privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்முதலாளித்துவ பயங்கரவாதம்: திருச்சியில் டேவிட் தீக்குளிப்பு!

முதலாளித்துவ பயங்கரவாதம்: திருச்சியில் டேவிட் தீக்குளிப்பு!

-

ஜான்சன்-டேவிட்
ஜான்சன்-டேவிட்

சித்தார் வெசல்ஸ் முதலாளியின் லாபவெறிக்கு எதிராகவும், அடக்குமுறைக்கு எதிராகவும், CVL – unit-7ல் வேலைபார்த்த திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்த ஜான்சன் டேவிட்(24) என்ற தொழிலாளி தீக்குளித்து மரணம் அடைந்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாய் அடங்கமறுக்கும் தொழிலாளி வர்க்கம் தன்னை ஒட்ட உறிஞ்சும் முதலாளிவர்க்கத்திற்கு சாவுமணி அடித்துக் கொண்டிருக்கின்றது. 2800 தொழிலாளர்களின் குடும்பத்தை பட்டினியில் இருந்து காப்பாற்ற ‘ அவர்களுக்கு வேலைகொடு!’ என ஜான்சன் டேவிட் தன்னை ஒரு மெழுகுவர்த்தியாய் உருக்கிக் கொண்டது தொழிலாளிவர்க்கத்துக்கு பேரிழப்பாகும்.

பாய்லர் தயாரிப்பில் BHEL-ஐ தவிர இந்தியா முழுவதும் வேறுயாரும் உற்பத்தி செய்ய முடியாதநிலையில் 25 வருடத்திற்கு முன்பு BHELலில் வேலைபார்த்த 7 அதிகாரிகள் V.R.S கொடுத்துவிட்டு வெளியேறினர். வெறும் 2 கோடி முதலீட்டைக் கொண்டு பாய்லர் தயாரிப்தற்கான சித்தார் வெசல்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினர். தற்போது திருச்சி- புதுக்கோட்டை மாவட்டங்களில் 7 இடங்களில் தனது கிளையை பரப்பியுள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, உழைத்து உரம்மேறிய கைகளால் இயந்திரங்களை இயக்கி, கண்களை அசர விடாமல் கண்விழித்து வெல்டிங் ராடுகளை பற்றவைத்து கம்பெனியின் இலக்கை(டன்னேஜ்) அடைய போராடியதன் விளைவாய் எழுந்து நிற்பதுதான் CVL-ன் எழு யூனிட்டுகளும். 2011-2012 ஆண்டில் மொத்த உற்பத்தி 2400 கோடிகளையும், இதில் கிடைத்த லாபத்தை வைத்துகொண்டு சித்தார் அக்ரோ புட்ஸ், சித்தார் மருத்துவமனை என்று பல்வேறு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளட. இந்த பிரமிப்பூட்டும் வளர்ச்சியின் பின்னே தொழிலாளர்களின் இரத்தமும் சதையும் கலந்துள்ளது. இந்நிறுவனம் தொழிலாளர் சட்டவிதி முறைகள் எதையும் பின்பற்றுவதில்லை. 150 தொழிலாளர்கள் மட்டுமே நிரந்தர தொழிலாளர்கள். மீதமுள்ளவர்கள் கான்ராக்ட் தொழிலாளர்கள், அப்ரன்டீஸ் தொழிலாளர்கள், வேலையிருந்தால் கட்டாயம் கூடுதல் உழைப்பு செலுத்த வேண்டும்.

ஒரு சிப்ட்டில் வேலை செய்தவர் அடுத்த சிப்ட்டில் வேலை செய்பவர் வந்தால்தான் வெளியே வர அனுமதிப்பார்கள். இப்படி பல மணிநேரம் தொடர்ச்சியாக வேலை செய்ய வைப்பது, தூங்குகின்றார்களா என சோதிக்க சூப்பர்வைசர்கள் கண்காணிப்பு, கண்டுபிடித்து கொடுத்தால் நபர் ஒன்றுக்கு ரூ.50 டிப்ஸ், பத்துபேரை பிடித்து கொடுத்தால் ரூ.500 டிப்ஸ், இதற்கான தொகையை கொடுக்க பாதிக்கப்பட்ட தொழிலாளியின் ஒருநாள் சம்பளத்தில் பாதியை பிடித்தம் செய்து கொள்வதும் நடக்கின்றது. இதற்காவே இலவு காத்த கிளியாக காத்திருகின்றார்கள் சில சூப்பர்வைசர்கள்.

சட்டபடி கிடைக்க வேண்டிய ESI, PF, இன்கிரிமென்ட்-ஐ கூட 8 ஆண்டு, 6 ஆண்டு வேலைசெய்யும் தொழிலாளிக்கு கொடுப்பதில்லை. திருடன் தன்காரின் நம்பர்பிளேட்டை மாற்றுவது போல் PF நம்பரை மாற்றுவது அதன்மூலம் கிடைப்பதை சுருட்டுவது, 5 நிமிடம் வேலைக்கு தாமதம் என்றாலும் ஒருமணி நேரத்திற்கான சம்பளத்தை பிடித்தம் செய்வது. பணிநிரந்தரம் கேட்டால் வேலையை விட்டே விரட்டுவது. ஆலை பராமரிப்புக்கு உரிய செலவு செய்யாமல், பாதுகாப்பு கருவிகள் இல்லாமல் உயர்அழுத்த மின்சாரத்தில் இயங்கும் கருவிகளை இயக்கும் தொழிலாளர்கள் கடந்த இருமாதங்களில் 155 பேர் அடிப்பட்டுள்ளனர். இரு தொழிலாளிகள் உயிர் இழந்துள்ளனர். இப்படி பல அடக்குமுறைகளையும் ஏவிதான் பல ஆயிரம் கோடிகளை லாபமாக ஈட்டியுள்ளது.

இதற்கெதிராக கடந்த சில மாதமாகவே CITU சங்கம் தனக்கேயுரிய பாணியில் அடையாளப் போராட்டங்களை நடத்தியுள்ளது. இதற்கு செவிசாய்க்காத CVL நிர்வாகத்தின் HR (முன்னால் திருச்சி மாவட்ட SP) கலியமூர்த்தி தன் செல்வாக்கை பயன்படுத்தி பிரச்சனையின் போதெல்லாம் 200, 300 போலீசை ஆலை வாசலில் குவித்து பயமுறுத்துவது, சங்க முன்னணியாளர்களை கைது செய்வது, அவர்களின் மீது கொலை முயற்சி என பொய்வழக்கு போடுவது, போராட்த்தில் ஈடுபட்டதை காரணம்காட்டி வேலை நீக்கம் செய்வது,  என்பதோடு இதை காட்டி மற்ற தொழிலாளர்களை பயமுறுத்தியும் வந்துள்ளனர்.

இத்தகைய முதலாளித்துவ பகற்கொள்ளையையும், பயங்கரவாதத்தையும் பாதுகாக்க கடந்த தி.மு.க ஆட்சியில் வனத்துறை அமைச்சர் செல்வராஜ், தற்போது அ.தி.மு.க அமைச்சர் சிவபதி, ஆகியோர் காண்ட்ராக்ட்காரர்களாக காட்டபடுகின்றார்கள். இது தவிர ஒரு சில ரவுடிகளையும் காண்ட்ராக்டர்களாக கணக்கு காட்டுகின்றது நிர்வாகம். தொழிலாளர்களையோ, நிறுவனத்தையோ நேரில் கூட பார்க்காத இந்த பிராடு காண்டராக்ட்காரர்களுக்கு மாதம் மாதம் நிறுவனத்தில் இருந்து பங்கு அனுப்பப்படுகின்றது.

இதையும் எதிர்த்து போராடினால் ஒடுக்குவதற்காகவே குண்டாந்தடி கலியமூர்த்தியை HR ஆக போட்டு மாதம் 5 லட்சம் சம்பளம் கொடுக்கின்றது. மனித உரிமை என்றால் என்ன என்று கேட்க்கும் இந்த மிருகமே தற்பொழுது மனிதவளத்துறை அதிகாரி.

தற்பொழுது ஏற்ப்பட்ட உலக பொருளாதார நெருக்கடியினால் தொழிற்சாலைகளில் வேலை குறைந்துள்ளது. 3 யூனிட்டுகள் இழுத்து மூடப்பட்டு 5000 தொழிலாளர் வீட்டுக்கு அனுப்பட்டுள்ளனர். வேலை இல்லாது ஒரு சில மாதம் கூட தொழிலாளர்களை பராமரிக்க தயார் இல்லாமல் கடந்த செப்டம்பர் 24ம் தேதி சட்டப்படியான முன் அறிவிப்பு ஏதுமின்றி கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளது. ராஜினாமா கடிதம் தந்தால்தான் கடைசி மாத சம்பளத்தை தருவோம் என்று மிரட்டி, ராஜினாமா கடிதம் தந்த நபர்களுக்கு மட்டும் சம்பளம் தந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் கடந்த 17ம் தேதி திருட்டுத்தனமாக புதிதாக வேலைக்கு சேர்த்த 300 தொழிலாளர்களிடம் மாருதி தொழிற்சாலை செய்தது போன்று டீ குடிக்க, கழிபறைக்கு செல்ல 10 நிமிடம், தாமதமானால் கூட வேலையைவிட்டு நீக்கி கொள்ளலாம் என்பன போன்ற 100 நிபந்தனைகள் கொண்ட கடிதத்தில் சட்டத்திற்கு புறப்பாக முன்கூட்டியே ராஜினாமா கடிதம் பெற்றுக்கொண்டு வேலையில் சேர்த்துள்ளனர்.

இதை எதிர்த்து குமுறியவர்களில் ஒருவர்தான் ஜான்சன் டேவிட். 18.10.2012 அன்று “எங்களுக்கும் வேலைகொடு! எங்களையும் வாழவிடு!” என கைகளை உயர்த்தி முழக்கமிட்டவாறு தன் கையில் எழுதி வைத்திருந்த பிரசுரங்களை தொழிலாளர்கள் மத்தியில் தூக்கியெரிந்து விட்டு பெட்ரோலை ஊற்றிக்கொண்டு வந்திருந்த தன் உடலை, பேன்ட் பாக்கட்டில் வைத்திருந்த லைட்டரை பயன்படுத்தி தீ வைத்து கொண்டார்.

டேவிட்டின் மரண வாக்குமூலம்

 டேவிட்டின்-மரண-வாக்குமூலம்-1டேவிட்டின்-மரண-வாக்குமூலம்-2

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

டேவிட்-தீக்குளிப்பு
பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

 

திருச்சியில் இயங்கும் பு.ஜ.தொ.மு இத்தொழிலாளர் பிரச்சனைகளை ஒட்டி பல முறை சுவரொட்டி இயக்கம் மேற்கொண்டு தொழிலாளர்கள் மத்தியில் நன்கு அறிமுகமாகியிருந்ததால் நமக்கு தீக்குளிப்பைப் பற்றி தொழிலாளர்கள் தகவல் தந்தனர். தகவல் கிடைத்த உடனே தோழர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தொழிலாளியை பார்த்து ஆறுதல் கூறி அடுத்தக்கட்ட வேலையில் இறங்கினோம். 18.10.2012 காலை 9 மணிக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தொழிலாளி மறுநாள் 19.10.2012 அன்று அதிகாலை 1.30 மணி அளவில் உயிர் இழந்தார். இத்தகவலை அனைத்து தொழிலாளர்களுக்கும் சொல்லி அடுத்த நாள் காலையில் மருத்துவமனையில் தொழிலாளர்கள் குவிந்தனர். அவர்கள் மத்தியில் “கொலைகார முதலாளி போதிராஜ், கலியமூர்த்தியையும், காண்ட்ராக்ட்டர் கந்துவட்டி குணாவையும் கைது செய்! மாருதி தொழிலாளர்களிடம் இருந்து பாடம் கற்போம்! பற்றியெறிய வேண்டியது நாமல்ல என்பதை உணர்த்திடுவோம்!” என்ற  முழக்கத்தை துண்டறிக்கையாகவும், சுவரொட்டியாகவும் அச்சிட்டு தொழிலாளர் மத்தியில் வினியோகித்தும், சுவர்களில் ஒட்டியும் பிரச்சாரம் செய்தது தொழிலாளர் மத்தியில் பு.ஜ.தொ.மு.வரவேற்ப்பை பெற்றதுடன் இவர்கள் சரியாக செய்கின்றனர் என அங்கீகரிக்கவும் செய்தனர்.

தொழிலாளார்கள் இறந்தவரைபற்றி நினைவுகூறும் போது “ நாம ஏங்க சாகனும், முதலாளியையும், HR யையும் போட்டாதாங்க பிரச்சினை முடிவுக்கு வரும். நான் திருமணம் ஆகாதவன் மற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளிகளோ திருமணமாகி பிள்ளை குட்டிகளுடன் வேலை இல்லாம கஸ்ட்டபடுறாங்க. அவங்களுக்கு வேலை கிடைக்க உயிர் விட வேண்டுமானால் நான் முதலில் தீ குளிப்பேன்” என உண்ணாவிரத பந்தலில் டேவிட் சொன்னதை நாங்க புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டோமே என நம்மிடம் கதறி அழுதார்கள் தொழிலாளர்கள்.

தீக்குளித்து சாவுக்கு போராடும போதுகூட அவருடைய மரணத்தை கண்டு துளிகூட அச்சமில்லாமல் “ சக தொழிலாளிக்கு மீண்டும் அதே கம்பெனியில் வேலைகிடைக்க வேண்டும் அதற்காக என் உயிர் போவதை பார்த்து பெருமைப்படுகிறேன்” எனக் கூறியதை சொல்லி கதறினார்கள். தீக்காயம் பட்டு பல மணி நேரமாகியும் அவரது கண்ணில் ஒருசொட்டு கண்ணீர் கூட வரவில்லை. தன்நிலையை பார்த்து கதறி அழும் அம்மா, அப்பா, தங்கை, மாமா மற்றும் உறவினர்களுக்கும் அவர் தெம்பூட்டினார். “நான் செத்தா என்னம்மா மற்றவற்களுக்கு வேலை கிடைக்குமில்ல, அதனால அவங்க குடும்பம் சந்தோசப்படுமில்ல” என ஆறுதலும் கூறினார்.

செத்தார்-வெசல்ஸ்
பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

இவரது போராட்டத்தை பயன்படுத்தி அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுத்து சம்மந்தப்பட்ட நபர்களான முதலாளி, HR, காண்ராக்ட்காரர்களையும் கைது செய்ய வைத்து நிர்வாகத்தை பணிய வைக்காமல் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை காக்க வைத்து இரண்டு நாளும் பேச்சுவார்த்தை நாடகமாடி, நாடக ஒப்பந்தத்தில் சம்மந்தப்பட்ட நபர்களிடம் கையெழுத்து வாங்காமலேயே கோரிக்கை வெற்றி என தம்பட்டம் அடித்து தொழிலாளர்களின் இறுதி அஞ்சலிக்கு கூட தியாகத் தோழன்.டேவிட்டின் முகத்தை காட்டாமல் திருட்டுத் தனமாக மறைத்து ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பிவிட்டு முதலாளியின் உண்னையான ஊழியர் நான்தான் என கச்சிதமாய் காரியம் முடித்தது CITU பிழைப்புவாத தொழிற்சங்கம். இதைக்கண்டு கொதித்தெழுந்த தொழிலாளர்களின் கூட்டத்தை போலீசு தன் பங்குக்கு லத்தியை காட்டி விரட்டிவிட்டது.

டேவிட்டின் முடிவு தவறாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான தொழிலாளருக்காக நான் முன் நிற்கிறேன் என்ற தொழிலாளிக்கே உரிய வர்க்க உணர்வோடு உயிர்மூச்சு போகும்வரை இருந்தாரே, அத்தகைய உயரிய பண்பை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான தொழிற்சங்க தலைமையின் கீழ் அணிதிரளும் பட்சத்தில் தொழிலாளி வர்க்கத்திடம் இந்த முதலாளி போத்திராஜ், HR கலியமூர்த்தி மட்டுமல்ல எவனாக இருந்தாலும் மண்டியிட்டே ஆகவேண்டும். அப்படிப்பட்ட முன்னுதாரணம் மாருதி தொழிலாளர்கள் கற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களின் பாதையில் முன் செல்வோம். தோழர்.டேவிட்டின் வர்க்க பாசத்துக்கு ஒரு வரலாறு உண்டென்று நிரூபிப்போம். அதுவே அவரது தியாகத்துக்கு இறுதி அஞ்சலியாக அமையும்.

___________________________________________________________________

செய்தி : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருச்சி.

____________________________________________________________________