privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇன்று முதல் வினவு செய்திகள்! - BETA

இன்று முதல் வினவு செய்திகள்! – BETA

-

அன்பார்ந்த வாசகர்களே,

தகவல் தொழில் நுட்ப புரட்சியின் விளைவாக செய்தி ஊடகங்கள் மாபெரும் வளர்ச்சியினை அடைந்திருக்கின்றன. ஆளரவமற்ற ஒதுக்குப்புறங்களில் நடக்கும் செய்திகள் கூட உடனுக்குடன் நாடெங்கும் வினியோகிக்கப்படுகின்றன. எனினும் பெருவாரியான உழைக்கும் மக்கள் நோக்கிலும், அவர்களது நலன் சார்ந்தும் இந்த செய்திகள் அதிகம் வருவதில்லை; வந்தவையும் அப்படி தெரிவிக்கப்படுவதில்லை.

அரசியல் முதல் சினிமா வரை அனைத்தும் பரபரப்பு, கிசுகிசு, சவுடால், அரட்டை என்பதாக முன்வைக்கப்படுகின்றன. ஒரு செய்தியினை உடனுக்குடன் காட்சி ரீதியாக முன்வைக்கும் வேகம், போட்டி எதுவும் அந்த செய்தியின் பின்னணி, அடிப்படை, பரிமாணம் முதலியவற்றை கணக்கில் கொள்வதில்லை. விளைவாக அனைத்து செய்தி ஊடகங்களிலும் ஒரு செய்தி, ஓரே மாதிரியான வடிவம்- உள்ளடக்கத்துடன் மலிவாக கொட்டப்படுகின்றது. இறுதியாக இத்தகைய போட்டி மக்களின் அறிவை மழுங்கடிக்கவே பயன்படுகின்றது.

காத்திரமான கட்டுரைகள் மற்றும் செய்திகள் கூட தினசரிகளின் ஓரிரு பக்கங்களில் முடிந்து விடுகின்றன. அன்றாடம் எடை கூடும் இணைப்புக்களில் ‘பேஜ் 3’ எனும் உண்டு களித்திருப்போர் சங்க செய்திகள் நிறைய பக்கங்களை ஆக்கிரமிக்கின்றன. ஆயினும் செய்திகளை தெரிந்து கொள்வதற்கே நாம் இத்தகைய பன்னாட்டு, கார்ப்பரேட் ஊடகங்களைத்தான் நம்பியிருக்கின்றோம்.

நமது கண்களை குறிவைத்து வெள்ளமென பாயும் இத்தகைய செய்திகளை அலசி, ஆராய்ந்து, சலித்து, தூசி தட்டி, கழிவைத் தள்ளி, புடைத்து எடுக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பணிக்கு கூரிய அரசியல், தத்துவ நோக்கு வேண்டும். அவை இந்த உலகையும், மனித சமூகத்தையும் வரலாற்று நோக்கில், வளர்ச்சி நோக்கில் ஆய்வு செய்யும் மார்க்சியத்திடம் மட்டுமே உண்டு.

அத்தகைய பயிற்சியின் ஒரு சிறிய வெற்றிதான் வினவின் கட்டுரைகளும், கண்ணோட்டமும். எனினும் எல்லா பிரச்சினைகள் குறித்தும் வினவில் கட்டுரைகள் வருவதில்லை. ஒன்றை எழுதி வெளியிடுவதற்குள் பல பிரச்சினைகள் கடந்து விடுகின்றன. இந்த முரண்பாட்டை தீர்ப்பதற்கே வினவில் செய்திகளை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்.

அனைவரும் அனைத்து தினசரிகளையும், செய்தி தொலைக்காட்சிகளையும் படிப்பது, பார்ப்பது சாத்தியமில்லை. ஓரிரு தினசரிகளை முழுமையாக படிக்க வேண்டுமென்றால் கூட அதற்கு அரை நாள் தேவைப்படும். இந்நிலையில் ஒரு நாளில் படிக்க வேண்டிய செய்திகள், சம்பவங்கள், பிரச்சினைகள், கருத்துக்களை தெரிவு செய்து, அவற்றில் மறைந்திருக்கும் கண்ணோட்டத்தை கண்டுபிடித்து 150 முதல் 300 சொற்களுக்குள் எழுதி அன்றாடம் 5 முதல் 10 செய்திகள் வரை வெளியிட உத்தேசித்துள்ளோம்.

எனினும் இந்த எண் கணக்கு தேவை கருதி மாறுபடலாம். வார்த்தைகளின் அளவு கூடியோ, செய்திகளின் எண்ணிக்கை அதிகரித்தோ வரலாம். தற்போது சனி-ஞாயிறு தவிர மற்ற தினங்களில் வினவு செய்திகள் வெளிவரும். செய்திகள் வருவதால் வினவு கட்டுரைகள் வராது என்பதல்ல. இப்போது போலவே ஒன்றோ, இரண்டோ கட்டுரைகள் வழக்கம் போல வெளிவரும்.

செய்தி, கண்ணோட்டத்தை சுருங்கக் கூறுவதால் தரம் குறையுமா? அப்படி இல்லை. 1500, 2000 வார்த்தைகளில் உருவாகும் ஆய்வுக் கண்ணோட்டத்தை ஒரு குறுஞ்செய்தியில் கூறுவது முடியும் என்றாலும் ஒரு சவால். திருக்குறள் மரபைக் கொண்டிருக்கும் நாம் இந்தக் கலையில் பரிணமிக்க முடியும். அளவு கூடுவது, குறைவது தேவை கருதியே அன்றி ஒரு வடிவப் பிரச்சினை அல்ல.

இந்த புதிய முயற்சிக்கு பொருத்தமாக வினவு தளத்தின் வடிவமைப்பையும் மாற்ற வேண்டியிருக்கிறது. அதையும் கூடிய விரைவில் செய்ய இருக்கிறோம். இறுதியாக இவையெல்லாம் ஒரு பரிசோதனை முயற்சி என்றளவிலேயே இருக்கும். ஏனெனில் இது எங்களுக்கே புதிய முயற்சி என்பதால் இதில் கற்று கரை சேர வேண்டிய தூரம் அதிகம். ஒரு வேளை எதிர்காலத்தில் வினவு ஒரு காத்திரமான செய்தி பத்திரிகையாக வருவதற்கு இந்த முயற்சி ஒரு துவக்கமாக இருக்கும். இவையெல்லாம் உங்களது அங்கீகாரம், ஆதரவு, பங்களிப்பு, விமர்சனங்களுடன்தான் நடக்கும் என்பதால் இந்த பயணத்தில் நாங்கள் தனியாக இல்லை. நன்றி!

தோழமையுடன்
வினவு

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. புதிய முயற்சிகள் என்றுமே வரவேற்கப்பட வேண்டியவை .. மக்கள் ஊடகங்களே செய்தி ஊடகங்களாக மாறுவதே எதிர்காலத்துக்கு மிக நல்லது .. வாழ்த்துக்கள் தோழர்களே !!!

  2. மாதப்பத்திரிக்கையாக வெளிவரும் புதிய ஜனநாயகமும், புதிய கலாச்சாரமும் மாதம் இரண்டாகி, வாரம் ஒன்றாகி, வாரத்திற்கு இரண்டாகி தினசரி நாளிதழாக வெளிவரும் நாளை எதிர்பார்க்கிறேன் என சில ஆண்டுகளுக்கு முன்பு வாசகர் கடிதம் எழுதினேன்.

    இன்று வினவில் அதற்கான துவக்கப்புள்ளி வைத்திருக்கிறீர்கள். உற்சாகமாய் செயல்பட இருக்கும் வினவு தோழர்களுக்கு வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    வாசகர்களின் பங்களிப்பு தேவையென்றால், எப்படி பங்காற்ற முடியும் என்பதையும் துவக்கத்திலேயே தெரியப்படுத்தினீர்கள் என்றால், அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக பங்கெடுக்க ஆரம்பிப்பார்கள்.

    தோழமையுடன்,

    குருத்து

  3. வினவு செய்திகள்!

    இது எனது நீண்டநாள் எதிர்பார்ப்பு
    உழைக்கும் வர்க்கத்திற்கு உரிய
    செய்திகளை உடனுக்குடன் வழங்க
    உரிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  4. மாற்றம் என்பதெ மானிட தத்துவம்…….

    இது எனது நீண்டநாள் எதிர்பார்ப்பு
    உழைக்கும் வர்க்கத்திற்கு உரிய
    செய்திகளை உடனுக்குடன் வழங்க
    உரிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்….

    பின்புலமாக நாங்கள் பிந்தொடர்வொம்….

  5. தோழர்களின் முயற்ச்சி சிறப்பான வெற்றியடைய வாழ்த்துக்கள்,வரும்காலத்தில் அச்சு ஊடகத்தை மட்டுமின்றி காட்சி ஊடகத்தையும் தோழர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

  6. வினவு செய்திகளை மிகவும் எதிர்பார்க்கிறோம், வாழ்த்துக்கள் தோழர்களே…

  7. வினவு, செய்தி தளமாக வெற்றியடைய வாழ்த்துக்கள். பங்குபெறும் தோழர்களுக்கு பாராட்டுகள்.

  8. நீண்ட நாட்களாய் தோழர்கள் இப்படி ஒரு பகுதியை தொடங்க வேண்டும் எனும் கோரிக்கையை வைக்க எண்ணி, உங்களுக்கிருக்கும் பணிச்சுமை கருதி விட்டுவிடுவேன். வாழ்த்துகள். காத்திருக்கிறேன்.

  9. என்ன மாதிரியான முயற்சிகள் என்பதை கோடிட்டு காட்டியிருக்கலாம், அது குறித்த விமர்சனங்கள் உங்கள் முயற்சிக்கு தேவையானதாகக்கூட இருக்கலாம் அல்லவா?

  10. தோழர்களுக்கு வணங்கங்கள்,

    ”இன்று முதல் வினவு செய்திகள்!” ஒரு புதிய முயற்சி…. அசந்திருக்கும்போது, புலி வாலை பிடித்து விட்டீர்கள்! உங்கள் துணிச்சல் மகிழ்ச்சியைத் தருகிறது. கார்பரேட் ஊடக புலிகள் காகித புலிகள்தான், ஆனால் ‘கரன்சி’ புலிகள். மாபெரும் கனவுகளுடன் களம் இறங்கிய மக்கள் ஊடகங்கள் மரணித்த சம்பவங்கள் பல. அம் மக்கள் நேசர்களிடமிருந்து படிப்பினைப் பெற்று அடுத்த அடி வைப்போம்.அதிலொரு சுட்டி பார்வைக்கு. வாழ்த்துக்கள்.

    NewStandard Obituary
    The NewStandard ceased publishing on April 27, 2007.

    http://newstandardnews.net/

  11. வெகு விரைவில் வினவு நாளிதழ் வெளி வர எனது மனமார்ந்த வாழ்த்துகள்.நாளிதழ் வாசிப்போரின் ரசனையை உயர்த்தி மலிவான ரசனையைத் தூண்டும் நாளிதழ்களுக்கு வினவு பேரிடி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

    இதற்கு எங்கள் பேராதரவு நிச்சயம்..

  12. வாழ்த்துக்கள் தோழர்களே…
    ஒரு சிறிய ஆலோசனை…

    செய்தி கட்டுரை தலைப்புகளுக்கு முன் “செய்தி” என குறிப்பிட்டால், செய்திக்கும் வழக்கமாக வரும் கட்டுரைக்கும் உள்ள‌ வேறுபாடு தலைப்பை பார்த்தவுடன் புரியும்… பரிசீலியுங்கள்.

  13. வாழ்த்துக்கள்! இனி மேல் நீரை விடுத்து பாலை மட்டும் பருகும் அன்னம் போல், தேவையற்ற செய்திகளைத் தவிர்த்துஅவசியமான செய்திகளை வாசிக்க முடியும். மேலும், PAYPAL வசதியை மீண்டும் அளிக்க முயற்சி செய்யவும். இந்தியாவில் உறவுகள் இல்லாத ஈழத் தமிழர்களும் இலகுவாக பணம் செலுத்த முடியும். வேறு வழிகள் சில வேளைகளில் சுண்டங்காய் காப்பணம், சுமை கூலி முக்காப்பணம் அளவிற்கு இருக்கின்றது. தயவு செய்து கவனம் செலுத்துவீர்களா?

  14. அற்புதமான முன்னெடுப்பு! வரவேற்கிறேன்.. மக்கள் பார்வைக்கு வரவேண்டிய செய்திகளை தொகுத்து தர தோழர்கள் தகுதியானவர்கள்! நன்றியும், வாழ்த்துக்களும்..

    தோழமையுடன்,
    பால்வெளி.

  15. மக்கள் பார்வைக்கு வரவேண்டிய செய்திகளை தொகுத்து தர தோழர்கள் தகுதியானவர்கள்! நன்றியும், வாழ்த்துக்களும்…
    தோழமையுடன், செல்வக்குமார்

  16. நல்ல முயற்சி.வெற்றியடைய வாழ்த்துக்கள் தோழர்களே,இதே போல ஆங்கிலத்தில் வினவு தளம் துவங்கும் உத்தேசம் இருப்பதாக முன்பு நீங்கள் எழுதியதாக நினைவு.அதுவும் செயல்படுத்தப்பட்டால் வினவின் வீச்சு எல்லை விரிவடையும்.

  17. மிக நல்ல முயற்சி. நம்பி படிக்க ஒரு நாளேடு இல்லையே என்ற குறை தீரும். இதில் வாசகர்களாகிய எங்களின் பங்களிப்பு ஏதாவது இருக்க முடியும் என்றால் மிக்க மகிழ்ச்சியாக பங்கு கொள்வோம். குறைந்த பட்சம் நன்கொடை வழங்கலாம். வேறு பங்களிப்பு தேவைப்படும் என்றாலும் மகிழ்ச்சி. நன்கொடை அனுப்ப சிறிது காலம் முன்பு கொடுத்த KANNAIAN RAMADOSS ICICI TANJORE வங்கி கணக்கிற்கே அனுப்பலாமா?

  18. புஜ மாதமிரு முறை வந்தபோது திக்கி தினறிதான் வந்தது. அதாவது பெயர் மாதமிரு முறை – வந்தது ஒருமுறை. தோழர்களின் வேலை பளு ஒரு காரணம்.

    என்னுடைய விருப்பம்

    வினவு செய்திகள் என தனியாக ஒரு தளம் இருந்தால் நல்லது என தோன்றுகிறது. செய்திதாளில் வரக்கூடிய செய்திகள்தான் என்றாலும் வினவு கண்ணோட்டம் என்பது தனி.

    வினவில் வழக்கமான அரசியல் செய்திகள், கலாச்சாரம் மற்றும் அதைச் சார்ந்த பதிவுகள் வரும்போது அதன் தனித்தன்மை தெரியும்.

    சாத்தியம் என்றால் முயற்சி செய்யலாம் ஆம் பணவசதியும் வேண்டும்.

    வாழ்த்துக்கள்.

  19. வினவுக்கு ஐந்தாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
    விஞ்ஞான வளர்ச்சியோடு நாம் பின் தொடரா விட்டால் , நாம் என்ன வேலைகள் செய்தாலும் எடுபடாமல் போகலாம். முதலாளித்துவ ஊடகங்களுக்கு மத்தியில் மக்களுக்கான ஊடகமாக வினவு புதிய பரிணாமம் எடுப்பது வரவேற்கத்தக்கது. இனி வேலை கொஞ்சம் கடினமாக இருக்கலாம் என்பது உண்மையானாலும் சாத்தியமாக்குவீர்கள்…

  20. வாழ்த்துக்கள்! விரைவில் வினவு செய்தித்தளம் தனியாகப் பார்வைக்குவர வாழ்த்துக்கள்!

  21. வாழ்த்துக்கள்!! மிக்க மகிழ்ச்சி…..மற்ற செய்தி நாயேடுகளின் செய்தியைவிட..தங்கள்ின் கட்டுரைகளையும் தகவல்களையும்தான் அதிகம் வெளியிட்டு வருகிறேன். வினவின் செய்திதளம் வருவது எனக்கு பெரும் உதவியாக இருக்கும்…நன்றி!

Leave a Reply to mannar mannan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க