privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்மன்மோகன் சிங், ப.சிதம்பரம் கும்பலின் அடுத்த கட்டத் தாக்குதல்!

மன்மோகன் சிங், ப.சிதம்பரம் கும்பலின் அடுத்த கட்டத் தாக்குதல்!

-

சீர்கெட்டுக் கிடக்கும் ஒன்றைத் திருத்தி நெறிப்படுத்துவதை சீர்திருத்தம் என்பார்கள் – இது பொதுவானவர்களின் அகராதியில் உள்ள அர்த்தம். மன்மோகன்-மான்டேக்சிங்-சிதம்பரம் கும்பலின் அகராதியில் இதற்கு வேறு அர்த்தம் வைத்திருக்கிறார்கள். சீர்கெட்டுக் கிடப்பதை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதே இவர்களின் அகராதிப்படி சீர்திருத்தம் எனப்படுகிறது.

சரிந்து கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை சீர்திருத்தும் பொருட்டு

  • சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி
  • சிவில் விமானப் போக்குவரத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி
  • ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டின் அளவை உயர்த்துவது
  • பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்குப் படையல் வைப்பது

என்கிற முடிவுகளை எடுத்து தேசத்தின் குரல்வளையை முறித்த ஓசை அடங்கும் முன் அடுத்த ‘சீர்திருத்த அலைக்கான’ அச்சாரத்தைப் போட்டுள்ளார் மன்மோகன்.

அடுத்த கட்டமாக

  • காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிப்பது
  • ஓய்வூதியத் துறையை அந்நிய நிறுவனங்களுக்குத் திறந்து விடுவது
  • ஊக பேர வணிகச் சந்தையைக் கட்டுப்படுத்தும் முன்பேர சந்தைகளின் கமிஷனுக்கு (Future markets commission) கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் ஒரு சட்டத் திருத்தம்

ஆகியவற்றை அறிவித்திருக்கின்றது மன்மோகன்-மான்டேக்சிங்-     ப.சிதம்பரம் கும்பல்.

ஊக பேர வணிகத்தில் எதிர்காலத்தில் ஒரு பொருளை வாங்குவதாக முன்கூட்டியே  ஒப்பந்தங்கள் போட்டு அதை ஊக பேரச் சந்தையில் வைத்து சூதாடும் முறையான பியூச்சர் ஒப்பந்தங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டன். இதன்படி ‘பொருளை வாங்குவதாக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனம், குறிப்பிட்ட நாளில் ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்ட விலையில் அந்தப் பொருளை வாங்கியாக வேண்டும். ஒப்பந்தம் செய்து கொண்ட விற்பனையாளரும் முன்பே நிர்ணயிக்கப் பட்ட விலைக்கு அதை விற்றாக வேண்டும்.’

உதாரணமாக, ஒரு விவசாயி விதைத்துள்ள நெல்லை அறுவடை செய்வதற்கு முன்பே அதை குறிப்பிட்ட விலையில் வாங்குவதாக ஊக வணிக நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொள்ளும். இந்த ஒப்பந்தத்தை ஊகபேரச் சந்தையில் வைத்து மற்ற ஊக பேர நிறுவனங்களுடன் சூதாடுவார்கள். நெல்லை வாங்குவதற்கான ஒப்பந்தம் பல நிறுவனங்களின் கைகளில் சுற்றிச் சுழன்று வரும். ஒவ்வொரு முறை கைமாறும் போதும் இன்னும் விளையாத அந்த நெல்லின் விலை அதிகரித்துக் கொண்டே செல்லும்.

இவ்வாறாக நெல்லின் விலை போலியாக உயர்த்தப்பட்ட நிலையில், அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயி ஒப்பந்த விலைக்கே விற்க வேண்டும். அதை வாங்கும் நிறுவனம் விவசாயிக்கு குறைந்த விலை கொடுத்து விட்டு செயற்கையாக உயர்ந்து நிற்கும் விலையில் நெல்லை சந்தையில் விற்கலாம். மக்களுக்கு அரிசி விலை வெகுவாக உயர்ந்திருக்கும். ஆனால், விவசாயிகளுக்கு குறைந்த வருமானம்தான் கிடைத்திருக்கும். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் ஊக வணிகர்களின் பைக்கு போயிருக்கும்.

ஊக வணிகர்கள் நெல்லை கண்ணால் பார்க்காமலே, கையால் தொடாமலே நெல் விளைவிக்கும் விவசாயிக்கும் சோறு சாப்பிடும் மக்களுக்கும் நடுவில் பணத்தை சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

தற்போது பண்டங்கள் விற்பனைச் சட்டத்தின் 19வது பிரிவின் படி ஆப்ஷன்ஸ் ஒப்பந்தம் என்ற முறை தடை செய்யப்பட்டுள்ளது . புதிதாக அறிமுகப் படுத்தப்படவுள்ள சட்டத் திருத்தத்தின் கீழ் அது அனுமதிக்கப்பட உள்ளது.

இதன்படி ‘எதிர்காலத்தில் விருப்பப்பட்டால் குறிப்பிட்ட விலையில் நெல்லை வாங்கலாம் இல்லை என்றால் வாங்காமல் இருந்து விடலாம்’ என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். இதன் மூலம் விளையாத நெல்லுக்கான ஒப்பந்தத்தின் மீது சூதாட்டம் நடத்துவதற்கு சூதாடிகளுக்கு இன்னும் தாராளமாக்கப்பட்ட வழிமுறை ஏற்படுத்தப்படும்.

ஒரு சிறு தொகையை மட்டும் பந்தயம் கட்டி அதை விட பல மடங்கு மதிப்புள்ள நெல்லை வாங்குவதாக விளையாடலாம். சந்தை சூதாட்டத்தில் நெல் விலையை ஏற்றும் முயற்சி தோல்வி அடைந்தால் ‘நெல்லை வாங்க விருப்பமில்லை’ என்று சிறு தொகையை மட்டும் விட்டுக் கொடுத்து விடலாம்.

‘இவ்வாறு ஊகபேரச் சந்தையின் ஆழத்தையும் அகலத்தையும் அதிகமாக்குவதன் மூலம் மூலம் விவசாயிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைப்பதாக’ ப சிதம்பரம் பெருமைப்பட்டுக் கொள்வார். மன்மோகன் சிங் ‘பொருளாதாரச் சீர்திருத்தம்’, ‘8 சதவீத வளர்ச்சி’ என்று அமுங்கிய வார்த்தைகளில் முனகிச் சொல்வார்.

முதலாளித்துவ ஊடகங்கள் இதை வித விதமான கோணங்களில் விளக்கி ‘இன்னும் கொண்டு வா இது போன்ற சீர்திருத்தங்களை’ என்று மக்களின் இரத்தத்தை நக்கத் தயாராக நிற்கும் முதலாளிகளை மகிழ்விப்பார்கள். அவ்வாறு மகிழ்ச்சியடைந்த முதலாளிகள் பங்குச் சந்தையில் சூதாட்டத்தை முடுக்கி விட்டு பங்குச் சந்தை குறியீட்டு எண்ணை உயர்த்துவார்கள்.

நாட்டு மக்களின் முதுகின் மேல் முதலாளிகளின் ‘வளர்ச்சி’ விரைவாக நடக்கும்.