privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைகல்லறைக் கருநாகங்கள்! – உண்மைச் சம்பவம்!

கல்லறைக் கருநாகங்கள்! – உண்மைச் சம்பவம்!

-

பாட்டி-ஓவியர்-மருது

ர் நினைவு வந்தாலே பிச்சைக்காரப் பாட்டியின் நினைவும் சேர்ந்தே வந்து விடுகிறது. இதோ, ஒரு ஆண்டுக்குப் பின் ஊருக்கு வருகிறேன். திருநெல்வேலியில் இருந்து திசையன்விளை வந்து, அங்கிருந்து மகிமையின் நகரம் நோக்கி ட்ரக்கர் வண்டில் வந்து கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை பிச்சைக்காரப் பாட்டியின் நினைவு தான். கடைசியாக சென்ற கிருஸ்துமசுக்குப் பார்த்தது தான்.

அவரை ஏன் எல்லோரும் பிச்சைக்கார பாட்டியென அழைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் பிச்சையெடுப்பவரல்ல. ஆனாலும் அப்படித் தான் எல்லோரும் கூப்பிடுகிறார்கள்.  அவரது வயது என்னவென்பதும் யாருக்கும் தெரியாது. அவருக்கு 120 வயது என்று ஓரு முறை அகஸ்டின் சொன்னது நினைவிருக்கிறது. அவன் ஒரு பொய் சொல்லி என்பதால் நான் அதை நம்பவில்லை.  ஒரு முறை இந்தக் கேள்வியை பாட்டியிடமே கேட்டு விட்டேன். சுமார் இருநூற்று எழுபத்தி நான்கு சுருக்கங்கள் கொண்ட முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி கொஞ்சம் நேரம் முறைத்துப் பார்த்தாரேயன்றி பதில் மட்டும் சொல்லவில்லை.

அதே போலத்தான் அவரது பெயரும் யாருக்கும் தெரியாத ரகசியமாகவே இருந்தது – யாரும் பெயரைத் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதில் அவர் கவனமாக இருந்தார். அந்த ரகசியத்தை அம்பலமாக்கியது நான் தான்.  கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது முதியோர் உதவித் தொகைக்காக அரசாங்கத்துக்கு அவர் அனுப்பிய பாரம் ஒன்றை நான் நிரப்பிக் கொடுத்தேன். அப்போது தான் அவரது பெயர் ரோஸ்லின் என்பது தெரிய வந்தது. ஆனாலும் ரோஸ்லின் என்பது அவருக்கு ஒட்டவில்லை. எல்லோரும் பிச்சைக்காரப் பாட்டி என்றே அழைத்தார்கள். அதில் அவருக்கும் பெரிதாக மனக்குறை எதுவும் இருக்கவில்லை.

‘அவர் எங்கேயிருந்து வந்தார்? உறவினர்கள் யார்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?’ என்பதெல்லாம் கூட யாருக்கும் தெரியாத ரகசியங்கள் தான். வாத்தியார் தாத்தா நாற்பது ஆண்டுகளாகவே பிச்சைக்காரப் பாட்டியை இந்தப் பகுதியில் பார்த்துக் கொண்டிருப்பதாக ஒருமுறை சொன்னார். பிச்சைக்காரப் பாட்டி எங்கள் தெருவில் இருக்கும் எல்லோரது வீட்டுக்குள்ளும் அநாயசமாகச் சென்று வருவார். கீரை ஆய்ந்து கொடுப்பார்; காய்கறி வெட்டிக் கொடுப்பார்; துணி மடித்துக் கொடுப்பார். சில சமயம் பாத்திரம் விளக்கித் தருவார். சின்னக் குழந்தைகள் இருந்தால் பாட்டுப் பாடி தூங்க வைப்பார். என்னைக் கூட அவர் தான் சின்ன வயதில் தாலாட்டினாராம். யார் வீடாக இருந்தாலும் சமயலறை வரை உரிமையோடு சென்று, இருக்கும் சாப்பாட்டை அவரே போட்டு சாப்பிட்டுக் கொள்வார்; யாரிடமும் அனுமதியெல்லாம் கேட்க மாட்டார்.

தள்ளாடித் தள்ளாடி தான் அவரால் நடக்க முடியும். கொஞ்சம் கூன் விழுந்த முதுகு. கைநீட்டிக் காசு கேட்டால் பாவம் கொடுக்கலாமே என்று எண்ண வைக்கும் முதிய தோற்றம். ஆனாலும் அவர் யாரிடமும் கைநீட்டியதில்லை. ஏதாவது வேலை செய்து கொடுத்து விட்டு, கொஞ்ச நேரம் தயங்கி நிற்பார். எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார் – கொடுக்கா விட்டாலும் குறைபட்டுக்கொள்ள மாட்டார். அவர் சுருக்குப்பை எப்போதும் புடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். கோனார் தெருவின் கடைசியில் இருக்கும் ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்திருந்தார். நானூறு ரூபாய் வாடகை. பக்கத்து வீட்டிலிருந்து ஒயர் இழுத்து ஒரு குண்டு பல்பு போட்டிருப்பார்.

பிச்சைக்காரப் பாட்டியின் லட்சியம் ஒன்றே ஒன்று தான். ‘சாக வேண்டும்; சீக்கிரமாகச் செத்து விட வேண்டும். தனது சாவுக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் வர வேண்டும்; எல்லோரும் அழ வேண்டும். தனது சாவு கவுரவமாய் இருக்க வேண்டும்’ என்பதே அவரது கனவு. வாழ்க்கையின் அர்த்தமே நல்ல சாவில் தான் உள்ளது என்று அவர் சொல்லிக் கொள்வார். இதற்காக அவர் நிறைய பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். மழைக்காலங்களில் அவரது குடிசையினுள் நீர் புகுந்து விடும். அப்போதெல்லாம் எங்கள் வீட்டு வெராந்தையில் படுத்துக் கொள்வார். உறங்கப் போகும் முன் அவர் அழுது அழுது ஜெபம் செய்வதைக் கேட்டிருக்கிறேன்.

“கர்த்தாவே எங்கள் ஏசப்பா ! லாசருவை உயிர்ப்பித்த ஏசைய்யா! ஆவியில் ஏழைக்கே பரலோக ராஜ்ஜியம் என்று சொன்ன கர்த்தாவே! உம் பிள்ளைகளை ஆசீர்வதியுமப்பா..” என்று துவங்கும் ஜெபத்தில் தொடர்ந்து அவருக்குத் தெரிந்த ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி ஆசீர்வதிக்க வேண்டிக் கொள்வார். இறுதியில் தனக்காகக் கேட்க வரும் போது  “ஐயா! ராஜாதி ராஜாவே! நியாயாதிபதியே ! இந்த சரீரத்தினின்றும் எனது ஆவிக்கு ஒரு விடுதலை தாருமப்பா!” என்று கேட்டு முடிப்பார். அதற்கு நான்கு மணி நேரமாவது முழங்காலிட்டே அமர்ந்திருப்பார். இது என்ன கிறுக்குத்தனம் என்று யோசித்திருக்கிறேன். கிழண்டு விட்டால் சாக்காட்டுக்குக் காத்திருப்பார்கள் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதுதான் நேரில் பார்க்கிறேன். அதிலும் நாலு மணி நேரமா ஜெபிப்பார்கள்? பாட்டிக்கு இது மட்டுமல்ல, இன்னொரு கிறுக்கும் இருந்தது. அது தான் சர்ச்.

அவரைத் தெருவில் காண முடியவில்லையென்றால் பார்க்க வேண்டிய ஒரே இடம் சர்ச் ஆகத்தான் இருக்கும். தினமும் காலையில் சர்ச் திறந்ததும் முதல் ஆளாக அங்கே செல்பவர் அவர் தான். ஞாயிறென்றால் காலை ஏழு மணி முதல் சர்வீசில் தொடங்கி 10 மணிக்கு முடியும் இரண்டாம் சர்வீசிலும் கலந்து கொண்டு தான் வருவார். ஐயர் “சமாதானத்தோடே போய் வாருங்கள்” என்று சொன்ன பிறகும் ஒரு இரண்டு நிமிடங்கள் முழங்காலிட்டு ஜெபித்து விட்டு தான் வெளியேறுவார். ஐ.எம்.எஸ் தினமோ, அறுப்பின் காலப் பண்டிகையோ, அசணப் பண்டிகையோ எதுவானாலும் ஏற்பாடுகள் தொடங்கி அனைத்திலும் முன்னால் நிற்பது பிச்சைக்காரப் பாட்டி தான். தள்ளாத உடலைத் தூக்கிக் கொண்டு சர்ச் வளாகத்தைத் முழுவதும் பெருக்குவார்; ஓரங்களில் இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்; எதையாவது வேலையை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருப்பார்.

போன கிருஸ்துமஸ் விடுமுறையில் தான் அவரைக் கடைசியாகப் பார்த்தேன். ஊருக்குக் கிளம்பும் போது பிச்சைக்காரப் பாட்டி தான் துணி மடித்துக் கொடுத்து, பெட்டி அடுக்க உதவி செய்தார். மனதில் ஏதோ சஞ்சலம் இருந்திருக்க வேண்டும்; முகத்தில் வழக்கமான உற்சாகம் இல்லை.

“ஏம் பாட்டி! என்ன யோசிக்கிய?”

“யெய்யா! மெட்ராசுல நீ இருக்க எடத்துக்கு தந்தி வருமா?”

“தந்தியெல்லாம் அந்தக் காலம் பாட்டி. அதான் இப்ப செல்போன் இருக்கில்லா?”

“ஆமா என்ன… நான் செத்துப் போனா ஊருக்கு வருவியாய்யா?”

“அதான் நல்லா கல்லு கெணக்கா இருக்கியளே.. எங்க சாவு வரப்÷ பாவுது..” சிரித்துக் கொண்டே சொன்னேன்.

“திரேகத்துக்கு அழிவு இருக்கேய்யா. நான் செத்துப் போனா, நீயெல்லாம் வந்து அழுவியாய்யா? ஏதுமில்லாதவன்னி வராமப் போயிராதய்யா..”

“என்ன பாட்டி! அப்படியெல்லாம் வராமப் போவோமா? கண்டிப்பா எல்லாரும் வருவோம்.. சரி, இப்ப ஏன் சாவு மேல் திடீர்னு ஆச உண்டாயிரிச்சி?

“கல்ற தோட்டத்துக்கு ரூவா சேர்த்தாச்சிய்யா… இந்த வருசமே செத்துட்டா நல்லதுன்னு பாக்கேன்”

“கல்ற கட்ட துட்டு சேக்கியளா? எவ்வளவு சேத்திருக்கிய?” பதிலேதும் சொல்லாமல் துணி மடிப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கி விட்டார். அதற்கு மேல் ஒரு வார்த்தையைக் கூட வாங்கி விட முடியாது என்று எனக்குத் தெரியும். சென்னை வந்த பின் ஒரு நாள் அம்மாவிடம் தொலைபேசியில் விசாரித்தேன்.

தன்னை தனியான ஒரு கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது பாட்டியின் ஆசையாம். இதற்காகவே, இங்கும் அங்கும் கிடைக்கும் சொற்ப காசுகளையெல்லாம் மூன்று பெரிய பானைக்குள் போட்டு சேமித்து வந்திருக்கிறாள். நான் ஊருக்குக் கிளம்பியதற்கு முந்தைய நாள் அதையெல்லாம் எண்ணித் தரும்படி டேனியலிடம் கேட்டிருக்கிறாள். மொத்தம் அறுபதாயிரம் வந்ததாம்.

அவ்வளவும் இருபத்தைந்து ஆண்டுகளாய் சேர்த்த காசாம். கல்லறை கட்டவும் மற்ற செலவுகளுக்கும் நாற்பத்தைந்தாயிரம் ஆகுமென்று டேனியல் சொன்னானாம். மீதமிருக்கும் காசில் நாலாயிரத்துக்கு வெடி வாங்கிப் போடும்படி கேட்டுக்கொண்ட பிச்சைக்காரப் பாட்டி, மிஞ்சியதை சர்சுக்கு அளித்து விடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். டேனியல் பெரிய அத்தையின் மகன்; பாட்டியின் சாவு நிகழ்ச்சிக்கு இன்சார்ஜாக பொறுப்பேற்றிருக்கிறான். அதன் பின் வேலை, அலைச்சல் என்று மூழ்கியதில் அநேகமாய் பாட்டியை மறந்தே விட்டிருந்தேன்.

“த்த்தட்ட்டார்..” ட்ரெக்கர் ஒரு பெரும் குழியில் இறங்கியேறியது “சவத்த.. ரோடா போட்றுக்கானுவ? களவானிப் பயலுவ” டிரைவர் சலித்துக் கொண்டார் – நினைவுகள் வெட்டிக் கொண்டு நிகழ்காலத்துக்குத் திரும்பியது. ட்ரக்கர் ஊரை நெருங்கி விட்டிருந்தது. தூரத்திலேயே சர்ச்சின் ஸ்பீக்கரில் இருந்து வழியும் பாடல் வரவேற்றது.

“தாசரே ! இத்தரணியை அன்பாய் ஏசுவுக்குச் சொந்தமாக்குவோம்… வருத்தப்பட்டு பாரம்  சுமப்போரை வருந்தி அன்பாய் அரவணைப்போம்…”

நாளை கிருஸ்துமஸ் என்பதன் அடையாளம் ஏதும் காணப்படவில்லை. வழக்கமாக உற்சாகமாக அலைந்து திரியும் வாலிபர் ஐக்கியத்தைச் சேர்ந்த பையன்களைக் கூட பார்க்க முடியவில்லை. ஐந்து நிமிட நடையில் வீடு வந்தது. வெராந்தையில் ஒரு பாயை விரித்து அதில் தின்பண்டங்களைக் கொட்டி உறவினர்கள் வீடுகளுக்கு பரிமாரிக் கொள்ள சின்னச் சின்ன சம்படங்களில் பிரித்துப் போட்டுக் கொண்டிருந்தனர். அம்மா, பெரியம்மா, அத்தை, மயினி இவர்களோடு ஒரு ஓரமாய் பிச்சைக்காரப் பாட்டியும் குறுகி உட்கார்ந்திருந்தார்.

இன்னும் சாகவில்லை. ஆனால் அதை எப்படி அவரிடமே கேட்பது என்று தான் தெரியவில்லை. என்னை ஏறெடுத்துப் பார்த்தவர் அளவான பொக்கைவாய்ப் புன்னகையோடு தலைகவிழ்த்துக் கொண்டு பண்டங்களைப் பிரித்துப் போடுவதில் ஆழ்ந்து விட்டார். காலை உணவை முடித்துக் கொண்டு, பயணக் களைப்பு தீர ஒரு நீண்ட தூக்கம் போட்டு விட்டு மாலை நான்கு மணிக்குத் தான் எழுந்தேன். இப்போது சுட்ட பனங்கிழங்குகளைப் பிரித்துக் கொண்டிருந்தனர். ஊர்க்கதை, உலகக் கதையெல்லாம் ஓடிக் கொண்டிருந்தது. பாட்டியும் இருந்தார். எப்படிக் கேட்கலாம் என்று யோசித்துப் பார்த்தேன். வார்த்தைகள் ஏதும் சிக்கவில்லை.

இரவு சாப்பிடும் போது அம்மாவிடம் கேட்டேன், “யெம்மா! பிச்சைக்காரப் பாட்டி போன வருசமே சாகப் பேறேன்னு சொல்லிக்கிட்டு அலைஞ்சிதே! இன்னும் நல்லா பெலனா இல்லா இருக்கு!?”

“ஏல! அறிவிருக்கால? ஆள் ஏன் சாவலைன்னா கேப்பா?”

“இல்ல… நா மெட்ராசுக்கு போவச்சுல்ல செத்துப் போயிருவேனாங்கும், தந்தி வருமாங்கும்னு சொல்லிப் பொலம்பிகிட்டு கெடந்தாவளே ! அதான் கேக்கேன்”

“அது இவா கைலயா இருக்கு? ஆண்டவருக்குத் தான் யாருக்கு என்ன எழுதிருக்குன்னு தெரியும்.. நீ இதெல்லாம் போய் அவா கிட்ட கேட்டுக்கிட்டு கெடக்காத! என்ன? ஒரு வருசம் கழிச்சி ஊருக்கு வந்திருக்கா! வந்து நாலு சொக்காரங்க வீட்டுக்குப் போவோம்னு ஒரு எண்ணம் இருக்கா?! யாரு செத்தா, யாரு சாவலைன்னு விசாரிச்சிகிட்டு கெடக்கான், கோட்டிக்காரப் பய” எனக்குப் பதில் சொல்லத் தொடங்கி விட்டு, பன்மையாகப் பேசிக் கொண்டே, திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டார்.

அதற்கு மேல் விபரங்கள் ஏதும் பெயராது என்று எனக்குத் தெரியும். ஆனால், அவர் எதையோ மறைக்கப் பார்ப்பது மட்டும் புரிந்தது.

சாப்பிட்டு விட்டு, திருட்டு தம் அடிக்க நண்பர்கள் எல்லோரும் கண்மாய்க்கரை டி.டீ.டி.ஏ பள்ளிக்கூடத்தின் பின்புறமாக ஒதுங்கினோம். டேனியலும், அகஸ்டினும் கூட வந்திருந்தனர். டேனியலிடம் கேட்டேன், “என்னடே ஆச்சி? பாட்டி மூஞ்சில ஒரு சுருத்தே இல்லாம இருக்காவளே? இன்னும் சாக்காடு வரல்லேன்னு ஓவர் கவலையோ?”. டேனியல் எனக்குப் பதில் சொல்லாமல் சர்ச் உபதேசியாரின் மகன் கேப்ரியேலை நோக்கித் திரும்பினான், “ஏல! ஒனக்குத் தான முழு வெவரமும் தெரியும். நீயே சொல்லுல” என்றான்.

கேப்ரியேல் கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தான். பின் மெல்ல வாய் திறந்து சொல்ல ஆரம்பித்தான்.

பிச்சைக்காரப் பாட்டி தனக்குக் கிடைத்த ஐந்து, பத்து ரூபாய்களையும், முதியோர் பென்சனையும் அப்படியே ரூபாய்த் தாள்களாக மூன்று பெரிய பானைகளில் போட்டு வைத்திருந்திருக்கிறாள். டேனியல் கடந்த ஆண்டு அதையெல்லாம் எண்ணித் தரும்போதே அதில் சில ரூபாய்த் தாள்கள் செல்லரிக்கத் துவங்கியதைப் பார்த்துச் சொல்லியிருக்கிறான். இந்தப் பணத்தையெல்லாம் யாரிடம் நம்பிக்கையாகக் கொடுத்து வைப்பது, எப்படிப் பாதுகாப்பது என்று பாட்டி குழம்பியிருக்கிறாள். எங்கள் அம்மாவிடமும், பெரியம்மாவிடமும் கேட்டுப் பார்த்திருக்கிறாள். அவர்களோ நாளை இதில் கொஞ்சத்தையாவது இவர்கள் வாயில் போட்டு விட்டார்களென்று யாராவது சொல்லி விட்டால் என்னவாவது என்று நினைத்துக் கொண்டு, வாங்க மறுத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், சென்ற மே மாத வாக்கில் கோயில் குட்டியாரின்  மகனுக்கு இஞ்சினியரிங் சீட் கிடைத்துள்ளது. அதற்காக ஒரு பெரிய தொகையை கல்லூரியில் கட்ட வேண்டியிருந்திருக்கின்றது. அவருக்கு ஒரு ஐம்பதாயிரம் தேவைப்பட்டிருக்கிறது. சர்ச்சுக்கு வரும் யார் மூலமோ பிச்சைக்காரப் பாட்டியிடம் பணம் இருப்பதைக் கேள்விப்பட்ட கோயில் குட்டியார், தானக்கு உடனடியாகப் பணம் தேவையிருப்பதாகவும், அந்தப் பணத்தை இப்போது கொடுத்தால் பின்னால் பாட்டிக்கு ஏதாவது ஆகி விட்டால் மொத்தச் செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும் பாட்டியிடம் கூறியிருக்கிறார்.

பாட்டியும், கோயில் வேலை செய்யும் இவர் ஏமாற்ற வாய்ப்பில்லை என்று எண்ணி அவரிடம் மூன்று பானைகளையும் கொடுத்து வைத்திருக்கிறார். இடையில்  சில மாதங்களுக்கு முன்பு பாட்டிக்குக் கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அந்த நேரம் கோயில் குட்டியாரிடம் போய் இந்த முறை நிச்சயம் தான் செத்துப் போவேனென்றும், எந்தக் குறைவுமில்லாமல் சடங்குகளைச் செய்து விடும்படியும் பாட்டி கேட்டிருக்கிறார். அதற்குக் கோயில் குட்டியார், தான் காசு வாங்கவேயில்லை என்று மறுத்ததோடு, வெளியே சொன்னால் கிறுக்குப் பிடித்திருப்பதாகச் சொல்லி பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.

தனக்கு நடந்த அநியாயத்தைப் பாட்டி போதகரிடமும், சர்ச் கமிட்டி மெம்பர்களிடமும் முறையிட்டிருக்கிறாள். அவர்களோ, கோயில் குட்டியாருக்கு ஏற்கெனவே சம்பளம் குறைவு என்றும், இருந்தாலும் அத்தனை கஷ்டத்தோடும் தேவ காரியத்தில் ஈடுபட்டிருப்பவர் மேல் அபாண்டமாகக் குற்றம் சொல்லக் கூடாது என்றும், அப்படிப்பட்ட காரியத்தை அவர் செய்யக் கூடியவரல்ல என்றும் பஞ்சாயத்து பேசியிருக்கிறார்கள். தான் அத்தனை நேசித்த கோயிலைச் சேர்ந்தவர்களே ஏமாற்றி விட்டார்களே என்ற விரக்தியில் அவர் இப்போதெல்லாம் கோயிலுக்குப் போவதில்லையாம். வெளியே யாரிடமும் சொல்வதும் இல்லையாம். அரசல் புரசலாக விஷயம் தெரிந்து விசாரிப்பவர்களிடமும் ஒன்றும் சொல்ல மறுக்கிறாராம்.

“ஏல! இவ்வளவு நடந்திருக்கே? நீங்க யூத் கமிட்டி பயலுவல விட்டு ஐயர்ட்ட கேக்க வேண்டியது தானல?” கேப்ரியேலிடம் கேட்டேன்.

“அதெல்லாம் கேட்டோம். ஆதாரம் இருந்தா பேசலாம்னு ஐயர் சொல்லிட்டார் டே! அவரு எழுதுத கள்ளக் கணக்குக்கெல்லாம் கோயில் குட்டியாரும், கமிட்டி மெம்பரும் சாட்சியா இருக்கானுவ. பதிலுக்கு இந்தப் பயலுவ என்னத்தக் களவாண்டாலும் அவரு கண்டுக்கிட மாட்டாரு. இது ஒரு விஷயம் தான். காணிக்கை காசுலயே கைய வைக்கானுவ. பிஷப்புக்கே எழுதிப் போட்டாச்சு. அவரு “போதகனைப் பாராதீர் போதகத்தைப் பாரும்”னு பதில் சொல்லுதாரு. அவரு பங்குத்தந்தை எலக்சன்ல ஜெயிக்க இவங்க ஆதரவு வேணும்லா! அதாம் கண்டுக்கிட மாட்டேங்காரு”

நீண்ட நேரம் பேசினோம். சர்ச் கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்த விதம் பற்றி நிறைய சொன்னார்கள். அழகிரியின் திருமங்கலம் தேர்தல் ஃபார்முலாவை மிஞ்சும் வகையில் அது நடத்தப்பட்டுள்ளது. கள்ள ஓட்டு, ஓட்டுக்கு நோட்டு, பூத் கேப்ச்சரிங் என்று ஏகப்பட்ட தில்லுமுல்லுகள் நடந்திருக்கிறது. வாய்ப்பிருந்தால் வேறு சமயத்தில் அது பற்றிக் கூட எழுதலாம். பாட்டியின் காசை கோயில் குட்டியார் களவாண்ட விவகாரமும், அதைப் பாதிரியாரும் பிற கமிட்டி மெம்பர்களும் பாராமுகமாய் இருந்து மறைமுகமாக ஆதரித்துள்ள விவகாரமும் கேப்ரியேல் மூலம் சர்ச்சின் வாலிபர் கமிட்டி முழுக்கப் பரவியுள்ளது.

ஏற்கெனவே பல்வேறு முறைகேடுகளால் அதிருப்தியுற்றிருந்த இளைஞர்களை இந்த விவகாரம் ஆத்திரத்தின் உச்சிக்கே கொண்டு போயிருக்கிறது. அவர்கள் இந்த முறை ஒட்டுமொத்தமாக பண்டிகை ஏற்பாடுகளைப் புறக்கணித்து விட்டிருக்கிறார்கள். இது போன்ற முறைகேடுகளைக் கண்டு மனம் வெறுத்துப் போன இளைஞர்கள் இப்போதெல்லாம் அதிகம் சர்ச்சுக்குப் போவதில்லையாம். அதனால் தான் இந்த ஆண்டு கிருஸ்துமசுக்கு முந்தைய இரவு வாலிபர் ஐக்கியக் குழுவினர் நடத்தும் கேரல் ரவுண்டு கூட நடக்கவில்லை என்று கேப்ரியேல் சொன்னான்.

“யாரும் வரல்லேன்னா என்ன! நீயாவது வாடே! உபதேசியார் மகனே வரலேன்னா எல்லோரும் ஒரு மாதிரியா பேசுவாங்க” என்று கேப்ரியேலின் அப்பா கூப்பிட்டிருக்கிறார்.

“அதான் வேதத்துல துன்மார்க்கர் இருக்கும் இடத்தில் இருக்காதேன்னு சொல்லிருக்கில்லா… இந்த உலகத்துலயே சர்ச்சை விட துன்மார்க்கர் அதிகமா இருக்க வேற இடம் ஏதாவது இருக்கா சொல்லுங்க” என்று கேப்ரியேல் முகத்திலடித்தாற் போல் கேட்டு விட்டானாம். உபதேசியாரிடம் அதற்குப் பதிலே இல்லையாம்.

பேச்சினூடாகவே விடிந்திருந்தது. நான் வீட்டுக்குக் கிளம்பினேன். ஸ்பீக்கரில் பாதிரியின் போதகத்தைக் கேட்க முடிந்தது. தெரு முனையில் திரும்பும் போது அம்மா கையில் பைபிளோடு கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். பையன்கள் மூலமாக விசயத்தை நான் அறிந்திருப்பேன் என்று அவருக்குத் தெரியும்.  நான் முழு நாத்திகனாகி பல ஆண்டுகளாகி விட்டது; எனக்கு நம்பிக்கையில்லையென்று தெரிந்திருந்தும் கோயிலுக்கு வரச் சொல்லி ஒரு சம்பிரதாயத்துக்காவது கூப்பிடுபவர் இந்த முறை கூப்பிடவில்லை. தலையைத் தாழ்த்திக் கொண்டே கடந்து போய் விட்டார். வெராந்தையில் பாட்டி படுத்துக் கிடந்தார். விழித்துக் கிடந்தார்; ஆனால் எழுந்து கொள்ளவில்லை. வழக்கமாக எல்லோருக்கும் முன்பாகக் கோயிலுக்கு ஓடுபவர் அன்று எந்த ஆர்வமுமின்றி விட்டத்தை வெறித்துக் கொண்டே கிடந்தார்.

“பாட்டி…”

“…….”

“காசு போச்சின்னு கவலப் படாதீய. நாங்கெல்லாம் இருக்கோம். அப்படியேதாச்சும் ஒன்னு ஆச்சின்னா நல்ல முறையா அடக்கம் செய்வோம்”

“……”

வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. உள்ளே செல்லத் திரும்பினேன். பின்னால் விசும்பல் சப்தம் கேட்டது. சர்ச் ஸ்பீக்கரில் போதகம் தொடர்ந்து கொண்டிருந்தது.

“உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும்  சொல்லுங்கள். இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் – என்று மத்தேயு 5:37 ல் தேவனாகிய ஏசு கிருஸ்து சொல்கிறார்……….”

தூத்தேறி..!

________________________

குறிப்புகள்:

1)            கோயில் குட்டியார் என்பவர் சர்ச்சில் ஒரு உதவிப் பணியாளர் போன்றவர். அவருக்கென்று சம்பளம் உண்டு. அவரது குடும்பச் செலவுகள் அனைத்தும் சர்ச் பணத்தில் நடக்கும்.

2)            வாலிபர் ஐக்கியம் / யூத் கமிட்டி என்பது ஒரு சர்ச்சில் இருக்கும் திருமணமாகாத இளைஞர்களைக் கொண்ட குழு. சர்ச்சின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை இவர்கள் தான் முன்னின்று நடத்துவார்கள்.

3)            சர்ச் கமிட்டி என்பது தேர்தல் வைத்து தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களைக் கொண்டது.

4)            ட்ரக்கர் / டக்கர் – என்பது பெரிய சைஸ் ஜீப். தென் மாவட்டங்களில் சிறிய கிராமங்களை இணைக்கும் பொதுப் போக்குவரத்து.

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012

_______________________________________________________

  1. முன்பின் பார்த்திராத பிச்சைக்காரப் பாட்டி மீது பரிவும் இரக்கமும் ஏற்படச்செய்துவிட்டது இந்த உண்மைக்கதை.

  2. //பாட்டியும், கோயில் வேலை செய்யும் இவர் ஏமாற்ற வாய்ப்பில்லை என்று எண்ணி அவரிடம் மூன்று பானைகளையும் கொடுத்து வைத்திருக்கிறார்.//

    //“உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள். இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் – என்று மத்தேயு 5:37 ல் தேவனாகிய ஏசு கிருஸ்து சொல்கிறார்……….”

    தூத்தேறி..!
    //

  3. வேதனையான விசயம்… பிறந்ததில் இருந்து சாகும் வரைக்கும் ஒருவருடைய உழைப்பை உறிஞ்சும் காலனிய அரசாங்கம்… உழைக்க முடியாத நேரத்தில் அவனுக்கு சாப்பாடு கூட கொடுப்பது இல்லை,,,

    கேவலமான சமுதாயம்

Leave a Reply to சோழன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க