privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சிவகாசி: விபத்தா, கொலையா?

-

செய்தி -87

சிவகாசிக்கு அருகில் உள்ள முதலிபட்டி கிராமத்திலுள்ள ஓம் சக்தி பட்டாசு தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமென்றும் இறந்தவர்களில் வடமாநில தொழிலாளிகளும் உண்டு எனவும் தெரிகிறது. இறந்தவர்களில் தற்போது அடையாளம் காணப்பட்ட பலரும் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற ஏழை, எளிய தொழிலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 1500 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் 60 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலையை தற்போது பால்பாண்டி என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இங்கு தயாராகும் பேன்சி வெடிகள் ரூ.100 முதல் 3500 வரை விற்பனையாகிறது. இதற்காக பிரத்யேக பயிற்சிகள் எதுவும் தரப்படாத நிலையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 5 மடங்கு அதிகமாக வெடிமருந்தை வைத்திருந்திருக்கிறார்கள்.

அதுவும் ஆபத்தான இந்த வெடிபொருட்களை கெமிக்கல்கள் வைக்கும் 20 அறைகளும் போதாமல் சாதாரண பொருட்கள் இருக்கும் ஸ்டோர் ரூமிலும் வைத்திருந்திருக்கிறார்கள். 10 க்கு 10 அறையில் தோராயமாக 3 முதல் நான்கு பேர்தான் இருக்க வேண்டும். ஆனால் பத்து பேர் வரை இருந்திருக்கின்றனர். விபத்து நடந்தபோது உள்ளே வேலையில் ஈடுபட்டிருந்த 300 பேரின் கதி இன்னமும் தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு பாதிப்பில்லை என விபத்து நடந்த முதல் 4 மணி நேரம் வரை கட்டிடத்தை நெருங்க துணியாத காவல்துறை கூறுகிறது.

நேற்று மதியம் 12.20க்கு முதலில் நடந்த விபத்தில் வெடிச்சத்தம் 1.5 கிமீ தூரம் வரை கேட்கவே மக்கள் பட்டாசு ஆலைக்கு வந்து அங்கிருந்தோரை காப்பாற்ற முன்வந்தனர். அப்போது 1 மணிக்கு தீ பரவி ஆபத்தான மூல வெடிமருந்து கலவையை வைத்திருந்த அறையை எட்டியவுடன் பெரிய வெடிச்சத்தம் கேட்டதுடன் அனைத்து அறைகளும் இடிந்து விழுந்து தீ பற்றி எறியத் துவங்கியது. தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் தாமதமாக வந்தபோதிலும் காப்பாற்ற முனைந்த மக்களைத் தடுத்து நிறுத்தி 3 கிமீ சுற்றளவிற்குள் யாரும் நுழையக் கூடாது எனத் தடை விதித்தனர். சுமார் 20 தீயணைப்பு வண்டிகள் தான் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தது. வந்த வீரர்கள் பலருக்கு புகையை தாண்டிச் செல்ல முகமூடி போதுமான அளவில் இல்லை. மீறி தூக்கிச் சென்ற 80 சதவீதத்திற்கும் மேல் தீக்காயம் பட்டோரை காப்பாற்ற விருதுநகர், சிவகாசி மருத்துவமனைகளில் போதுமான வசதி இல்லாத காரணத்தால் அங்கிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனைக்கு பெரும்பாலோனோரை கூட்டிச் சென்றனர்.

சம்பவ இடத்தில் சாவு எண்ணிக்கை 30 என இருந்தது போகின்ற வழியிலேயே 52 ஐ தொட்டு விட்டது. மாலை 4.30 மணி வரை ஆலைக்குள்ளே மீட்புப்படையினர் போக முடியவில்லை என்பதை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரே ஒத்துக் கொண்டார். சிவகாசி, சாத்தூர், விருதுநகர் மருத்துவமனைகளில் உறவினர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காப்பாற்ற சென்ற பலரும் கூட இரண்டாவது வெடிவிபத்தில் மரணமடைந்துள்ளனர். அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக இருந்துள்ளது.

இந்தியாவின் வெடிபொருள் தயாரிப்பில் 90 சதவீதம் கையில் வைத்திருக்கும் சிவகாசி பகுதியில் ஆண்டுக்கு சுமார் ரூ.1600 கோடி வரை புரளும் இத்தொழிலால் நேரடியாக 1 லட்சம் பேரும், மறைமுகமாக 1.5 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை பெற்றாலும், பணிப்பாதுகாப்போ, உத்திரவாதமோ கிஞ்சித்தும் கிடையாது. குழந்தை தொழிலாளர்களும் கணிசமாக உள்ளனர். விபத்து நடந்த தொழிற்சாலையில் பெரும்பாலான தொழிலாளர்கள் இங்குள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் தேவர் சாதியினைச் சேர்ந்தவர்களே அதிகம். குறிப்பிட்ட அளவுக்கு பீகாரிலிருந்தும் சிவகாசியில் தங்கியிருந்து இங்கு வேலைக்கு வருகிறார்கள்.

தினக்கூலியாக ரூ.300 வரை பெறும் இவர்களில் பெரும்பாலோருக்கு ஆண்டு முழுதும் வேலை இருக்காது. தீபாவளி, கிறிஸ்துமசு போன்ற பண்டிகைக் காலங்களில்தான் அனைவருக்கும் வேலை இருக்கும். அதுவும் குறைந்த கூலிக்கு ஆள் கிடைப்பதால் அனைவருக்கும் வேலை, ஓவர்டைம், அதீத இலக்கு நிர்ணயித்தல், பாதுகாப்பு உபகரணங்களை சட்டப்படி ஏற்படுத்த தவறுதல் என எல்லாம் உண்டு. இதையெல்லாம் ஆய்வுசெய்து இந்த பட்டாசு ஆலைக்கு முன்னரே அனுமதி ரத்து செய்து விட்டோம் என்கிறார்கள் அதிகாரிகள்.

அளவுக்கு அதிகமாக 5 மடங்கு இலக்கை நிர்ணயித்த முதலாளிகள் அதனால் விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதை தெரிந்தே புறக்கணித்து விட்டனர். வெடிமருந்துக்கு பதிலாக மணி மருந்து என அவ்வளவாக பிரச்சினை தராத பொருளைத்தான் ஸ்டாக் ரூமில் வைத்திருந்தார்கள் என போலீசை விட்டு சொல்ல வைக்கிறார்கள். ஆனால் இந்த மணிமருந்து வெயில் பட்டால் தீப்பிடிக்கும் தன்மை உள்ளது. அதிக உற்பத்திக்காக காயவைக்கப்பட்ட மணிமருந்தே உரசலினால் தீப்பிடித்திருக்கும் என்று தெரிகிறது. இது போக பேன்சி ரக ராக்கெட்டுகளை உற்பத்தி செய்த கையோடு பேக்கிங் செய்ய வேண்டும். அதிக உற்பத்தியினால் அப்படி பேக்கிங் செய்யப்படாத ராக்கெட்டுகளால் தீ பிடித்திருக்கலாமென்றும், தீ பரவியிருக்கலாம் என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

காப்பாற்ற சென்றவர்களை போலீசை மீறி வேடிக்கை பார்க்க போனவர்கள் என்கிறது சன் டிவி. ஆனால் உண்மையில் அவர்கள் காயம்பட்டோரை காப்பற்ற முயன்றிருக்கிறார்கள். 2009 திருவள்ளூர் பள்ளிப்பட்டு வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் 32 பேர் இறந்ததுதான் இதுவரை மோசமான விபத்தாக இருந்து வந்தது. முதலிபட்டி விபத்து அதனை முந்தி விட்டது. நெருங்கி வரும் தீபாவளி பண்டிகை, அதற்கு பெரும் பணக்காரர்கள் நடுத்தர வர்க்கம் விரும்பி வாங்கும் பேன்சி வெடி, அதில் சந்தைக்கான போட்டி, மீறப்பட்ட விதிமுறைகள், பணிப்பாதுகாப்பற்ற சூழல் எனச் சேர்ந்து முதலாளிகளில் இலாபவெறிக்கு உழைக்கும் மக்கள் பலியாகி உள்ளனர்.

அனுமதி பெறாமல் சிவகாசி பகுதியில் நடைபெறும் பல ஆலைகளில் விபத்துக்கள் பதிவாவதே இல்லை. ஓரிரு சாவுகளை அதிகார வர்க்க துணையுடன் மறைத்தும் விடுகின்றனர். இந்த ஆண்டு இதற்கு முன் 4 பேரும், 2011 மற்றும் 2010 ல் தலா 20 பேரும், 2009 இல் 33 பேரும் இப்படி விபத்துகளில் இறந்துள்ளனர். சிவகாசியில் வேம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், சல்வார்பட்டி, ராமலிங்கபுரம், மீனாட்சிபுரம் போன்ற பகுதிகளில் இப்போதும் அனுமதி பெறாத பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன.

பிரதமர் வருத்தம் தெரிவிக்கிறார். முதல்வருடன் சேர்ந்து அவரும் தலா ரூ.2 லட்சம் இறந்தவர்களுக்கு நிவாரணம் அளிக்கின்றனர். இப்போதும் முதலாளிகள் இறந்து போன வட மாநிலத் தொழிலாளிகளின் எண்ணிக்கையை மறைக்க வழிதேடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் ஆலையின் போர்மேன் திருத்தங்கல் ஜெயக்குமாரை கைது செய்துள்ளது போலீசு. இலாபம் அடைந்த முதலாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள்.

இந்தியாவுக்கே தீபாவளி பட்டாசுகளை சப்ளை செய்யும் சிவகாசியில் இத்தகைய விபத்துக்கள் அதிகம் நடந்தாலும் அதை உடனுக்குடன் தீர்க்க வேண்டிய தீயணைப்புத் துறை நவீனமாய் இல்லை. இன்னும் அரதப் பழசான உத்திகளோடுதான் இயங்குகிறது. இந்த விபத்தில் பல அறைகளில் இருந்த அலுமினியம் பவுடர் நீர் பட்டால் தீப்பற்றிக் கொள்ளுமென்பதால் நீருக்கு மாற்றான நவீன வேதியியல் பொருட்கள் தீயணைப்புத் துறையிடம் இல்லை. மேலும் நவீன கவச உடைகளும் இல்லை. ஓம் சக்தி பட்டாசுத் தொழிற்சாலை இருந்த காட்டுப்பகுதியில் பெரிய வண்டிகள் விரைவாக வந்து போகும் சாலை வசதியும் இல்லை.

அடுத்து காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்யும் வசதிகள் கொண்ட சிறப்பு தீப்புண் சிகிச்சை மருத்துவமனை சிவகாசியில் இல்லை. மதுரை, விருதுநகர் என்று அருகாமை நகரங்களுக்கு தாமதமாக கொண்டு சென்றதில் பலர் உயிரிழந்திருக்கின்றனர். மாநகரங்களில் பாலம், நவீன சாலை, மல்டிபிளக்ஸ் என்று பணத்தை வாரியிறைக்கும் அரசு சிவகாசியில் இதுவரை ஒரு சிறப்பு மருத்துவமனையைக் கூட அமைக்கவில்லை என்பது அயோக்கியத்தனம்.

ஆக இத்தனை இடர்ப்பாடுகளையும் தாங்கிக் கொண்டுதான் அங்கு தொழிலாளிகள் வேலை பார்க்கின்றனர். அதனால் கடந்த 12 ஆண்டுகளில் நடந்த விபத்தில் 230க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர். குறைவான கூலி, செலவை ரத்து செய்தவற்காக முதலாளிகள் செய்யமால் இருந்த பாதுகாப்பு குறைபாடுகள், முதலாளிகளிடம் லஞ்சம் வாங்கியே இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த அரசு அதிகார வர்க்கம், சிவகாசியில் தொழிலாளருக்கென்று தீ சிகிச்சை மருத்துவமனையை கட்டாத அரசு எல்லோரும்தான் இந்த விபத்தின் குற்றவாளிகள்.

இந்த குற்றவாளிகளை தண்டித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள் ஏற்படுத்தாத வரையில் சிவகாசி வெடித்துக் கொண்டே இருக்கும். ஏழைகள் மரித்துக் கொண்டே இருப்பார்கள். தீபாவளியின் கொண்டாட்டத்திற்கு பின்னே உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு உயிர் உத்திரவாதம் என்றுமில்லை. என்ன செய்யப் போகிறோம்?

_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்