privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்காதலர்களுக்கு எதிராய் பார்ப்பன - வேளாள - வன்னியக் கூட்டணி!

காதலர்களுக்கு எதிராய் பார்ப்பன – வேளாள – வன்னியக் கூட்டணி!

-

காதலுக்கு தடை“வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் சங்க விழாவில் தங்களது கொள்கையை விளக்கி சிறப்புரை ஆற்றிய காடுவெட்டி குரு இவ்வாறு பேசியிருக்கிறார். காடுவெட்டி பேசிய அதே மேடையில் சமூக நீதிப் போராளி மருத்துவர் ராமதாசும் அவரது புத்திரனும் பசுமைப் போராளியுமான அன்புமணி ராமதாசும் அமர்ந்திருந்து காடுவெட்டியின் பேச்சை ரசித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பா.ம.கவைச் சேர்ந்த இளைஞர்கள், காடுவெட்டியின் பேச்சை பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர்.

இதற்குச் சில வாரங்கள் முன்பு (15/04/2012) தான், தமிழகத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கரூரில் ஒரு திருமண மண்டபத்தில் கூடிய கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையினர், கலப்புத் திருமண எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தை ஆரம்பித்திருந்தனர். அதன் அழைப்பிதழில் சிறப்புப் பேச்சாளராக காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.கே குப்புசாமியின் பெயர் இடம் பெற்றிருந்தது. வேறு சாதியில் திருமணம் முடிப்பதால் கொங்குக் கலாச்சாரம் சீர்கெட்டுப் போய் விடுவதாகவும், பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதால் கொங்கு வேளாளர்களின் நிலவுடைமை பாதிக்கப்படுவதாகவும் மேற்படி கூட்டத்தில் பேசப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பார்ப்பனர் சங்க இதழான பிராமின் டுடே பத்திரிகையில் அதன் தலைவரான நாராயணன், “ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நடைமுறைகளின்படி நீண்டகாலம் கலப்பில்லாமல் உருவாகும் மரபணு சார்ந்தவர்களின் சந்ததியினர்தான் அந்த மரபணுவின் குண நலனை இயல்பாகப் பெறுகிறார்கள். எல்லாமே இதன்மூலம்தான் என்று நாம் சொல்லாவிட்டாலும் சில பிராமண இயல்புகள் இம்மாதிரி தொடர் நிகழ்வின் அடிப்படையில் வலுப்பெறுகின்றன என நம்பத் தயாராகவே உள்ளோம். இறுதியிட்டு உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும் சிறிதளவாவது அறிவியல் அங்கீகாரம் பெற்றுவிட்ட இந்த ஒரு விஷயத்திற்காவது கலப்புத் திருமணம் என்னும் விஷப் பரிட்சையிலிருந்து நம் சமூகம் விலகி இருக்கலாமே” என்று திமிர்த்தனமாக எழுதுகிறார்.”.

இந்தக் கூத்துகளெல்லாம் கடந்த நாற்பதாண்டுகளாக சமூக நீதி கோலோச்சும் தமிழகத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது. சமூக விடுதலையின் அடையாளம் தான் சாதிவாரியான எழுச்சி என்று சொல்லிக் கொண்டு ராமதாஸை தொண்ணூறுகளின் துவக்கத்தில் தலைமேல் தூக்கி வைத்துக் கூத்தாடிய பின்னவீனத்துவ அறிவுஜீவி கும்பலோ சம்பிரதாயமான முணுமுணுப்பைக் கூட வெளிப்படுத்தாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. ராமதாசுக்கு ‘தமிழ்க்குடிதாங்கி’ பட்டமளித்து மகிழ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் இருக்கும் இடமே தெரியவில்லை. பார்ப்பனிய எதிர்ப்பை முன்வைத்த பெரியாரின் வழிவந்தவர்களோ நாராயணனின் திமிர்த்தனமான அறிவிப்புக்கு எந்தவிதமான எதிர்வினையையும் ஆற்றவில்லை.

இது ஒருபக்கமிருக்க, சமீப காலமாக தமிழகத்தில் கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதை நாளேடுகளில் வெளிவரும் செய்திகளின் மூலமே அவதானிக்க முடிகிறது. எவிடென்ஸ் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம்  ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின்படி, தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு 6,009 பெண் தற்கொலைகள் பதிவாகியுள்ளதாகவும் அதில் 629 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட பெண்களில் 18-30 வயதுடைய பெண்கள் 236 பேர் என்றும், இதில் கணிசமானவை கௌரவக் கொலைகளாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கிறது.

உள்ளூர் அளவில் போலீசு ஆதிக்கசாதி சார்பாகவே இருக்கிற காரணத்தால், பெரும்பாலான மரணங்களில் முறையான விசாரணையோ, பிரேதப் பரிசோதனையோ செய்யப்படுவதில்லை என்பதால் அனேகமான கௌரவக் கொலைகள் மறைக்கப்பட்டு விடுகின்றது. போலீசு மட்டுமின்றி, அதிகார வர்க்கமும் நீதித் துறையுமே பார்ப்பனர்களாலும் ஆதிக்க சாதியினராலுமே இட்டு நிரப்பட்டிருப்பதாலும் இந்திய அரசின் சிவில் மற்றும் நீதி நிர்வாக இயந்திரங்களின் ஆன்மாவாக பார்ப்பனியமே இருப்பதாலும் குற்றவாளிகள் அனேகமாக தண்டனையில் இருந்து தப்பி விடுகின்றனர்.

காதல் கலப்புத் திருமணங்கள் உண்டாக்கும் இனக்கலப்புகளின் மேல் பார்ப்பனியத்திற்கு வரலாற்று ரீதியான வயிற்றெரிச்சல்கள் ஒருபக்கமிருந்தாலும், சமீப காலங்களில் இந்தப் போக்குகள் தீவிரமடைந்திருப்பது கவனத்துக்குரியது. தொழில்வளர்ச்சியின் பரவலும் , சமூகவளர்ச்சிக் குறியீட்டுப் புள்ளிகளும் தமிழகத்தை வடமாநிலங்களில் இருந்து ஒப்பீட்டளவில் ஓரளவுக்கு மேம்படுத்திக் காட்டினாலும், பார்ப்பனியக் காட்டுமிராண்டித் தனங்களுக்கு தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்பதையே இந்தப் புள்ளி விபரங்கள் அறிவிக்கிறது.

பெரியாருக்குப் பின் அவரது வழித்தோன்றல்களான திராவிடக் கம்பெனிகள் இன்று பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைகளை முற்றிலுமாகக் கைகழுவி விட்டு அப்பட்டமாக தரகு அதிகாரவர்க்கமாகத் திரிந்து போய் நிற்கிறார்கள்.  முகவரியில்லாத அரசியல் அநாதைகளாகத் திரிந்து கொண்டிருந்த சிறு சிறு சாதிக் கட்சிகளோடு தேர்தல் கூட்டணி வைத்து அவர்களை வளர்த்து விட்டதோடு தமது செயல்பாடுகளையும் ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கிகளைக் காப்பாற்றிக் கொள்வது என்கிற அளவுக்குச் சுருக்கிக் கொண்டுள்ளனர்.

அதிகரித்து வரும் பொருளாதாரத் தாக்குதல்களுக்கு இலக்காகும் சாமானிய மக்களின் கவனம் வர்க்க ரீதியிலான அணிசேர்க்கையை நோக்கிச் செல்வதை சாதிக் கட்சிகள் தடுத்து தம்பக்கம் அணிதிரட்டுவதற்கு முயல்கின்றன.  இன்னொரு பக்கம் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் பலன்களை அறுவடை செய்து புதிய நடுத்தர வர்க்கமாக எழுந்துள்ள ஒரு புதிய பிரிவினரும் பார்ப்பனிய சாதி மனோபாவத்துக்கு இலக்காகி உள்ளனர். ஓரளவுக்குப் படித்து பன்னாட்டுக் கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்து பொருளாதார ரீதியில் ஒப்பீட்டளவில் ஒரு மேம்பட்ட நிலையைப் பெற்று விட்டாலும், சமூகதளத்தில் இவர்களுக்கும் ‘ஆண்ட பரம்பரைப்’ பெருமிதம் தேவையாய் இருக்கிறது.

முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் சாதி ரீதியிலான குழுமங்களில் அதிகளவில் சேர்வது பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பக் கம்பெனிகளில் வேலை செய்யும் இளைஞர்கள் தாம். இணையப் பரிச்சயம் உள்ள இவர்கள், சுய சாதியில் பெண் தேடுவதற்கென்றே சாதி வாரியாக வரன்களைத் தேடித் தரும் பிரத்யேக இணையதளங்களும் சமீப காலமாக பெருகி வருகின்றது.

ஆக, தொழில் வளர்ச்சியோ அதன் மூலம் ஏற்படும் பொருளாதார முன்னேற்றமோ சாதி போன்ற பிற்போக்குக் கருத்தியல்களை பலவீனப்படுத்தி விடுவதில்லை. பார்ப்பனியம் தனது வரலாற்றில் மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப புதியவைகளை எப்படி உட்செறித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோ அதே போல இன்றைய தொழில்நுட்பயுகத்தின் சகல வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்து வருகிறது.  அதற்கு பக்கபலமாக அதிகாரவர்க்கமும் ஆளும் வர்க்கமும் இருக்கும் போது, தனது அடித்தளத்தின் மேல் நிகழ்த்தப்படும் கலப்புத் திருமணம் சாதாரண தாக்குதல்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் கொலை வரை செல்லும் துணிவைப் பெறுகின்றது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கவுரவக் கொலைகள் பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனமான எவிடென்ஸ், இதைத் தடுக்க வலுவான சட்டங்கள் தேவை என்கிறது. வேறு என்.ஜி. ஓக்களும் அறிவுஜீவிகளும் கூட இதையே வலியுறுத்துகின்றனர். ஒருவேளை அப்படிப்பட்ட வலுவான சட்டங்கள் இயற்றப்பட்டாலுமே கூட, அதனை அமுல்படுத்தப் போவது பார்ப்பனியமயமான அதிகார வர்க்கத்தின் இயந்திரங்கள் தான் எனும் போது, கிடைக்கப் போகும் நீதியின் யோக்கியதை என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

உத்திரபிரதேசத்தின் டி.ஐ.ஜியான எஸ்.கே மாத்தூர், வெளிப்படையாகவே காதல் திருமணம் புரிந்த பெண்ணின் தந்தையிடம் அப்பெண்ணைக் கௌவரவக் கொலை செய்யத் தூண்டும் விதமாகப் பேசியதற்கு ‘தண்டனையாக’ பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளார். எஸ்.கே மாத்தூரின் பேச்சு பகிரங்கமாக ஊடகங்களில் அம்பலமாகி, பெண்ணிய இயக்கங்கள் போராடியதன் பின் தான் இந்த நடவடிக்கையும் கூட எடுக்கப்பட்டுள்ளது.

ஆக, வெறுமனே வலிமையான சட்டங்கள் இயற்றுவதால் மட்டுமே தீர்ந்து விடக் கூடிய பிரச்சினையல்ல இது. அப்படிப்பட்ட சட்டங்கள் தற்போது இல்லாமலுமில்லை. சமூகத் தளத்திலும் அரசியல் அரங்கிலும் பார்ப்பனியம் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு, அதிகார மட்டத்தில் அதன் செல்வாக்கு வீழ்த்தப்பட்டால் மட்டுமே சாதி வெறியர்களைத் தண்டிக்க முடியும்.

__________________________________________________

தமிழரசன்.
__________________________________________________