மாணவர்களின் செல்போன் வக்கிரம்: மாணவி அகிலா தற்கொலை!

23
பலியான மாணவி அகிலா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த அகிலா பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அகிலாவின் மாமா மகன் எழில் என்பவரும் பாலிடெக்னிக் மாணவர்தான். இந்த உறவு அடையாளத்தை வைத்து அவர் அடிக்கடி அகிலா வீட்டிற்கு செல்வார். அப்படி ஒரு நாள் அகிலா குளிப்பதை செல்பேசியில் படம் பிடிக்கிறார். இதற்கு உதவிய இவரது நண்பர்களும் சக மாணவர்களுமான ஜெகன், வினோத் (இவர் மட்டும் பொறியியல் படிப்பவர்) முதலானோர் சேர்ந்து கொண்டு அகிலாவிடம் காட்டி அவள் பட்ட வேதனையை சைக்கோத்தனமாக ரசித்திருக்கின்றனர்.

அந்தப் பேதைப் பெண்ணோ செல்போனில் இருக்கும் படத்தை அழிக்குமாறு பலமுறை மன்றாடியிருக்கிறாள். ஆனால் வெறிபிடித்த அந்த மாணவர்களோ மறுத்திருக்கின்றனர். இதனால் மனம் உடைந்த அகிலா வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டாள்.  இறப்பதற்கு முன்னர் அவள் எழுதிய கடிதத்தில் அந்த மூன்று மிருகங்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள்தான் காரணமென்று எழுதியிருக்கிறாள்.

செல்பேனில் படம் பிடிப்பதை அந்த மூவர் அணி திட்டமிட்டுத்தான் செய்திருக்கிறது. அதற்கு அத்தை மகன் என்ற உறவுமுறை பயன்பட்டிருக்கிறது. ஒரு இளம் பெண்ணின் அந்தரங்கத்தை படம்பிடித்து அவளிடமே காட்டி இன்புறுவது எந்த அளவுக்கு விகாரமானது, இழிவானது என்பதெல்லாம் அவர்களைப் பொறுத்தவரை வேட்டையாடும் ஆண்மையின் பெருமையாக தெரிந்திருக்கிறது. இதனால் அவர்களது குற்றச் செயல் இப்படி படம் பிடித்ததோடு மட்டும் நின்று போயிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் நிச்சயம் தமது வக்கிர நோக்கங்களுக்காக அகிலாவை மிரட்டியிருப்பார்கள்.

டிப்ளமா படித்து விட்டு ஒரு வேலை, பின்னர் திருமணம் என்று வாழ்வின் முக்கியமான இளமைக் காலத்தில் கனவுகளோடும், கற்பனைகளோடும் வாழ்ந்த ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை இப்படி பரிதாபமாக முடிய வேண்டிய அவசியம் என்ன? செல்பேசி என்பது பெண்களைப் பொறுத்தவரை எப்போதும் கற்பழிக்கக் காத்திருக்கும் வில்லன்களைப் போல மாறிவிட்டதா?

நாளிதழ்களில் வரும் குற்றச் செய்திகள் இப்போதெல்லாம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. பத்து வருடங்களுக்கு முன்னர் கூட இத்தகைய குற்றச் செய்திகள் குறைந்த பட்சம் புலனாய்வு புலிகளின் அட்டைப்படத்தை மலிவான நோக்கத்திற்காகவென்றாலும் ஆக்கிரமித்திருந்தன. தற்போது இதெல்லாம் ஒரு செய்தியா எனுமளவுக்கு குற்றங்களும் நிறைய நடக்கின்றன. அவற்றை சுவாரசியமாக்குவதற்கு ஊடகங்கள் முயல முயல அடுத்த குற்றச் செய்தி வெறுமனே தகவலாக மட்டும் மக்களிடம் முக்கியத்துவம் பெறாமல் மறைந்து விடுகிறது.

எல்லா மாணவர்களும் இப்படி செல்போனும் வக்கிரமுமாக அலையவில்லை என்றாலும் இந்த போக்கு மாணவர்களிடையே பரவிவருவது கண்கூடு. ஆரம்பத்தில் முகத்தை மட்டும் மறைவாக படமெடுப்பவர்கள் பின்பு முழு ஆபாச படமெடுக்கும் பரிணாம வளர்ச்சியை எட்டுகிறார்கள். பிறர் எடுத்த படத்த ரசித்தவன் பின்பு தானே எடுக்க முயல்கிறான். இத்தகைய வக்கிர சீரழிவுக்கு அத்தகைய மாணவர்களின் குடும்பப் பெண்களே முதல் பலி.

வரலாற்றுக் காலம் முழுவதும் வர்க்க ரீதியாகவும், பாலின ரீதியாகவும் ஆணாதிக்கத்தின் வன்கொடுமைகளை அனுபவித்து வந்த பெண்களுக்கு தற்போதைய தொழில் நுட்ப புரட்சி வேறு தன் பங்கிற்கு வதைத்து வருகிறது. மாராப்பை சரிசெய்வதை அனிச்சைச் செயலாய் செய்யும் பெண்கள் இனி வெளியிலோ, வீட்டிலோ இருக்கும் போது சுற்றுச் சூழலில் செல்பேசிகள் இல்லை என்பதை உத்திரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும் போல. ஆனாலும் மாணவர்களிடையே தினுசு தினுசுகா பரவி வரும் வக்கிரம் இத்தகைய கண்காணிப்பையெல்லாம் உடைத்து விடும்.

மாணவர் சங்கங்களும், மாணவர்களும் குறிப்பாக மாணவிகள் இத்தகைய கயவர்களை குறி வைத்து தனிமைப்படுத்தி தாக்குவதன் மூலம் மாணவ சமூகத்திடையே வேரூன்றி நிற்கும் இந்த வக்கிரத்தை அறுக்க முடியும். அரசையும் ஆளும் வர்க்கத்தையும் அரசியல் ரீதியாக எதிர்த்துப் போராடும்போதே இத்தகைய பண்பாட்டு தாக்குதலையும் அதற்கு பாதை போடும் ஆளும் வர்க்க பண்பாட்டு நிறுவனங்களையும் எதிர்த்துப் போராட வேண்டும். அப்போதுதான் நாம் அகிலாக்களைக் காப்பாற்ற முடியும்.

________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: