privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்"தாக்கரேவுக்காக பந்த் தேவையில்லை"-மும்பை பேஸ்புக் பெண்கள் கைது!

“தாக்கரேவுக்காக பந்த் தேவையில்லை”-மும்பை பேஸ்புக் பெண்கள் கைது!

-

ந்தியாவின் பொதுவாழ்வில் இந்துமதவெறி பாசிசம் இரண்டறக் கலந்துள்ளது என்பதை பாசிஸ்ட் தாக்கரேவின் மரணத்தை ஒட்டி அனைவரும் அஞ்சலி செலுத்தியது நீருபிக்கின்றது. இதில் பிரதமர், குடியரசுத் தலைவர், பல கட்சித் தலைவர்கள், ஏன் – பார்ப்பனியத்தை எதிர்க்கும் தி.க வீரமணி உட்பட சகலமானவர்களும் உண்டு. பொதுவில் இறந்தோருக்கு மரியாதை செலுத்துவதில் என்ன தவறு என்று சிலர் நினைக்கலாம். ஆனால் சிவசேனாவால் கொல்லப்பட்ட பலநூறு முசூலீம் மக்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென்றால் தாக்கரேவின் இந்த இயற்கையான மரணத்தைக்கூட கொண்டாட வேண்டும். அதுதான் அந்த மக்களுக்கு செய்யப்படும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

1960களில் உலகெங்கும் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில் காங்கிரசுக்கு எதிரான மக்களின் மனப்போக்கு பல மாநிலங்களில் வெளிப்படுகிறது. கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், திராவிடக் கட்சிகள் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் காங்கிரசுக்கு மாற்றாக ஆங்காங்கே மேடையேறுகின்றன. இக்காலகட்டத்தில்தான் கார்ட்டூனிஸ்டாக இருந்த பால்தாக்கரே சிவசேனாவை ஆரம்பிக்கிறார்.

1970களில் மும்பை ஜவுளி ஆலைகளில் பலமாக இருந்த கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்த நினைத்த முதலாளிகளும், காங்கிரசுக் கட்சியும் சிவசேனாவின் இனவெறிக்கு புரவலர்களாக ஸ்பான்சர் செய்தனர். இனபேதம் கடந்து வர்க்க ஒற்றுமையால் இயங்கிய தொழிற்சங்கங்களின் பொருளாதார வாதத்தால் சிவசேனா தொழிற்சங்கம் ஆரம்பித்த ஆலைகளில் கம்யூனிஸ்டு சங்கங்கள் பலவீனமடைந்தன. முதலாளிகளின் நோக்கம் நிறைவேற்றப்பட்டது. பிற்பாடு இந்த ஆலைகள் மூடப்பட்டு அந்த நிலங்கள் ரியல் எஸ்டேட் வணிகத்தில் பெரும் பணத்துடன் விற்கப்படுவத்ற்கும் சிவசேனா துணை நின்றது.

பிறகு”மாராட்டியம் மராட்டியருக்கே” என்ற முழக்கத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியருக்கு எதிரான கலவரத்தில் அதன் இடம் உறுதி செய்யப்பட்டது. மராத்திய இனவெறியோடு விநாயகர் பூசை, சிவாஜி விழா என வளர்ந்த சிவசேனா 1992-93 பாபர் மசூதி இடிப்பை ஒட்டிய கலவரங்களில் முக்கிய பாத்திரத்தை ஆற்றியது. நூற்றுக்கணக்கான முசுலீம்கள் சிவசேனா குண்டர்களால் கொல்லப்பட்டனர். அப்போதைய சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் தாக்கரேவின் கொலைவெறி எழுத்துக்கள் தொடர்ந்து கலவரத்தை ஆணை போட்டு நடத்தி வந்தன. இது குறித்து விசாரித்த ஸ்ரீகிருஷ்ணா கமிஷனில் சிவசேனா மற்றும் தாக்கரேவின் பங்கு ஆதாரங்களோடு அடையாளம் காட்டப்பட்டாலும் அந்தக் கிரிமினல் மீது யாரும் கைவக்க துணியவில்லை.

இதன் முடிவில் பா.ஜ.கவின் துணையுடன் மராட்டியத்தில் ஆட்சியைப் பிடித்தது சிவசேனா. கொஞ்ச நாட்களிலேயே இவர்களது மராத்திய வேடம் கலைந்து முதலாளிகளின் கைக்கூலிகள்தான் என்பதை நிரூபித்தனர். அப்படித்தான் அமெரிக்க என்ரானை முதலில் எதிர்த்து விட்டு பின்னர் ஆதரித்தனர். மைக்கேல் ஜாக்சன் நிகழ்ச்சியை பால்தாக்கரே நின்றவாரே களித்தார். பாலிவுட்டும் பால்தாக்கரவின் மிரட்டலில் சினிமாக்களை தயாரித்தது. மணிரத்தினம் கூட தனது “பம்பாய்” திரைப்படத்தில் சிவசேனாவின் பாத்திரத்தை மறைத்து எடுத்திருந்தாலும் அதை தாக்கரேவுக்கு போட்டுக்காட்டி அனுமதி வாங்கி ரீலீஸ் செய்தார். டெண்டுல்கரின் திருமணத்தில் கூட தாக்கரேவின் குடும்பமே பிராதானமாக கலந்து கொண்டது.

இறுதியில் சிவசேனா என்பது மும்பையில் லும்பன்களது கட்சியாகவும், கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட், முதலாளிக்கு ஆதரவான கைக்கூலி தொழிற்சங்கங்கள், மாமூல் என்று ஒரு பிரிவு தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்கியது. அதே நேரம் சிவசேனாவின் மராத்திய மற்றும் இந்துத்வ பாசத்தின் உண்மை முகத்தை அறிந்து கொண்ட மாராத்திய மக்கள் அதை புறக்கணித்த ஆரம்பித்தனர். கூடவே தாக்கரவின் மகனானா உத்தவ் தாக்கரேவுக்கும், மருமகனான ராஜ் தாக்கரேவுக்கும் வாரிசு சண்டை நடந்தது. மருமகன் மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா என்றொரு தனிக்கட்சி கடையை ஆரம்பித்தார்.

கடைசியாக பீகாரிகள் உள்ளிட்ட வட இந்திய தொழிலாளர்களுக்கு எதிராக சிவசேனா நடத்திய தாக்குதல் முன்பு போல வரவேற்பை பெறவில்லை. இப்படி இனவெறி, மதவெறி, முதலாளிகளின் கைக்கூலியாக விளங்கிய சிவசேனா இன்று பியூஸ் பிடுங்கப்பட்ட பாம்பாக ஒடுங்கி விட்டது.

எனினும் மும்பை கலவரத்தில் பலநூறு முசுலீம் மக்களை கொன்றதற்கு தாக்கரேவை தூக்கில் போட்டிருக்க வேண்டும். அப்படி அவரைத் தண்டிக்க முடியவில்லை என்ற ஆதங்கம்தான் பின்னர் மும்பை தொடர் குண்டு வெடிப்பாக முசுலீம் தீவிரவாதிகளிடமிருந்து வந்தது. தாக்கரே போன்ற பச்சையான கிரிமினல்களைக் கூட தண்டிக்க முடியவில்லை என்றால் இந்தியா ஒரு ஜனநாயக நாடு இல்லை, சர்வாதிகார நாடு என்றே அழைக்க முடியும்.

இத்தகைய கிரிமினல் பாசிஸ்டை தண்டிக்க முடியவில்லை என்றாலும் அவரது மரணத்தை பொதுவான தலைவரது மரணமாக ஆளும் வர்க்கம் அங்கீகரித்து இரங்கல் தெரிவிப்பதைத்தான் இந்தியா ஒரு இந்துநாடு என்று பறைசாற்றுகின்றது என்கிறோம்.

மாணவிகள் கைது
ஷாகின் தாதா, ரேணு இருவரும் போலீசால் கைது செய்யப்ப்பட்டனர்.

தாக்கரே மறைவுக்கு பிறகு மராட்டியத்தில் அறிவிக்கப்படாத பந்த் நடைபெற்ற போது, தானே நகரில் வசிக்கும் ஷஹீன் ததா, தனது பேஸ்புக் பக்கத்தில், ” தாக்கரேவின் மறைவுக்காக முழு அடைப்பு தேவையில்லை. தற்போது நடைபெறும் பந்த் பயத்திற்காக மட்டுமே, பகத்சிங், சுகதேவ் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெள்ளையர்களால் தூக்கிலடப்பட்ட நாட்களில் நாம் என்ன செய்தோம் என்பதை நினைவு கூர வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இதை அவரது தோழி ரேணு ‘லைக்’ செய்திருந்தார்.

உடனே சிவசேனா வெறியர்கள் இதை புகாராக பதிவு செய்ய போலீசும் இந்த இரண்டு இளம் பெண்களை கைது செய்து வழக்கு பதிவு செய்திருக்கிறது. விரோத மனப்பான்மையை ஏற்படுத்துதல், இரு பிரிவினரிடையே மோதலைத் துண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். ஷஹீன் தாதாவின் உறவினர் மருத்துவமனையை சிவசேனா குண்டர்கள் சூறையாடியிருக்கின்றனர்.

பலரும் இந்தக் கைதை கண்டித்திருக்கின்றனர். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரான மார்க்கண்டேய கட்ஜூ கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மதவெறியையும், இனவெறியையும் வளர்த்து கலவரங்கள் பல நடத்திய தாக்கரே எனும் கிரிமினலை தண்டிக்க முடியாத போலிசும், நீதிமன்றமும் அவரது மறைவுக்கு பந்த் தேவையில்லை என்ற இரு பெண்களை கைது செய்திருக்கிறது என்றால் இந்தியாவின் யோக்கியதையை அறிந்து கொள்ளலாம்.