privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமணல் கொள்ளையை எதிர்த்து விவசாயி தீக்குளித்தார்!

மணல் கொள்ளையை எதிர்த்து விவசாயி தீக்குளித்தார்!

-

மணல்-கொள்ளை

ற்றிராப்பு என அழைக்கப்படும் வற்றியிரா இருப்பு பகுதியின் நீர்வளத்திற்கு ஆதாரமாக இருந்து வருவது பிளவக்கல் நீர்த்தேக்கம். இந்த நீர்த்தேக்கத்தை நம்பியே அந்தப் பகுதியின் விவசாயமும், குடிநீரும் தேவையும் நிறைவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணையை ஆழப்படுத்துவதற்காக தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறிக் கொண்டு ஆறுமுகசாமி என்பவர் மணல் அள்ளுவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார்.

இந்தப் பணிகளுக்காகவே மலையில் அதுவரை ஒற்றையடிப் பாதைகளாக இருந்ததை கனரக வாகனங்கள் வந்து செல்லும் அளவுக்கு செப்பனிட்டு இருக்கிறார்கள். அணையை ஆழப்படுத்துதல் என்றால் அனைக்கட்டை ஒட்டி நீர் தேங்கும் பகுதியை ஆழப்படுத்த வேண்டும். ஆனால் அணையை ஒட்டிய நீர்தேங்கும் பகுதிகள் மேடாக இருக்க; அணையிலிருந்து ஒரு கிமீ தூரத்தில் நாற்பதடி ஆழம் வரை தோண்டிப் பார்த்து ஏராளமான மணல் இருப்பு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அந்த இடத்தில் மணல் அள்ளும் வேலையை துவக்கியுள்ளனர்.

இதை அறிந்த அந்தப் பகுதி விவசாயிகள் தன்னெழுச்சியாக விவசாயிகள் குழு ஒன்றை ஏற்படுத்தி பாதையை மறித்தனர். இதனால் மணலை வெளியே கடத்தாமல் அந்தப்பகுதியிலேயெ வாடகைக்கு ஒரு இடத்தை அமர்த்திக் கொண்டு அங்கு மணலை சேமித்து வந்தனர். அந்தப் பகுதியில் இயங்கி வரும் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் விவசாயிகள் குழு சந்தித்து நிலமையை விளக்கி ஆதரவு கோரினர்.

ஆனால் எந்தக் கட்சியும் ஆதரவு தெரிவிக்காததுடன் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியிடம் பணம் வாங்கிக் கொண்டு எதிர் வேலைகளையும் செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 30/08/2012 அன்று வற்றிராப்பில் இந்த மணல் கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டத்தை நடத்தினர். (இதில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC) தோழர் லயனல் மணல் கொள்ளையை கண்டித்து சிறப்புரை ஆற்றினார்) தொடர்ந்து அந்தப் பகுதி மக்களிடையே பிரச்சாரம் செய்து மணல் கொள்ளைக்கு எதிராக மக்களை அணிதிரட்டி வருகின்றனர். ஆனாலும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தமுடியாமல் அந்த வேலையும் தொடர்ந்து நடந்து கொண்டுளதே எனும் விரக்தியிலும் விவசாயிகள் இருந்தனர்.

இந்த நிலையில் 09/10/2012 இரவு எட்டு மணியளவில் கூமாபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 55 எனும் விவசாயி கூமாபட்டி பேருந்து நிலையத்தின் முன்னால் இந்த மணல் கொள்ளையை கண்டித்து தன்னைத்தானே எரித்துக் கொண்டார். அருகிலிருந்தவர்கள் தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். செய்தியை கேள்விப்பட்ட விவசாயிகள் கவலையுடனும் கொந்தளிப்புடனும் இருக்கிறார்கள். விவசாயி ராஜேந்திரன் இன்னும் ஆபத்தான நிலையிலேயே இருக்கிறார்.

மணல் கொள்ளை மாபியாக்கள் தங்களை எதிர்க்கும் மக்களை கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதை மக்கள் செய்தி ஊடகங்கள் வழியே ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள். அந்தக் கொள்ளையர்களுக்கு அரசு அனைத்து வழிகளிலும் துணையாக இருப்பதாலும், விவசாயத்தை அழித்தே தீருவது என்று திட்டம் தீட்டிச் செயல்படுவதாலும், இதை எதிர்த்து இந்த மண்ணையும், மக்களையும் காக்க முடியாமல் நிற்கிறோமே எனும் ஆதங்கமும், மக்கள் அந்தக் கொள்ளையர்களை அடையாளம் கண்டு விரட்டியடிக்க முன்வரத் தயங்குகிறார்களே எனும் விரக்தியுமே ராஜேந்திரனை தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் முடிவுக்குத் தள்ளியிருக்கிறது.

இன்னும் எத்தனை ராஜேந்திரன்களை நாம் விரக்திக்குத் தள்ளப்     போகிறோம் .. .. ?