privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்சென்னை ஹூண்டாய் ஆலையில் போராட்டம்!

சென்னை ஹூண்டாய் ஆலையில் போராட்டம்!

-

சென்னையில் உள்ள ஹூண்டாய் கார் ஆலையில் பதினைந்தாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளிகள் பணிபுரிகிறார்கள். அவர்களில் முக்கால்வாசி பேருக்கு மேல் தற்காலிகத் தொழிலாளிகள். இந்த தொழிலாளர்களை பல்வேறு காண்ட்ராக்ட் கம்பெனிகள் ஹூண்டாய்க்கு சப்ளை செய்கின்றன. தொழிலாளியின் உழைப்பில் வாழும் இந்த ஒட்டுண்ணி காண்ட்ராக்ட் கம்பெனிகளின் வரிசையில் தமிழகத்தின் புகபெற்ற டி.வி.எஸ்- ம் உண்டு.  இந்த வேலைக்காகவே டி.வி.எஸ் லாஜிஸ்டிக் என்கிற பெயரில் ஒரு காண்ட்ராக்ட் கம்பெனியை நடத்துகிறார்கள். இந்நிறுவனத்தின் மூலம் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் ஹூண்டாய்க்கு சப்ளை செய்யப்படுகின்றனர்.

ஆலைக்குள் நுழைந்தால் எட்டு மணி நேரத்திற்கு மிருகத்தனமாக பிழிந்தெடுக்கும் நிர்வாகம் இந்த தொழிலாளர்களுக்கு வெறும் ஏழாயிரம் ரூபாயை மட்டுமே சம்பளமாக தருகிறது. இவ்வாறு மிகக்குறைந்த கூலிக்கு தாம் கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து இவர்கள் பலமுறை போராடியிருக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றனர்.

தற்போதும் அதே தொழிலாளிகள் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இவர்களுடைய போராட்டத்தை எப்போதும் ஆதரித்து வந்திருக்கிறது. ஆதரவு என்றால் வாயளவில் இல்லாமல் அதே ஆலையில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளிகளை சந்தித்து இவர்களை ஆதரிக்க வலியுறுத்துவது, மேலும் சி.பொ.ம, சிப்காட் பகுதிகளில் இயங்கும் பிற ஆலை தொழிலாளிகளிடம் இவர்களுக்காக ஆதரவு கோருவது, சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரம் செய்வது என்று தொடர்ச்சியாக களத்தில் நின்று ஆதரித்து வருகிறது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட நாற்பத்தியோரு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஹூண்டாயிலுள்ள பிற தொழிற்சங்கங்கள் பெயரளவில் ஆதரவு தெரிவித்துள்ளன. தற்காலிக தொழிலாளிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று என்று களத்தில் குதிப்பதற்கு பதிலாக சி.பி.எம்- ன் ஹூண்டாய் மோட்டார் இந்தியா சங்க செயலாளர் ஸ்ரீதர் தற்காலிக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் நாங்களும் போராடுவோம் என்று கூறியுள்ளார்.

தற்காலிக தொழிலாளிகளுக்கும் நிரந்தரத் தொழிலாளிகளுக்கும் இடையே   ஓர் உறுதியான பிணைப்பை ஏற்படுத்த எந்த சங்கமும் முயற்சிக்கவில்லை. நிர்வாகத்தை போலவே இரு பிரிவினரையும் தனித்தனியே தான் கையாள்கின்றன. தொழிலாளிகளிடையே பல்வேறு பிரிவுகள்-பிளவுகள் இருப்பதும், அனைத்து தொழிலாளிகளையும் ஒரே வர்க்கமாக இணைக்கும் நேர்மையான, அரசியல் வலிமை கொண்ட தலைமை இல்லாததும் தான் இவர்களுடைய போராட்டங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவுவதற்கான காரணம்.

மாருதி தொழிலாளர்களை போல ஹூண்டாய் தொழிலாளிகளும் தம்மை வைத்து பேரம் பேசும் போலி தொழிற்சங்கங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு தமக்கான புரட்சிகர சங்கத்தை தாமே கட்டிக்கொண்டு தமக்குள் ஒரே வர்க்கமாக ஒன்றிணையும் போது எத்தகைய கோரிக்கைகளையும் வெல்ல முடியும்.