privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஐபோன் 5: கடைகளில் கூட்டம்! தொழிற்சாலையில் போராட்டம்!!

ஐபோன் 5: கடைகளில் கூட்டம்! தொழிற்சாலையில் போராட்டம்!!

-

டந்த வெள்ளிக் கிழமை ஆப்பிள் நிறுவனம் ஐபோன்-5 விற்பனையை ஆரம்பித்தது. உலகளாவிய விற்பனை உலகில் முதலில் பொழுது விடியும் நாடான ஆஸ்திரேலியாவில் சிட்னியில் ஆரம்பித்திருக்கிறது.  ஜார்ஜ் தெருவில் இருக்கும் ஆப்பிள் கடையில் ஆஸ்திரேலிய நேரம் காலை 8 மணிக்கு சுமார் 500 பேர் ஐபோன்-5 வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தனர்.

ஹாங்காங்கில் விமானப் போக்குவரத்து துறையில் பணி புரியும் 29 வயதான மைக்கேல் சான் உடல்நிலை சரியில்லை என்று வேலைக்கு மட்டம் போட்டு விட்டு இரண்டு ஐபோன்கள் வாங்க வந்திருக்கிறார்.

லண்டன் கோவன்ட் கார்டனில் ஆப்பிள் கடையின் முன்பு காத்திருந்த 1000 பேருக்கு அருகில் இருக்கும் உணவகம் ஒன்று பேஸ்ட்ரிகளையும், ஆப்பிள் ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்களையும் வழங்கினார்களாம்.

நியூயார்க்கின் 5வது அவெனியூவில் இருக்கும் ஆப்பிள் கடையின் முன்பு மூன்று நாட்களாக வரிசையில் காத்திருக்கும் கீனன் தாம்சன், “அடுத்த ஆண்டு இன்னமும் சீக்கிரம் வந்து காத்திருக்கப் போகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

விற்பனை ஆரம்பித்த வார இறுதியில் $199, $299, $399 விலையில் 1 கோடி ஐபோன்கள் (மதிப்பு சுமார் $3 பில்லியன்) விற்கப்பட்டிருக்கும் என்று துறைசார்ந்த பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.  ஐபோன் விற்பனையில் சுமார் 60 சதவீதம் லாபம் ஈட்டும் ஆப்பிள்,  கடந்த வார இறுதியில் சுமார் $1.8 பில்லியன் லாபம் சம்பாதித்திருக்கும்.

அகில உலகமும் ஆப்பிள் ஐபோன்-5 ஐ கொண்டாடிக் கொண்டிருக்கும் போது திங்கள் கிழமை அதிகாலை ஆப்பிள் ஐபோன்-5க்கான கேஸிங்குகள் உற்பத்தி செய்யும் வட சீனாவின் தாய்யுவான் நகர பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொழிலாளர் போராட்டம் வெடித்திருக்கிறது. ஞாயிறு இரவு சுமார் 10 மணியளவில் தொழிற்சாலை செக்யூரிட்டிகள் தொழிலாளர்களை தாக்கியதை தொடர்ந்து சுமார் 2000 தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

படிக்க

ஐபோன்ஏற்கனவே இந்த ஆண்டு மார்ச் மாதம், சம்பள உயர்வுக்கான ஒப்பந்தத்தை மீறி தொழிலாளர்களின் கூலி உயர்வை நிர்வாகம் மறுத்ததை அடுத்து இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்திருந்தார்கள்.

பாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் 12 மணி நேர ஷிப்டுகளில் வேலை வாங்கப்படுவதோடு கட்டாய ஓவர் டைம் செய்யவும் பணிக்கப்படுகிறார்கள்.  இந்த தொழிலாளர்களுக்கு ஓவர்டைமையும் சேர்த்து 2,220 யுவான் ($350) முதல் 3,500 யுவான் (சுமார் $555) வரை மாத வருமானம் கிடைக்கிறது.

தாங்கள் உற்பத்தி செய்த ஐ-போனை இந்த தொழிலாளர்கள் வாங்க வேண்டுமானால் அவர்களால் மூன்று நாட்கள் வரிசையில் காத்திருக்கவோ, ஒரு நாள் வேலைக்கு மட்டம் போடவோ முடியாது. அப்படியே முடிந்தாலும் தினமும் சராசரியாக 15 மணி நேரம் வேலை செய்து சம்பாதிக்கும் ஒரு மாத சம்பளத்தை விலையாக கொடுக்க வேண்டியிருக்கும். அவர்கள் வேலை செய்யும் போது யாரும் சாப்பிட பேஸ்ட்ரிகளையும்,  குடிக்க தண்ணீரும் கொண்டு கொடுப்பதில்லை.

உலகளாவிய முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் வளர்ச்சி இதுதான். ஒரு பக்கம் நுகர்வுக் கலாச்சார படையெடுப்பில் சிக்கியிருக்கும் மக்கள் காத்திருந்து ஐ போன்களை வாங்குகின்றனர். மறுபுறம் அவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராடுகின்றனர். ஆப்பிள் ஐ போன் 5 மாடல் குறித்து ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் பரபரப்பு செய்திகளின் மத்தியில் இந்த போராட்ட செய்தியை எங்கேயும் தேட முடியாது. ஆனால் இதைத்தான் சுதந்திர உலகம் என்று நாக்கூசாமல் அழைக்கிறார்கள். யாருக்கு சுதந்திரம்?