privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்போபாலுக்கே நாதியில்லை! கூடங்குளத்திற்கு...?

போபாலுக்கே நாதியில்லை! கூடங்குளத்திற்கு…?

-

போபால் படுகொலை1984, டிசம்பர் 2-ம் தேதியை மறக்க முடியுமா? யூனியன் கார்பைடு என்கிற பன்னாட்டுக் கம்பெனியின் லாப வெறிக்கு மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 23,000 மக்களின் உயிர்கள் அநியாயமாக பலியான நாள் அது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒழுங்காக செய்யாததன் விளைவாய் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு போபாலின் தெருக்களில் கோர தாண்டவமாடிய நாள். இந்த நாட்டில் அப்பாவி மக்களின் உயிர்களை ஆளும் கும்பல் எந்தளவுக்கு மதிக்கிறது என்பது பட்டவர்த்தனமாகத் தெரியவந்த நாள்.

அந்தப் படுகொலைக்குக் காரணமான ஆண்டர்சனை சர்வ ஜாக்கிரதையாக இந்திய ஆளும் வர்க்கமே விமானமேற்றி சொந்த ஊருக்கு அனுப்பி விட்டு சாவகாசமாய் விசாரணை நடத்தி  முடித்து தீர்ப்பு வழங்கவே 26 ஆண்டுகளானது. கடந்த 2010 ஜூன் மாதம் கீழமை நீதி மன்றம் அளித்திருந்த தீர்ப்பில் கொலைகாரன் வாரன் ஆண்டர்சனை இலவம் பஞ்சால் செய்யப்பட்ட பிரம்பால் விளாசித் தள்ளியிருந்தது. அநீதியான அந்தத் தீர்ப்பின் மேல் மக்கள் காறி உமிழ்ந்ததைத் தொடர்ந்து, ‘சுதந்திர’ இந்தியாவின் பாரம்பரிய வழக்கப்படி கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது.

கோச்சார் கமிட்டி என்றழைக்கப்படும் அந்தக் கமிட்டி வாரன் ஆண்டர்சனுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. வாரன் ஆண்டர்சனின் கிரீன்விச் மற்றும் நியூயார்க் முகவரிக்கு அனுப்பப்பட்ட அந்த நோட்டீசுகள், குறிப்பிட்ட முகவரியில் சொல்லப்படும் நபர் இல்லை என்கிற காரணத்துக்காக இப்போது திரும்பி வந்துள்ளன. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத கோச்சாரு திரும்பவும் முருங்கை மரத்தின் மீதேறி ஆண்டர்சனுக்கு நோட்டீசு அனுப்பியே தீருவேன் என்று சொல்லியிருக்கிறாராம்.

இது ஒரு செய்தி.

அடுத்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில்,  அணுவுலையில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்காமல் இருக்க ரஷ்ய நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட விலக்கு குறித்து மத்திய அரசும் இந்திய அணுசக்தித் துறையும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

‘விபத்து நடந்து கொத்துக் கொத்தாக மக்கள் செத்துப் போனால், நீங்கள் ஒன்றும் இழப்பீடு வழங்கத் தேவையில்லை’ என்று ரஷ்ய நிறுவனத்துக்கு சிறப்பான அனுமதி அளிக்க வேண்டிய அவசியம் எங்கேயிருந்து மத்திய அரசுக்கு வந்ததோ தெரியவில்லை. ஏதேனும் அச்சமாய் இருக்கலாம். ஆனால், அப்படியெல்லாம் சஞ்சலப்படத் தேவையில்லை என்பதை தனது கட்சியின் முந்தைய அனுபவங்களிலிருந்தே மன்மோகன் சிங் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

அமெரிக்காவிலிருந்து வந்து இறங்கிய ஆண்டர்சனை போலீசு கைது செய்தவுடனே தலையிட்டு பிணையில் விடுவித்ததுடன், அரசின் தனி விமானத்தில் டெல்லிக்கு வரவழைத்து, ஆண்டர்சனிடம் மன்னிப்பும் கேட்டு, அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் ராஜீவ் காந்தி.  “ஆலையைப் பார்வையிட ஆண்டர்சன் வருகிறார். அவரைப் பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டும்” என்று அமெரிக்க அரசு கூறியது. அமெரிக்கா காலால் இட்ட கட்டளையைத் தலையால் நிறைவேற்றிக் கொடுத்த கட்சியாயிற்றே; இப்போது டச்சு விட்டுப் போச்சு போலும்.

இத்தனைக்கும் ஆண்டர்சன் இங்கே வந்ததே எங்களுக்குத் தெரியாதே என்று பல்லி மிட்டாய் சப்பும் சிறுவனைப் போல அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டிருக்கிறார் சிதம்பரம்.  இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட காங்கிரசு ரஷியாவுக்கு தனியே விலக்கு அளித்திருக்கவே வேண்டாம். இயல்பாகவே விலக்கு அளித்ததைப் போன்ற சுதந்திரத்துடன் இங்கே ‘தொழில்’ செய்ய ரஷ்யாவிலிருந்து வால்மார்ட் வரை சுதந்திரம் இருக்கத்தானே செய்கிறது? ‘சுதந்திர’ இந்தியாவாயிற்றே?

இப்போது உச்சநீதிமன்றம் நோட்டீசு அனுப்பியுள்ளது; கோச்சார் கமிட்டியும் நோட்டீசு அனுப்பியுள்ளது.

எந்தக் கழிவறையில் தண்ணீர் பற்றாக்குறை அதிகம் என்று தெரியவில்லை.