privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇன்று முதல் வினவு செய்திகள்! - BETA

இன்று முதல் வினவு செய்திகள்! – BETA

-

அன்பார்ந்த வாசகர்களே,

தகவல் தொழில் நுட்ப புரட்சியின் விளைவாக செய்தி ஊடகங்கள் மாபெரும் வளர்ச்சியினை அடைந்திருக்கின்றன. ஆளரவமற்ற ஒதுக்குப்புறங்களில் நடக்கும் செய்திகள் கூட உடனுக்குடன் நாடெங்கும் வினியோகிக்கப்படுகின்றன. எனினும் பெருவாரியான உழைக்கும் மக்கள் நோக்கிலும், அவர்களது நலன் சார்ந்தும் இந்த செய்திகள் அதிகம் வருவதில்லை; வந்தவையும் அப்படி தெரிவிக்கப்படுவதில்லை.

அரசியல் முதல் சினிமா வரை அனைத்தும் பரபரப்பு, கிசுகிசு, சவுடால், அரட்டை என்பதாக முன்வைக்கப்படுகின்றன. ஒரு செய்தியினை உடனுக்குடன் காட்சி ரீதியாக முன்வைக்கும் வேகம், போட்டி எதுவும் அந்த செய்தியின் பின்னணி, அடிப்படை, பரிமாணம் முதலியவற்றை கணக்கில் கொள்வதில்லை. விளைவாக அனைத்து செய்தி ஊடகங்களிலும் ஒரு செய்தி, ஓரே மாதிரியான வடிவம்- உள்ளடக்கத்துடன் மலிவாக கொட்டப்படுகின்றது. இறுதியாக இத்தகைய போட்டி மக்களின் அறிவை மழுங்கடிக்கவே பயன்படுகின்றது.

காத்திரமான கட்டுரைகள் மற்றும் செய்திகள் கூட தினசரிகளின் ஓரிரு பக்கங்களில் முடிந்து விடுகின்றன. அன்றாடம் எடை கூடும் இணைப்புக்களில் ‘பேஜ் 3’ எனும் உண்டு களித்திருப்போர் சங்க செய்திகள் நிறைய பக்கங்களை ஆக்கிரமிக்கின்றன. ஆயினும் செய்திகளை தெரிந்து கொள்வதற்கே நாம் இத்தகைய பன்னாட்டு, கார்ப்பரேட் ஊடகங்களைத்தான் நம்பியிருக்கின்றோம்.

நமது கண்களை குறிவைத்து வெள்ளமென பாயும் இத்தகைய செய்திகளை அலசி, ஆராய்ந்து, சலித்து, தூசி தட்டி, கழிவைத் தள்ளி, புடைத்து எடுக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பணிக்கு கூரிய அரசியல், தத்துவ நோக்கு வேண்டும். அவை இந்த உலகையும், மனித சமூகத்தையும் வரலாற்று நோக்கில், வளர்ச்சி நோக்கில் ஆய்வு செய்யும் மார்க்சியத்திடம் மட்டுமே உண்டு.

அத்தகைய பயிற்சியின் ஒரு சிறிய வெற்றிதான் வினவின் கட்டுரைகளும், கண்ணோட்டமும். எனினும் எல்லா பிரச்சினைகள் குறித்தும் வினவில் கட்டுரைகள் வருவதில்லை. ஒன்றை எழுதி வெளியிடுவதற்குள் பல பிரச்சினைகள் கடந்து விடுகின்றன. இந்த முரண்பாட்டை தீர்ப்பதற்கே வினவில் செய்திகளை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.

அனைவரும் அனைத்து தினசரிகளையும், செய்தி தொலைக்காட்சிகளையும் படிப்பது, பார்ப்பது சாத்தியமில்லை. ஓரிரு தினசரிகளை முழுமையாக படிக்க வேண்டுமென்றால் கூட அதற்கு அரை நாள் தேவைப்படும். இந்நிலையில் ஒரு நாளில் படிக்க வேண்டிய செய்திகள், சம்பவங்கள், பிரச்சினைகள், கருத்துக்களை தெரிவு செய்து, அவற்றில் மறைந்திருக்கும் கண்ணோட்டத்தை கண்டுபிடித்து 150 முதல் 300 சொற்களுக்குள் எழுதி அன்றாடம் 5 முதல் 10 செய்திகள் வரை வெளியிட உத்தேசித்துள்ளோம்.

எனினும் இந்த எண் கணக்கு தேவை கருதி மாறுபடலாம். வார்த்தைகளின் அளவு கூடியோ, செய்திகளின் எண்ணிக்கை அதிகரித்தோ வரலாம். தற்போது சனி-ஞாயிறு தவிர மற்ற தினங்களில் வினவு செய்திகள் வெளிவரும். செய்திகள் வருவதால் வினவு கட்டுரைகள் வராது என்பதல்ல. இப்போது போலவே ஒன்றோ, இரண்டோ கட்டுரைகள் வழக்கம் போல வெளிவரும்.

செய்தி, கண்ணோட்டத்தை சுருங்கக் கூறுவதால் தரம் குறையுமா? அப்படி இல்லை. 1500, 2000 வார்த்தைகளில் உருவாகும் ஆய்வுக் கண்ணோட்டத்தை ஒரு குறுஞ்செய்தியில் கூறுவது முடியும் என்றாலும் ஒரு சவால். திருக்குறள் மரபைக் கொண்டிருக்கும் நாம் இந்தக் கலையில் பரிணமிக்க முடியும். அளவு கூடுவது, குறைவது தேவை கருதியே அன்றி ஒரு வடிவப் பிரச்சினை அல்ல.

இந்த புதிய முயற்சிக்கு பொருத்தமாக வினவு தளத்தின் வடிவமைப்பையும் மாற்ற வேண்டியிருக்கிறது. அதையும் கூடிய விரைவில் செய்ய இருக்கிறோம். இறுதியாக இவையெல்லாம் ஒரு பரிசோதனை முயற்சி என்றளவிலேயே இருக்கும். ஏனெனில் இது எங்களுக்கே புதிய முயற்சி என்பதால் இதில் கற்று கரை சேர வேண்டிய தூரம் அதிகம். ஒரு வேளை எதிர்காலத்தில் வினவு ஒரு காத்திரமான செய்தி பத்திரிகையாக வருவதற்கு இந்த முயற்சி ஒரு துவக்கமாக இருக்கும். இவையெல்லாம் உங்களது அங்கீகாரம், ஆதரவு, பங்களிப்பு, விமர்சனங்களுடன்தான் நடக்கும் என்பதால் இந்த பயணத்தில் நாங்கள் தனியாக இல்லை. நன்றி!

தோழமையுடன்
வினவு

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: