privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாதுப்பாக்கி: துருப்பிடித்த மசாலா! கொழுப்பெடுத்த துவேசம்!!

துப்பாக்கி: துருப்பிடித்த மசாலா! கொழுப்பெடுத்த துவேசம்!!

-

“விஜய் படத்திற்கு விமரிசனமா” – அதிர்ச்சியுடன் கேட்டார் ஒரு தோழர். உண்மைதான். ஒரு ஸ்டூடியோ குத்துப்பாட்டு, ஃபாரின் மரங்களை சுற்றும் இரண்டு டூயட், ஐந்து ரம்பக் காமடி, காட்சிக்கொரு டமால்-டுமீல் பஞ்ச் டயலாக் என்று புளித்துப் போன பஞ்சாமிர்த ஃபார்முலாவில், கதை கானல் நீராக இருப்பதால் விமரிசனங்களுக்கு பெரிய தேவை இருப்பதில்லை. மக்களும் ஆட்டம், பாட்டம் என்று விறுவிறுப்புக்காக இத்தகைய படங்களை பார்த்து மறப்பதால் இது ஒரு பெரிய பிரச்சினையும் அல்ல.

நமக்கு பிரச்சினையில்லை என்றாலும் விஜய் படங்களின் தொடர் தோல்வி அவருடைய கம்பெனி இமேஜுக்கு பிரச்சினை இல்லையா? “நண்பன்” படத்திலிருந்து விஜய் வேறுவழியின்றி வித்தியாசமாக அதாவது அடங்கி ஒடுங்கி நடிக்க தள்ளப்பட்டாராம். “ஏழாம் அறிவி”ல் தமிழனது தொல்பெருமையை ரீல் பொங்க அவிழ்த்து விட்டாலும் வசூலில் கொஞ்சம் சொதப்பியதால் ஏ.ஆர். முருகதாஸுக்கும் ஒரு வெற்றி தேவைப்பட்டிருக்கிறது. சினிமா அழைப்பிதழையே உசிலம்பட்டி முதல் அமெரிக்கா வரை வாய் பிளக்குமளவுக்கு ‘புதுமையிலும், பிரம்மாண்டத்திலும்’ மலிவாக பொளந்து கொட்டும் கலைப்புலி தாணுவுக்கும் ஒரு வசூல் வெற்றி அவசியமிருந்தது. இப்படியாக மூவரும் தங்களது தொழில் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக பிரச்சினைக்குரிய இந்தப்படத்தை எடுத்து வெளியிட்டிருக்கின்றனர்.

***

லையின் அளவுக்கேற்பத்தான் தொப்பியைத் தேடுவார்கள். ஆனால் தமிழ் சினிமாவிலோ தொப்பியைச் செய்து விட்டு அதற்கேற்ப தலையை வெட்டுவார்கள். வசூலில் முன்னணி வகிக்கும் இயக்குநர்கள் நிச்சயமாக இந்த ரகம்தான். அப்படித்தான் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் ஒரு மசாலா கதையை உருவாக்கிவிட்டு அந்த ஃபார்முலாவிற்கேற்ப வாழ்க்கை, வரலாறு கதை, உணர்ச்சிகள் அத்தனையும் வெட்டி எறிந்திருக்கிறார்.

“ரமணா”வில் துவங்கி “துப்பாக்கி” வரை முருகதாஸின் படங்கள் அனைத்தும் தாங்க முடியாத அளவுக்கு தமிழ் மசாலா, அண்ணா ஹசாரே அட்வைஸ் கலந்த த்ரில்லர் வகைப் படங்களாக இருக்கும். இதையெல்லாம் விறுவிறுப்பு என்று கொண்டாடுமளவுக்கு தமிழ் பதிவுலகமும் மொக்கை ரசனையில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்தப்படத்தையே எடுத்துக் கொண்டால் இதை சினிமா என்ற முறையில் பார்ப்பதற்கு திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதென பலரும் ரசித்து எழுதியிருக்கின்றனர். அப்படி என்ன ஈர்ப்பு இந்த படத்தில்?

குமுதம், விகடன்களில் ஒரு பக்க கதைகளை படித்திருக்கிறீர்களா? ஏதாவது ஒரு க(சொத்)தைக் களனில் ஓரிரு பாத்திரங்கள், ஒரு முரண்பாடு என்று ஆரம்பித்து படிப்பவர் ஊகிக்கும் தீர்வு போல வந்து பின்னர் அதற்கு நேரெதிராக முடிப்பது இவற்றின் கலை ரகசியம். இதையே ஏ.ஆர் முருகதாஸ் ஒவ்வொரு காட்சிக்கும் வைத்து தாளிக்கிறார். ஆரம்ப காட்சிகளில் ஓரிரு முறை ஈர்ப்பாக இருக்கும் இந்த தாளிப்பு பின்னர் தாளமுடியாத வதையாக இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு காட்சி வரும் போதும் தேர்ந்த ரசிகர்கள் அந்த முரண்பாடு அல்லது ட்விஸ்ட் எழவை ஊகிப்பார்கள். அல்லது இந்த முரண்பாடு என்ன குப்பையாகவோ இருந்து விட்டு போகட்டும் என்று விட்டு விடுவார்கள். கலையை ரசிப்பது இப்படியாக கணக்கு போட்டுப் பார்க்கும் மொக்கைப் புதிராக மாறுகிறது.

இராணுவத்தில் இருந்து விடுமுறையைக் கழிக்க மும்பைக்கு வரும் விஜய் தொடர் குண்டு வெடிக்க முனையும் இசுலாமிய ஜிகாதி தீவிரவாதிகளை அழித்து அவர்களது தலைமை வில்லனை துப்பறிந்து ஒழிப்பதுதான் கதை. இடையில் காஜல் அகர்வாலை காதலிப்பார். ஒட்டுமொத்தமாக இந்தக்கதையை ஒன்றாம் கிளாஸ் படிக்கும் குழந்தை கூட படம் துவங்கிய ஐந்து, பத்து நிமிடத்தில் ஊகித்து விடும். ஆனால் அப்படி ஊகித்தாலும் பலவீனமாக இருக்கும் ரசனையில் நம்பிக்கை வைத்து கதையை கொஞ்சம் இழுஇழுவென எதிர்பாராத கோணத்தில் இழுத்து மேலோட்டமான ஈர்ப்பை ஒவ்வொரு காட்சிக்கும் கொண்டு வந்து சினிமாவை குதறிக் கொண்டு செல்கிறார்கள்.

விறுவிறுப்பு கூட்டுவதற்கு வேகமான கதையும் இன்றைய ட்ரெண்ட் என்று மொக்கை சினிமா ஆய்வாளர்கள் கூட ஆய்வு செய்வது வழக்கம். இந்த வேகத்திற்கு சூர்யா நடித்து ஹரி இயக்கிய சிங்கம் ஒரு பதம். சென்னையில் இருந்து வில்லன் தூத்துக்க்குடி வந்து ஹீரோவிடம் பஞ்ச் டயலாக் பேசி ஆரம்பச் சுற்றில் தோற்றுப் போகும் விசயத்தை எடிட்டிங்கின் உதவியாலும், சர் சர் என பறக்கும் பின்னணி இசையாலும் ஓரிரு நிமிடத்தில் சொல்லி விடுவார்கள். எந்த ஒரு கதையும் அதன் உள்ளடக்கமும் அதற்கு பொருத்தமான வடிவத்தைக் தெரிவு செய்து அமைதி அடைகிறது. மாறாக வேகம் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் முனைப்பு கொண்டதால் சிங்கம் படம் நம்மைப் பொறுத்தவரை வாய்விட்டு சிரிப்பதற்குரிய அஜிங்கமான காமடிப் படம் மட்டுமே. கிராபிக்சில் சிங்கம், அதிவேக எடிட்டிங், அதற்கு உறுதுணையாக வெட்டு இசை,  ஒரு கையடியில் ஒரு டன் எடை என்று அதில் சிரிப்பதற்கு ஏராளமிருக்கின்றது.

இத்தகைய ரசனை வீழ்ச்சிதான் ஏ.ஆர் முருகதாஸ் போன்ற படைப்பாளிகளுக்கு பலம். இதில் சுலபமாக ஒரு மொக்கையை தயார் செய்து விடுவது அவர்களைப் பொறுத்த வரை சுலபமானது. மூன்று மணி நேரப் படத்தை முப்பது குறும் பிரிவுகளாக பிரித்து விட்டு அவை ஒவ்வொன்றையும் குமுதம் ஒரு பக்க கதை பாணியில் அமைப்பது இதுதான் முருகதாஸின் (பல இயக்குநர்களின்) சூட்சுமம்.

அதிலும் அந்த குறும்பிரிவுகளில் காதல், காமடி, பாடல் போன்ற வைத்தே ஆக வேண்டிய சமாச்சாரங்களை தவிர்க்க முடியாது என்பதால் பாதியை இவைகள் தின்று தீர்க்க மீதிப் பாதியில்தான் ‘கதை’. இவ்வளவு தொந்தரவுகளையும் தாங்கிக் கொண்டு ஒரு படத்தில் கதை வைப்பது சிரமம் என்பதை விட அந்த தொந்தரவையும் தாங்கிக் கொண்டு கதையை கண்டுபிடித்து பொழிப்புரை போட்டு ரசிக்கிறார்கள் என்றால் தமிழனது பரந்த மனத்தோடு போட்டி போட யாருமில்லை என்பது நிச்சயம்.

“துப்பாக்கியின்” விறுவிறுப்பில் மனம் சிக்குண்ட பதிவர்கள் என்ன மாதிரி காட்சிகளில் தம்மை அடகு வைத்திருப்பார்கள்? ரயில் நிற்கும் பின்னணியில் ராணுவ உடையுடன் விஜயின் அறிமுக ஆட்டம், அதே உடையுடன் ராகுகாலம், அஷ்டமிக்குள் பெண் பார்க்க ரயில் நிலையத்திலிருந்தே செல்லுதல், அடக்க ஒடுக்கமாக நடக்கும் காஜல் தனக்கு மேட்சாக மாட்டார் என்று விஜய் வீடு திரும்பி சொல்லும் போதே அதற்கு நேர் எதிராக அங்கே காஜல் நடந்து கொள்ளுதல், அதிலும் குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொள்ளுதல் (முக்கியமாக காஜலின் குத்துச்சண்டையை மெய்மறந்து பார்ப்பவர்கள்தான் இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் இல்லையென அழுகிறார்கள் என்பது ஒரு சோக காமடி),

பிக்பாக்கெட் பேருந்தில் தற்செயலாய் வில்லனைக் கண்டுபிடித்தல், பிக்பாக்கெட் கண்டுபிடிக்கப்படும் அதே நேரத்தில் வெடிகுண்டு வில்லன் தப்பி ஓடுதல், மருத்துவமனையிலிருந்து வில்லன் தப்பிச் செல்வதை ஊரே பேசிக் கொண்டு இருக்கும் போது அடுத்த காட்சியில் அவன் விஜயின் வீட்டில் இருத்தல், சத்யனிடம் இந்தக் கதையை கூறிக்கொண்டிருக்கும் போதே காஜல் வந்ததால் சஸ்பென்சில் வைத்தல், காஜலுக்கு முத்தம் கொடுக்கும் நேரத்தில் வில்லனைக் கண்டுபிடிக்கும் கிரியேட்டிவிட்டி வேலை செய்து முத்தத்தை ரத்து செய்து பறந்து போதல், இரண்டுமணி நேரத்திற்கு மட்டும் மயக்க மருந்து போட்டு வில்லனை தப்பி போக வைப்பது, அதற்குள் கல்யாண விருந்துக்குச் சென்று ராணுவ வீரர்களை ஆப்பரேஷனுக்கு தயார் செய்வது….

இப்படிச் சின்ன சின்ன திருப்பங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் என்று ஊசிப்போன ஒரு எளிய கணக்குப்புதிர் போன்ற காட்சிகளைத்தான் பதிவர்கள் விறுவிறுப்பான திரைக்கதை என்று கொண்டாடுகிறார்கள். எனில் இவர்களெல்லாம் உண்மை வாழ்க்கையிலும், திரைப்பட அனுபவத்திலும் அப்படி ஒரு ஒரிஜினல் விறுவிறுப்பை கண்டவர்கள் இல்லை என்று தெரிகிறது. இறுதியில் குமுதத்தின் ஒரு பக்க கதை ஃபார்முலாதான் நமது சினிமா பதிவர்களது ரசனை அளவு கோல் என்றால் தமிழ் மக்களிடம் வசூலிக்கவும் விறுவிறுப்பை அளிக்கவும் ஒரிஜினல் துப்பாக்கி தேவையில்லை, வெறும் தீபாவளி பொம்மைத் துப்பாக்கியே போதும்.

அடுத்து நமது சினிமா பதிவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொல் லாஜிக் மீறல். இதையும் எளிய கணக்கு புதிருக்குண்டான விதிகள் போலத்தான் கருதுகிறார்கள். பாத்திரங்கள், வேலை விவரங்கள், காட்சிகளின் தொடர்பு போன்றவற்றில் உள்ள தொழில்நுட்ப ரீதியான சமாச்சாரங்கள் முரண்படாமல் அல்லது மீறாமல் இருந்தால் லாஜிக் ஷேமகரமாக இருக்கிறது என்பது இவர்களது புரிதல்.

சான்றாக படத்தில் இராணுவக் கேப்டனான விஜய் மேலதிகாரிகளது அனுமதி இன்றி வில்லன்களை கொல்வதும், அதற்கு சக வீரர்களை பயன்படுத்திக் கொள்வதும் ஏன்? – இப்படித்தான் இவர்கள் லாஜிக்கை ஆராய்கிறார்கள். உண்மையில் ஒரு திரைக்கதையில் இதெல்லாம் மீறப்படுவது பெரிய பிரச்சினை இல்லை. உண்மையிலும் இராணுவத்தினர் பல இடங்களில் அப்பாவி மக்களை அனுமதியின்றி, உத்தரவின்றி கொல்வதும் ஏராளமாய் நடப்பது என்கிற விதத்திலும் இது லாஜிக் மீறல் இல்லை. ஆனால் ஒரு திரைக்கதை எதார்த்த வாழ்வின் உண்மைகளோடும், அறவியல் மதிப்பீடுகளிலிருந்தும் வழுவாமல் இருப்பதுமே முக்கியமாகிறது. இந்த ‘லாஜிக்’ மீறாமல் இருப்பதுதான் நமது கவனிப்பிற்கு உரியது.

இது நமது மொக்கை திலகங்களுக்கு எப்போதும் உறைக்காது, தெரியாது, புரியாது. இந்தியா ராணுவம் ஈழத்திலும், காஷ்மீரிலும், வடகிழக்கிலும் கொன்ற கணக்கு ஏராளமிருக்கையில் அதன் ஆக்கிரமிப்பு, மக்கள் விரோத மனோபாவமே எதார்த்தம் எனும் போது படத்தில் ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்களைக் காட்டி கருணைப்படுமாறு கெஞ்சுகிறார்கள். “ஆயிரம் மக்களை கொல்பவன் தன்னுடைய உயிரை விடுவதற்கு கவலைப்படாத போது, மக்களைக் காப்பாற்றுபவனும் தனது உயிரை துறப்பதற்கு தயங்கக் கூடாது” என்று விஜய் இரண்டு, மூன்று முறை பேசுகிறார்.

டான்ஸ் ஆடி குஷால் பேபியாக அறியப்பட்ட விஜய் இதைப் பேசும் கொடுமை ஒருபுறம் இருந்தாலும் இதுதான் உண்மையான ‘லாஜிக்’ மீறல்! ஆக்கிரமிப்பு நாடுகள், இராணுவத்திற்கு எதிராக அரசியல், விடுதலை, பொருளாதார, வாழ்க்கை காரணங்களால் மட்டுமே ஒரு போராளி தன்னுடைய உயிரைத் துறக்கும் தற்கொலைப் போராளியாக மாற முடியும். ஆனால் இத்தகைய போராட்டங்களிலிருந்து முகிழ்விக்கும் தற்கொலைப் போராளிகள் எவரும் ஆக்கிரமிப்பு இராணுவம், நாட்டிலிருந்து தோன்றவே முடியாது.

தன்னுடைய பாதுகாப்பான வாழ்வு போக அடுத்தவனுடைய வாழ்வையும் அபகரிக்க வேண்டுமென்ற சிந்தனை உள்ள ஆக்கிரமிப்பாளன் வாழ்க்கையின் இன்பத்தை துய்ப்பதற்குத்தான் துணிவானே அன்றி உயிரை விட அல்ல. வேண்டுமானால் அமெரிக்க அரசாங்கமோ இல்லை ஆர்.எஸ்.எஸ் இயக்கமோ நாட்டிற்காக தற்கொலை தியாகிகள் வேண்டுமென்று அறைகூவல் விட்டுப் பார்க்கட்டும். தயிர் சாதத்திற்கு வழியில்லாத அம்பி கூட அதற்கு துணிய மாட்டான் என்பது உறுதி.

ஜிகாதி பயங்கரவாதிகளிடமிருந்து மும்பை மக்களை பாதுகாக்கும் கடமையை ஏற்றுக் கொண்ட விஜய் இடையிடையில் அதற்கு லீவ் கொடுத்து விட்டு காஜல் அகர்வாலின் பின்னால் சுற்றுகிறார். இப்பேர்ப்பட்ட நபர்தான் நாட்டிற்காக தனது உயிரை கொன்று விடுமாறு சக வீரர்களிடம் உதார் விடுகிறார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் காஜல் அகர்வாலை சுற்றாமல் ஆரம்பத்திலேயே கண்ணும் கருத்துமாக பணியாற்றிருக்கலாம் அல்லவா?

சரி, விஜய் தனது உயிரை எடுக்குமாறு கூறும் போது ரசிகர்கள் சிரிப்பார்களா, இல்லை தேசபக்தியில் புல்லரித்து பொங்குவார்களா? ஒரு பாத்திரம் அதனுடைய கதையமைதியில் வழுவாமல், முரண்படாமல் இருக்குமாறு இருப்பது அடிப்படை விசயம். இது கூட நமது படைப்பாளிகளுக்குத் தெரியவில்லை என்பது சிரிப்பதற்குரிய உண்மை.

பெரிய பட்ஜெட் படங்களுக்கு வில்லன்கள் என்றால் நமது படைப்பாளிகள் இயல்பிலையே இசுலாமிய தீவிரவாதிகள் என்று செட்டிலாகிவிடுகிறார்கள். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பா.ராகவனது “நிலமெல்லாம் ரத்தம்” நூலையோ இதை ஒட்டி வந்த “கிழக்கி”ன் ஏனைய மத்திய கிழக்கு உடான்சுகளையோ படித்திருப்பார் போலும். அதில் வரும் ஸ்லீப்பர் செல், அதனுடைய விளக்கம், எல்லாம் தனது மொக்கை த்ரில்லருக்கு பொருந்தி வரும் என்பதால் அப்படியே அதை மும்பைக்கு நாடு கடத்தி விட்டார்.

மத்திய கிழக்கில் இசுரேலுக்கு எதிராக தோன்றிய இசுலாமிய அமைப்புகளின் நடைமுறை, ஸ்தாபன முறை அனைத்தும் வலுவான, சதிகார எதிரிக்கு எதிராக போராடும் மக்களிடம் தோன்றிய எதிர் போராட்ட வன்முறை. அதை அந்த சூழலில் இருந்து துண்டித்து விட்டு ஒரு மலிவான வில்லனாக வேறு ஒரு நாட்டில் காண்பிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஹமாஸ், அல்கைதா ஏனைய அமைப்புகளின் டெக்னிக்கல் டீடெய்ல் மட்டும் பா.ராகவன் தொட்டு, முருகதாஸு வரையிலும் ஈர்க்கப்படும் அவஸ்தையை இங்கே இனியும் விளக்க வேண்டியதில்லை.

இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு என்பது இந்துமதவெறியின் எதிர்வினை. ஒரு வேளை இங்கே இந்துமதவெறியோ, அத்வானி, மோடி, தாக்கரேக்களோ தண்டிக்கப்படும் நிலையிருந்தால் இத்தகைய குண்டு வெடிப்புகளுக்கு தேவைப்படும் சமூக அடிப்படை இருந்திருக்காது. இதை வினவின் பல கட்டுரைகளில் விரிவாக விளக்கியிருக்கிறோம். இதன் அரிச்சுவடி கூடத் தெரியாமல் ஒரு வில்லன் எஃபெக்டுக்காக ஜிகாதி, இசுலாம், நமாஸ், முகமூடி, கழுத்தறுப்பது போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட முசுலீம் வெறுப்பு இந்தியாவின் சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் இசுலாமிய மக்கள் எவ்வளவு பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

முருகதாஸ் ஒருவிதமான அண்ணா ஹசாரே டைப்பில்தான் அனைத்து விசயங்களையும் பார்க்கிறார். அதன் அபத்தத்தை ஏழாம் அறிவிலேயே பார்த்தோம். அந்த குப்பை மசாலவை ஏதோ தமிழனது வீரம், ஈழவிடுதலை என்று ஜாக்கி வைத்து தூக்கிய தமிழ் தேசிய இனவாதிகளையும் கண்டிருக்கிறோம். அதனால்தான் மற்றுமொரு தமிழ்தேசியவாதியான கலைப்புலி தாணு தனது பெரிய பட்ஜெட் படத்தில் இசுலாமியர்களுக்கு எதிரான வன்மத்தை கக்குவதற்கு கைக்காசை போட்டு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இவர்தான் ஈழத்தில் அமைதிப்படையின் கொலையை அவரது படமான “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேனி”ல் மறைத்து அமைதிப்படையை வரவேற்கமாட்டேன் என்று சொன்ன கருணாநிதியை குற்றம் சாட்டுவதற்கு பயன்படுத்தியவர்.

ஆக தமிழ் உணர்வு என்றால் அது இந்துத்வ உணர்வின் பங்காளிதானோவென ஐயம் வருகிறது. அதனால்தான் பால்தாக்கரே உயிரோடு இருந்து நடத்திய இனவெறி போராட்டங்களுக்கும் தமிழ்தேசிய வாதிகள் பலர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

அரசியல், வரலாறு, சமூகம், கலை அனைத்தையும் மிக மிக மேலோட்டமான பார்வை மற்றும் ஆதிக்கம் செலுத்தும் கண்ணோட்டத்தோடு புரிந்து வைத்திருக்கும் படைப்பாளிகளிடமிருந்து இத்தகைய விபரீதங்கள் வரும் என்பதற்கு “துப்பாக்கி” எனும் மசாலாவே சாட்சி. இதன் மூத்த சகோதரனாக அமெரிக்க அரசின் ஆசிபெற்ற “விசுவரூபம்” அடுத்து வரப்போகிறது. மீதி விமரிசனங்களை அதில் தொடருவோம்.