privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஎன்ன பிடுங்குகின்றன போலீசும் உளவுத்துறையும்? ...

என்ன பிடுங்குகின்றன போலீசும் உளவுத்துறையும்?

-

போலீஸ்-உளவுத்துறை

சென்னை சீயோன் பள்ளிப் பேருந்திலிருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி சுருதி கொல்லப்பட்ட கொடுமைக்கு எதிராக உழைக்கும் மக்கள் குமுறி எழுந்ததும், துறைசார்ந்த அதிகாரிகளும் போலீசும் உளவுத்துறையும் நீதித்துறையும் அவசரமாக நடவடிக்கைகளை எடுப்பதாகக் காட்டின. விருதுநகர் முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த கோர விபத்தில் 39 தொழிலாளர்கள் பலியாகிப் போன கொடூரத்தைத் தொடர்ந்து, இந்த ஆலையின் முதலாளியைக் கைது  செய்து, முறைகேடுகளை விசாரிப்பதாக அதிகாரிகளும் போலீசும் பரபரப்பூட்டினர். இப்படி எங்காவது கொலைகள் விபத்துகள், மோசடிகள் நடந்தால்தான், மக்களுக்குப் பெருத்த பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான், அங்கே அதிகார வர்க்கமும், போலீசும் முதற்கட்ட விசாரணையைத் தொடங்குகின்றன.

ஆனால், சிவில் நிர்வாகம் மற்றும் போலீசுத்துறையின் கடமையே இத்தகைய முறைகேடுகளையும் மோசடிகளையும் கொள்ளையையும் கண்டறிந்து தடுப்பதுதான். சிவில் நிர்வாகத்தில் கண்காணிப்புத் துறையும், போலீசில் உளவுத்துறையும் இந்த நோக்கத்துக்காகவே உருவாக்கப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கடமையை அறவே தட்டிக்கழித்துவிட்டு கண்ணுக்குத் தெரியும்படியான பாதிப்புகள் ஏற்பட்ட பின்னர்தான், மோசடிகள்-முறைகேடுகள் அம்பலமான பின்னர்தான், தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்டவனைப் போல  அதிகார வர்க்கமும் போலீசும் நடவடிக்கைகள் எடுப்பதாகப் பரபரப்பூட்டுகின்றன.

போலீஸ்-உளவுத்துறை
கோடிகோடியாய் மோசடி: பணத்தைப் பறிகொடுத்தவர்கள் சுசி ஈமு கோழிப்பண்ணை நிறுவனத்தை முற்றுகையிட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதாக நாடகமாடும் போலீசு

ஈரோடு மாவட்டத்தில் ஈமு பண்ணையாளர்கள் சிறுவீத முதலீட்டாளர்களை மோசடி செது ஏறத்தாழ ரூ.300 கோடி அளவுக்கு சுருட்டும்வரை காத்திருந்து விட்டு, இப்போது ஏதோ அதிரடியாக நடவடிக்கை எடுப்பதைப் போல காட்டுகிறது தமிழக போலீசு. ஈமு கோழிப்பண்ணைத் திட்டம் என்பதே மோசடியானது என்று போலீசின் பொருளாதாரக் குற்றப் பிரிவுக்குத் தெரியாதா? போர்டு போட்டுக் கொண்டு பட்டப்பகலில் பகிரங்கமாக இக்கொள்ளை நடந்துவந்த போதிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிவில் நிர்வாகமும் போலீசும் உளவுத்துறையும் கண்டு கொள்ளாதது ஏன்? யாரும் புகார் கொடுக்காத போதிலும், சில்லறை வியாபாரிகள் தெருவில் கடை போடுவதை சரியாகக் கணக்கு வைத்துக் கொண்டு மாமூல் வசூலிக்கும் போலீசு, மோசடிப் பண்ணைகள் குறித்து புகார்கள் வராததால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் போனதாகக் கதையளக்கிறது.

திருப்பூர், அவிநாசி சாலையில், பாசி போரெக்ஸ் டிரேடிங்” எனும் நிதி நிறுவனம், முதலீடுகளுக்கு கூடுதல் போனசும் வட்டியும் தருவதாக ஏமாற்றி ஆயிரம் கோடிக்கு மேல் வாரிச் சுருட்டியுள்ளது. தோற்றத்திலேயே மோசடி என்று அறிந்திருந்த போதிலும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இத்தனை காலமும் ஆதாயமடைந்து விட்டு, இப்போது இந்நிறுவனத்துக்கு போலீசார் சீல் வைத்து திடீரென சூரத்தனம் காட்டுகின்றர். இம்மோசடி நிதிநிறுவன இயக்குநர்களில் ஒருவரான கமலவள்ளியைக் கடத்தியதோடு, இதர இயக்குனர்களை மிரட்டி 3 கோடி ரூபா வரை பணம் பறித்த கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத்குமார், டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகிய போலீசு அதிகாரிகள் கைதாகினர். ஆனாலும், இக்குற்றவாளிகளைத் தண்டிக்காமல் வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது போலீசு. முன்பு பயந்து நடுங்கிக் கொண்டிருந்த இந்நிறுவனத்தின்  இயக்குநர்கள் இப்போது போலீசு அதிகாரிகளிடம் சிரித்துப் பேசிக் குலாவுவதாகப் பார்ப்பன தினமலரே கிசுகிசு செதியாக எழுதுகிறது. இந்நிதி நிறுவனத்தின் மோசடிக்கு எதிராக போலீசு தனது சூரத்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கும்போதே, சென்னை-கொளத்தூரில் அப்ரோ நிறுவனத்தின் இயக்குனராக அறிவித்துக் கொண்ட யேசுதாஸ் என்பவன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் தருவதாக கோடிக்கணக்கில் நடத்திய மோசடி அம்பலமானது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மலைகளையே விழுங்கிய கிரானைட் கொள்ளை நீண்டகாலமாக நடந்துவந்துள்ள போதிலும், அக்கொள்ளையர்களின் சம்பளப் பட்டியலில் இருந்துவந்த போலீசும் சிவில் நிர்வாகமும் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. கிரானைட் கொள்ளை பற்றி முந்தைய மாவட்ட ஆட்சியர் சகாயம்தான் வெளிப்படுத்தினார். அவருக்கு முன் பணியாற்றிய ஆட்சியர்களும் அதிகாரிகளும் என்னதான் செய்து கொண்டிருந்தார்கள்? போலீசும் உளவுத்துறையும் சிவில் நிர்வாகமும் இத்தனை காலமும் எதைப் புடுங்கிக் கொண்டிருந்தது? தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வருவாத்துறை அதிகாரிகள் முதல் கிராம அதிகாரி வரை அனைவருமே ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் அல்லக்கைகளாகவே இருப்பது அம்பலமாகியுள்ள போதிலும், உளவுத்துறை இன்னமும் எதை நோண்டிக் கொண்டிருக்கிறது?

போலீஸ்-உளவுத்துறை
முறைகேடுகளைத் தடுக்காமல் ஆதாயமடைந்த போலீசு மற்றும் சிவில் நிர்வாகத்தின் அலட்சியம்: 39 பேரை பலிகொண்டு பலரைப் படுகாயப்படுத்திய முதலிப்பட்டி பட்டாசு ஆலை விபத்தின் கோரம்

விருதுநகர் – முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த கோரவிபத்தில் 39 பேர் பலியாகிப் போனார்களே,  வெடிபொருள் கட்டுப்பாடு அதிகாரிகள், வருவாதுறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், போலீசு, தீயணைப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆலையின் முறைகேடுகளுக்கு எதிராக இத்தனை காலமும் என்னதான் செது கொண்டிருந்தார்கள்? தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணம் வரன்முறைப்படுத்தப்பட்ட பின்னரும், அதை ஏற்க மறுத்து பகற்கொள்ளை நடத்தும் தனியார் பள்ளி முதலாளிகளைக் கைது செது தண்டிக்காமல் சிவில் நிர்வாகமும் போலீசும் உளவுத்துறையும் எதைக் கிழித்துக் கொண்டிருக்கிறது? கடந்த ஆட்சியில் ஆற்றுப் படுகைகளில் நடந்து வந்த மணற்கொள்ளை இப்போது குளம், ஏரி, கண்மாய் – என விரிவடைந்துவிட்ட போதிலும் மணற்கொள்ளை மாஃபியாக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சிவில் நிர்வாகமும் போலீசும் என்னதான் செய்கிறது?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடனேயே, நிர்வாகத்திலும் போலீசுத் துறையிலும் அரசியல் தலையீடு இருக்காது; அத்துறைகள் சுதந்திரமாகச் செயல்படும்” என்று பார்ப்பன பத்திரிகைகள் பிரமையூட்டின. ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார் என்றவுடனேயே போலீசுத் துறை தானாகவே மும்முரத்துடன் செயல்படத் தொடங்கிவிட்டது” என்று புளுகினார் துக்ளக் சோ. ஆனால், பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவின் ஆட்சியைத் தமது சோந்த ஆட்சியாகவே கருதிக்கொண்டு கேள்விமுறையின்றிக் கொட்டமடிக்கிறது போலீசு.

தனது கடமைகளை – குற்றங்கள், மோசடிகள், சமூக விரோதச் செயல்கள், முறைகேடுகளைத் தடுப்பது, சட்டம் ஒழுங்கைக் காப்பது – எனத் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அன்றாடப் பணிகளைக்கூடச் செயாமல் அலட்சியம் காட்டுவதோடு, அப்பாவி மக்கள் மீது தமிழக போலீசு பாய்ந்து குதறிக் கொண்டிருக்கிறது. கண்ணெதிரே நடக்கும் பகற்கொள்ளையைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, கொள்ளையர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஆதாயமடைவது, கொள்ளையும் மோசடியும் அம்பலப்படும்போது, ஏதோ இப்போதுதான் தெரியவந்ததாகக் காட்டிக்கொண்டு அதில் சூரத்தனம் காட்டுவது, பின்னர் வழக்குகளை நீர்த்துப் போகச் செவது, பிற மாநிலங்களுக்குக் குற்றவாளியைத் தேடிச் செல்வதாகக் கணக்குக் காட்டி இன்பச் சுற்றுலா சென்று வருவது, மறுபுறம் சாதாரண சிறு குற்றங்களை பூதாகரமானதாக்கி, அதில் குற்றவாளிகளைப் பிடித்து விட்டதாக  ஊடகங்களில் விளம்பரப்படுத்திக் கொள்வது என்பதாகவே அதன் செயல்பாடுகள் உள்ளன.

தமிழகப் போலீசின் உளவுத்துறையானது எதிர்க்கட்சியினரை உளவுபார்த்து, அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் வேலையையும், ஆளுங்கட்சியின் அமைச்சர்களையும் பிரமுகர்களையும் உளவுபார்த்து மேலிடத்துக்குத் தகவல் சோல்வதையும்தான் முக்கியமாகச் செய்து கொண்டிருக்கிறது. இதுதான் அதற்கு ஒதுக்கப்பட்ட வேலையா? ஜெயா – சசியின் ஊடல்-கூடல் நாடகங்களில் போலீசு உளவுத்துறை கேடாகப் பயன்படுத்தப்பட்டதோடு, சசிகலா உறவினர்களிடமிருந்து இலஞ்ச -ஊழல், அதிகார முறைகேடுகள் மூலம் குவிக்கப்பட்ட சொத்துகள்-செல்வங்களைக் கைப்பற்றுவதற்காகவும், அவர்களுடன் கட்சிக்காரர்கள்  கொண்டுள்ள இரகசிய உறவுகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் பயன்படுத்தப்பட்டது.

இந்த நாடகத்தில், நடராஜன்(சசிகலா) மீது புகார் கொடுக்கப்பட்டதாகக் கூறி, பின்னர் அப்புகார்கள் திரும்பப் பெறப்பட்டன. புகார் கொடுத்தவர்கள் யார்? அந்தப் புகார் உண்மையானதா, இல்லையா என்று போலீசு முதல்நிலை விசாரணைகூட நடத்தவில்லை. ராவணன், திவாகரன், மிடாஸ் மோகன், நடராஜன் என்று பல புள்ளிகளின் மீது பாந்த வழக்குகள், சசிகலா மறுவீடு நுழைந்ததும் அப்படியே படுத்துக் கொண்டு விட்டன. எதற்காக இந்த வழக்குகள் பதியப்பட்டன, ஏன் இப்போது மந்தகதியில் உள்ளன என்பதெல்லாம் ஜெயலலிதாவுக்கும் உளவுத்துறைக்குமே வெளிச்சம்.

ஆளும் பாசிச ஜெயா கும்பலின் விசுவாச ஏவல்நாயாக இருப்பதோடு, கண்ணெதிரே கொள்ளையும் மோசடிகளும் நடந்த போதிலும் கண்டுகொள்ளாத போலீசும் உளவுத்துறையும், தாங்கள் துடிப்பாக செயல்படுவதாகக் காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது பயங்கரவாதப் பீதியூட்டி ஒடுக்கும் வேலையை மட்டும் முறையாகச் செதுவருகிறது.

போலீஸ்-உளவுத்துறை
துடிப்பாகச் செயல்படுவதாக காட்டிக்கொள்ள போலீசு கிளப்பிய பயங்கரவாதப் பீதி : சென்னை-குன்றத்தூரில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளாகச் சித்தரித்துக் கைது செய்யப்பட்ட மக்கள் குடியரசுக் கட்சியினர்

இணையத்தைத் திறந்தால் குன்னூர் இராணுவக் கல்லூரி மற்றும் அணு மின் நிலையங்களின் படங்கள்  எளிதாகக் கிடைக்கும் நிலையில், அவற்றைப் புகைப்படம் எடுத்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இந்திய இராணுவ இரகசியங்களைக் கடத்த முயன்றதாகக்கூறி, வெங்காய வியாபாரியான தமீம் அன்சாரி என்ற இளைஞரை, கடந்த செப்டம்பர் 16 அன்று திருச்சி விமான நிலையத்தில் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். முஸ்லிம்கள் நாட்டுப்பற்றில்லாதவர்கள், பாகிஸ்தானின் கைக்கூலிகள், தீவிரவாதிகள் என்றெல்லாம் மக்களின் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டிருப்பதால், ஒரே நாளில் தமீம் அன்சாரியைத் தீவிரவாதியாக்கி விட்டது தமிழக போலீசு.

கடந்த அக்டோபர் மாதத்தில், வழக்குரைஞர்களும் கல்வியாளர்களும் மாணவர்களும் கொண்ட உண்மையறியும் குழுவினர் 11 பேர்  கூடங்குளத்துக்குச் சென்றபோது, மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டி போலீசு கைது செய்ததோடு, அவர்களைத் தீவிரவாதிகளாகவும் சதிகாரர்களாகவும் அவதூறு செய்தது. இதேபோல, கடந்த மாதத்தில் சென்னை புறநகர்ப் பகுதியான குன்றத்தூரிலுள்ள ஒரு பள்ளியில் கூடி விவாதித்துக் கொண்டிருந்த மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 13 பேர் கியூ பிரிவு போலீசாரால் கைது செயப்பட்டனர். முன்பு மாவோயிஸ்டு கட்சியில் இருந்த அவர்கள், அதிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பே விலகிவிட்டதாக வெளிப்படையாக அறிவித்துள்ள போதிலும், அவர்களைப் பயங்கரவாதிகளாக போலீசும் ஊடகங்களும் அவதூறு செய்தன.

தமிழகத்தில் மின்வெட்டால் அவதிப்படும் உழைக்கும் மக்கள், மின்சாரம் கேட்டுப் போராடினால், மின்துறை அதிகாரிகள் வருவதில்லை, போலீசு வருகிறது. போராட்டத்தைச் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாகக் காட்டி,  தடியடி நடத்தி மக்களை விரட்டுகிறது. இதேபோல குடிநீர், துப்புரவு, கல்வி வியாபாரிகளின் பகற்கொள்ளை, மணற்கொள்ளை முதலானவற்றுக்கு எதிராக மக்கள் போராடினால், துறைசார்ந்த அதிகாரிகள் வருவதில்லை. போலீசுதான் வருகிறது.

சீயோன் பள்ளிப் பேருந்திலிருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி சுருதி கொல்லப்பட்டதைப் போல எங்காவது கொலைகள் விழுந்தால்தான் சிவில் நிர்வாகமும் போலீசும் நடவடிக்கை எடுப்பதாகக் காட்டிக் கொள்கின்றனவே தவிர, மற்ற நேரங்களில் அவை வேறு எதையோ புடுங்கும் வேலைகளில் மூழ்கிக் கிடக்கின்றன. இதை மக்களுக்கு உணர்த்தவோ, போராடவோ ஓட்டுக்கட்சிகளும் தயாரில்லை. இதனால் மாஃபியாக்களும் கொள்ளையர்களும் கொட்டமடிப்பதும், அதிகாரவர்க்கமும் போலீசும் உளவுத்துறையும் இக்கொள்ளையர்களின் கூட்டாளிகளாகி விசுவாச சேவை செய்வதும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. இதுதான் பீற்றிக் கொள்ளப்படும் ஜெயலலிதா ஆட்சியின் நிர்வாகத் திறன்! தமிழக மக்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாகியுள்ள இத்தகைய கேடுகெட்ட ஆட்சியை போலீசைக் கொண்டுதான் காத்துக் கொள்ள முடியும் என்பதால், தமிழக போலீசுக்கு தீனிக்கு மேல் தீனி போட்டு பங்களா நாய் போல வளர்த்து வருகிறது பாசிச ஜெயா கும்பல்.

________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
______________________________________________________