privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்பவர் ஸ்டார் கைது! உசுப்பி விட்ட ஊடகங்களுக்கு என்ன தண்டனை?

பவர் ஸ்டார் கைது! உசுப்பி விட்ட ஊடகங்களுக்கு என்ன தண்டனை?

-

டந்த 14ஆம் தேதி அந்தச் செய்தி வெளியானபோது, பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். ‘பவர் ஸ்டார்’ என்னும் அடைமொழியை தனக்குத்தானே சூட்டிக் கொண்டு வலம் வரும் சீனிவாசன் என்னும் நபர், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது அன்றுதான்.

சென்னை குரோம்பேட்டை கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் வேலூரில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். தொழிலை மேம்படுத்த நடிகர் சீனிவாசனின் பாபா டிரேடிங் கம்பெனி என்ற நிறுவனம் மூலம் ரூ. 10 கோடி கடன் ஏற்பாடு செய்துத் தர கோரியுள்ளார். இதற்கு ரூ. 65 லட்சத்தை கமிஷனாக பெற்றுக்கொண்ட சீனிவாசன், பல வாரங்கள் ஆகியும், கடன் பெற்றுத்தரவில்லை. அத்துடன் கமிஷன் பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனையடுத்து பாலசுப்பிரமணியம் காவல்நிலையத்தில் புகார் தர, ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த சீனிவாசனை கீழ்ப்பாக்கம் போலிசார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இப்போது 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அடுத்தடுத்து புகார்கள் வந்தபடி இருக்கின்றன. வெளிமாநிலங்களை சேர்ந்த இரண்டு பேரிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்துள்ளதும், சில மாதங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த வரதராஜன் என்பவரிடம் ரூ.12 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.60 லட்சத்தை கமிஷனாக பெற்றுக் கொண்டு கம்பி நீட்டியிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இன்னும் இதுபோல் நிறைய புகார்கள் வரலாம் என்கிறது காவல்துறை.

ஆக, சீனிவாசன் ஒரு போர்ஜரி பேர்வழி என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.

இத்தனைக்கும் ‘லத்திகா’ என்னும் ஒரேயொரு படத்தில் மட்டுமே கதாநயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை தயாரித்தவரும் இவரேதான். சென்ற ஆண்டு வெளியான இந்தப் படம், சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ஓராண்டுக் காலம் ஓடியிருக்கிறது. அதாவது பணம் கொடுத்து இவரே ‘ஓட’ வைத்திருக்கிறார். எந்நேரமும் 50 பேர் சூழ வலம் வருவதும், எப்போதும் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பதும் இவரது அடையாளங்கள்.

பவர்-ஸ்டார்டாக்டர் என அழைக்கப்பட்டாலும் இவர் அலோபதி மருத்துவர் அல்ல. அக்கு பஞ்சர் மருத்துவர். ஆனால், அந்தப் படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத போலி மருத்துவர், எய்ட்ஸ் நோய்க்கு மருந்து தருவதாகச் சொல்லி பலரை ஏமாற்றியவர், அந்த வழக்கெல்லாம் நிலுவையில் இருக்கின்றன… என இப்போது செய்தி ஊடகங்கள் எழுதுகின்றன.

ஆனால், இதே ஊடகங்கள்தான் நேற்று வரை சீனிவாசனை தலையில் தூக்கி வைத்தும் கொண்டாடின. இவர் பேசியதை எல்லாம் பேட்டியாகவும் வெளியிட்டன. ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் போன்ற வார இதழ்களில் ஆரம்பித்து தின மலர் நாளிதழ் வரை யாருமே இதற்கு விதிவிலக்கல்ல. விஜய் டிவி ஒருபடி மேலே சென்று ‘நீயா நானா’வில் ஆரம்பித்து பல டாக் ஷோவில் இவரை பங்கேற்க வைத்திருக்கிறது.

ஆனால், குண்டூசி முனையளவு கூட ‘எங்கிருந்து உங்களுக்கு இவ்வளவு பணம் கிடைக்கிறது?’ என்ற கேள்வியை யாருமே எழுப்பவில்லை. இப்போது ‘சட்டப்படி’ கைது செய்யப்பட்டதும் ‘புலனாய்வு’ செய்து சீனிவாசனின் அனைத்து கிரிமினல் நடவடிக்கைகளையும் ஊடகங்கள் வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. அதாவது ‘சட்டப்படி’ சிக்காத வரை ஒருவர் ‘எப்படி’ சம்பாதித்தாலும் ஊடகங்கள் அதை கண்டு கொள்ளாது. கேள்வி எழுப்பாது. இதற்கு உதாரணம், நேற்று நடிகர் ஜே.கே.ரித்திஷ் என்றால், இன்று ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்.

ஓட்டுப் பொறுக்கி கட்சிகளும் இதே வழிமுறையைத்தான் பின்பற்றுகின்றன. திமுக, ஜே.கே.ரித்திஷை தன் கட்சி உறுப்பினராக சேர்த்துக் கொண்டு, எம்பி சீட் கொடுத்தது என்றால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை ஆதரித்து சில மாதங்களுக்கு முன்பு வரை அழகு பார்த்திருக்கிறது.

ஆக, இந்த ‘ஜனநாயக’ நாட்டில் பணம் இருக்கிறதா? அதுபோதும். இந்தா பிடி, ‘வள்ளல்’, ‘பவர் ஸ்டார்’, பட்டங்களை. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு சேவை செய்ய முன்வந்தாலும் மகிழ்ச்சியே. மற்றபடி எங்கிருந்து எப்படி பணம் வந்தது – வருகிறது – என்பதெல்லாம் தேவையில்லாத விஷயம்.

சீனிவாசனின் கைது, இந்தப் போலித்தனத்தைதான் மீண்டும் உணர்த்தியிருக்கிறது.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: