privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅரசு மருத்துவமனைகள்: எலிகளின் இடத்தில் பெருச்சாளிகள்!

அரசு மருத்துவமனைகள்: எலிகளின் இடத்தில் பெருச்சாளிகள்!

-

அரசு-மருத்துவமனைகள்-1சென்னை போன்ற பெருநகரங்களில், மேலைநாடுகளின் தரத்துக்கிணையான மருத்துவ சிகிச்சையை  அளிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் எண்ணிக்கையில் பெருகிக் கொண்டுள்ளன. அதே நகரங்களில் இருக்கும் அரசு  மருத்துவமனைகளில் நவீன மருத்துவக் கருவிகளோ,  அத்தியாவசிய மருந்துகளோ இருப்பதில்லை. சென்னை பொதுமருத்துவமனையில்  புற்றுநோ, இதயநோய் ஆகியவற்றுக்கான 39 மருந்துகள் இருப்பில் இல்லை என்று மருந்துக்கிடங்கின் பதிவேடே கூறுகிறது. அவசர சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான 25 வகை மருந்துகள் மிகக் குறைந்த அளவில்தான் சப்ளை செயப்படுகின்றன.

திருச்சி மருத்துவமனையில் கழிவறைகளுக்கு எதிரில் நோயாளிகளைக் கிடத்திச் சிகிச்சையளிக்கின்றனர்.  மின்தடை காரணமாக அறுவைச் சிகிச்சைகள் கூடப் பல மருத்துவமனைகளில் நடைபெறுவதில்லை.

இவை அனைத்தையும் சகித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றால், அங்கேயுள்ள மருத்துவர்களின் பொறுப்பின்மையால் பல ஏழைகளின் உயிர்கள் பறிக்கப்படுகின்றன. திருச்சி மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகளை அறுவைச் சிகிச்சையின் மூலம் பெற்றெடுத்த காளியம்மாளிடம் ஒரு குழந்தை இறந்துவிட்டதெனச் சோன்ன மருத்துவர்கள், குப்பையோடு குப்பையாக மார்பிலும் காலிலும் கத்திக் காயங்களோடு பச்சிளங்குழந்தையின் பிணத்தை ஒரு அட்டைப்பெட்டியில் போட்டுத் தந்துள்ளனர்.

நாகர்கோவிலில் குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ருக்மணிக்குச் சுவாசிக்க ஆக்சிஜனுக்குப் பதில், மயக்கமடையச் செயும் நைட்ரஸ் ஆக்சைடை செலுத்தியுள்ளனர். சில நிமிடங்களில் உடல் எல்லாம் நீலம் பாரித்து வீங்கி விரைத்துப்போனார், ருக்மணி.

அரசு மருத்துவமனைகளின் மோசமான நிலைமை நன்றாகவே தெரிந்தபோதிலும், அதனை நாடிவரும் மக்களின் கூட்டமோ சிறிதும் குறைவதில்லை. தனியார் மருத்துவமனைக்குச் சென்று தரமான சிகிச்சை பெற வேண்டுமானால்  கந்துவட்டிக்குக் கடன் வாங்கினால்தான் சாத்தியம் எனும் அவர்களின் இயலாமைதான், அரசு மருத்துவமனை நோக்கி மக்களைத் தள்ளுகிறது.

அரசு மருத்துவமனைகளோ, தினசரி அகற்றப்படாத குப்பைகளாலும், பராமரிப்பில்லாத கழிவறைகளாலும், முறைப்படி அழிக்கப்படாத மருத்துவக் கழிவுகளாலும்  நோபரப்பும் மையங்களாகியுள்ளன. மருத்துவமனை வளாகங்களுக்குள் எலிகளும் தெருநாகளும் பன்றிகளும்  சுற்றித் திரிகின்றன.

சென்னை  கஸ்தூரிபா அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று பிறந்த பெண் குழந்தை ஒன்றை அங்குள்ள இங்குபேட்டரில் வைத்திருந்தனர். எடைகுறைவாகப் பிறந்த அக்குழந்தை சில நாட்களில் இறந்துவிட்டது. மருத்துவமனை நிர்வாகம், எலிகளால் கடிக்கப்பட்டிருந்த பிணத்தைத்தான் குழந்தையின் பெற்றோரிடம்  மறுநாள் ஒப்படைத்தது. கொதித்தெழுந்த உறவினர்களும், அப்பகுதி மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து, உடனடியாக அதிரடி நடவடிக்கை எனும்பேரில் 2 மருத்துவர்களைப் பணியிடை நீக்கம் செத அரசு, எலிப் பொந்துகளை சிமெண்டால் அடைத்தும், எலிபிடிக்க ஆட்களை அனுப்பியும் மக்கள் நலத்தின் மீது அக்கறையுள்ளது போல நடித்தது. இந்த எலிவேட்டையின்போது மதுரை மருத்துவமனையில் சாரைப்பாம்புகள் பிடிபட்டுள்ளன. ஈரோட்டில் நோயாளியைப் பார்க்க வந்தவர் மருத்துவமனைக்குள்ளேயே பாம்பால் கடிபட்டு இறந்துள்ளார்.

பெரும்பாலான அரசு மருத்துவமனைகள்,   மூன்று பேர் தேவைப்படும் இடத்தில் ஒருவரை மட்டும் வைத்துக்கொண்டு துப்புரவுப் பணிகளை ஒப்பேற்றுகின்றன. பல மருத்துவமனைகளில்,   துப்புரவுப் பணிகளை ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டனர். அறுவைச்சிகிச்சைகளில் கழித்துக்கட்டப்படும் சதைத்துண்டுகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை ஒப்பந்த நிறுவனங்கள் முறைப்படி அழிப்பதில்லை.  அக்கழிவுகளால் ஈர்க்கப்படும் தெருநாகள், எலிகள் போன்றவற்றின் புகலிடமாகின்றன, மருத்துவமனைகள். எலிகளை ஒழிப்பதற்கு மிகக்குறைவான நிதி ஒதுக்கப்படுவதால் அப்பணிகளைச் செய்ய யாரும் முன்வருவதில்லை.

சென்னை இராயப்பேட்டை மருத்துவமனை சவக்கிடங்கில் போதுமான குளிர்சாதன வசதி இல்லாததால் மக்கள் நெருக்கமிக்க அப்பகுதி பிணநாற்றத்தில் மூழ்கியுள்ளது.

அரசு மருத்துவமனைகள் இவ்வாறு கேவலமாகப் பராமரிக்கப்பட்டுவந்தபோதிலும், அங்கு ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாகத்தான் இன்னமும் வழங்கப்படுகிறது. இந்த இலவச மருத்துவத்திற்கும் உலை வைக்க அரசு தயாராகி விட்டது.

அடுத்த ஆண்டில் செயல்படத் தொடங்கும் பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்காக டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி என்பவரின் தலைமையில் நியமிக்கப்பட்ட உயர்மட்ட நிபுணர் குழு தந்திருக்கும் பரிந்துரைகள், சுகாதாரத்துறையைக் கூறுபோட்டுத் தனியாருக்குத் தந்துவிடத் துடிக்கிறது.

இராணுவத்துக்கு ரூ.ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருக்கும் அரசு,  சுகாதாரத்துறைக்கு ஒதுக்கியது வெறும் 24 ஆயிரம் கோடிதான். இந்த நிதியையும் பாதிக்கும் மேல் குறைக்க நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை பொதுச்சுகாதாரத்துக்கு உலக சுகாதார நிறுவனம், ஒதுக்கக் கோருகின்றது. ஆனால் ‘நிபுணர்’களோ இதனை 1.58 சதவீதமாகக் குறைத்து, மிச்சத்தை அந்தந்த மாநில அரசுகளே திரட்டிக்கொள்ளட்டும் என வழிகாட்டுகின்றனர்.

அரசு மருத்துவமனைகள் வழங்கும் சிகிச்சைகளை நிர்வகிக்கப்படும் சிகிச்சை (மேனேஜ்டு கேர்) எனும் பெயரில்  மாற்றி அமைக்கச் சோல்கிறது திட்ட முன்வரைவு. இம்முறைப்படி, தற்போது அரசு மருத்துவமனைகளில் இருக்கும் நோகாண் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, அறுவைச் சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு போன்றவை கூறுகளாகப் (செல்போன் சேவைகளில் இருக்கும் பேக்கேஜ்கள் போல) பிரிக்கப்பட்டு, அவை கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். மக்களுக்குத் தனித்தனி சேவைகளாக வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசின் நிதியை அதற்கெனப் பெற்றுக்கொள்ளும். மகப்பேறு, குழந்தை நலம், தடுப்பூசி ஆகியவற்றை மட்டும் அத்தியாவசிய சுகாதாரக் கூறு (பேக்கேஜ்) என்ற ஒரு பிரிவில்  அரசின் நலத்துறை தன்வசம் வைத்துக் கொண்டு, மற்ற எல்லா நோய்ச் சிகிச்சைகளையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கும். பயனாளிகளான நோயாளிகள் அனைவரும் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்படுவர். காப்பீடு பெற்றவர்கள் மட்டுமே சிகிச்சை பெறத் தகுந்தவராவர்.

இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்ட மேலைநாடுகளில் ஏழைமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முன் அனுபவமுள்ளது. மருத்துவக் காப்பீட்டில் இணைக்கப்பட்ட அம்மக்களுக்கு அவர்கள் கட்டிவரும் பிரீமியத் தொகைக்கேற்ற சிகிச்சைகள் மட்டுமே வழங்கப்பட்டன. சிகிச்சை செலவைக் குறைத்து இலாபத்தை அதிகரிக்க சேவையின் தரத்தைக் குறைத்துக் கொண்டன, கார்ப்பரேட் நிறுவனங்கள்.  நோயாளிகளின் மருத்துவக் காப்பீடு குறைவாகவும்,  கண்டறியப்பட்ட நோய் கடுமையானதாகவும் இருந்தால், நோயாளிகள் தங்களது பிரீமியத்தை உயர்த்திக்கொண்டால் மட்டுமே (டாப் அப்) அந்நோய்க்கு சிகிச்சை தொடங்கப்படும். உதாரணமாக, ஒரு நோயாளிக்கு நோய்கண்டறியும் பிரிவுக்கு மட்டும் காப்பீடு இருக்கும்போது இதயநோய் கண்டறியப்படுகிறது என்றால், அவர் சிகிச்சைக்கான காப்பீடு பிரீமியத்தை ‘டாப் அப்’ ஆக செலுத்தினால் மட்டுமே அவருக்கு இதயநோக்கான சிகிச்சை ஆரம்பமாகும். அங்கே கருணை, மனிதாபிமானம் அனைத்துமே செல்லாக்காசுதான். இதே முறைதான் அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் இங்கே வரப்போகிறது.

முந்தைய தி.மு.க. அரசு, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் பெயரில் ஸ்டார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ.500 கோடிக்கும் மேல் வழங்கி, நூற்றுக்கணக்கான தனியார் மருத்துவமனைகளை அத்திட்டத்தில் சேர்த்தது. அரசு மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகளை ‘கலைஞர் காப்பீடு’ பெற்ற தனியார் மருத்துவமனைகளுக்கு ‘ஆற்றுப்படுத்தினர்’ அரசு மருத்துவர்கள்.  தனியார் மருத்துவமனைகளோ, ஸ்டார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திடம் சிகிச்சைக்கான செலவை வசூலித்துக்கொண்டன.

விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கும் முதல்வர் ஜெயா
விரிவாக்கப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கும் முதல்வர் ஜெயா

கருணாநிதியின் இந்தத் தனியார்மயத் திட்டத்தைக் கடுமையாகச் சாடிய ஜெயலலிதாவோ, ஆட்சிக்கு வந்தபின்னர், விரிவுபடுத்தப்பட்ட காப்பீட்டை அறிமுகப்படுத்தி, மருத்துவம் தனியார்மயமாவதை  மேலும் தீவிரப்படுத்தினார்.

அம்மாவின் திட்டப்படி, அரசு மருத்துவமனைகளில் செயல்படும் கட்டண சிகிச்சை முறை தற்போது தனியார் காப்பீட்டு நிறுவனத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி மருத்துவக் காப்பீடு வைத்துள்ளவர்கள், கட்டணப் பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டால், அதற்கான செலவுகளை தனியார் காப்பீடு நிறுவனம் அந்தந்த மருத்துவமனைக்குத் தந்துவிடும். கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை அரசு மருத்துவமனைகள் ரூ.94 கோடி ரூபாவரை  காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளன.

சுகாதாரத்துறை அமைச்சர், இந்த வருவாயைக் கொண்டு மருத்துவமனைகள் தங்களது மேம்பாட்டுப் பணியை செய்து கொள்ளலாம் என்கிறார். இதுதான் திட்டக்கமிசன் வகுத்தளித்துள்ள ‘வருவாயை ஈட்டிக்கொள்ள வேண்டிய’ முறை. இனி பொது சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்காது.

மக்களைப் பழக்கப்படுத்துவதற்காக ‘விரிவுபடுத்தப்பட்ட’ மருத்துவக் காப்பீட்டின் பிரீமியத்தை அரசே செலுத்தி வருகிறது. அடுத்து மக்களே இந்த பிரீமியத்தை செலுத்தவேண்டும் என்று மாற்றப்படலாம்.

அப்போதும் அரசு மருத்துவமனைகள் இருக்கும். ஆனால், மருத்துவக் காப்பீடு பெறாதவர்களுக்கு அங்கே இடம் இருக்காது. நோய் கண்டறியப்படுகையில், அதற்குரிய கூடுதல் காப்பீடு செலுத்தாவிட்டால் ஆரம்ப கட்ட சிகிச்சைகூட கிடைக்காது. ‘சிகிச்சை பெறக் காசு இல்லாவிட்டால் செத்துத் தொலை’ என்பதுதான் இந்த சீர்திருத்தத்தின் விளக்கவுரை.

காசு இல்லாவிட்டால் குடிக்க நீரில்லை. காசில்லாவிட்டால் கல்வி இல்லை. இனி, காசில்லாவிட்டால் மருத்துவமும் இல்லை என முடிவு செய்து விட்ட இந்த அரசை அடித்து நொறுக்கி அழிக்காமல் விட்டுவைத்தால், நிச்சயமாக நமக்கு எதிர்காலமே இல்லை.

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012

__________________________________________________