privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்சிவப்பு என்றால் பயம்...பயம் !

சிவப்பு என்றால் பயம்…பயம் !

-

சென்னை புறநகர் மின்சார ரயிலில் தாம்பரத்தை அடுத்த சானிட்டோரியம் நிறுத்தத்தில் ஏறுவதற்காக உள்ளே நுழைந்து கொண்டிருந்த போது தான் அந்தக் காட்சி கண்ணில் பட்டது. இருபது வயது மதிக்கத் தக்க இரண்டு வடமாநில இளைஞர்கள் கையில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்துக் கொண்டு ரயில் நிலையத்தின் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை சுரண்டிச் சுரண்டி அழித்துக் கொண்டிருந்தனர்.

ஆர்வம் மேலிட அது என்ன போஸ்டர் என்பதை கவனித்தோம். அது, ஐ.ஐ.டி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் மரணத்தை ஒட்டி பு.ம.இ.மு தோழர்கள் ஒட்டியிருந்த கண்டன போஸ்டர். சுற்றிலும் வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்த நிலையில் இதை மட்டும் ஏன் இவர்கள் மெனக்கெட்டு அழிக்க வேண்டும் என்பது ஆச்சர்யம் ஏற்படுத்தவே அருகில் சென்று பேச்சுக் கொடுத்தோம்.

தடுமாற்றமான மழழைத் தமிழில் கொஞ்சம் இந்தி கலந்து தான் அவர்களால் பேச முடிந்தது. அவர்களுக்கு அது என்ன போஸ்டர் என்றோ, அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்றோ தெரிந்திருக்கவில்லை. ரயில் நிலைய நிர்வாகம் போஸ்டரில் உள்ள சின்னத்தையும், சிவப்பு நிற வடிவத்தையும் சுட்டிக் காட்டி இது போன்ற போஸ்டர்களை அழித்து ரயில் நிலையத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள இவர்களை பணிக்கமர்த்தியுள்ளது. இருவருக்கும் நாளொன்றுக்கு தலா இருநூறு ரூபாய்கள் வீதம் மாதத்திற்கு ஆறாயிரம் சம்பளமாம்.

வேறு விளம்பர போஸ்டர்களை விட ‘இந்த மாதிரி’ போஸ்டர்களுக்கு சிறப்பு கவனம் கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது. அனேகமாக மாதத்தின் எல்லா நாட்களிலும் வேலை இருக்கும் என்று சொன்னார்கள். பு.ம.இ.மு தோழர்களை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டே ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்தோம்.

உள்ளே நுழைந்ததும் முதலில் கண்ட காட்சி தேங்கி நின்ற தண்ணீர். அதிலும் பலர் பான்பராக் எச்சிலைத் துப்பி தண்ணீரின் நிறமே லேசாகக் காவி படிந்திருந்தது. சிவப்பைக் கண்டு பயப்படும் தென்னக ரயில்வேவுக்கு காவி பிடித்திருக்கிறது போலும். சற்று மேலே சுற்றிலும் பார்த்தால் ஒரே விளம்பர பேனர்கள். அதிலும், சில துணிக்கடைகளின் விளம்பரத் தட்டிகளில் ஆபாசமான உடல்மொழியோடு பல்லிளித்துக் கொண்டு சினிமா நடிகைகள். எங்கெங்கு காணினும் “ஆள் தேவை” என்று உப்புமா கம்பெனிகளின் விளம்பரங்கள்.

டிக்கெட் கவுண்டரின் சுவர் நெடுகிலும் வெற்றிலைச் சாறைத் துப்பி அந்த வெள்ளைச் சுவற்றின் நிறத்தையே காவி நிறத்துக்கு மாற்றியிருந்தார்கள். தெருநாய் ஒன்று களைத்துப் போய் உறங்கிக் கொண்டிருந்தது. நிலையத்தின் சுத்தம் என்பதில் இதெல்லாம் கணக்கில் வராதோ என்று நினைத்துக் கொண்டோம்.

பெரிய முதலாளிகளின் விளம்பரங்களோ, மக்களை நுகரும் இயந்திரங்களாக்கும் பதாகைகளோ, மிரட்டியோ ஆசை காட்டியோ வாங்கச் சொல்லும் நுகர்விய வாசகங்களோ இவர்களுக்குப் பிரச்சினையில்லை. மக்களின் உடல் நலத்துக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தும் அசுத்தங்களும் பிரச்சினையில்லை. ஆனால், மக்கள் அரசியல் ரீதியில் விழிப்புணர்வடைவது தான் தலையாய பிரச்சினையாய் இருக்கிறது. நாட்டை சுத்தமாக்கும் நக்சல்பாரிகள் விளம்பரங்கள் அசுத்தமாகவும், பயங்கரவாதமாகவும் தென்னக ரயில்வேயிற்கு தெரிகிறது. சுவரொட்டி சுத்தத்தின் பின்னே உள்ள இந்த அசுத்த அரசியல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழைத்தவும்