privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு!

மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு!

-

கிரானைட்-ஊழல்லைக்கள்ளன் பி.ஆர். பழனிச்சாமி கைது செய்யப்பட்டுவிட்டாராம். கைது என்று குறிக்கும் முகமாக போலீசார் கைதியின் கையைப் பற்றுவது வழக்கம். பழனிச்சாமி கைது காட்சியைப் பார்த்தால், பதவியேற்பு விழாவுக்கு அமைச்சர் செல்வது போல இருக்கிறது. போலீசு உயரதிகாரிகள் பயபக்தியாக உடன் நடந்து வருகிறார்கள். கைது செய்து 24 மணிநேரத்தில் நீதிமன்றத்திற்குக் கொண்டுவராமல், 6 மணிநேரம் அதிகம் எடுத்துக் கொண்டது ஏன் என்று சீறுகிறார் நீதிபதி. நீதிமன்றத்தில் பழனிச்சாமிக்கு நாற்காலி போடப்படுகிறது. போலீசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே அவருடைய தனிப்பட்ட மருத்துவர் வந்து சோதனை செய்கிறார். போலீசு விசாரணையின் போது தனக்குத் தூக்கம் வருவதாக பி.ஆர்.பி. கூறியவுடன் விசாரணைக்கு இடைவேளை விடப்படுகிறது. சிறையில் முதல்வகுப்பு கொடுக்குமாறு நீதிபதி நினைவுபடுத்துகிறார். பி.ஆர்.பி. யின் மகன்கள், துரை தயாநிதி ஆகியோர் மீது வழக்கிருந்தும் போலீசு அவர்களைத் தேடவில்லை. அவர்கள் முன் ஜாமீன் போட்டிருக்கிறார்கள். கைது செய்யமாட்டோம் என்று உயர் நீதிமன்றத்துக்கு அரசாங்கம்  உறுதி அளிக்கிறது.

இதற்குப் பெயர் அம்மாவின் கடுமையான நடவடிக்கையாம். “யாராயிருந்தாலும் விடவேண்டாம்” என்று அம்மா கூறிவிட்டதால், பழனிச்சாமியுடன் தொடர்புள்ள ஓ.பி.எஸ். போன்ற அ.தி.மு.க. வினர் பீதியில் இருக்கிறார்களாம். துக்ளக், ஜுவி முதலான பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதுகின்றன. சகாயத்தின் கடிதத்தைக்கூட அதிகாரிகள் அம்மாவுக்கு மறைத்து விட்டதாகவும், சகாயம் மாற்றப்பட்டதுகூட அம்மாவின் கவனத்துக்கே வராமல் நடந்து விட்டதாகவும் கூச்சமே இல்லாமல் புளுகுகிறது  ஜூவி.

ஓராண்டிற்கு முன்பே தினபூமி நாளிதழ் ஆதாரப்பூர்வமாக இந்தக் கொள்ளையை வெளியிட்டது. உடனே தி.மு.க. ஆட்சி தினபூமி ஆசிரியரை வழிப்பறி வழக்கில் கைது செய்தது. சகாயத்தின் கடிதத்தை அன்பழகன் என்றொரு பத்திரிகையாளர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்கி பத்திரிகையில் வெளியிட்ட பின்னர்தான், வேறு வழியின்றி தற்போதைய நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன.

நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க.வின் முக்கிய புள்ளிகளை ரவுண்டு கட்டிச் சிறையிலடைத்த ஜெயலலிதா, இன்று கருணாநிதியின் குடும்பம் நேரடியாகச் சிக்கியுள்ள இந்தக் கொள்ளையைப் பயன்படுத்திக் கொள்ளாமலிருப்பதற்குக் காரணம், இதில் அ.தி.மு.க. வினரும் சம்மந்தப்பட்டிருப்பது மட்டுமல்ல, மொத்த அதிகாரவர்க்கமும் இதில் சம்மந்தப்பட்டிருப்பதுதான்.

கிரானைட் கொள்ளைவழக்கில் அம்மாதான் பி.ஆர்.பி.யை விடவும் மூத்த ‘அக்யூஸ்டு’.  தமிழகத்தின் கிரானைட் சுரங்கங்கள் அனைத்தும் தமிழ்நாடு மினரல்ஸ் (டாமின்) நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தன. ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில்தான், “ரெய்சிங் அண்டு சேல்” முறையில்  தனியார் முதலாளிகள் சொந்தமாக கிரானைட் குவாரிகள் அமைத்துக்கொள்ள ஏதுவாகச் சட்டம் இயற்றப்பட்டு, இவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. அன்று “37 கோடி ரூபாய் இலஞ்சம் வாங்கிக் கொண்டு, டாமினுக்குச் சொந்தமான சுரங்கங்களின் உரிமத்தை, முறைகேடாகத் தனியாருக்கு கொடுத்தார்” என்று ஜெ. மீதும், அன்றைய டாமின் தலைமை அதிகாரி தியானேஸ்வரன் மீதும் 1997இல் தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. ஆனால், மீண்டும் ஜெயலலிதா முதல்வரானதும் 2004இல்  இந்த வழக்கு ஊத்தி மூடப்பட்டது. அண்ணன் அழகிரி கிரானைட் கொள்ளையில் இறங்கிவிடவே, மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க. இந்த வழக்கு விவகாரத்தை கிளறவில்லை.

ஒரிஜினல் மலைக்கள்ளன் எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கிரானைட் கொள்ளையின் வரலாறு துவங்குகிறது. சாராய உடையாரையும், ஜேப்பியாரையும் உருவாக்கிய எம்.ஜி.ஆர், கிரானைட் மலைகளை உடைத்து விற்பதற்கு 1978இல் டாமின் நிறுவனத்தைத் தொடங்கி, அதற்குத் தனது நண்பரான நிலவியல் துறை பேராசிரியர் சரவணன் என்ற திருடனை தலைவராக நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் இருந்த கிரானைட் சுரங்கங்களை ’டைகோ’ என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விட்டுப் பல கோடிகளைக் கொள்ளையடித்தார் சரவணன்.

1989இல் கருணாநிதி ஆட்சியில் இவர் மீது வழக்கு பதியப்பட்டுத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் 1991இல் ஜெயலலிதா வந்தவுடன் சரவணன் மீண்டும் டாமின் தலைவராக்கப் பட்டார். பின்னர் சரவணனை விருப்ப ஓய்வில் அனுப்பி விட்டு, தொழிலை தொடர்வதற்கு தியானேசுவரனை நியமித்தார் அம்மா.

ஓய்வு பெற்ற பின் ‘மாபெரும் பக்திமானாக’, சென்னை அசோக் நகரில் செட்டிலாகி இருந்த சரவணன், 2008ஆம் ஆண்டு மர்மமான முறையில், அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு, நகைகளும் வெளிநாட்டு கரன்சிகளும் களவு போயின. சரவணனுக்கு ஸ்விஸ் வங்கியிலெல்லாம் பணமிருப்பதாகவும் அப்போது நாளேடுகளில் செய்தி வந்தது. அந்த திருட்டுச் சொத்துக்கள் யாருக்குச் சேர்ந்தன என்பது போலீசுக்குத்தான் வெளிச்சம்.

ஆட்சி மாறியவுடன் பேருந்து நிலைய சைக்கிள் நிறுத்தம், கட்டணக் கழிப்பறை போன்றவற்றில் சம்பாதிக்கும் உரிமையை சுமுகமாக அடுத்த கட்சிக்கு கைமாற்றிக் விடுவதைப் போல, மணல், கிரானைட் போன்ற இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் பி.ஆர்.பி. போன்றோரிடம் பங்கு வாங்குவதிலும், தொழில் கூட்டுச் சேர்ந்து கொள்வதிலும், பங்கு பிரித்துக் கொள்வதிலும் சர்வ கட்சிகளும்  ஒரு சுமுகமான கூட்டினைப் பேணி வருகின்றனர். தனியார்மயம் இந்தக் கொள்ளைகளில் பெரும்பகுதியை சட்டபூர்வமாக்கிவிட்டது.

மதுரையின் வடக்கு எல்லையில் உள்ள ஆனைமலை என்ற குன்று மக்களின் அபிமானத்துக்குரியது. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அந்தக் குன்றை அறுத்து விற்பனை செய்ய முயன்றது பி.ஆர்.பி.அழகிரி கூட்டணி. ஆனால், மக்கள் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. இமயமோ, பொதிகையோ எதுவானாலும், அது நோட்டுக்கட்டின் உருவமாகவே மலைக்கள்ளர்களுக்கு தெரிகிறது. “அக்கா, தங்கச்சி, பெண்டாட்டி, பிள்ளைகூட உனக்கு ரூவா நோட்டாகத்தான் தெரியுமா?” என்று அழகிரியையோ பி.ஆர்.பி.யையோ மக்கள் கேட்டால், “அதுக்கெல்லாம் கிரானைட் அளவுக்கு விலை வராது” என்று அவர்கள் கோபப்படாமல் பதிலளிக்ககூடும்.

இயற்கை வளங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களைத் தமது சொந்த சொத்தாக எண்ணி, அவற்றைப் பாதுகாக்க மக்கள் அணிதிரண்டு இந்தக் கொள்ளையர்களை மோதி அழிக்காத வரை இந்தக் கொள்ளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

_______________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: