privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்கத் திமிருக்கு விழுந்த அடி!

அமெரிக்கத் திமிருக்கு விழுந்த அடி!

-

ஈகவடார் தூதரகச் சாளரத்தில் நின்று கொண்டு தனது ஆதரவாளர்களிடம் உரை நிகழ்த்தும் ஜூலியன் அசாஞ்சே
ஈகவடார் தூதரகச் சாளரத்தில் நின்று கொண்டு தனது ஆதரவாளர்களிடம் உரை நிகழ்த்தும் ஜூலியன் அசாஞ்சே

ஜூலியன் அசாஞ்சே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்க இராணுவத்தின் போர்க் குற்றங்களையும், மற்ற நாடுகளில் உள்ள தனது தூதர்களைக் கொண்டு அந்நாடுகளில் அமெரிக்கா செதுவந்த உளவு/சதி வேலைகளையும் அம்பலப்படுத்தினார். இதன் மூலம் அமெரிக்காவின் பகையைச் சம்பாதித்துக் கொண்ட அசாஞ்சே, தான் சதித்தனமான முறையில் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க தற்போது போராடிக் கொண்டிருக்கிறார்.

அசாஞ்சே மீது அமெரிக்காவில் பல வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அசாஞ்சேயை, உளவாளி எனக் குற்றஞ்சாட்டும்  டெயன் பெயின்ஸ்டன் என்ற அமெரிக்க செனட்டர், மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழ் அவரை விசாரிக்கவேண்டும் என வன்மத்தோடு கூச்சல் எழுப்பி வருகிறார்.  அமெரிக்கத் துணை அதிபர் ஜோபிடன் அசாஞ்சேவைப் பயங்கரவாதியென்றே சாடியிருக்கிறார்.

அசாஞ்சேவிற்குத் தகவல்களைக் கொடுத்ததாகக் குற்றஞ்சுமத்தி, பிராட்லி மேனிங் என்ற இளம் இராணுவ வீரரைக் கைது செது வைத்திருக்கும் அமெரிக்க அரசு, அவரை மிருகத்தைவிடக் கேவலமான முறையில், கொடூரமான முறையில் சிறையில் அடைத்து வைத்திருப்பதை ஐ.நா. வின் சித்திரவதைகளைக் கண்காணிக்கும் அமைப்பு உறுதி செதிருக்கிறது.  எனவே, அசாஞ்சே அமெரிக்காவிடம் அகப்பட்டால், அவரது நிலை பிராட்லியைவிட மோசமாகும் என்பது உறுதி.

அசாஞ்சே, அமெரிக்காவின் போர்க் குற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாக இணையதளம் மூலம் அம்பலப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், அவர் மீது சுவீடன் நாட்டில் இரண்டு பாலியல் வன்தாக்குதல் வழக்குகள் தொடுக்கப்பட்டன.  வழக்குகள் தொடுக்கப்பட்ட சமயத்தில், தனது நாட்டில் தங்கியிருந்த அசாஞ்சேவை இவ்வழக்குகளுக்காக சுவீடனிடம் ஒப்படைக்கப் போவதாக இங்கிலாந்து அரசு உடனடியாக அறிவித்தது.  தன்னை சுவீடனிடம் ஒப்படைப்பதை எதிர்த்து அசாஞ்சே தொடுத்த வழக்கினை இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செதுவிட்ட நிலையில், அவர் தற்பொழுது இங்கிலாந்திலுள்ள ஈகுவடார் நாட்டின் தூதரகத்தில் அரசியல் தஞ்சமடைந்திருக்கிறார்.

அசாஞ்சே, தன் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையை இங்கிலாந்தில் வைத்தே நேரடியாகவோ அல்லது வீடியோ கான்ஃபிரன்சிங் வசதி மூலமாகவோ சுவீடன் போலீசாரும் நீதிமன்றமும் நடத்திக் கொள்ள முன்வந்ததை, சுவீடன் அரசு அடாவடித்தனமாக மறுத்துவிட்டது.  “இப்படி சுவீடன் அரசு மறுத்திருப்பது, அசாஞ்சேவைத் தன்னிடம் ஒப்படைக்கச் சோல்வதற்கு ஏற்றபடி சுவீடனில் அசாஞ்சே மீது இதுவரை எந்தவொரு வழக்கும் புனையப்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது” என ஸ்டாக்ஹோம் மாவட்டத் தலைமை அரசு வழக்குரைஞர் கூறியிருப்பதாக செதிகள் வெளிவந்துள்ளன.  இவற்றின் அடிப்படையில் அசாஞ்சே மீது சுவீடன் நாட்டில் தொடரப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இரண்டு வழக்குகளும் சோடிக்கப்பட்டவையாகவும்; சுவீடன் வழியாக அவரை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான சதித்திட்டமாகவும் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தைப் பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் எழுப்பியிருக்கின்றனர்.

அமெரிக்காவின் தலையாட்டிகளான ஆஸ்திரேலியாவும், ஐரோப்பா கண்டத்து நாடுகளும் அசாஞ்சேவிற்குத் தஞ்சமளிக்க மறுத்துவிட்டன. இப்படிபட்ட நிலையில்தான், தென்அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த ஏழை நாடுகளுள் ஒன்றான ஈக்வடார் அரசு அசாஞ்சேவிற்கு அரசியல் தஞ்சமளிக்க முன்வந்தது.

இப்படி அரசியல் தஞ்சமளிக்கப்பட்டவர்களை, தஞ்சமளிக்கப்பட்ட நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது சர்வதேச மரபு.  ஆனால், இங்கிலாந்து அரசோ வீட்டுக் காவலில், போலீசு கண்காணிப்பின் கீழ் வைத்திருந்த அசாஞ்சேவைத் தனது நாட்டிலிருந்து ஈக்வடாருக்கு அனுப்பி வைக்க மறுத்துவிட்ட நிலையில், அசாஞ்சே தந்திரமான முறையில் வீட்டுக் காவலிலிருந்து தப்பி, இங்கிலாந்திலுள்ள ஈக்வடார் தூதரக அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

அசாஞ்சேவைத் தங்களிடம் ஒப்படைக்காவிட்டால், தூதரகத்தைத் தாக்கப்போவதாக இங்கிலாந்து ஈகுவடாரை மிரட்டியது. ஆனால், இங்கிலாந்தின் மிரட்டலுக்கு ஈகுவடார் அடிபணிய மறுத்துவிட்டது. இதனால் தூதரகத்தைவிட்டு அசாஞ்சே வெளியே வந்தால், அவரை உடனடியாகக் கைது செது சுவீடனிடம் ஒப்படைக்கும் திட்டத்தோடு, தூதரகத்தைச் சுற்றி உளவாளிகளையும் போலீசாரையும் குவித்து வைத்திருக்கிறது, இங்கிலாந்து அரசு. அசாஞ்சேயும் கடந்த மூன்று மாதங்களாக ஈகுவடார் தூதரகத்திற்குள்ளேயே அடைபட்டுக்கிடக்கிறார்.

ஜெனிவா ஒப்பந்தத்தின்படி, தன்னிடம் அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க எல்லா நாடுகளுக்கும் உரிமை உண்டு. அமெரிக்காகூட பலருக்கும் தஞ்சமளித்துள்ளது; அளித்துவருகிறது.  ஆனால்,  அமெரிக்கா அளிக்கும் அரசியல் தஞ்சத்திற்குப் பின்னால் உலக மேலாதிக்கம் எனும் மிகப் பெரிய சதிதான் ஒளிந்து கொண்டிருக்கிறது.

முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து தப்பியோடிய சோல்ஜெனிட்சின் போன்ற சோசலிச எதிரிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், அவர்கள் சோசலிசத்திற்கு எதிராகச் செயல்பட அமெரிக்கா தளமமைத்துக் கொடுத்திருக்கிறது. சீனாவின் தியான்மென் சதுக்க போராட்டக்காரர்கள் உள்ளிட்டு, சீன அரசிற்கு எதிரானவர்கள் பலருக்கும், மனித உரிமைப் போராளிகள்”, ‘ஜனநாயகக் காவலர்கள்’ எனப் பட்டமளித்து, அவர்களுக்கு அரசியல் தஞ்சமளிப்பதை அமெரிக்கா வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

இவர்கள் மட்டுமின்றி, கியூபாவின் பாடிஸ்டா, ஈரானின் ஷா, தென் அமெரிக்க நாடுகளின் முன்னாள் சர்வாதிகாரிகள் உள்ளிட்ட ஜனநாயக விரோத சக்திகளுக்கும் அமெரிக்காதான் அன்றும் இன்றும் புகலிடமாக விளங்குகிறது.  இப்படிபட்ட மனித குல விரோதிகளுக்குத் தஞ்சமளிக்க அமெரிக்காவிற்கு உரிமையுண்டென்றால், ஒரு மனித உரிமை செயல்வீரருக்குத் தஞ்சமளிக்க ஈகுவடாருக்கு எல்லா வகையிலும் உரிமையும் உண்டு; தார்மீக நியாயமும் உண்டு.

அசாஞ்சே மீது புனையப்பட்டுள்ள வழக்குகளும், அவரது தற்போதைய நிலையும், அவரது தனிப்பட்ட பிரச்சனைகள் அல்ல. உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திவரும் அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களைச் சர்வதேச சட்டவிதிகள்-மரபுகளை மீறித் தண்டிக்க முயலும் அமெரிக்காவின் மேலாதிக்க வெறியைத்தான் அம்பலப்படுத்திக் காட்டுகிறது.

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012

__________________________________________________