privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபுதிய வடிவமைப்பில் வினவு!

புதிய வடிவமைப்பில் வினவு!

-

வினவு

கஸ்டு 21 அன்று “வினவு செய்திகள்” என்பதை சோதனை முயற்சியாக துவங்கினோம். புதிய தேவைக்குப் பொருத்தமாக தளத்தின் வடிவமைப்பை மாற்றும் முயற்சியையும் அப்போதே தொடங்கி விட்டோம். செய்திகளுடன், வினவின் கட்டுரைகள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் கட்டுரைகளையும் முகப்புப் பக்கத்தில் கொண்டிருப்பதாக புதிய வடிவமைப்பு அமைய வேண்டும் என திட்டமிட்டோம்.

முந்தைய வடிவமைப்பில், முக்கியமான கட்டுரைகள் முகப்பு பக்கத்திலிருந்து அகன்று விட்டால், பின்னர் அவை வாசகர்களின் பார்வையிலேயே படாமல் போய்விடும் நிலை இருந்தது. தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வடிவமைப்பில். ஒரு மாதத்தில் வெளியிடப்படும் கட்டுரைகள் அனைத்தும், இனி முகப்பு பக்கத்தில் இருக்கும். இதனால் காத்திரமான கட்டுரைகள் ஒரு மாதம் முழுவதுமோ அல்லது பெரும்பாலான நாட்களோ வாசகர் பார்வையில் படும்படி இருக்கும். அயர்ச்சின்றி, புத்துணர்ச்சி குன்றாமல் படிக்கும் விதத்தில் வடிவமும் வண்ணமும் அமையவேண்டும் என்பதையும் கருத்திற்கொண்டு புதிய வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

செய்திப் பதிவுகள் துவங்கி நான்கு வாரங்கள் ஓடி விட்டன. ஆரம்ப  காலப் பதட்டம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. பொதுவாகச் சொன்னால், வினவின் செய்திகள் பரந்த வரவேற்பை பெற்றிருக்கின்றன. கணிசமான புதிய வாசகர்களும் இப்போது வினவிற்கு வருகிறார்கள்.

செய்திகளை தெரிவு செய்வது மற்றும் அவற்றை கூர்மையாகவும் சுருக்கமாகவும் தருவது என்ற விடயத்தில் நாங்கள் நிறைய கற்க வேண்டும். செய்தி வேறு கண்ணோட்டம் வேறு என்றும், செய்தியின் மீது கண்ணோட்டத்தின் கறை படியக்கூடாது என்றும் முதலாளித்துவ ஊடக நெறிக்கு பலியானவர்கள் கூறுகிறார்கள். ஒரு செய்தி குறித்த அவசியமான விவரங்களைத் தருவதன் மூலம், தம் சொந்த கருத்தை வந்தடைகின்ற வாய்ப்பு வாசகருக்குத் தரப்படவேண்டும் என்பது சரியே. ஆனால் சொல்லிக் கொள்ளப்படும் இந்த “நடுநிலை” குறித்த மயக்கம் நமக்கு கூடாது. ஒரு செய்தியை ஆளும் வர்க்க கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கும் வேலையை முதலாளித்துவ ஊடகங்கள் நாசுக்காகவும் திறம்படவும் செய்கின்றன. அதுதான் நடுநிலை என்ற பிரமையையும் வாசகரிடம் ஏற்படுத்தியிருக்கின்றன. இதைக் கண்டுபிடித்து அடையாளம் காட்டுவதற்கே நாங்கள் முயற்சிக்கிறோம்.

வினவு செய்திகள் வெளிவரத் தொடங்கிய பின்னர், ஆழமான கட்டுரைகள் வராமலிருப்பது ஏமாற்றம் தருவதாக சிலர் தெரிவித்திருந்தனர். எமது வேலைப்பளுவே இதற்கு காரணம். இனி செய்திகளுடன் கட்டுரைகளும் முறையாக வெளிவரும். அதே நேரத்தில் நிலக்கரி ஊழல் போன்ற பிரச்சினைகளில் சிறு செய்திகளாகவும் பதிவுகளாகவும் எழுதப்பட்டிருப்பவை ஒரு பெரிய கட்டுரையின் பகுதியாக இருப்பதையும் வாசகர்கள் புரிந்து கொள்ளவியலும்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் பற்றி வினவு அளித்த செய்திகள் வாசகரிடமும், ஊடகத் துறையினரிடையேயும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஒரு தொழில் முறை ஊடகத்துக்குரிய வசதிகள் இல்லாத போதிலும், தோழர்களுடைய முயற்சியின் மூலம் முதலாளித்துவ ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட செய்திகளையும், திரிக்கப்பட்ட செய்திகளையும் வினவில் கொண்டு வந்தோம். முதலாளித்துவ ஊடகங்களுக்கு மாற்றாக, ஒரு புதிய வகைப்பட்ட மக்கள் ஊடகத்தை விரைந்து உருவாக்குவது சாத்தியமே என்ற நம்பிக்கையை இத்தகைய புதிய முயற்சிகள் அளித்துள்ளன.

நான்காண்டுகளுக்கு முன்னர் வினவு, ஒரு வலைப்பூவாக தொடங்கப்பட்ட அந்த தருணம், இன்று ஒரு பழைய நினைவு. அன்று வினவு எங்கள் கையில் இருந்தது. இன்று நாங்கள் அதன் கையில் இருக்கிறோம். உங்கள் கையில் இருக்கிறோம் என்றும் சொல்லலாம்.

நன்றி.

வினவு