privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -4

கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -4

-

னக்கு ஒரு கனவு உண்டு. எந்த தேசமும் சொந்தம் கொண்டாட முடியாத வகையில், நமக்கு மட்டும் சொந்தமான ஒரு தீவை விலைக்கு வாங்க வேண்டும். எந்த தேசத்துக்கும் சமூகத்துக்கும் கட்டுப்படத் தேவையில்லாத, உண்மையிலேயே நடுநிலையான அந்த மண்ணின் மீது டௌ நிறுவனத்தின் உலகத் தலைமையகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.’

கார்ல் கெர்ஸ்டாக்கர், தலைவர், டௌ கெமிக்கல்ஸ்,1972.

கறுப்பு-பணம்இந்தியாவிலிருந்து வெளியேறிய கறுப்புப் பணம், அந்நிய முதலீடாக வேடமணிந்து இந்தியாவுக்குள் நுழைவதை முன்னேற்றம் என்று கொண்டாடிக் கொண்டே, கறுப்புப் பணம் குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்கிறது அரசு என்று குறிப்பிட்டு, ஜூலை இதழில் இக்கட்டுரைத் தொடரை நிறுத்தியிருந்தோம்.

2009  ஆம் ஆண்டில் இந்தியாவில் போடப்பட்டுள்ள அந்நிய நேரடி முதலீடுகளில், 21% மொரிசியஸ் போன்ற வரியில்லா சொர்க்கங்களின் மூலம் நுழைந்திருக்கும் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் கறுப்பு பணம்தான் என்கிறது ஐ.எஸ்.ஐ.டி. என்ற ஆய்வுக் கழகத்தினைச் சேர்ந்த பேரா.சலபதி ராவ், பிஸ்வஜித் தர் ஆகியோருடைய ஆய்வு.

இதுவன்றி அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் ( FII ) மூலம் இந்தியப் பங்குச்சந்தைக்குள் அன்றாடம் நுழைந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான டாலர்களுக்குள்ளேயும் இந்தியக் கறுப்பு பணம் இருக்கிறது. அது சர்வதேச நிதிமூலதனம் என்ற பரமாத்மாவில் ஐக்கியமாகிவிட்ட தேசிய கறுப்புப் பண ஜீவாத்மா. அதனைப் பிரித்தறிவது கடினம்.

“இந்தியாவுக்கு வெளியே அனுப்பப்பட்ட சட்டவிரோத (கருப்பு) பணத்தின் கணிசமான பகுதி, ஹவாலா, வரியில்லா நாடுகள் மூலமான அந்நிய நேரடி முதலீடு, இந்திய கம்பெனிகளுக்கான பன்னாட்டு முதலீட்டு வரவுகள் (GDR), பார்ட்டிசிபேட்டரி நோட்டுகள் ஆகிய வடிவங்களில் மீண்டும் இந்தியாவுக்குள்ளேயே நுழைந்திருப்பது சாத்தியமே” என்று கூறுகிறது நாடாளுமன்றத்தில் அரசு வெளியிட்டிருக்கின்ற கறுப்பு பணம் குறித்த வெள்ளை அறிக்கை.

மேற்கூறிய ‘கருப்புப் பண‘ தீவுகளெல்லாம் ஏதோ சட்டத்திற்கு உட்படாத மர்மமான பிராந்தியங்கள் போலவும், அவர்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு அரசுகள் முயன்று கொண்டிருப்பதைப் போலவும், இந்திய அரசும் அவ்வாறு முயன்றால், கறுப்புப் பணம் மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு வந்துவிட முடியும் என்பதைப் போலவும் உருவாக்கப் படும் சித்திரம் அபத்தமானது, மோசடியானது என்பதை இத்தொடரில் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம்.

நிக்கோலஸ் ஷாக்ஸன் என்ற பொருளாதாரப் பத்திரிகையாளர் எழுதி, சென்ற ஆண்டு வெளிவந்துள்ள “டிரஷர் ஐலேண்ட்ஸ்  வரியில்லா சொர்க்கங்களும், உலகத்தைக் கொள்ளையிடும் மனிதர்களும்” என்ற நூல், ஏகாதிபத்தியங்கள் இந்தக் கடல் கடந்த சொர்க்கங்களைத் திட்டமிட்டே எப்படி உருவாக்கின என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது.

கடல் கடந்த சொர்க்கங்கள் எனப்படுபவை, சுயேச்சையான அரசுகள் அல்ல; அவை, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற உலகின் வல்லரசுகளால்  கட்டுப்படுத்தப்படும் வலைப்பின்னல்கள் என்பதை ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறார், ஷாக்ஸன்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சரிந்து விட்ட தனது உலக சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ள இயலாத பிரிட்டன், உலகின் நிதி மூலதனத்தைத் தன்னை நோக்கி ஈர்க்கும் பொருட்டு இலண்டன் மாநகரத்தையே உலக கோடீசுவரர்களின் பணத்தைப் பாதுகாக்கும் ரகசியச் சுரங்கமாக மாற்றியது என்கிறார் ஷாக்ஸன். பிரிட்டிஷ் அரசின் சட்டங்களுக்கு, குறிப்பாக நிதி மற்றும் வரிகள் தொடர்பான சட்டங்களுக்கு அப்பாற்பட்ட, ஒரு தனித் தீவாக, ‘சிட்டி ஆப் லண்டன்’ என்ற நிதி நகரத்தைச் சட்டபூர்வமாக உருவாக்கியதுடன், உண்மையான இலண்டன் நகரத்துக்கான மேயரைப் போன்றே, இந்த நிழல் நகரத்துக்கும் ஒரு மேயரை உருவாக்கியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்.

இப்படி உலகெங்குமுள்ள முதலாளிகளும் கோடீசுவரர்களும், தத்தம் நாட்டின் சட்டங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு இடத்தில், தமது பணத்தை இரகசியக் கணக்குகளில் பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியும் என்பதற்கான சாத்தியத்தை உருவாக்கியதே பிரிட்டன்தான்.

இன்று மொரிசியஸ் உள்ளிட்ட வரியில்லா சொர்க்கங்களில்  கம்பெனிகளைப் பதிவு செய்து கொண்டு வரி ஏய்ப்பு செய்பவர்கள், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளை இன்னொரு நாட்டில் உள்ள தனது நிறுவனத்தின் கிளைக்கே பத்து ரூபாய்க்கு விற்றதாகக் கணக்கெழுதி ( Transfer pricing) நட்டக்கணக்கு காட்டி வரி ஏய்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் பிதாமகர்களே பிரிட்டனைச் சேர்ந்த ஏகபோக முதலாளிகளான வெஸ்டே சகோதரர்கள்தான் என்பதையும் தனது நூலில் கூறுகிறார் ஷாக்சன்.

பிரிட்டனின் காலனியாக இருந்த 14 சிறிய தீவுகளை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கடல் கடந்த பிரிட்டிஷ் பகுதிகளாக (Overseas British Territories) அறிவித்துக் கொண்டது பிரிட்டன். இன்று வோடஃபோன் வழக்கில் 11,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருக்கும் ஹட்சின்சன் வாம்போவா நிறுவனம், பதிவு செய்யப்பட்டிருக்கும் கே மேன் தீவுகள் உள்ளிட்ட இந்த 14 சொர்க்கத்தீவுகள் கொண்ட வலைப்பின்னலின் சிலந்தி, இலண்டன் நிதி நகரம். வெறும் 54,000 பேர் மக்கட்தொகை கொண்ட கே மேன் தீவுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுமே 80,000.

பிரிட்டன் நிதி நகரத்தைப் போலவே, அமெரிக்கா, தன் நாட்டுக்குள்ளேயே உருவாக்கியிருக்கும் வரியில்லா சொர்க்கம் டெலாவர் என்ற மாநிலம். ‘பார்ச்சூன் 500‘ என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள் டெலாவரில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. டெலாவரில் ஒரு கம்பெனியைப் பதிவு செய்து அம்மாநில அரசின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தேவைப்படும் அவகாசம் ஒரே ஒரு நாள் என்று இம்மாநிலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறது.

இத்தனை பெரிய வரியில்லா சொர்க்கத்தை தன் நாட்டில் வைத்துக் கொண்டு,கே மேன் தீவுகளில் ஒரே கட்டிடத்தில் 12,000 கம்பெனிகளைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்று அந்த அரசை விமரிசித்தார் ஒபாமா. “அது உலகின் மிகப்பெரிய கட்டிடமாக இருக்கவேண்டும், அல்லது  மிகப்பெரிய ஊழலாக இருக்க வேண்டும்” என்று கேலி செய்தார்.

இதற்குப் பதிலளித்த கேமேன் தீவுகளின் நிதித்துறை ஆணையர், டெலாவர் மாநிலத்தில், 1209, வடக்கு ஆரஞ்சு தெரு, வில்மிங்டன்  என்ற முகவரியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், கோகோ கோலா, போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், கென்டகி சிக்கன், கூகிள், டாயிஷ் வங்கி உள்ளிட்ட 2,17,000 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை ஒபாமாவுக்கு நினைவுபடுத்தி, ஈயத்தைப் பார்த்து பித்தளை இளிக்கக் கூடாது என்று ஒபாமாவுக்கு சூடு வைத்தார்.

உலகத்தில் உள்ள வரியில்லாத கறுப்புப் பண சொர்க்கத் தீவுகளைப் பட்டியலிட்டால், அதில் முதல் இரண்டு இடங்கள் இலண்டனுக்கும் டெலாவருக்கும்தான் என்கிறார் ஷாக்சன்.

கறுப்பு-பணம்

உலகமுழுவதிலும் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளும், கோடீசுவரர்களும் வரி ஏய்ப்பு, கள்ளக்கணக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் மூலம் தாங்கள் ஈட்டிய பணத்தை, பினாமி பெயர்களில் முதலீடு செய்வதற்குத் தெரிவு செய்யும் சொர்க்கத் தீவு எது?

‘டாக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வொர்க்‘ என்ற சர்வதேச தன்னார்வ அமைப்பு 2009   நவம்பரில் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளும், நிதி நிறுவனங்களும் கோருகின்ற நிதித்துறை கள்ளத்தனத்தை (Financial secrecy) பேணுவதில் உலகத்திலேயே இலண்டன் 5  வது இடத்தில் இருக்கிறது. நான்காவது இடம் கேமேன் தீவு, மூன்றாவது இடம் சுவிஸ், இரண்டாவது இடம் லக்சம்பர்க், முதல் இடம் அமெரிக்கா. அதாவது, அம்பானி முதல் ஆ.ராசா வரையிலான யாரும் தங்களது பணத்தை இரகசியமாக முதலீடு செய்து வருவாய் ஈட்ட உகந்த இடம் அமெரிக்கா என்பதே இந்த ஆய்வு முடிவின் பொருள்.

கறுப்புப் பணம் என்பது கட்டு கட்டாக ஸ்விஸ் வங்கியின் இரும்பு பீரோக்களில் வைக்கப்பட்டிருப்பதல்ல. பூட்டி வைக்கப்பட்டால் அது செத்த பணம். உயிருடன் அலைந்து சுரண்டலில் ஈடுபட்டு அல்லது சூதாட்டத்தில் ஈடுபட்டு, பெருக முடிந்தால்தான் அது மூலதனம். பங்குச் சந்தை, நாணயச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் உற்பத்தி போன்றவற்றில் புகுந்து மூலதனம் இலாபமீட்டவேண்டும். அதே நேரத்தில் எந்த நாட்டின் சட்டத்திற்கும் வரி விதிப்பிற்கும் கட்டுப்படவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கக் கூடாது. இதுதான் உலக முதலாளி வர்க்கத்தின் விருப்பம்.

கடந்த சுமார் 25 ஆண்டுகளில், அதாவது உலகம் முழுவதும் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதற்குப் பின்னர், முதலாளி வர்க்கத்தின் இந்த விருப்பம் வெகு வேகமாக நிறைவேறி வருகிறது. முகவரி இல்லாத முதலீட்டு வடிவங்களைச் சட்டபூர்வமானவையாக ஆக்கியதன் மூலம், சட்டவிரோதமானவையெல்லாம் சட்டபூர்வமானவையாகிவிட்டன. கறுப்பு வெள்ளையாகிவிட்டது.

எடுத்துக் காட்டாக, பிரைவேட் ஈக்விடி போன்ற முதலீட்டு நிறுவனங்களில், பார்ட்டிசிபேட்டரி நோட்டுகள் போன்ற நிதிக் கருவிகளில் (Financial instruments) டாடா, மித்தல், அம்பானி முதலிய தரகு முதலாளிகள் தங்களது வரி ஏய்ப்பு செய்த கறுப்பு பணத்தையோ, அமைச்சர்கள் தங்களது ஊழல் பணத்தையோ எத்தனை ஆயிரம் கோடிவேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அந்த நிறுவனங்கள் அப்பணத்தை எந்த நாட்டின் பங்குச் சந்தையிலும் சூதாடி இலாபம் ஈட்டும். தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பவர்கள் யார் என்பதை எந்த அரசுக்கும் அவர்கள் காட்டத்தேவையில்லையென்றும், அவர்கள் போட்டிருக்கும் மூலதனத்துக்குக் கிடைக்கின்ற ஆதாயத்திற்கும் (Capital gains) வரி செலுத்த தேவையில்லை என்றும் டெலாவர், இலண்டன், கேமேன் தீவுகள் போன்றவை சட்டமியற்றி வைத்துள்ளன. வரி ஏய்ப்பு, இரகசியம் என்ற இரட்டை ஆதாயங்களை வழங்குவதால்தான் பன்னாட்டு நிறுவனங்களும் ஊழல் அரசியல்வாதிகளும் தங்கள் கறுப்பு பணத்தை இங்கே முதலீடு செய்கின்றனர்.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் முதல் தனியார்துறை நிறுவனங்கள் வரை பலவற்றிலும் அந்நிய நிதி நிறுவனங்களின் (FII) முதலீடு பெருகி வருகிறது. ஆனால் இப்படி முதல் போடும் ‘அந்நியர்கள்‘ யார் என்பது இந்திய அரசுக்குத் தெரியாது. காரணம், இவை முகமூடி அணிந்த முதலீடுகள். இவ்வாறு “பங்குச்சந்தைக்குள் முகவரி தெரியாத முதலீடுகள் நுழைவது ஆபத்து” என்று ஒருபுறம் ரிசர்வ் வங்கி கூறுவதும், மறுபுறம் “அந்நிய முதலீடுகள் பெருகுவதுதான் முன்னேற்றம்” என்று மன்மோகன் அலுவாலியா கும்பல் கூவுவதும் தொடர்ந்து நாம் கண்டு வரும் காட்சிகள்.

2007அக்டோபரில், அந்நிய மூலதனத்தில் சரி பாதி, பார்ட்டிசிபேட்டரி நோட்டுகள் என்ற வடிவத்தில் வந்திருப்பது கண்டு பீதியடைந்த செபி (SEBI) அமைப்பு அதனைக் கட்டுப்படுத்த வேண்டுமென்ற தகவலை நிதியமைச்சகத்துக்கு அனுப்பியது. இந்த செய்தி கசிந்தவுடன் அக்டோபர் 17  ஆம் தேதி ஒரே நாளில் சென்செக்ஸ் 1744 புள்ளிகள் வீழ்ந்தது. மும்பை பங்குச் சந்தையின் வரலாற்றில் இவ்வளவு மோசமான வீழ்ச்சி நடந்ததில்லை. பங்குச்சந்தையின் செயல்பாடு ஒரு மணி நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பார்ட்டிசிபேட்டரி நோட்டுகளை தடை செய்யப்போவதில்லை என்று காலில் விழாத குறையாக நிதி அமைச்சர் சிதம்பரம் கெஞ்சிய பின்னரே, பங்குச் சந்தை சாதாரண நிலைக்கு திரும்பியது.

தற்போது வோடஃபோன் வரி ஏய்ப்பைத் தொடர்ந்து, வரி தவிர்ப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளை (GARR) அறிமுகப்படுத்த இருப்பதாக நிதியமைச்சகம் கூறியதும், சுமார் ஒரு இலட்சம் கோடி அந்நிய மூலதனம் வெளியேறியது. உடனே நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி , “அந்நிய முதலீட்டு நிறுவனங்களில் பார்ட்டிசிபேட்டரி நோட்டுகளாக  முதலீடு செய்துள்ளவர்கள் யார் என்ற கேள்வியை இந்திய வரி அதிகாரிகள் யாரும் கேட்கமாட்டார்கள். சோதிக்கவும் மாட்டார்கள். எனவே, பார்ட்டிசிபேட்டரி நோட் உரிமையாளர்கள் இந்தியாவில் வரி கட்டவேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று சத்தியம் செய்தார். (தி இந்து, மார்ச்30, 2012)

வரிவிதிப்பு தொடர்பான இந்திய அரசின் கொள்கைகள் அமெரிக்க முதலீட்டாளர்களை அச்சுறுத்துவதாக இந்திய அரசை ஒபாமா எச்சரித்தவுடன், “விதிகள் தளர்த்தப்படும்” என்றார் மன்மோகன். அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார் தற்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம். ஜி.ஏ.ஏ.ஆர் விதிமுறைகளை உருவாக்கிய வருவாய்த்துறை செயலர் ஆர்.எஸ்.குஜ்ராலும் அந்தப் பதவியிலிருந்து தூக்கப்பட்டுவிட்டார்.

கறுப்பு-பணம்வோடஃபோன் வரி ஏய்ப்பைத் தொடர்ந்து, 1983இல் மொரிசியசுடன் போடப்பட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யப்போவதாக நிதியமைச்சகம் கூறியவுடனே, அங்கே பெயர்ப்பலகை கம்பெனி வைத்துள்ள இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு கம்பெனிகள் மொரிசியஸ் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்தியாவுக்குப் பத்தி விட்டனர். 1983 ஒப்பந்தத்தை மாற்றவோ, திருத்தவோ வேண்டாம் என்றும், 40 சதுர கி.மீ. பரப்பளவுள்ள ‘அகலேகா‘ தீவுகளை இந்தியாவுக்கு வழங்குவதாகவும், அங்கே இந்தியா கடற்படைத் தளம் அமைத்துக் கொள்ளலாம் என்றும் அவர் ஆசை காட்டியிருக்கிறார்.

சமீபத்தில் ஹாங்காங் ஷாங்காய் பாங்கிங் கார்ப்பரேசன் (HSBC) என்ற பிரிட்டிஷ் வங்கியின் மீது அமெரிக்க அரசு பல குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது. அந்தப் பன்னாட்டு வங்கி மெக்சிகோவைச் சேர்ந்த போதை மருந்து மாஃபியாவின் கறுப்பு பணத்தை அமெரிக்காவுக்குள் முதலீடு செய்திருக்கிறது; சுமார் 700 கோடி டாலரை காகிதப் பணமாகவே மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்தி வந்திருக்கிறது. சவூதியை சேர்ந்த இசுலாமிய பயங்கரவாதிகளின் வங்கிக் கணக்கைப் பேணுகிறது.

இதேபோல, அமெரிக்க அரசு விதித்துள்ள பொருளாதாரத் தடையையும் மீறி, இரானின் வணிகத்தை கள்ளத்தனமாகச் செய்து கொடுத்ததாக ஸ்டான்சார்ட் வங்கியின் மீதும் அமெரிக்கா குற்றம் சாட்டியிருக்கிறது. ஆனால், இத்தகைய அதிபயங்கர குற்றங்களை இழைத்த வங்கிகளுக்கு அமெரிக்க அரசு விதித்திருக்கும் தண்டனை  அபராதம்!

கறுப்பை வெள்ளையாக்கும் குற்றம் (Money laundering) என்று அழைக்கப்படும் இந்தக் குற்றம் எச்.எஸ்.பி.சி. வங்கியில் நடந்தபோது அதன் தலைவராக இருந்த லார்டு ஸ்டீபன் கிரீன் என்பவர்தான், தற்போது பிரிட்டனின் வர்த்தகத்துறை அமைச்சர்.

இந்த இலட்சணத்தில், கறுப்பு பணத்துக்கு எதிராக அமெரிக்கஐரோப்பிய அரசுகள் தீவிரமான நடவடிக்கை எடுப்பதாகவும், அதுபோன்ற தீவிர நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கவில்லை என்றும் பாரதிய ஜனதா, காங்கிரசு அரசை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது.

கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில் நடத்திக் காட்டப்படும் இந்த “திருடன்  போலீசு விளையாட்டில்”, திருடன்தான் போலீசு  கறுப்புதான் வெள்ளை ! இரண்டையும் வேறு வேறாகக் காண்பது நம்முடைய காட்சிப்பிழை.

கறுப்புப் பணம் என்பது, போதை மருந்துக் கும்பல்கள், கடத்தல்காரர்கள், மாஃபியாக்கள், பயங்கரவாதிகள் ஆகியோருடனும் ஊழல் அரசியல்வாதிகளுடனும் மட்டுமே தொடர்புள்ள, கன்னங்கரிய நெடிய கரடியைப் போன்ற சித்திரமாகவே மக்களின் மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வெள்ளை நிறத்தின் பிரநிதிகளாக காட்டப்படும் டாடா, அம்பானி, மித்தல், மல்லையா போன்றோரே கறுப்பின் முதன்மையான உறைவிடங்கள்.

கறுப்புப் பணம் என்பது வரி ஏய்ப்பு செய்தது அல்லது இலஞ்ச ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈட்டியது என்று மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது. அவ்வாறே சித்தரிக்கவும் படுகிறது. ஆனால், சட்டபூர்வமானவை என்று அங்கீகரிக்கப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு உள்ளேதான் கறுப்புப் பணத்தின் பெரும்பகுதி ஒளிந்து கொண்டிருக்கிறது.

கறுப்புப் பணம் ஒளிந்திருக்கும் இடங்களாக வரியில்லா சொர்க்கத் தீவுகள் காட்டப்படுகின்றன. மாறாக, அவை சர்வதேச வர்த்தகத்தின் முக்கியமான வழித்தடங்கள். அந்தத் தீவுகளுடனான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்கள், கறுப்பை வெள்ளையாக்கிக் கொள்வதற்கு முதலாளிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள்.

கறுப்பு என்பது முகமூடியின் நிறம் மட்டுமே. அதற்குப் பின்னால் இருக்கின்ற முகம் எது என்பதுதான் நம் கவனத்துக்குரியது. முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருப்பவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளான தரகு முதலாளிகள்.

டெலாவர், மொரிசியஸ், கே மேன் தீவுகள் போன்ற வரியில்லா சொர்க்கங்களில் இருப்பவை, பித்தளையில் பளபளக்கும் பெயர்ப் பலகைகள் மட்டுமே. அந்தப் பலகைகளின் பெயரில் நாள்தோறும் பல்லாயிரம் கோடி டாலர்கள் வால் ஸ்டிரீட்டிலும், இலண்டன், டோக்கியோ, மும்பை பங்குச்சந்தைகளிலும் சூதாடப்படுகின்றன.

பன்னாட்டு நிதி நிறுவனங்களும், முதலீட்டு நிறுவனங்களும் கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து வேலைக்கு அமர்த்தியிருக்கும் நிதித்துறை வல்லுநர்களும், ஆடிட்டர்களும், சர்வதேச வர்த்தகம் சார்ந்த சட்ட வல்லுநர்களும் புதிய புதிய சூதாட்ட முறைகளையும், கருவிகளையும் உருவாக்குகிறார்கள். நாடுகளில் கண்காணிப்புகளை மீறி, சட்டங்களின் ஓட்டைகளின் புகுந்து, எல்லாவிதமான வரிகளையும் ஏய்த்து இலாபமீட்டுகின்ற முறைகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அமெரிக்காவின் டாட். காம் குமிழியை உருவாக்கியவர்களும், தென் கிழக்காசியாவை திவாலாக்கியவர்களும், சப்பிரைம் குமிழியை உருவாக்கி அமெரிக்க மக்களின் வீடுகளைப் பறித்தவர்களும், கிரீஸையும் ஸ்பெயினையும் போண்டியாக்கித் அந்த மக்களைத் தெருவில் நிறுத்தியிருப்பவர்களும் இவர்கள்தான்.

1997இல் 5.7 டிரில்லியன் (ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி) டாலராக இருந்த உலக கோடீசுவரர்களின் செல்வம் 2009இல் 32.8 டிரில்லியன் டாலராக உயர்ந்தது இப்படித்தான். “உலகின் சொர்க்கத் தீவுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தின் மதிப்பு குறைந்தபட்சம் 21 டிரில்லியன் டாலர்; அதிகபட்சம் 32 டிரில்லியன் டாலர்” என்கிறது டாக்ஸ் ஜஸ்டிஸ் நெட்வொர்க். இந்தியாவின் உண்மைப் பொருளாதாரத்தைப் போல 7 மடங்கு தொகை பங்குச்சந்தையிலும், நாணயச் சந்தையிலும், ஆன்லைன் வர்த்தகத்திலும் சூதாடப்படுகிறது. இதில் எவ்வளவு கறுப்பு, எவ்வளவு வெள்ளை என்பதை யாரும் கண்டறிய முடியாது.

“சிக்கலான நிதிக்கருவிகள், ஒன்றிலிருந்து ஒன்று கைமாறிச் செல்லும் சிலந்தி வலை போன்ற நிதிப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றைப் பின் தொடர்ந்து சென்று கறுப்புப் பணத்தின் உடைமையாளரை ஒருக்காலும் அடையாளம் காணமுடியாது. வங்கிக் கணக்குகளைச் சோதனை போடுவதையும் எந்த வங்கியும் அனுமதிக்காது. ஒரு வேளை கறுப்புப் பணத்துக்கு உரியவரைக் கண்டு பிடித்துவிட்டாலும், அதைச் சட்டப்படி நிரூபிப்பது சாத்தியமற்றது”  என்கிறார் குளோபல் பைனான்சியல் இன்டக்ரிடி என்ற அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர் தேவ்கார்.

சொர்க்கத்தீவுகள், அவற்றின் இறையாண்மை, இரகசியப் பாதுகாப்புச் சட்டங்கள் போன்ற ஏற்பாடுகள் அனைத்துமே உலக முதலாளி வர்க்கம் தனது கொள்ளையைப் பாதுகாப்பதற்கு செய்து கொண்டிருக்கும் ஏற்பாடு. இந்த ஏற்பாட்டுக்கு அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான அரசுகள்தான் போலீசாக நின்று காவல் காக்கின்றன. திருடனைப் பிடிக்கப்போவதாக சவடால் அடிப்பதும் இதே போலீசுதான்.

எந்த அரசுக்கும் சமூகத்துக்கும் கட்டுப்படத் தேவையில்லாத ஒரு தீவை டௌ கெமிக்கல்ஸ் தலைவர் 1972இல் கனவு கண்டிருக்கிறார். உலக முதலாளி வர்க்கத்தின் கனவும் அதுதான். கடந்த 25 ஆண்டுகளில் உலகம் முழுவதும் அந்தக் கனவு நனவாகி வருகின்றது. நாடே பர்மா பஜார் ஆகிவிட்ட பிறகு, தனியே பர்மா பஜார் எதற்கு? மூலதனத்தின் வரியில்லா சொர்க்கமாக உலகமே மாறி வரும்போது தனி ஒரு தீவு எதற்கு?

ஆலகால நஞ்சாகத் திரண்டு மேலெழும்பி, உலக மக்களை அச்சுறுத்துகிறது மூலதனம். நஞ்சின் நிறம் கறுப்பானாலும் வெள்ளையானாலும் அதன் குணம் ஒன்றுதான்.

•முற்றும்

___________________________________________

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2012.

_________________________________________________