ணாதிக்க அத்து மீறலால் இன்னும் ஒரு பெண்ணின் உயிர் தூத்துக்குடியில் பறி போயுள்ளது.

தூத்துக்குடி கோரம்பள்ளத்துக்கு அருகில் உள்ள ஸ்ரீனிவாச நகரை சேர்ந்த 14 வயது சிறுமி தமிழ்ச்செல்வி அங்குள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 9-வது வகுப்பு  படித்து வந்தாள். அதே இடத்தை சேர்ந்த ஹரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வேறு பள்ளியில் 9வது வகுப்பு படித்து வரும் மாணவன். இவன் தமிழ்செல்வியின் மீது காதல் வயப்பட்டு அதை அவளிடமும் கூறியிருக்கிறான். அதில் விருப்பம் இல்லாத தமிழ்செல்வி மறுத்திருக்கிறாள்.

“காதல் விஷயத்தில் முடியாது என்று சொல்லும் உரிமை பெண்களுக்கு என்றுமே இல்லை” என்பது அந்த மாணவனுக்கு இந்த சமூகம் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம். திரைப்படங்களில் ஹீரோ விருப்பம் இல்லாத ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிப்பதுதான் இன்றைய சிறுவர்களுக்கு ஆதர்சம்.

தமிழ்ச்செல்வியின் விருப்பு வெறுப்பு ஹரிக்கு அர்த்தம் அற்றதாக இருந்திருக்கிறது. ஆகவே, தொடர்ந்து படியாத மாட்டினை படியவைக்க முயல்வது போல, தமிழ்செல்வியை தன் காதலை ஏற்று கொள்ள வற்புறுத்தி அவள் போகும் இடம் எல்லாம் வழி மறித்து பேசி தொல்லை தந்து உள்ளான். இதற்கும் அசையாத தமிழ்ச்செல்வியை பயமுறுத்தி இருக்கிறான். அவை என்னவென்று செய்தியில் வெளியாக வில்லை என்றாலும், நம்மால் புரிந்து கொள்ள முடியும், அவனுடைய கேவலமான வழிமுறை தான் இங்கு முக்கியம்.

சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொடர்பான கொடுமைகளை வீடுகளில் சொன்னாலும் ‘நீ ஒழுங்காக இருந்தா அவன் ஏன் உன்னைத் தேடி வருவான்?’ என்ற வசை  பேச்சுக்கள் தான் கிடைக்கும் என்ற எதார்த்த நிலைமை பல இடங்களில் உள்ளது. அவ்வாறு பெண்ணை நடத்தும் பெற்றோர் தான் அதிகம். இல்லையேல் ‘கற்பு பறி போய் விட்டது’ என்ற பட்டம் தான் மிஞ்சும்.

இவைகளுக்கு பயந்து தான் தன்னை நெருப்புக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறாள் தமிழ்செல்வி என்ற அந்த அபலை பெண். மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்ட தமிழ்செல்வி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனாள்.

தமிழ்செல்வியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரிலும், அவள் இறப்பதற்கு முன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் ஹரியை கைது செய்து இருக்கிறது போலீஸ். அவனை இப்போது நாங்குநேரியில் உள்ள சீர்திருத்த பள்ளியில் வைத்து உள்ளனர். அவன் பெற்றோர் அவனுக்கு பிணை பெற முயற்சித்து கொண்டு இருப்பதாக செய்தியில் பதிவாகி உள்ளது.

காதலை தெரிவிப்பதற்கும், தொடர்வதற்கும் அல்லது விடுபடுவதற்கும் பெண்ணுக்கு ஜனநாயகத்தை மறுக்கிறது இந்த ஆணாதிக்க சமுகம். காதல் குறித்த புரிதல், பெண் என்பவள் ஒரு நுகர்வுப் பொருள் அல்ல, ஆணுக்கு பெண் நிகரே என்ற பார்வைகள் மக்களிடையே வராத வரையில் தமிழ்செல்விகள் உயிர் துறக்கும் சூழல் மாறிவிடாது!

படிக்க

Teen held for driving school girl to suicide