கப்பட்டு விட்டார்களென்று வாளாவிருப்பீர்களா? ஒரு கவிதையையுமா கட்டுத்திட்டமான மார்க்சிய கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்? இது மார்க்சிய கண்ணோட்டம்தானா? எல்லாவற்றிலும் லாஜிக் பார்க்கும் பழைய காலாவதி அணுகுமுறையை எப்போது மாற்றுவதாக உத்தேசம்?

      • ///சரி தோழர், அர்த்தமற்ற உழைப்புகளிலிருந்து இவர்களை விடுவித்து பூப்பறிக்கவும் நார்த்தொடுக்கவும் இயந்திரங்களை (கமிஷன் பெற்று) இறக்குமதி செய்தால் விடுவிக்கப்பட்டு விட்டார்களென்று வாளாவிருப்பீர்களா ?///

        சரி தோழர் எனக்கு ஒரு சந்தேகம், உழைப்பாளிகளை உழைப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று இந்த கவிதை எங்கே குறிப்பிடுகிறது ?

        ///ஒரு கவிதையையுமா கட்டுத்திட்டமான மார்க்சிய கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் ?///

        எதில் தான் தோழர் அரசியல் இல்லை ? ஆனந்தனாகிய (ஆனந்தம் அல்ல) நீங்கள் பேசுவதில் கூட ஒரு அரசியல் நோக்கம் இல்லாமலா இருக்கிறது ? ஒரு கவிதையை கூடவா இப்படி கட்டுத்திட்டமான முதலாளிய ஆதரவுடன் அணுக வேண்டும் ?

        ///இது மார்க்சிய கண்ணோட்டம்தானா ? எல்லாவற்றிலும் லாஜிக் பார்க்கும் பழைய காலாவதி அணுகுமுறையை எப்போது மாற்றுவதாக உத்தேசம் ?///

        எது மார்க்சியக் கண்ணோட்டம், அதை எது எதற்கெல்லாம் பொருத்தலாம் எதற்கெல்லாம் பொருத்தக்கூடாது என்பதையும், சகலத்திற்கும் எந்த கண்ணோட்டத்தை பொருத்தலாம் என்பதையும் சற்று விளக்கினீர்கள் என்றால் நாங்களும் தெரிந்துகொள்வோம்.

        மற்றும் இங்கே என்ன லாஜிக் பார்க்கப்படுகிறது என்று தெரியவில்லை எனினும் லாஜிக் பார்ப்பது சரியானது என்பது என் கருத்து ஆனால் உங்களைப்போன்ற முன்னேறிய சிந்தனையாளர்களின் பார்வையில் அது காலாவதியான ஒன்றாகிவிட்டது என்பதையும் நான் எந்த நொடியிலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் ஆனால் ஏன் அவ்வாறு பார்க்கக்கூடாது என்பதையும், அது எவ்வாறு காலாவதியாகிப்போனது என்பதையும் நீங்கள் விளக்க வேண்டும். அத்துடன் லாஜிக் பார்க்காத உங்களுடைய புதிய அணுகுமுறை என்ன என்பதைப் பற்றியும் விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  2. உழைக்கிறவர்கள் அவர்கள் பாட்டுக்கு நிற்க நேரமின்றி உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேவையில்லாத வெட்டி இரக்கம் எதற்கு?
    அடிப்படைத்தேவையோ இல்லையோ பூக்களை வாங்குபவர் பூக்கட்டுபவர் வீட்டில் அடுப்பெரியச் செய்கிறார். அவர்களது சுய இரக்கத்தைத் தூண்டுவது தவிர உங்கள் கண்ணீர்க் கவிதையால் அவர்களுக்குக் கால் பைசாவுக்குப் பிரயோஜனம் இருக்குமா?
    உங்கள் வாதப்படிப் பார்த்தால் யாருக்கு எது அடிப்படைத் தேவை என்று யார் முடிவு செய்வது? உங்கள் கவிதை வினவு தளம் எதுவுமே அடிப்படைத் தேவை இல்லையே?
    உழைப்பிலிருந்து விடுவிப்பது என்றால் உடல் உழைப்பு கேவலமானதா?
    உழைப்பாளர்களுக்காக உருகும் உங்களுக்கே அது கேவலமானதாகத் தெரிந்தால் முதலாளிகள் அதைக் கேவலமாக நினைப்பது சரி என்று ஆகி விடாதா?
    பூ விற்பதை விட்டு அவர்கள் வேறு எந்தத் தொழிலுக்கு மாறினால் வினவுக்கு மகிழ்ச்சி உண்டாகும்?
    உங்கள் கவிதைக்கான பாடுபொருளாக இருப்பதற்காகவாவது
    ஏழைகள் ஏழைகளாக இருந்து விடுவது தான் அவர்களுக்கு நல்லது.
    பூத்தொடுப்பதை விட்டு உடல் உழைப்பில்லாத வேலைக்குச் சென்றால் முதலாளி, ஃபாசிஸ்ட், சுரண்டும் கும்பல் என்று கரித்துக் கொட்ட ஆரம்பித்து விடுவீர்களே?

    • “அடிப்படைத்தேவையோ இல்லையோ” என்பதை விடுத்து வீட்டில் அடுப்பெரிகிறது என்பதற்காக பூத்தொழில் செய்வது சரி என்றால் பிற தொழில்களுக்கும் இதே அளவுகோலை விரிவுபடுத்த முடியுமா?

      எவை மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்கிற பாலபாடத்தைக்கூடவா விளக்க வேண்டும்?

      அர்த்தமற்ற உழைப்பிலிருந்து மக்களை விடுவிப்பது என்பதை உடல் உழைப்பிலிருந்து விடுவிப்பதாகக் கற்பிதம் செய்து கொள்ள வேண்டாம். சற்றே ஆழமாகச் சிந்தனை செய்யுங்கள். மாக்சிம் கார்க்கியின் சொற்களின் பொருள் புரியும்.

      • “எவை அடிப்படைத்தேவைகள் என்கிற பாலபாடத்தைக்கூடவா விளக்க வேண்டும்?”
        கண்டிப்பாக! ஒருவருக்கு ஆடம்பரமாகத் தோன்றுவது மற்றவருக்கு அடிப்படைத் தேவையாக இருக்கலாம்.
        அப்படியே எது ஆடம்பரம், அடிப்படை என்று நீங்கள் கோடு போட்டுக் காட்டி அதை எல்லாரும் ஒத்துக் கொண்டாலும் பிரச்சினை தீர்ந்து விடுமா? தொழில் மயம் என்பதே ஆடம்பரத் தேவைகளைப் பூர்த்தி செய்யத்தானே? (பூவைக் குறிப்பாக எதிர்ப்பதில் கடவுள் சார்ந்த அரசியல் இருப்பது புரிகிறது.)
        அப்புறம் உங்கள் லாஜிக் படி ஏஸி மெஷின் ஆடம்பரம், கார் ஆடம்பரம். வீடே ஆடம்பரம் தான்.
        ஏஸி மெக்கானிக் ஆறாவது மாடி ஜன்னலில் அவுட் டோர் யூனிட்டைக் கழற்றி மாட்ட சர்க்கஸ் வேலை செய்வதைப் பார்த்தால் ஆடம்பரத்துக்காக ஏஸி வேண்டாம் என்பீர்கள். கார் மெக்கானிக் அழுக்கில் தோய்ந்து வேலை செய்வதைப் பார்த்தால் கார் வேண்டாம் என்பீர்கள். கொத்தனார் மண்ணும் சிமென்டும் சுமப்பதைப் பார்த்தால் வீடு ஆடம்பரம் என்பீர்கள்.
        அப்புறம் மனிதர்கள் என்ன தான் வேலை செய்வது?
        இயந்திர மயமாக்குவதையும் கம்யூனிஸம் எதிர்க்கிறது. பின் உலகம் எப்படித்தான் சுழலும் என்று நினைக்கிறீர்கள்?
        அவரவர் உணவை அவரே விதைத்து அறுத்து சமைத்து உண்டு தன் உடையைத் தானே நெய்து, தைத்து உடுத்தினால் மட்டுமே உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் போலும்! அப்போது முதலாளித்துவமும் ஆடம்பரமும் மட்டுமன்றிக் கம்யூனிஸமும் சேர்ந்தே அழிந்து போகும். எல்லாரும் உழுது நெய்து கொண்டிருந்தால் கம்யூனிஸ சித்தாந்தங்களைக் கற்க யாருக்கு நேரம் இருக்கும்? மாக்ஸிம் கார்கியா, கொஞ்சம் இருப்பா, மத்யான சாப்பாட்டுக்கு இப்பத்தான் நெல்லு அறுக்கப் போய்க்கிட்டிருக்கேன் என்று பதில்வரும்.
        எந்த சித்தாந்தமும் முரட்டுத்தனமாக, EXTREME ஆக இருக்கக் கூடாது. வலுக்கட்டாயமாக மனித இயல்புகளை மாற்ற முயலவும் கூடாது. முயன்றால் தோல்வி என்பதற்குக் கம்யூனிஸமே உதாரணம்.
        மனித வாழ்க்கையே போராட்டம்தான். இதை முழுக்க வறட்சியாக்காமல் வைத்திருப்பவை ரசனைகள் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வானவில்லில் சிவப்பைத் தவிர இன்னும் ஆறு வண்ணங்கள் இருப்பதையும் ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பூக்காரர்களுக்கு இல்லாத துன்பங்களை எண்ணி உருகுவதை விட
        உண்மையான தொழிலாளர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம்
        செலுத்துவது சமூகத்துக்கு நல்லது.

        • மிக அருமையான விளக்கம் ஆனந்தம் அவ்ர்களே…வினவிற்க்கும் ஊரானிற்க்கும் சரியான பதில்/பதிலடி…

    • ////உழைக்கிறவர்கள் அவர்கள் பாட்டுக்கு நிற்க நேரமின்றி உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேவையில்லாத வெட்டி இரக்கம் எதற்கு ?////

      கவிதையை புரிஞ்சிக்காம எதுக்கு இந்த வெட்டித்தனமான கமெண்டு ? ஆத்திரத்துல படிச்சா கவிதை புரியாது போய் நிதானமா படிங்க புரியும். இரக்கமாம்ல இரக்கம் யாருக்கு வேணும் உங்க மிடிள் கிளாஸ் இரக்கம்.

      ///அடிப்படைத்தேவையோ இல்லையோ பூக்களை வாங்குபவர் பூக்கட்டுபவர் வீட்டில் அடுப்பெரியச் செய்கிறார். அவர்களது சுய இரக்கத்தைத் தூண்டுவது தவிர உங்கள் கண்ணீர்க் கவிதையால் அவர்களுக்குக் கால் பைசாவுக்குப் பிரயோஜனம் இருக்குமா?///

      உழைக்கும் மக்கள் தங்களுடைய துன்பத்தை எண்ணி சுய இரக்கம் தேடிக்கொள்வதோ, தமக்குத்தாமே கழிவிரக்கம் கொள்வதோ இல்லை. அவர்கள் அவ்வாறு இருப்பதாக அத்தகைய உனர்ச்சிக்குள் அடிக்கடி தடுக்கி விழும் நடுத்தர வர்க்க அற்பவாதிகள் தான் எண்ணிக்கொள்கிறார்கள். நீங்களும் அவ்வாறே எண்ணுகிறீர்கள். அத்தகைய இரக்க உணர்ச்சி கால் பைசாவுக்கு கூட பிரயோசனமானது இல்லை என்பது மட்டுமல்ல அது அவர்களை இழிவுபடுத்துமாகும். உங்களைப்போன்ற சிந்தனையாளர்கள் எல்லாம் கவிதையை இவ்வாறு தவறாக புரிந்துகொள்வீர்கள் என்பதால் தான் கவிதை இவ்வாறு முடிகிறது.

      பூத்தொடுக்கும் போதே
      முரண்டு பிடிக்குது மொட்டுகள்
      வாழ்க்கை போர் தொடுத்த போதும்
      பொறுமையாய் இருக்கச் சொல்லி
      யாரும் எங்களுக்கு பூ சுற்ற வேண்டாம்.

      உண்மை இப்படி இருக்க எப்படி இந்த மாபெரும் சிந்தனையாளரால் மட்டும் இரக்க உணர்ச்சியை தூண்டிவிடுவதாக புரிந்துகொள்ள முடிகிறது. இந்த கேள்விக்கு பதில் இந்த பின்னூட்டத்தின் கடைசில் உள்ளது.

      ///உங்கள் வாதப்படிப் பார்த்தால் யாருக்கு எது அடிப்படைத் தேவை என்று யார் முடிவு செய்வது ?////

      அதானே, யார் முடிவு செய்வது ? அதைத் தான் நாங்களும் கேட்கிறோம். உழைப்பை சுரண்டும் உழைக்காத கூட்டம் உழைப்பவர்களுக்கு எது தேவை எது தேவை இல்லை என்று எப்படி முடிவு செய்ய முடியும் ? அவர்கள் தான் ஆனந்தம் அனைத்தையும் முடிவு செய்கிறார்கள்.

      ///உங்கள் கவிதை வினவு தளம் எதுவுமே அடிப்படைத் தேவை இல்லையே?

      உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவையை மறுப்பவர்களை ஒழிக்க வினவு தளம் உழைப்பாளிகளின் பக்கம் நிற்பவர்களுக்கு அடிப்படைத்தேவையாக இருக்கிறது ஆனந்தம். வினவு தளத்தின் அடிப்படைத் தேவையை உங்களுடைய பின்னூட்டங்களே நிரூபிக்கின்றன.

      ////உழைப்பிலிருந்து விடுவிப்பது என்றால் உடல் உழைப்பு கேவலமானதா? ////

      உழைப்பிலிருந்து மனிதனை விடுவிக்கவே முடியாது. கம்யூனிஸ்டுகள் அவர்களை உழைப்புச் சுரண்டலிலிருந்து விடுவிக்கத் தான் போராடுகிறார்கள். பார்ப்பனீயம் தான் உடல் உழைப்பை கேவலமானதா கருதுகிறது. மேலும், பேசுகின்ற பொருள் பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொண்டு பேசுங்கள். எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மாதிரி பேசும் நீங்கள் ஒன்று அரைகுறையாக இருக்க வேண்டும் அல்லது தற்போது அரைகுறையாக மாறியிருக்க வேண்டும்.

      ////உழைப்பாளர்களுக்காக உருகும் உங்களுக்கே அது கேவலமானதாகத் தெரிந்தால் முதலாளிகள் அதைக் கேவலமாக நினைப்பது சரி என்று ஆகி விடாதா?////

      வினவு அவ்வாறு நினைக்கிறது என்று நீங்கள் நினைப்பதை வினவின் மீது ஏற்றிச்சொல்கிறீர்கள். இது தான் கேவலமான உத்தி. பார்ப்பனியம் கையாளும் உத்தி.

      ///பூ விற்பதை விட்டு அவர்கள் வேறு எந்தத் தொழிலுக்கு மாறினால் வினவுக்கு மகிழ்ச்சி உண்டாகும் ?///

      அவர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றி முதலாளிகள் மீது பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியை செலுத்தினால் வினவு மகிழ்ச்சியடையும். உங்கள் பிரச்சினை என்ன என்றால் இது தான். அது தான் உங்கள் பின்னூட்டத்தின் கடைசி வரியாகவும் உள்ளது. நண்பர்களோ கீழே உள்ளது தான் முதலாளித்துவத்தை மறைத்த அந்த இத்துப்போன கோவணம்.

      ////பூத்தொடுப்பதை விட்டு உடல் உழைப்பில்லாத வேலைக்குச் சென்றால் முதலாளி, ஃபாசிஸ்ட், சுரண்டும் கும்பல் என்று கரித்துக் கொட்ட ஆரம்பித்து விடுவீர்களே?////

  3. வாழ்க்கை படுத்தும் பாட்டால் பூவே பூக்காரிக்கு பூதமாகத் தெரிகிறது.. தெரியாத பிசாசைவிட தெரிந்த பூதமே மேல் என்று இன்னும் பூக்காரிகளுக்கு பூக்களின் மேல் ஒரு ‘இது’ இருப்பதால்தான் அவர்கள் கருவாடு விற்கப் போவதில்லை..

    அந்த ‘இது’ இருப்பதால்தான் பல கவிஞர்களும் தங்கள் கவிதையை மற்றவர்கள் படுத்தும் பாட்டைப் பார்த்து வெறுத்துப் போய் கவிஜை விற்கப் போவதில்லை..

  4. பள்ளிக்கு செல்லும்போது புத்தகத்துடன், பூவையும் சேர்த்து சுமப்போம். பெண்கள் பூ வைத்தால்தான் மங்களமாய் இருக்கும். ”ஏம்மா! பொம்பள புள்ள ஒரு பூ வைக்காம இருக்கியே? வைச்சிக்கமா” என்று வற்புறுத்தி வைப்பார்கள். பிறகு வழக்கமாகிவிடும்.

    கட்டிய கணவன் கைவிட்டாலும் ‘பூ’ கைவிடாது. பூவும், பொட்டும் போன விதவையின் வாழ்க்கைக்கு விளக்காக இருப்பது பூ தொழில்தான். பரம ஏழைகளின் கடைசி புகழிடம் பூ தட்டு தான்.

  5. பூக்கள்… வாழ்க்கையில் வலிகளை ஏற்படுத்தும் தருணங்கள் ஏராளம். உதாரணத்துக்கு… சென்னையை அடுத்த பெரிய பாளையம் சுறுப்பட்டு கிராமங்களில் ரோசா சாகுபடி அதிகம். நள்ளிரவு இரண்டு மணிக்கு, ஊரிலுள்ள அத்தனை மக்களும் முழங்கையில் லாந்தர் விளக்கை மாட்டிக்கொண்டுஅல்லது தலையில் டார்ச் விளக்கை மாட்டிக்கொண்டு, ரோசாப்பூ பறிக்கச் செல்லவேண்டும். அது லேசான தூரலோ, கடும் மழையோ, நடுநடுங்கும் குளிரோ… பாம்போ, பல்லியோ, தேளோ, பூரானோ, பேயோ, பிசாசோ… ஆனால் நள்ளிரவு இரண்டு மணி என்பது அதி முக்கியமான நேரம். பூக்கள் மலர்ந்தவுடன் பறிக்கப்பட்டு, அதிகாலையிலேயே பட்டணத்துக்கு மார்க்கெட்டுக்கு சென்றுவிடவேண்டுமென்றால், இந்த நேரத்தில்தான் பூப்பறிக்கவேண்டும். விடியற்காலை வரும் முதல் பஸ்ஸில் மூட்டை கட்டி ஏற்றிவிடவேண்டும். நேரம் தவறினால் அத்தனையும் பாழ். குப்பையில்தான் கொட்டவேண்டும்.

    அந்த நேரத்தில் நீங்கள் வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தால், பார்க்கலாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மின் மினிப் பூச்சிகள் போல் விளக்குகள் மினுக்கிக்கொண்டிருக்கும். நூற்றுக்கணக்கானோர் பூப்பறித்துக்கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் ஊரே வெறிச்சோடிக் கிடக்கும்.

    அண்ணா நகரிலும், அபிராம புரத்திலும் பொக்கே பார்லர்களில் விற்பனைக்காக சிரித்துக்கொண்டிருக்கும் பூங்கொத்துகளின் உள்ளே வேதனைகளுக்குப் பஞ்சமில்லை!

  6. யதார்த்தவாதி வெகு ஜன விரோதி-எப்போதோக் கேட்டப் பழமொழி.
    இது பூக்களை பழிக்கும்
    கவிதை அல்ல.
    பூக்களின் மணம் தாண்டி வீசும் வியர்வை
    வாசத்தின் வெளிப்பாடு.
    பூவுக்குக் கொடுக்கும் மரியாதை கூட பூ
    விற்பவர்களுக்கு யாரும் கொடுப்பதில்லை.
    “இந்தா இன்னா இப்பிடிமுழம் போடுற?”
    “இழுக்காம போடு”
    “இந்த பூக்காரி வந்தாளா?”
    “இன்னாமா இவ்ளோ அநியாய வெல சொல்லுற?”
    காலை 3 அல்லது 4 மணிக்கு எழுந்து
    ஷேர் ஆட்டோ பிடிச்சி அந்த
    (மூத்திர சந்துக்குள்ள) சாரி…
    அந்த பூ விக்குற சந்துக்குள்ள போய் இடிபட்டு
    இடி படாம இருக்க சில பல சாகஸங்கள் செய்து
    ராத்திரி குடிச்ச சாராய வாடயோட எவனாவது பேச்சு கொடுத்தா
    அதையும் சமாளித்து பூ வாங்கி,
    இன்னைக்கு அந்த நாலாவது வீட்டுல
    அவங்க மருமக ஆச பட்டுக்
    கேட்டுச்சினு சொல்லி,
    இன்னைக்கு வெள்ளி கிழமை
    காலையிலெயே பூ சீக்கிரமா கொடுக்கணும்
    இப்படியெல்லாம் யோசிச்சி அவசரம் அவசரமா பூ கொண்டு வந்து
    பள்ளிகூடம் போற பிள்ளையையும் கூட சேர்ந்த்து
    பூ கட்ட சொல்லி…….கொண்டு போனா
    மேல சொன்ன இவ்ளோ வார்த்தையையும் கேட்டுக்கணும்.
    நீ கட்டிய மாலை தான் சாமி மார்பில் இருக்கு
    நீ கட்டிய பூ தான் நாலாவது வீட்டு மருமகளின்
    தலையில் மணம் வீசுது ஆனால்
    நீ இன்னும் வாசலில் பூக்காரி தான்.
    “இவ்ளோ அநியாய
    வெல சொல்லுற” “நல்லா பூ விட்டு அறு அப்படியே கைய மடக்கிகுற”
    இதை விட கேவலமாய்
    (நான்)நீ இன்னும் வாசலில் பூக்காரி தான்…

Leave a Reply to ஆனந்தம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க