privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமலைக்கள்ளன் அண்ட் கோ!

மலைக்கள்ளன் அண்ட் கோ!

-

கிரானைட்-ஊழல்

“பூமிப்பந்தின் மேலடுக்கான பாறை மனித வாழ்க்கையின் பிரிக்கவொண்ணாத அங்கமாக இருந்திருக்கிறது. மனிதன் தற்காப்புக்காகக் கற்களைப் பயன்படுத்திய கற்காலம் முதல் இன்றைய இணையப்புரட்சி காலம் வரை. இருப்பினும் கி.மு. 2600இல்தான் மனிதகுலம் கிரானைட்டின் சிறப்பை உணர்ந்தது. காலத்தால் அழிக்க முடியாத பல கட்டுமானங்களை உருவாக்கியிருக்கிறது.”

இந்தத் தொகையறாவெல்லாம் எதற்காக என்று கேட்கிறீர்களா?

கிரானைட் திருட்டு கேசில் கைது செய்யப்பட்டு, வெள்ளையும் சொள்ளையுமாக,  போலீசார் புடை சூழ மெல்ல மிதந்து வரும், பி.ஆர்.பழனிச்சாமியின் சாதனைகளை விதந்து, இந்து ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள, செய்தி போல தோற்றம் தரும் விளம்பர வாசகங்கள். இன்றல்ல, டிசம்பர் 10, 2010 அன்று.

இஸ்தான்புல் விமானநிலையம், தோஹா மசூதி, துபாய் ரேஸ் கோர்ஸ், தமிழ்நாடு புதிய சட்டமன்றக் கட்டிடம், இன்னும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ரசியா, தென்கிழக்காசியா என எல்லா இடங்களிலும் உள்ள மாபெரும் கட்டிடங்களை அலங்கரிப்பவை, மதுரை மாவட்டத்தையே கண்டதுண்டமாக வெட்டித் துண்டு போட்டு சாமியால் விற்பனை செய்யப்பட்ட கிரானைட்டுகள்தான் என்று பெருமை பொங்க கூறுகிறது அந்த செய்தி.

கிரானைட்டின் சிறப்பு பற்றி மனித குலத்துக்கு கி.மு. 2600இலேயே தெரிந்திருந்தாலும், அது பழனிச்சாமிக்கு 1980களின் பிற்பகுதியில்தான் தெரியவருகிறது. அப்போதுதான் மதுரைப் பாறைகளில் உள்ள அற்புதத்தை அவர் அடையாளம் கண்டாராம். நல்வாய்ப்பாக கி.மு. 2600இல் பழனிச்சாமி பிறக்கவில்லை. பிறந்திருந்தால் தமிழ்நாட்டைக் கடல் கொண்டிருக்கும்.

1980களில் பொதுப்பணித்துறையில் ஒரு சிறிய காண்டிராக்டராக இருந்து, நாங்குனேரியில் ஒரு வாய்க்கால் வேலையில் எல்லை மீறி மோசடி செய்ததால் காண்டிராக்டர் என்ற உரிமமே ரத்து செய்யப்பட்ட நபர்தான் பி.ஆர்.பழனிச்சாமி என்ற கிரிமினல். அதன்பின், மேலூர் வட்டத்தில் ஒரு கல் குவாரியை எடுத்துத் தொழில் செய்ய முனைந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் தொழில் செய்துவந்த ஒரு வடநாட்டு சேட் தொடர்பு பி.ஆர்.பி.க்குக் கிடைக்கிறது. மதுரையில் இருப்பது உலகத்தரம் வாய்ந்த கிரானைட் என்பதும் தெரிகிறது. அது முதல் கொள்ளையடிக்கத்  துவங்கி,  மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்திடம் 8 முறை ஏற்றுமதிக்கு அவார்டு வாங்குமளவுக்கு மாவட்டத்தையே வெடி வைத்துத் தகர்த்து விற்றிறிருக்கிறார் பழனிச்சாமி.

பழனிச்சாமி ‘தொழிலுக்குள்’ நுழைந்த காலம் என்பது தமிழகத்தைப் பொருத்தவரை, ‘வரலாற்று ரீதியில்’ முக்கியத்துவம் வாய்ந்த காலம். 1991இல் ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவியும் உடன்பிறவாத் தோழியும், “ஐந்தே ஆண்டுகளுக்குள் தமிழகத்தை முடிந்த வரை வாங்கிவிட வேண்டும், அல்லது விற்றுவிடவேண்டும்” என்ற கொலைவெறியோடு களத்தில் இறங்கியிருந்த காலம் அது. பழனிச்சாமியின் கொள்கையும் அதுவாகவே இருந்தது. அவரது கொள்கையும் உடன் பிறவாதோழிகளின் கொள்கையும் ஒத்துப்போனதையும்,  பழனிச்சாமியின் சாதியும் சின்னம்மாவின் சாதியும் ஒத்துப்போனதையும் மட்டும் தற்செயல் என்றுதான் சொல்லவேண்டும். அன்று முதல் இன்றுவரை சின்னம்மாவுடன் ஹாட்லைன் தொடர்பில் இருப்பவர் பழனிச்சாமி.

கிரானைட் கொள்ளைக்கு மன்னார்குடி கும்பல் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. பி.ஆர்.பி.க்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் குருநாதர் என்று சொல்லுமளவுக்கு தொழில் நெருக்கம். இன்னொரு முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் பரமசிவம் தனது மைத்துனர் கோட்டைவீரன் பெயரில் கீழையூரில் பிரம்மாண்ட கிரானைட் குவாரியை எடுத்து நடத்தினார். பின்னர் அதுவும் மன்னார்குடி கும்பல் தயவால் இன்று பி.ஆர்.பி. கைக்கு வந்துவிட்டது.  பி.ஆர்.பி.யிடம் மேலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சாமி, மதுரை அ.தி.மு.க. மேயர் ராஜன் செல்லப்பா, ஜெயா அமைச்சரவையில் இரண்டாவது இடத்திலுள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது பினாமிகள், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மன்னார்குடி கும்பல்   எனப் பலரும் பல நூறு கோடிகள் பங்கு வாங்கியிருக்கின்றனர்.

தி.மு.க.வில் அழகிரிக்கும் பி.ஆர்.பி.க்கும் இடைத்தரகர் நாகேஷ் என்ற தி.மு.க. பிரமுகர். 1996-2001 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திருப்பத்தூரின் மறைந்த தி.மு.க. எம்.எல்.ஏ சிவராமன்தான், விலையுயர்ந்த கிரானைட்டுகள் கொண்ட கீழையூரில் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்குச் சொந்தமாக குவாரி ஏற்படுத்தி கொடுத்தவர். இது சென்ற தி.மு.க. ஆட்சியின் போதே,  அழகிரியின் பினாமி பொட்டு சுரேசின் மகன் நாகராஜ் பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது.

அனைவரையும்விட பழனிச்சாமியிடம் அதிகமாகப் பொறுக்கித் தின்றவர் அஞ்சா நெஞ்சன் அழகிரிதான். அவரது பினாமிகள் சூடாமணி, நாகராஜ், நாகேஷ், பொட்டு சுரேஷ், தனபால், பாலசுப்பிரமணி முதலானோரும் தனித்தனியே காசு பார்த்திருக்கின்றனர். அது மட்டுமின்றி, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பி.ஆர்.பி. விட்டெறியும் காசைப் பங்கு போட்டுக் கொள்வதற்கு, மாவட்ட ஆட்சியர்களாக இருந்த மதிவாணன், உதயசந்திரன் ஆகியோருடன் அஞ்சாநெஞ்சனின் உடன்பிறப்புகள் மல்லுக்கட்டியிருக்கின்றனர்.

மொத்தத்தில், தி.மு.க., அ.தி.மு.க. வில் மேலிருந்து கீழ் வரை பழனிச்சாமியிடம் மொய் வாங்காத உடன்பிறப்போ, ரத்தத்தின் ரத்தமோ கிடையாது. இந்த ‘மாமன்கள்’ எல்லோருடைய பெயர்களையும் அச்சிடுவதற்கு பத்திரிகையில் இடமும் கிடையாது.

கிரானைட்-ஊழல்

பூமிக்குக் கீழே உள்ள கனிம வளங்கள் அரசுக்குச் (சமூகத்துக்கு) சொந்தம் என்பது பொது நியதி. இந்த விதிக்கு உட்படாமல், பூமிக்கு அடியில் கிரானைட், லைம்ஸ்டோன் போன்றவை இருக்குமானால், அவை நிலத்தின் உரிமையாளருக்குச் சொந்தம் என்று சட்டம் அங்கீகரிப்பதால், ஒரு நிலத்தை வாங்கி, தனக்குச் சொந்தமான அந்த நிலத்தில் அரசு அனுமதிக்கின்ற அளவுக்கான ஆழத்துக்கு குவாரி வெட்டி கிரானைட்டுகளை எடுத்து விற்பது சட்டபூர்வ நடவடிக்கையாக அங்கீகரிக்கப்படுகிறது.

இதன்படி பாமர விவசாயிகளுடைய நிலங்களை ஏமாற்றி வாங்குவது, தரமான கிரானைட் உள்ள நிலத்தை யாரேனும் தர மறுத்தால், மிரட்டியோ, தாக்கியோ, பொய்வழக்கு போட்டோ, நாற்புறமும் உள்ள நிலங்களை வாங்கி அந்த விவசாயியை முடக்கியோ அவருடைய நிலத்தைப் பறிப்பது, பிறகு அங்கே  குவாரி வெட்டுவது என்ற வழிமுறைகளை பி.ஆர்.பி; அழகிரியின் மகன் துரை தயாநிதி,  தளி ராமச்சந்திரன் போன்று இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மாஃபியாக்கள் அனைவருமே கையாண்டு வருகின்றனர். இந்த அயோக்கியத்தனம் சட்டபூர்வமானது என்று அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், இதைத்தான் ‘நியாயமாகத் தொழில் செய்வது’ என்று கூறுகிறார்கள்.

பி.ஆர்.பி. மற்றும் அழகிரியின் மகன் முதலானோருக்கு இந்த ‘நியாயம்’ போதவில்லை. டாமின் குவாரிக்கு அருகாமையில் ஒரு இடத்தை வாங்கிப்போட்டு, டாமின் குவாரியின் கற்களைத் திருடி,  தனது குவாரியின் கற்களாக கணக்கு காட்டி விற்பது; அரசு அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு, பொது நிலங்கள், கண்மாய்கள், குளங்கள், மலைகள் ஆகியவற்றில் ஒரு பகுதியை அரசிடமிருந்து குத்தகையாக வாங்கிக் கொண்டு, அதைக் காட்டி அந்த வட்டாரம் முழுவதையும் ஆக்கிரமித்து கிரானைட் கொள்ளையடிப்பது; எந்த ஆவணமும் இல்லாமல் பொதுநிலங்களை ஆக்கிரமித்துக் கொள்ளையிடுவது  எனத் தங்களுடைய கொள்ளையை நடத்தியிருக்கின்றனர். அதாவது இலஞ்சத்தை ‘நியாயமாக’ கேட்டு வாங்கும் போலீசுக்கும், சட்டையில் கைவிட்டு எடுக்கும் போலீசுக்குமுள்ள வேறுபாடு!

இந்த வழியில் மக்களுக்குச் சொந்தமான 70 கண்மாய்கள், 50 ஊருணிகள், எண்ணற்ற சாலைகள், புறம்போக்கு நிலங்கள்  என அனைத்தையும் ஆக்கிரமித்திருக்கிறது பி.ஆர்.பி. நிறுவனம்.  மேலூர் வட்டத்தில் கீழையூர், கீழவளவு, இ.மலம்பட்டி, செம்மணிப்பட்டி, திருவாதவூர் ஆகிய கிராமங்களிலுள்ள கிரானைட் குவாரிகளும்; மதுரை வடக்கு வட்டத்தில் புதுத்தாமரைப்பட்டி, இடையப்பட்டி ஆகிய கிரானைட் குவாரிகளும் முக்கியமானவையாகும். செம்மணிப்பட்டியிலுள்ள உயர்ந்த புறாக்கூட்டு மலையும், ரெங்கசாமிபுரம் கீழையூர் மலையும், கீழவளவு பொக்கிச மலையும் இருந்த சுவடுகூடத் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட்டுகள் பி.ஆர்.பி.யால் பெயர்த்தெடுக்கப்பட்டுவிட்டன.

உரிமம் ஏதும் இல்லாமலே, அரசு நிலங்கள், புறம்போக்கு  என எல்லா இடங்களிலும் குவாரிகளைத் தோண்டிக் கொள்ளையடித்துள்ளனர்.  உதாரணமாக, மதுரை மாவட்டம் கீழவளவுக்கு அருகிலுள்ள பிள்ளையார்குளம் கண்மாயில் குவாரி அமைக்க 99 வருடக் குத்தகைக்கு பி.ஆர்.பி. நிறுவனம் கேட்டபோது அரசு தர மறுத்ததால், அக்கண்மாயைத் தோண்டிக் கற்களனைத்தையும் எடுத்த பி.ஆர்.பி. நிறுவனம், பின்னர் மண்ணைப்போட்டு  மூடியிருக்கிறது. ஆவணங்களில் மட்டும் இருக்கும் இக்கண்மாயை தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

தொல்லியல் மதிப்புள்ள புராதனச் சின்னங்களும் இவர்களது கொள்ளைக்குத் தப்பவில்லை.  கீழையூர் சமணமலையில் சமணப்படுகைகள், கல்வெட்டுகள் இருப்பதால் அம்மலை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், அதற்கு வெகு அருகிலேயே கற்களை வெட்டி எடுத்துள்ளனர். அந்தப் பகுதி முழுவதும் வெட்டி எடுத்த கற்களை அடுக்கி சமணப்படுக்கையையே மறைத்துவிட்டனர்.

100 ஏக்கர் சுற்றளவுள்ள மேலூர் திருச்சுனை மலையில் சுரக்கும் நீர் பத்தாயிரம் ஏக்கருக்கு பாசனவசதி அளித்துவந்தது. வருவாய்த்துறையும் கனிமவளத்துறையும் இன்ன பிற துறைகளும் அந்த மலையின் மையத்தில் உச்சந்தலையில் 0.2 ஹெக்டேரை பி.ஆர்.பி. பினாமிக்குக் குத்தகைக்கு விட்டிருக்கின்றனர். நினைத்தும் பார்க்க முடியாத இந்த வக்கிரத்தின் விளைவாக,  இன்று மலை இல்லை. பல இடங்களில் மலைகள் மடுவாகிவிட்டன. விளைநிலங்களிலும்  நீர்வரத்து கால்வாய்களிலும் கற்களை அடுக்கிவைத்துப் பாசனமும் இல்லை.

பல்லாயிரம் ஏக்கரில் விவசாயம் அழிக்கப்பட்டிருக்கிறது. மேய்ச்சல் நிலம் இல்லாததால் கால்நடைகள் இல்லை. விளைந்த பயிரின் மேல் கிரானைட் தூசு படிந்து பயிர்கள் அழிவதால் விவசாயம் இல்லை. பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதால், கிராமங்களில் வீடுகள் விரிந்து நொறுங்கியிருக்கின்றன.

மதுரை தெற்குத்தெரு கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரை வளைத்துப் போட்டு 400 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமான கட்டிடங்களை எழுப்பி, இறக்குமதி செய்யப்பட்ட எந்திரங்களைக் கொண்டு மிகப் பெரிய கிரானைட் தொழிற்சாலையை நடத்துகிறது பி.ஆர்.பி. நிறுவனம்.  கற்களை அறுப்பது,  பாலிஷ் போடுவது, கிரானைட் கற்களிலேயே விதவிதமான அழகு சாதனப் பொருட்கள், சோபா செட், நாற்காலிகள் போன்றவை தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி ஆகின்றன.

விதிகளின்படி குறிப்பிட்ட  ஆழத்துக்கு மேல் கிரானைட்டுக்காகப்  பூமியைத் தோண்டக்கூடாது. ஆனால், பி.ஆர்.பி. மற்றும் பிற கிரானைட் கும்பல்கள் பாதாளம் வரை தோண்டியிருக்கின்றனர். அந்த வட்டார மக்களுக்கு மின்சாரம் கிடைப்பது அத்திபூத்தாற் போலத்தான். மின்வாரிய அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தேவையான அளவு மின்சாரத்தைத் திருடுகிறது இந்த கிரானைட் கொள்ளையர் கூட்டம்.

பி.ஆர்.பி. நிறுவனம் திருமோகூரில் தலித் மக்களுக்கான தொகுப்பு வீடுகளை  இடித்து குவாரியாக்கியிருக்கிறது. ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் இடையபட்டியில் சத்துணவுக் கூடம்,  சமூகக் கூடம் போன்றவை  இடிக்கப்பட்டு குவாரிகளாக்கப்பட்டிருக்கின்றன.  கீழவளவில் குவாரிக்காகப் பள்ளிக்கூடத்தை  இடித்துள்ளனர். இதனை மக்கள் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர்.  திருவாதவூரில் தலித் மக்களுக்கான பஞ்சமி நிலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. கண்மாய், ஊருணி, புறம்போக்கு, மின்சாரம் ஆகியவற்றைத் திருடுவதை எதிர்த்த ஊர்த்தலைவர்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறார்கள். மீறிப் போராடிய விவசாயிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கிரானைட்-ஊழல்

பி.ஆர்.பழனிச்சாமிக்கு மேலூர் வட்டத்தில் மட்டுமின்றி, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர்,இராமநாதபுரம், கோவை, நாமக்கல்,சேலம், கரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 1500 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், தேனியில் மட்டும் 700 ஏக்கர் என்றும் பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. மிக முக்கியமான கிரானைட் குவாரி மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரியில் பழனிச்சாமியின் சொத்து விவரங்கள் பற்றி தெரியாதது மர்மமாக இருக்கின்றது.

பி.ஆர்.பழனிச்சாமி நடத்தி வந்தது ஒரு அரசு. வருவாய்துறை, கனிமவளத்துறை, காவல்துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளையும் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலர் பி.ஆர்.பி. யின் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். நிலத்தை ஆக்கிரமிப்பது முதல் எதிர்ப்பவர்களை ஒழித்துக் கட்டுவது வரையிலான எல்லா அயோக்கியத்தனங்களுக்கும் திட்டம்போட்டுக் கொடுப்பது இவர்கள்தான். சொல்லப்போனால் பி.ஆர்.பி. கும்பல், இந்த ‘ஓய்வு பெற்ற அரசை’ வைத்துத்தான் ஓய்வின்றி உழைக்கும் அம்மாவின் அரசை இயக்கியிருக்கிறது.

கிரானைட் தோண்டும் பகுதிகளிலுள்ள கிராம உதவியாளர்களுக்கு (தலையாரி) ரூ.1000. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.5000; வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூ.8000; மண்டல துணை வட்டாட்சியர்களுக்கு ரூ.10,000; வட்டாட்சியர்களுக்கு ரூ.20,000; கோட்டாட்சியர்களுக்கு ரூ.30,000; மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரூ.50,000; கலெக்டருக்கு ரூ. 1லட்சம் முதல் 2 லட்சம்வரை  என மாதந்தோறும் தவறாமல் வேன் மூலம் உரிய நபர்கள் மூலம் பட்டுவாடா நடந்திருக்கிறது. கனிமவளத்துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பி.ஆர்.பி. நிறுவனம் தாய்வீடு போல. ஒன்று கேட்டால் இரண்டு கிடைக்கும். தலையாரிகளைப் பொருத்தவரை, சுவரில் கிரானைட் பதித்திருப்பவர்களெல்லாம் உண்டு.

இதைப்போன்றே காவல் துறையில் ‘ஏட்டய்யா’, சார் ஆய்வாளர், ஆய்வாளர், துணைக் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டி.ஐ.ஜி; ஐ.ஜி. முதலானோருக்கும் மாதந்தோறும் பணப்பட்டுவாடா நடந்து வந்துள்ளது.  கீழ்நிலை நீதிமன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை ‘நீதி அரசர்’களுக்குத் தகுந்த முறையில் மாதந்தோறும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வந்துள்ளது. ஒரு உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கார் பரிசளிக்கப்பட்டிருக்கிறது.

கட்சிகளைப் பொருத்தவரை,  காங்கிரசு, பா.ஜ.க., ம.தி.மு.க, பா.ம.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி., புதிய தமிழகம்  என விதிவிலக்கின்றி அனைத்து ஓட்டுக் கட்சிகளும் தத்தம் தகுதிக்கேற்ற ‘அன்பளிப்பு’களைச் சுருட்டியிருக்கின்றனர். மறைந்த மார்க்சிஸ்டு கட்சியின் மதுரை எம்.பி. மோகன், தேர்தல் செலவுக்கென ஒரு கோடி ரூபாயை பி.ஆர்.பி. யிடம் வாங்கியிருப்பதாகவும், இதுவன்றி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட அனைத்து பிழைப்புவாத தொழிற்சங்கங்களும் தத்தம் மாநாடுகள், கருத்தரங்குகளுக்கு இலட்சக் கணக்கில் பி.ஆர்.பி.யிடம் பணம் பெற்றுள்ளனர் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் எவ்விதத் தயக்கமுமில்லாமல் சாதாரணமாக கூறுகின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் அழகர்கோவிலில் நடைபெற்ற மார்க்சிஸ்டு கட்சியினர் தலைமை தாங்கும், மதுரை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநாட்டில் பரிமாறப்பட்ட ஆடு, கோழி, மீன், முட்டை  முதல் பீடா வரையிலான அனைத்தும்  பி.ஆர்.பி. யின் செலவுதான் என்றும் இவர்கள் கூறுகின்றனர். தலையாரி முதல் தாசில்தார் வரையிலான ‘தோழர்கள்’ தனித்தனியாக மாதாமாதம் கைநீட்டும்போது, எல்லா கைகளும் இணைந்து ஒற்றுமையாக, ஒரே சங்கமாக, கை நீட்டுவதில் புதிதாக என்ன மானக்கேடு வந்துவிடப் போகிறது என்று அவர்கள் எண்ணியிருக்கலாம்.

குவாரிகளைத் தாரைவார்த்த டாமின் அதிகாரிகளுக்கு, சிட்டா அடங்கல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தங்களிடம் ஒப்படைத்து ஆக்கிரமிப்புக்கு ரூட்டு போட்டுத்தந்த வருவாய்த்துறைக்கு, கால்வாய்கள்  ஊருணிகளை விழுங்க உதவிய பொதுப்பணித்துறைக்கு, சமணமலை, திருவாதவூர் போன்றவற்றைத் தோண்ட அனுதித்த தொல்லியல் துறைக்கு, மற்றவர் நிலத்தையும் புறம்போக்கையும் பதிவு செய்து தருவதற்காக பத்திரப் பதிவுத்துறைக்கு, சத்துணவுக்கூடம், பள்ளி, சமூகக்கூடங்களைக்கூட இடித்து குவாரியாக்க உதவிய ஊரக வளர்ச்சித்துறைக்கு, ஒரு நம்பர் பிளேட்டில் எட்டு கன்டெயினர் லாரிகள் வீதம் ஓட்டுவதற்கு உதவி புரிந்த வட்டாரப் போக்குவரத்துத் துறைக்கு, கணக்கில் வராமல் விற்பனை செய்வதற்குத் துணை புரிந்த வணிகவரித்துறைக்கு, கணக்கில் வராத கள்ள ஏற்றுமதிக்கு துணை நிற்கும் சுங்கத்துறைக்கு, அனைத்துக்கும் துணை நின்று அருள் புரியும் எல்லாம் வல்ல அன்னைக்கு… என்று சகலருக்கும் அவரவர் பங்களிப்புக்கு ஏற்ப ‘அன்பளிப்பு’ வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 31, 2012 வரை அனைவருக்கும் மாமூல் முறையாக விநியோகிக்கப்பட்டிருக்கிறது.

எல்லாம் ‘நல்லபடியாக’ போய்க்கொண்டிருந்த நேரத்தில், அனைவரின் கண்ணிலும் மண்ணைத்தூவும் விதத்தில் ஆட்சியர் சகாயம் எழுதிய கடிதம் அம்பலத்துக்கு வந்துவிட்டது.

கிரானைட்-ஊழல்

தற்போது விசாரணை நடத்திவரும் மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, பி.ஆர்.பி. நிறுவனத்தில் மட்டுமின்றி, சோதனையிட்ட 175 குவாரிகளில் 89 இல் எல்லாவிதமான முறைகேடுகளும் நடந்திருப்பதாகவும், பொது இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார். ஆக்கிரமித்த புறம்போக்குகளைத் தலையாரிகள் அளந்து கொண்டிருக்கிறார்கள். தோண்டப்பட்ட குழிகளை டாமின் அதிகாரிகள் அளந்து கொண்டிருக்கிறார்கள்.

பெரியாறு பாசனக்கால்வாய் கோட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் காணாமல் போன கால்வாய்களைத் தேடுகிறார்கள். குவாரிகளில் மர்மமான முறையில் இறந்தவர்கள் பற்றி டி.எஸ்.பி. அசோக்குமார் தலைமையிலான குழு மருத்துவமனை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுகளை ஆராய்ச்சி செய்கிறதாம்.

இந்த விசாரணையை நடத்திவரும் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்த விவசாயிகள், கிரானைட் கொள்ளையர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, கொள்ளைக்குத் துணை நின்ற அனைவர் மீதும், குறிப்பாக எல்லா அரசுத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். ஆனால், ஒன்றிரண்டு வி.ஏ.ஓ., தலையாரி, தாசில்தார்கள் மட்டுமே தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

மற்றபடி பி.ஆர்.பி.க்குப் புறம்போக்கை அளந்து கொடுத்த அதே தலையாரிகள், அதே இடத்தை, அதே இஞ்சு டேப்பை வைத்து இப்போது கலெக்டர் தலைமையில் அளந்து கொண்டிருக்கிறார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கு முன் பெரியாறு கால்வாயை பார்த்திராதவர்கள் போலத் தேடுகிறார்கள். விபத்து என்று பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கைகளை ஆராய்வது போல போலீசார் பாவ்லா காட்டுகிறார்கள். மற்றபடி, பி.ஆர்.பி. அலுவலகங்களில் நடந்த சோதனைகள் பலவற்றில் கணினிகள் கைப்பற்றப்பட்டன, வன்தகடுகள் இல்லை. பீரோக்கள் உள்ளன, கோப்புகள் இல்லை என்று கூறுகின்றன நாளேடுகள். மலைகளையும் கால்வாய்களையுமே தொலைக்கத் தெரிந்த அதிகாரிகள் கொண்ட அரசில் கோப்புகள் காணாமல் போவதா பெரிய அதிசயம்?

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது இந்தக் கொள்ளை. கொள்ளையின் மதிப்பு பன்மடங்கு  சில இலட்சம் கோடிகளாக இருக்குமென்பதில் ஐயமில்லை. பண மதிப்பைக் குறிப்பதற்காக இதனைக் கொள்ளை என்று நாம் குறிப்பிட்டாலும், ‘கொள்ளை’ என்ற சொல் இந்தக் குற்றத்தின் முழுப் பரிமாணத்தையும் சுட்டவில்லை. இந்தக் கொள்ளைக்குள் கொலை, இலஞ்சம், மோசடி, நம்பிக்கைத் துரோகம், தேசத்துரோகம், சூழல் நாசம், இயற்கைவளம், விவசாய அழிப்பு உள்ளிட்ட எல்லாப் பாதகங்களும் அடங்கியுள்ளன.

பி.ஆர்.பழனிச்சாமி என்றொரு திருடன் முதன்மைக் கொள்ளையனாக இருந்த போதிலும், பழனிச்சாமி, துரை தயாநிதி போன்றவர்கள் மட்டுமே இந்தக் குற்றவாளிகள் கூட்டத்தின் முழுமையைக் காட்டவில்லை. தலையாரியில் தொடங்கி ஆட்சியர், அமைச்சர்கள் வரையிலான எல்லாத்துறை அதிகாரிகள் மற்றும் எல்லா ஓட்டுப்பொறுக்கிகளும் குற்றக்கூண்டில் நிற்கிறார்கள்.

மக்கள் மீதோ, இந்த மண்ணின் மீதோ, நம் தொன்மை மரபின் மீதோ, இயற்கை வளங்கள் மீதோ, அறநெறிகளின் மீதோ எவ்வித மதிப்புமற்ற ஒரு பெரும் கூட்டம் இந்தச் சூறையாடலில் ஈடுபட்டிருக்கிறது. குவாரிகளின் வெடிச்சத்தத்தில் தூக்கியெறியப்பட்டுப் புழுதியைப் போலக் காற்றில் கலந்து காணாமல் போய் விட்டது அந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்க்கை. இந்தக் குற்றத்தின் கொடூரத்தை உணர்த்தும் சாட்சியமாக வெட்டுப்பட்ட கழுத்தைப் போல, இரத்தம் கசிய நிற்கிறது சக்கரமலை.

பிரெஞ்சுப் புரட்சியின் கிலெட்டினில் வெட்டுப்பட்டுச் சரிந்த முண்டங்களின் ஓவியம் நினைவுக்கு வருகிறது. ஒவ்வொருவராகத் தண்டிக்க முடியாத அளவுக்கு பிரபுக்குல குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், அன்று கிலெட்டின் பயன்படுத்தப்பட்டதென்று கூறுவார்கள். குற்றவாளிகளின் எண்ணிக்கை மட்டுமல்ல, குற்றவாளிகளுக்கு எதிரான மக்கள் கோபத்தின் வடிவமாகவும் கிலெட்டின் இருந்தது. இருக்கிறது.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

  1. வினவு உங்க பதிவு சரியில்லை!
    நான் ஜட்டி போடாத காலத்தில் இருந்து இந்த கொள்ளை நடக்குது!

    சகாயம் I.A.S இதை கண்டு பிடிச்சாமதிரி ஒரு பில்ட் அப். சரி ஒரு விவாதத்திற்கு…

    சகாயம் I.A.S இப்ப இந்த குற்றத்தைக் கண்டுபிடிச்சார். சரி…
    சகாயம் என்ற I.A.S – க்கு முன் இந்த மாவட்டத்தில் இருந்த 37 Collector – கள் பற்றி அவருடைய அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார்? அவருடைய –Report-ல்? அதாவது அவர்களுக்கு இந்த கொள்ளைகள் பற்றி ஒன்றும் தெரியாதென்றா? தெரியாது என்றால் அவர்கள் எல்லாம் என்ன புடலங்கா Collector – களா???

    அந்த மலைமுழுங்கி மாகதேவங்களுடன் கூட்டு கொள்ளை அடித்த அந்த 37 Collector-கள் பற்றி ஒன்றும் சகாயம் I.A.S சொல்லவில்லையென்றால்,

    சகாயம் I.A.S – உம் ஒரு வெங்காயமே!

    • சகாயம் நீதிபதியல்ல. குற்றத்தை வெளிக்கொண்டுவந்தார். அதுவே பெரிய விஷயம் தான்.

      நியாயமாக நடப்பவர்களை பற்றி தவறாக பேசக்கூடாது.

    • நம்பள்கி,

      திரு.சகாயம் விசாரணை கமிசன் நடத்தவில்லை.. சுவிட்சைப் போட்டு மெகாக் கொள்ளையை வெளிச்சம் காட்டியிருக்கிறார்.. துவைத்துக் காயப் போடும் வேலையை வினவு,பு.ஜ. போன்றவை செவ்வனே செய்துவிட்டிருக்கிறார்கள்.. பாராட்டுக்கள்..

      திரு.சகாயம் போன்று எல்லா மாவட்டங்களிலும், துறைகளிலும் ஒரு சகாயம், ஒரு உமாசங்கர் இருந்தாலும் போதும்.. இந்தியா வல்லரசாகிறதோ இல்லையோ நல்லரசாகிவிடும் என்ற நம்பிக்கை வீண்போகாது.. சராசரியாக வருடம் ஒரு இடமாற்றத்தைச் சந்தித்து, உயிருக்குத் துணிந்து மக்களின் பக்கம் உறுதியாக நிற்கும் திரு.சகாயம் அவர்கள்தான் தமிழக மக்களின் நிஜ ஹீரோ..

  2. இந்திய ஜனநாயகத்தையும் முதலாளிதுவத்தையும் தூக்கி முட்டுகொடுப்பவர்கள் எல்லாம் எங்க காணோம்…..

    இந்த நாட்டில் மயிரளவு தண்டனைக்கூட இவர்களுக்கு கிடைக்காது, அந்த திமிரில்தான் இந்த ஆட்டம்போடுகிறார்கள். இவர்களின் சிறை தண்டனைக்கூட எல்லாம் கிடைக்கும் சொர்க்கமாகத்தான் இருக்கும் இன்னும் இந்த ஜனநாயகத்தை ஒருவன் நம்புவான் என்றால் அவனைவிட ஒரு முட்டாள் இருக்கவே முடியாது.

  3. பொது மன்னிப்பு தேவை அல்ல, பொது மக்கள் முன்னிலையில் பொது தண்டனை தேவை எல்லா குற்றவாளிகளுக்கும்………. நடக்குமா?

  4. It is Noteworthy to recall Dr.Kalainger Karunanidhis dream project of scupture city(Sirpa Nagaram)over the anaimalai hills of Melur,Madurai Dist. He is the guardian of Dravidian culture and glory. But some regressive and reactionary locals opposed such an idea and wanted the Melur hills to be left free.It might have been an Aryan conspiracy against the Tamil Sudras

  5. எனது கேள்வியின் ஆழத்தை உங்களுக்கு சரியாக புரியவைக்கவில்லை என்று நினைக்கிறன்!

    இது வரைக்கும் இதைப் பற்றி எழுதாத பத்திரிக்கைகள் எதுவும் கிடையாது! எதனை ஆயிரம் பெட்டிஷன்கள். அதாவது சகாயம் அய்யா சொன்னபடி பல பல கோடிகள் கொள்ளை பல பல வருடங்களாக இது நடக்கிறது.

    படிப்பறிவில்லாத மாடு மேய்க்கும் பையனுக்கும் தெரியும்; ஏன் இந்த 37 கலெக்டர்களுக்கு தெரியவில்லை? ஒரு வேளை அவர்களுக்கு வந்த பெட்டிஷன்கள் தமிழில் இருந்திருக்கலாம். இந்த 37 கலெக்டர்களுக்கும் தாமல் தமிழ் தெரியாமல் இருந்திருக்கலாம்.

    எனது கேள்வி அம்பிக்கும், AAR அவர்களுக்கும் இது தான்…
    மனதை தொட்டு சொல்லுங்கள்…

    அழகிரி சம்பந்தப்படாமல், “ஒரு அதிமுக” பெரும்புள்ளி மட்டும் இதில் சம்பந்தப்பட்டு இருந்தால் சகாயம் அய்யா இந்த நடவடிக்கை எடுத்திருப்பாரா!!!

  6. அம்பிக்கு அடுத்த கேள்வி.

    முன்குறிப்பு: சகாயம் ஒரு நேர்மையான அதிகாரி; நல்ல மனிதர்; அவர் பேச்சையும் கேட்டுள்ளேன்; அவர் மீது இம்மியளவு கூட ஏன் குற்றச்சாட்டு கிடையாது…கேள்வியைப் படியுங்கள்.

    முடிந்தால் பதில் கொடுங்கள்…அம்பி மட்டுமல்ல.. வினவும் தான்…

    சகாயம் அய்யா குறைந்தது ஒரு 15 or 20 வருடங்கள் I.A.S -ஆக இருக்கிறார். இது வரை எத்தனை இடங்களில் இது மாதிரி ஊழல்களை கண்டுபிடித்து இருக்கிறரர்? ஒன்று இரண்டு சிறிய ஊழல்கள் கண்டுபிடித்து இருக்கலாம்.

    அதையும் [சிறிய ஊழல்கள்] சொல்லுங்கள்…
    மெகா ஊழல்கள் ஏதாவது கண்டுபிடித்து இருக்கிறாரா? அதையும் சொல்லுங்கள்.

    இல்லை சகாயம் ஐயா வேலைக்கு வருகிறார் என்று அங்கு எங்கும் ஊழல்கள் நடப்பதில்லையா?

    இப்போ பதில் சொல்லுங்க…
    சகாயம் அய்யா வெங்காயமா அல்லது அம்பா?

    • கண்டுபிடித்து, தடுத்த ஊழல்களையெல்லாம் ஊடகங்களில் வெளியிட திரு.சகாயம் பத்திரிக்கையாளர் இல்லை, அரசு அதிகாரி.. மேலதிகாரிகளுக்கு இவர் அனுப்பிய அறிக்கைகள் பலனளித்ததா இல்லையா என்று தெரியாது.. ஆனால் ஊழலுக்கு எதிரான எல்லா நேர்மையான அதிகாரிகளும் தவறாமல் சந்திக்கும் பணி, இட மாற்றங்கள் இவரது 20 ஆண்டுகால சேவையில் 18. ஆட்சிகள் மாறினாலும் இவை தொடர்ந்திருக்கின்றன.. ஒவ்வோர் இடத்திலும் இவரது நேர்மையால் பலனடைந்த மக்களின் ஆதரவும் கூட..

      http://www.outlookindia.com/article.aspx?277990

  7. The First person who hosted This Vast Scam is Mr.Saghayam. Don’t Blame him for not complaining previous 37 dist collectors.We should to be HIGHLY GRATITUDABLE to his NOBLE Service. It’s not alone political parties based.But the whole society is extremely damaged. Everyone is ready to do any kind of malpractices for MONEY. I don’t know what we are going to do with this abnormally accumalated assets&cash.Nothing is brought alongwith us while we go out. Money is highly essential for life – I agree.But MONEY alone is not life.Big Giant PRP was forced to sleep in the floor of police station.What’s the use in Keeping CRORES? We should make a SELF ceiling on all our ambitions. WITHOUT putting efforts, our society is Expecting Results.This should be removed from our MINDSET

  8. Outlook is JUST another magazine.period.

    கண்டுபிடித்து, தடுத்த ஊழல்களையெல்லாம் ஊடகங்களில் வெளியிட திரு.சகாயம் பத்திரிக்கையாளர் இல்லை

    A collector can call a press meet and release all info; he is NOT bound by the rulers. More Importantly, a collector has so much power that he can investigate on his own. The collector is bound, yes, bound, by the law to stop a crime.

    A collector has EVEN Threaten to arrest one DMK minister in the past in the Govt. Inspection Bungalow.

    Finally a judge can sue these guys what is known as suo motto in the court of law!

    Outlook is JUST another INDIAN magazine; nothing more to elaborate!

Leave a Reply to நம்பள்கி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க