எம்.எல்.ஏவை ரவுண்டு கட்டிய பெண்கள்!

8
எம்.எல்.ஏ கணேசன்
எம்.எல்.ஏ கணேசன்

ப்பவும் போல, நைட்டெல்லாம் கரண்டு இல்லாம, கொசுக்கடியா தூக்கமும் இல்லாம, குழந்தைகளின் அழுகையோடு பொழுது விடிந்தது. (10-11-12) “சனிக்கிழமைக்கும்  ஸ்கூல்” என்று குழந்தைகள் புலம்பிக் கொண்டே பள்ளிக்கு கிளம்பியது. அப்போது தெருவிலிருந்து பலமான குரல்கள்..

“ஜெயா, ஜெயா சீக்கிரமா வா…. மனு ஒண்ணு எழுதணும்….. வாயேன்….”

அதற்கு, “ஏன்… ஏற்கெனவே பல மனுக் கொடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்ல… திங்கட்கிழமை தானே மறுபடியும் மனுக் கொடுக்க கலெக்டர் ஆபிசுக்கு போலாமுனு இருக்கோம்.  இப்ப என்ன….?” என்று  பதில்.

“இல்ல….. கருக்குப்பேட்டைக்கு ரேஷன் கடை திறக்க எம். எல். எ. வாலாஜாபாத் கணேசன் வர்றாராம்…. அவர் கிட்ட நேரடியா மனுக் கொடுப்போம்….. நகர்ல இருக்கிற பொம்பளங்க, ஆம்பிளைங்க, பசங்க என எல்லாருமா போய் பார்க்காலம்.  மனு  கொடுக்கலாம்” என்றனர்

“சரி, குழந்தையை பள்ளிக்கூடம் அனுப்பிட்டு மனு எழுதுறேன்… நீங்க ஆளுங்களை தயார் படுத்துங்கப் போலாம்….”என்று பதில்குரல்.

குறைந்தது இது, பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கைக் கொண்ட மனுவாதான்   இருக்கும்… அப்போது, இட்லி வாங்க, பக்கத்துவீட்டுக்கு, வந்த அம்மு, “அக்கா, இப்ப கொழந்தைகளுக்கு கொசு கடிச்சி, உடம்பெல்லாம் கொப்பளமா இருக்கு, அதையும் சேர்த்து எழுது, பள்ளிக் கூடமும், பால்வாடியும் பக்கத்திலிருக்கிறதையும் குறிப்பிட்டு எழுது, கொழந்தையை கூட்டிக் கொண்டு வரேன். எல்லாருமா போய் கொடுக்கலாம்.” என்றார்.

மனு எழுதியவர், பெண்களிடம் கையெழுத்து வாங்க வெளியில் சென்று பார்த்தால், பாதிப் பெண்களை காணவில்லை. எங்க போய்ட்டாங்க…. என்று விசாரித்ததில், – கரண்ட் இல்லாததால, பட்டு தறி  நொடிஞ்சிப் போய்,குறைந்த வருமானத்துக்கும் வழியில்ல.. இதைப் பயன்படுத்தி – என். ஜி. ஓ. க்கள் வட்டி கடை விரித்து, “நாணயமாக திருப்பி செலுத்துவது எப்படி?” என்று பாடம் நடத்தி,  கடன் தருகிறார்கள்.  பெண்கள் அங்கு இருந்தனர்.

அங்கிருந்து அனைவரும்  கிளம்பினோம். மனுவுடன்..

கொப்பளத்தோடீருந்த குழந்தைகளையும் தூக்கிச் சென்றோம். அங்கு ரேஷன் கடைய திறந்துவிட்டு, ‘அம்மா’ புகழ் பாடிக்கொண்டிருந்தார், எம்.எல்.எ. வாலாஜாபாத் கணேசன். அவரைச் சுற்றி பி.டி.ஒ., மற்றும் பிற அதிகார  கும்பல். 10 க்கும் மேற்பட்ட கார்களில் அவரது அல்லக்கைகள் சூழ, ஒரே தடபுடல். அலப்பறை, அல்லொகளம். 2  புல்லட் வாகனத்தில் அ.தி.மு.க., கொடியுடன் “எம்.எல்.ஏ., பேசுகிறார், எம்.எல்.ஏ., பேசுகிறார்”என்று தெருவில், புழுதி கிளம்பும் விளம்பரம். சாமி ஊர்வலம் போல், தெருவில் கோலம் போட்டு சூடம் காட்டாததுதான் பாக்கி.

நேரடியாக அவரைப் பார்க்க விடாமல், நடுவுல இரண்டுப் பேர், மனுவை வாங்கி படித்துவிட்டு, பிறகு, அவரிடம் கொண்டு சென்றனர்.  கூட இருந்த அல்லக்கைகள், “யாருனா ஒருத்தரா பேசுங்க… எல்லாரும் பேசக்கூடாது.” என்றனர்.  அதன்படி நாங்க, அம்மு என்பவரிடம் மனுக் கொடுத்து, குழந்தையையும் தூக்கிக்கொண்டு பிரச்சனைகளை சொல்லும் படி அனுப்பி, பின் தொடர்ந்தோம்.

மனுதானே கொடுக்கிறார்கள், வாங்கிப் போட்டுட்டு கிளம்பிவிடலாம் என்று நினைத்த எம்.எல்.எ கணேசனுக்கு கிளம்ப வழியில்லை. பெண்கள் சுற்றி நின்றோம். அம்மு பிரச்சனைகளை கூறிக்கொண்டு இருக்கும் போதே,  “இரும்மா, மனு படிக்குறோம் இல்ல… சும்மா சத்தமா பேசாதே..” என்று அதட்டினார் எம்.எல்.எ.

அடிக்கடி கைப்பேசியைக் காதில் வைத்துக் கொண்டு, பேசமாலேயே,  கட் பண்ணி போடுவது என பலமுறை வித்தை காட்டினார். அவர் போனை எடுத்ததும் உடனிருப்பவர்கள்,  “அண்ண போன் பேசுறாரு, அண்ண போன் போசுறாரு …உஷ் …உஷ்…”  என்று எங்கள் வாயடைத்தனர். நாங்கள் அனைவரும், அனுபவிக்கும் கொடுமையை விளக்கி, “சாக்கடையை வந்து பார்த்துவிட்டுதான் போக வேண்டும்” என்று எம்.எல்.எ., வை விடவில்லை.

எம்.எல்.எ. கணேசன், “இப்பதானே மனு கொடுத்து இருக்கிறீங்க… பார்த்துக்கலாம்.. நான் ஊர்த்தலைவர் கிட்ட சொல்றேன்…” என்று நழுவ பார்த்தார். அதற்கு பெண்கள், “இதையேதான் ஒரு வருஷமா…. சொல்றீங்க… நடவடிக்கை ஒன்றும் காணோம். இன்னிக்கு ஒரு முடிவு தெரிந்தாகணும்” என்றனர்.

உடனே எம்.எல்.எ கணேசனின், அல்லக்கைகள், “அண்ணங்கிட்ட சொல்லிட்டீங்க, இல்ல. பார்த்துக்குவாறு” என்று எங்களை துரத்தினார்கள்.

அதற்கு, “சார், வெறும் பைவ் மினிட்ஸ் தான் ஆகும்.. நீங்க வந்து பார்த்துட்டு போங்க” என்று மறுபடியும்,  ஒரு தச்சு தொழிலாளி கெஞ்சினார். எம்.எல்.எ. கணேசன், “இல்ல, இல்ல, மனு என் கையில இருக்கு….. போதும்”  என்று பிடிஓ வை கூப்பிட்டு எங்களிடம் விட்டுவிட்டு, அவர் தப்பித்து போவதிலே குறியா இருந்தார். நாங்கள், வீண் விவாதம் செய்வதுப் போன்றத் தோற்றத்தை எம்.எல்.எ.,வே, கூட்டத்தில் உருவாக்கினார். முகத்தை சுளித்து, எரிச்சலைடைந்தார்.

இதனை கண்டப் பெண்கள், குழந்தைகள் என்ன செய்வது என்று மிரட்சியுடன், நின்றுக்கொண்டிருந்தனர். அப்போது,

எங்களில் ஒருப் பெண், பெண்களை தள்ளிக்கொண்டு, கொப்பளத்துடன் இருக்கும் குழந்தையை அவர் மேஜை மீது உட்காரவைத்தார். குழந்தையைக் காட்டி, “ இங்க பாருங்க, தேங்கி இருக்குற கழிவுநீரால ஏற்பட்ட கொப்பளங்கள், பல கொழந்தைகள் என்ன ஜுரமுனு தெரியாம காய்ச்சல் இருக்குதுங்க, இதுக்கு வழி சொல்லிட்டு கிளம்புங்க..” என்று கத்தினார்.

எம்.எல்.எ. கணேசன் பாவமாக, ‘உச்’ கொட்டிவிட்டு கோவமாக, “சரி பார்த்துக்கலாம்” என்றார்.

மறுபடியும் போனை காதில் வைத்துக் கொண்டார்.  அவரது அல்லக்கைகளை பார்த்து  எங்களை துரத்தும்படி சைகை காட்டினார்.

பிறகு, “உடனே…. அய்யம்பேட்டை தலைவரை வரச் சொல்” என்று உத்தரவு போட்டார் அடியாட்களிடம்.

திரும்பவும் கிளம்ப முயற்சித்தார். நாங்கள் விடாமல்,

மீண்டும்,“வருஷக் கணக்கா இருந்து அவஸ்தை பட்றோம், அஞ்சு நிமிசங்கூட வந்து பார்க்கமுடியாதா?

இதுக்கு தான் ஓட்டுப்போட்டு உட்கார வைச்சிருக்கோமா? பலமுறை மனு கொடுத்தும் எந்த பலனும் இல்ல, ….. வாந்தி பேதி வந்தது தான் மிச்சம். இன்னிக்கு கண்டிப்பா எதாவது தீர்வு வேண்டும்” என்றோம்.

அதற்கு எம்.எல்.எ. கணேசன் எங்களை நோக்கி, கையை நீட்டி, “மூஞ்சப்பாரு, .. நீங்க, டிஎம்கே வா… இந்த பொம்பளங்கள இழுந்துக்கினு போங்க… இல்லனா நான் ஒண்ணும் செய்ய மாட்டேன்”  என்று இரண்டு, மூன்று முறை ஏக வசனத்தில் கத்தினார்.

அதற்கு நாங்கள், “மூஞ்சப்பாரு, கீருனு… திட்டின அவ்வளவுதான்.. இதுக்குதான் உன்னை ஓட்டுப்போட்டு உட்காரவைத்திருக்கமா?” என்று கோவமடைந்தோம். சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்த்தனர்.

எங்களை  அடக்க ஆள் இல்லாமல், அனைவரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க.. உஷாரான எம்.எல்.எ., சட்டென்று எழுந்து பெண்களை காரணம் காட்டி கோவித்துக்கொண்டு கிளம்ப முற்பட்டார். கிளம்பும்போது  நாங்கள், “கிளம்ப வேற சாக்கு கிடைக்கில…  பிரச்சனைய தீர்க்க சொன்னா, கோவிச்சிக்கினு போறாராம்” என்று சத்தம் போட்டோம்.

அனைவருக்கும் அதிர்ச்சியாகிவிட்டது. எம்.எல்.எ கோவித்து கொண்டு போறாரே என்று… எங்களை சமாதானப்படுத்தினார்கள் சிலர்.  மெதுவாக எங்களிடம், “நீங்க கோவமா பேசவேதான் அவரு கிளம்பிட்டாரு…” என்று முறையிட்டனர்.

அதற்கு நாங்கள்,  “நாங்க தான்  கோவமா பேசினோம்…. நீங்கல்லாம் கெஞ்சி, கெஞ்சிதானே பேசினீங்க அதுக்கு மதிப்பு கொடுத்து வந்து பார்க்கணும் இல்லயா?” என்று எம்.எல்.எ. கணேசன் முன்னிலையிலேயே கேட்டோம்.

ஒரு அக்கா, அவரிடம் சென்று “அண்ணே கோவிச்சுக்காதே… நாங்க படற அவஸ்தைதான் அவங்க சொன்னங்க.. நீ வந்து … பார்த்துட்டு போ… ” என்று கெஞ்சினார்.

இதுக்கு மேலே எம்.எல். எ.  கிளம்பினால், அவருடைய சுய ரூபம் வெளிப்பட்டு விடும் என்று, எங்களை அவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி, “உங்களுக்காக நான் வந்து பார்க்கிறேன்” என்று சாக்கடையை  பார்வையிட்டார். அப்போது  ஊர்த்தலைவரை திட்டுவது மாதிரி பாவ்லா காட்டினார். ஊர்த்தலைவரிடம்,

“பொம்பளங்க என்ன, என்னா?…. கேள்வி கேக்குதுங்க…. உன்னால தான்..” என்று,  முறைத்தார்.

மறுபடியும் “மூன்று நாட்கள் பிறகு முடிக்கிறோம்” என்றார்கள்…. மீண்டும் கெடு வைச்சதுதான் மிச்சம். சாக்கடையை அப்புறப்படுத்த அல்ல! சாக்கடையை,  எம்.எல்.எ., பார்த்துவிட்டு போவதற்கே இந்த பாடு!…. இந்தப் போராட்டம்!…… இன்னும், அதை சீர்ப்படுத்த நாங்க படப்போற பாடு.. அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம்!!

பிரச்சனையின் மூலம்

சாயக் கழிவுகள் சாக்கடை
சாயக் கழிவுகள் சாக்கடை

காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டையில், நெசவுதான் உயிர்த்தொழில். அதைப்போல, நூலுக்கு சாயம் போடுவதும் முக்கியத் தொழில். அதிலிருந்து வரும் கழிவுகளை அப்புறப்படுத்த சரியான வழிஇல்லை. ஆகையால் ஊர் கோடியில் இருக்கும் பகுதியில் அந்த கழிவுகளை விட்டுவிடுவார்கள். இதனால், ஏகப்பட்ட பாதிப்புகள். பெண்களுக்கு, பல், நகம் சொத்தை, அவர்கள்,வாயை திறந்தாலே கோரமாக இருக்கும். குழந்தைகளுக்கு தீராத ஜூரம், காதில் சீழ், அம்மைப்போன்ற கொப்பளங்கள் என்று சொல்ல அடங்காத நோய்கள். குடிதண்ணிரும் கெட்டு, சோப்புதண்ணிர்ப்போல வரும்.

இதனை பலமுறை வலியுறுத்தி,  மக்கள் திரண்டு, ஊர்த்தலைவர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை மனு கொடுத்தாகிவிட்டது. பெயருக்கு மறியலும் செய்தாகிவிட்டது.

அப்போது நடந்த கூத்துகள் ஒரு தனிக் கதை!

கலெக்டர் கிட்ட மனு கொடுத்தால், நல்லா பார்த்தீங்களா….? அது சாய தண்ணியா…..? என்று நக்கலடிப்பார். அதிகாரிகள்  எங்களிடம் மனு வாங்கும் போது ஒவ்வொரு முறையும்,  நாங்க சொல்ற கஷ்டங்களை 5 நிமிட சீரியலா வரும் ‘ரியல் ஷோவா’ நினைத்து காலை ஆட்டிக்கொண்டே எங்களை வேடிக்கையாக பார்ப்பர். கடைசியில் பிரச்சனைக்கு, ஏதோ பரிகாரம்  செய்வதாக எங்களை பந்தாடுவார்கள். கலெக்டர், பிடிஓ வைப் பார்க்க சொல்லுவார். பிடிஒ, ஊர்த்தலைவரை பார்க்கச் சொல்லுவார்.  ஊர்த்தலைவர் எம்.எல்.எ வைப் பார்க்க சொல்லுவார். எம்.எல்.எ. திரும்பவும் கலெக்டரை பார்க்கச் சொல்லுவார். கடைசியில் மக்கள் சலிப்படைந்து மனுக் கொடுக்கும் போராட்டத்திலிருந்தும் ஒதுங்கிக் கொள்வார்கள்.

மக்களின் போராட்டம் மனுக் கொடுப்பது, மன்றாடுவது என்பது வாடிக்கையாகி விட்டது. ஆனால் அதிகாரிகளும், போலிசும், எம்.எல்.எ வும் மக்கள் வந்து நின்றாலே அவர்களை மந்தைகள் போன்று மிரட்டுவது, கத்துவது நிரந்தரமாகிவிட்டது. கடைசியில் முடிவு என்ன?  திரும்பவும் ஆரம்பம்தான் என்று தோன்றினாலும், பெண்களின் விடாமுயற்சி போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். கண்முன் உதாரணம், எம்.எல்.எ. என்றும் அஞ்சாமல், துணிச்சலுடன் பேசி முற்றுகையிட்டது.

இது பெண்கள் தன்னிச்சையாக நடத்தியப் போராட்டம்.  அவர்கள், புரட்சிகர அரசியல், அமைப்புப் பலத்தை உணரும் போது  இதன் வேகம், மேலும் கூடும், என்பது நிதர்சனம்.

_________________________________________________

– வீரலட்சுமி.

_________________________________________________