privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்துமதவெறியின் பிடியிலிருந்து குமரியை மீட்பது எப்போது?

இந்துமதவெறியின் பிடியிலிருந்து குமரியை மீட்பது எப்போது?

-

செய்தி -94

நித்திரவிளை-படுகொலை1

குமரி மாவட்டம் நித்திரவிளையில் கிறிஸ்தவ இளைஞரை ஆ.எஸ்.எஸ்– பா.ஜ.க கும்பல் அடித்துக் கொன்ற செய்தி வெளியானது  நினைவிருக்கலாம். வழக்கமாக, வடமாநிலங்களில் நடக்கும் ஒவ்வொரு வன்முறை வெறியாட்டமும் பா.ஜ.கவுக்கு சிறந்த அறுவடையை வழங்கி வந்துள்ளது. நித்திரவிளை சம்பவமும் அப்படியொரு வாய்ப்பை வழங்காதா? என்ற ஏக்கத்தில் உள்ளது பா.ஜ.க.

தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க, குமரியில் உள்ள போதும் ஒரே ஒரு முறை தவிர்த்து ஒரு எம்.பியையோ, எம்.எல்.ஏவையோ பெற முடியாத நிலையில் இருக்கிறது.  மேலும் சிறுபான்மை மக்களை நிரந்தர அச்சத்தில் உழல வைக்கும் ஆர்.எஸ்.எஸின் பாசிச செயல்திட்டத்திற்கும் குமரியின் தனிச்சிறப்பான நிலைமைகளும், பண்பாட்டு காரணங்களும் இடமளிக்கவில்லை. இந்த விரக்தியே எட்வின் ராஜ் கொலையில் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால்,  கொலை போன்றதொரு வெறியாட்டத்திற்கு அங்குள்ள இந்து நாடார்களிடம் ஆதரவை பெறுவது ஆர்.எஸ்.எஸுக்ககு சற்று சிரமமாக இருக்கிறது.

மட்டுமின்றி,பாராளுமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டிலோ, உடனேயோ கூட வர வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் சிறுபான்மையினர்  எதிர்ப்பை  சம்பாதிப்பது  நல்லதல்ல  என்று  ஜெயலலிதா நினைக்கிறார்  போலும் . இது  ஆகஸ்டு 30 அன்று  பா.ஜ.க  மார்த்தாண்டத்தில் நடத்திய மறியல் போராட்டத்தில் உணர  முடிந்தது.  மறியலுக்கு கிளம்பிய ஆர்.எஸ்.எஸ் கும்பலை உடனே கைது செய்து அனைவர் மீதும் வழக்கு பதிய செய்யவும் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

ஜெயலலிதாவின் தோற்றத்தில் பெண் மோடியை காண விழையும் பா.ஜ.கவிற்கு இது பீதியை ஏற்படுத்தியுள்ளது. மறியல் போராட்டத்திற்கு வந்த மாநில பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் ஒப்பாரியில் இதனை உணர முடிந்தது. ‘குமரி மாவட்டத்தில் பா.ஜ.கவை அழிக்க சதி நடப்பதாக’ கூவினார். ‘உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தியே இந்த போராட்டம்’  என்று கூறினார். அதாவது எட்வின் ராஜ் கொலைக்கு கிறிஸ்தவர்களையே கைது செய்ய வேண்டும் என்பது ராதாகிருஷ்ணனின் வாதம். இதனை மறு கேள்வியின்றி பிரசுரித்தன பத்திரிகைகள்.

மேலும் குமரி மாவட்டத்தில் வேணுகோபால் கமிஷன் அறிக்கையை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் அவர்(!) கோரிக்கை விடுத்தார். மண்டைக்காடு கலவரத்தை தொடர்ந்து அமைக்கப்பட்ட வேணுகோபால் கமிஷன் புதிதாக கோயில்கள் மற்றும் தேவாலயங்கள் கட்டுவதற்கு சில விதிமுறைகளை வகுத்தது. ஏற்கனவே ஒரு சர்ச்சோ அல்லது கோவிலோ இருக்கும் பட்சத்தில் 3 கி.மீ. தூரத்திற்கு மாற்றுமத ஆலயம் அமைக்கக்கூடாது என்று கூறுகிறது. ஆனால், எட்வின் ராஜ் இந்து கோயிலின் அருகாமையில் தேவாலயம் கட்ட சென்றதால் கொல்லப்படவில்லை. (பார்க்கவும் : முதல் கட்டுரை). இப்படி பச்சை பொய்யுரைத்து தமது பாசிச வெறியாட்டத்திற்கு நியாயம் கற்பிக்க முயல்கிறது பா.ஜ.க பாசிச கும்பல்.

குமரி மக்கள் நித்திரவிளை சம்பவத்தை வெளிப்படையாக பேசுவதற்கே பயப்படுகிறார்கள். தமது சொந்த வாழ்க்கைப்பாடுகளில் மேலும் தீவிரத்துடன் இயங்கி நித்திரவிளையை மறக்க முயல்கிறார்கள். பத்திரிகைகள் மிகவும் இறுக்கமாக செய்தி வெளியிடுகின்றன. இப்பிரச்சினையை அரசியலற்ற முறையில் எதிர்கொள்வதே ஆபத்தில்லாதது என்ற முடிவில் இருக்கின்றன ‘மதச்சார்பற்ற’  ஓட்டுக்கட்சிகள். இப்பிரச்சினையை அரசியல் அரங்கில் எடுத்து சென்றால் இந்துக்களின் கோப எதிர்வினைக்கு (a Hindu backlash ) ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்தில் அவை உறைந்துள்ளன.

ஒரு போஸ்டர் ஓட்டவோ, பிரசுரம் விநியோகிக்கவோ அல்லது அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் ஒரு பொதுக்கூட்டம் போன்ற எந்த அரசியல் செயல்பாடும் இன்றி ‘அமைதியாக’ முழுமையான போலிஸ் கண்காணிப்பில் இருக்கிறது, குமரி மாவட்டம்.

எட்வின்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தர்மராஜை எப்படியாவது தப்ப வைக்க வேண்டும் என்பது தான் பா.ஜ,கவின் திட்டம். இது குறித்து ஜெயலலிதாவுக்கு பா..ஜ.க மேலிடம் மூலம் அழுத்தம் கொடுத்திருப்பதாக செய்தி உலவுகிறது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளது கண்துடைப்பு நடவடிக்கையாகவே இருக்கிறது. இதனை கிறித்தவ மக்கள் அறிந்தே உள்ளனர். அதனால் தான் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதன்படி பாதிரியார்கள் கடந்த 31 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். இதில் பா.ஜ.க தவிர்த்து அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.

இதில் என்ன முடிவு எடுத்தார்கள் தெரியுமா? வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி அனைத்து கிறிஸ்தவ தேவலயங்களிலும் கருப்புக்கொடி ஏற்றப்படும்; பின்னர் ஆராதனை முடிந்து மவுன ஊர்வலம் நடத்தப்படும் என்று முடிவாகியுள்ளது.

ஓர் எம்.பி மற்றும் எம்.எல்.ஏவை பெற்றுள்ள தி.மு.கவிற்கோ அல்லது ஒரு லட்சம் உறுப்பினர்களை குமரியில் கணக்கு காட்டும் சி.பி.எம்.மிற்கோ, சுதந்திர காலத்தில் இருந்து குமரியில் செல்வாக்குடன் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கோ  தமது சொந்த முயற்சியில் ஓர் அனைத்துக் கட்சி கூட்டத்தை ஒருங்கிணைத்து ஏன் ஓர் அரசியல் நடவடிக்கையை தீர்மானிக்க முடியவில்லை? ஏன் இந்த பாதிரிகளின் பாவாடைக்குள் ஓடி ஒளிகிறார்கள்?

பா.ஜ.க வெற்றிபெறும் இடம் இது தான். இந்த கூட்டம் முடிந்த மறு நாள் விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவன் காளியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘குமரி அரசியல் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நடந்து கொள்ள வேண்டும்; மத பிரதிநிதிகளாக நடந்து கொள்ள கூடாது’ என்று குறிப்பிட்டார்.  பாதிரிகளின் அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பிரமுகர் காரவிளை செல்வினை பேச விடாமல் வெளியேற்றியுள்ளனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வந்த கிறிஸ்து பிறப்பு நாளின் போது குமரி மாவட்டம் அருமனையில் ஜெயலலிதாவுடன் கிறிஸ்மஸ் விருந்து உண்டவர்கள் இதே பாதிரிகள். சமச்சீர் கல்வி கொண்டு வந்ததால் கிறிஸ்தவ பள்ளி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டதாக சொல்லி, அந்த தேர்தலில் அதிமுகவை ஆதரிக்க வெளிப்படையாக கிறிஸ்தவர்களை கேட்டு கொண்டவர்கள் இந்த பாதிரிகள். எனவே இந்து மதவெறியை எதிர்ப்பதோடு கிறிஸ்தவ மக்களை தமது சொந்த லாப நோக்க விருப்புகளுக்கு உட்படுத்தும் பாதிரிகளையும் ஒருங்கே அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது.

கொலை நடந்த சில தினங்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில், பேருந்தின் பின்வரிசையில் சில பெரிசுகள் பேசி கொண்டிருந்தார்கள். முத்துக்குட்டி சாமியின் (அய்யா வைகுண்டர்) “வாழ்க்கையை படம் எடுக்கப் போறாங்களாம். அதனை இந்த தலைமுறை பார்த்தால் கொஞ்சம் கொள்ளாம் (நல்லாயிருக்கும்).”

‘மதம் ஏதாயிலும் மனிஷன் நன்ன்னாயிருக்கணும்’ போன்ற சிந்தனைகளை பரப்பிய சிறீ நாராயணகுரு, அய்யா வைகுண்டர் ஆகியோர் வாழ்ந்த மண், குமரி. இன்று அவர்கள் சாதிய திருவுருக்கள் ஆகிவிட்டார்கள். மீட்பரின் இரண்டாம் வருகைக்காக காத்திருந்த மக்களிடமோ ஆற்றுப்படுத்த முடியாத சோர்வும், சோகமும் நிரம்பியிக்கின்றன. குமரி இப்போது புரட்சிகர அரசியலின் தேவைக்காக உக்கிரமாக காத்துக் கொண்டிருக்கிறது.

_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. கன்னியாகுமரி,நாகர்கோவில் உள்ள இளைஞர்களை இந்து மக்கள் முண்ணனி போன்ற கட்சியில் இணைத்து கிறிஸ்த்துவ இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வன்முறையினை நிகழ்த்துகின்றனர்.இதற்கு விநாயகர் சதுர்த்தியில் கன்னியாகுமரியில் ஏற்படும் வன்முறையே எடுத்துக்காட்டு

  2. // முத்துக்குட்டி சாமியின் (அய்யா வைகுண்டர்) “வாழ்க்கையை படம் எடுக்கப் போறாங்களாம். அதனை இந்த தலைமுறை பார்த்தால் கொஞ்சம் கொள்ளாம் (நல்லாயிருக்கும்).”

    ‘மதம் ஏதாயிலும் மனிஷன் நன்ன்னாயிருக்கணும்’ போன்ற சிந்தனைகளை பரப்பிய சிறீ நாராயணகுரு, அய்யா வைகுண்டர் ஆகியோர் வாழ்ந்த மண், குமரி. இன்று அவர்கள் சாதிய திருவுருக்கள் ஆகிவிட்டார்கள்.
    //

    இந்த இரு பெரும் ஆன்மீக ஞானிகளின் சிந்தனைகளும், சாதனைகளும் அனைத்து தமிழ் மக்களுக்கும் தெரியாமல் போனதும் அவர்கள் சாதிய திருவுருக்கள் ஆகிவிட்டதற்கு ஒரு காரணம்..

  3. பணம் சம்பாரிப்பதே குறிக்கோளாக கொண்டிருக்கும் தமிழனை திடீரென மதத்தின் மேல் கவனத்தை திருப்பிக்கொண்டிருக்கும் போக்கின் ஆரம்ப செயல் எது ?

    உப்புமா கட்சியான பஜக தமிழ்நாட்டில் எங்குமே தேறாத நிலையில் மக்களே கண்டுகொல்லாத நிலையில் இருக்குது. ஆனா சில இடங்களில் மட்டும் அந்த மதவாத கட்சி வளர்வதற்கு அடிப்படை காரணம் என்னவோ ?

Leave a Reply to குய்யோ முய்யோ பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க