privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வன்னி அரசு வகையறாக்களின் வன்னிய சேவை!

வன்னி அரசு வகையறாக்களின் வன்னிய சேவை!

-

வன்னி-அரசு
வன்னி-அரசு

வ 7- நாய்க்கன் கொட்டாய் சாதிவெறித் தாக்குதல் பற்றி அறிந்தவுடனேயே மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் அங்கு சென்றனர். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.. நாய்க்கன்கொட்டாய் பகுதியில் விவிமு இல்லையென்பதால், பென்னாகரம் பகுதி விவிமு தோழர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான நிவாரண உதவிகளையும் செய்திருக்கின்றனர். அவர்கள் திரட்டி அனுப்பி வைத்த செய்தி மற்றும் புகைப்படங்களை நவம்பர் 10 அன்று வினவு தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

தற்போது நவம்பர் 16 ஆம் தேதியன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர், வன்னி அரசு. “பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்பு வாதமும்” என்ற தலைப்பில் கீற்று தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்,

“பா.ம.க. வன்னியர்கள் மட்டுமல்லாமல், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மகஇக என கட்சி பேதம் இல்லாமல் ஒட்டுமொத்த வன்னியர்களும் இத்தாக்குதலில் கலந்துகொண்டு முதலில் சாதி, அப்புறம்தான் கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளனர்” என்று இந்த சாதிவெறித் தாக்குதலில் மகஇக வையும் வேண்டுமென்றே சேர்த்து அவதூறு செய்திருக்கிறார் வன்னி அரசு.

அறிவு நாணயம் என்ற சொல்லை அவர் குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பாரேயானால், தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டும் மகஇக காரர்கள் யார் என்பதை சொல்லட்டும். அல்லது அவரது கட்டுரையை பெருமகிழ்ச்சியோடு பிரசுரித்திருக்கும் கீற்று, பெரியார் தளம் வலைத்தளங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்குமானால் வன்னி அரசுவை விளக்கமளிக்குமாறு கோரட்டும்.

“நக்சல்பாரிகளுக்குப் பயந்து எங்ககிட்ட எந்த வம்புதும்பும் இல்லாம இருந்தாங்க. அந்தக்கட்சி காலப்போக்கில இல்லாமல் போனதும், இளவரசன் கல்யாணத்தை சாக்கா வெச்சு இப்படிப் பண்ணிட்டாங்க” – இது தருமபுரி தாக்குதல் பற்றி ஆனந்த விகடன் வெளியிட்டிருக்கும் கட்டுரையில் தாக்குதலுக்கு ஆளான அண்ணாநகரைச் சேர்ந்த வசந்தா என்ற பெண் கூறியிருக்கும் உண்மை. “நக்சல்பாரி இயக்கம் ஒடுக்கப்பட்டதனால்தான் சாதிய அமைப்புகள் தலையெடுத்திருக்கின்றன” என்று இச்சம்பவத்தை ஒட்டி பல பத்திரிகைகளும் எழுதியிருக்கின்றன.  இந்த உண்மைதான் வன்னி அரசுவை சுடுகிறது. அதனால்தான் அவர் பொய்களையும் அவதூறுகளையும் கடை விரிக்கிறார்..

இது தாழ்த்தப்பட்ட மக்கள் வாழப்பொறுக்காத காரணத்தால் வன்னிய சாதிவெறியர்கள் நடத்திய தாக்குதல் என்று வினவு கட்டுரையில் எழுதியிருந்தோம். வன்னி அரசு இந்த தாக்குதலுக்கு முற்றிலும் வேறு காரணத்தை கண்டுபிடித்திருக்கிறார். சேரிமக்கள் புரட்சிகரக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காகத்தான் இந்தத் தண்டனையை அனுபவித்து வருகிறார்களாம்.

நத்தம் காலனி மக்களுடன் நக்சல்பாரி இயக்க தோழர்கள் ஐக்கியப்பட்டிருந்ததும் அவர்கள் ஆதரவைப் பெற்றிருந்ததும் உண்மைதான். அண்ணா நகர் வசந்தாவின் கூற்றுப்படி பார்த்தால், “அதற்கு இதுதான் தண்டனை” என்ற வசனம் அன்றைக்கு தாக்குதல் நடத்திய வன்னிய சாதிவெறியர்கள் பேசவேண்டியது. அதே வசனத்தை வன்னி அரசு ஏன் பேசவேண்டும்?

ஏனென்றால், “நக்சல்பாரி கட்சியில் சேராதீர்கள்” என்று வன்னி அரசுகள் தொடர்ந்து கதறினாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதை காதில் வாங்குவதில்லை. நக்சல்பாரிகள்தான் உழைக்கும் மக்களின் நண்பர்கள், உண்மையான சாதி எதிர்ப்பாளர்கள் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் அவர்கள் புரட்சியாளர்களை நம்புகிறார்கள். நக்சல்பாரி இயக்கத்தில் திரள்கிறார்கள். பிறப்பால் தலித்தாகவே இருந்தாலும், பிழைப்புவாதிகளை நிராகரிக்கிறார்கள். இந்த வயிற்றெரிச்சலும், கம்யூனிச எதிர்ப்பு வெறியும்தான் வன்னி அரசுவை இப்படிப் பேசவைக்கிறது. மகஇக வுக்கு எதிராகப் புளுக வைக்கிறது.

வாய்க்கு வந்தபடி பேசுவதற்கும், “என்னயத் தடுக்காதீங்க” என்று சவுண்டு விடுவதற்கும், “உஸ்” என்று அடக்கினால் மறுகணமே மான வெக்கம் பாக்காமல் காலில் விழுவதற்கும் தயாராக இருக்கும் நபர்கள்தானே ஓட்டுக் கட்சிகளில் கைத்தடிகளாக வளர முடியும்?

“சாதிவெறியோடு தமது சமுதாயத்தைத் திருடர்களாக, கொள்ளையர்களாக மாற்றிய மகத்தான சாதனையைச் செய்துவரும் மருத்துவர் ராமதாஸ் இனிமேல் தமிழ்ச் சமூகம் என்றோ தமிழ்த் தேசியம் என்றோ பேச அருகதை உண்டா?” என்று அந்தக் கட்டுரையில் பயங்கரமாக சவுண்டு விடுகிறார், வன்னி அரசு. இது நவம்பர் 16 ஆம் தேதி.

அடுத்து வெளிவருகிறது தலைவர் திருமாவின் அறிக்கை.

“தருமபுரி அருகே நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்களுக்கு பா.ம.க-வும் வன்னியர் சங்கமும் காரணம் இல்லை என்று பா.ம.க நிறுவனர் இராமாதாசு அவர்கள் வெளிப்படையாக அறவித்துள்ளதை நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் சமூக பொறுப்புணர்வோடு வரவேற்க கடமைப்பட்டிருக்கிறது”. ..

“மறுபடியும் மறுபடியும் குற்றம் சாட்டுவது விடுதலைச் சிறுத்தைகளின் நோக்கமல்ல. ஒருதாய்; மக்கள் மாநாடுகள், சமூக நல்லிணக்க மாநாடுகள,; புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் ;திறப்பு, மற்றும் பா.ம.க-வில் தலித்துகளுக்கு அதிகாரம் வாய்ந்த கட்சி பொறுப்புகள் அளித்தல் போன்ற பாராட்டுதலுக்குரிய பல்வேறு களப்பணிகளை நடைமுறையில் செய்துகாட்டியிருக்கிற பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில்தான் இதனை விடுதலைச் சிறுத்தைகள் உரிமையோடு சுட்டிக்காட்டுகிறது”.

“கடந்த 16.11.2012 அன்று செய்தியாளர்களை சந்தித்தபோது விடுதலைச் சிறுத்தைகள் பா.ம.க நிறுவனருக்கு வெளிப்படையான வேண்டுகோள் விடுத்தது. அதாவது மொழி, இனம் ஆகியவற்றின் நலன்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக, தமிழக மாநில உரிமைகளுக்காக, கடந்த காலங்களில் பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் தொலைநோக்குப் பார்வையோடு கைகோர்த்து களமாடியதைபோல, தற்போதைய நெருக்கடியான இச்சூழலில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் மீண்டும் பா.ம.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் கைகோர்ப்போம் வாருங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுத்துள்ளது.”… (நவ, 18, பெரியார்தளம்)

இவையெல்லாம் அந்த அறிக்கையில் காணப்படும் வாசகங்களில் சில.

வன்னி அரசுவால் வசை பாடப்படும் மகஇக, மருத்துவர் ராமதாசுக்கு குடிதாங்கி, இடிதாங்கி போன்ற பட்டங்களை வழங்கவில்லை. மாறாக, அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படங்களைப் போட்டு அவர் கம்பெனியை தொடங்கிய நாள் முதலாகவே அம்பலப்படுத்தி வருகிறது.

ஆனால், இன்று நத்தம் காலனியை எரித்து சாம்பலாக்கிய பிறகும், தலித் இளைஞர்கள் ஆதிக்க சாதி பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கைவிடுவதாக குற்றம் சாட்டி, எல்லா சாதிவெறியர்களுக்கும் ராமதாசு கொம்புசீவி விட்ட பின்னரும், “பாட்டாளி மக்கள் கட்சி என்பது அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் கொள்கைகளை உள்வாங்கி செயல்படும் இயக்கம் என்று நம்புவதாக” அந்த அறிக்கையில் தோழமையோடு திருமா கூறியிருக்கிறார்.

“இன்னுமாடா ஊர்ல நம்மள நம்புறாய்ங்க?” ன்னு பெரியய்யா காடுவெட்டியிடம் கேட்டிருப்பாரோ?

இப்படியாக, வன்னி அரசுவின் 16 ஆம் தேதி கட்டுரைத் தலைப்பில் குற்றவாளிகளாக காட்டப்பட்டிருந்த பாமக சாதிவெறியர்கள், 18 ஆம் தேதி நிரபராதிகள் என்று  விடுவிக்கப்பட்டு விட்டார்கள். இனி வன்னி அரசுவின் கட்டுரையில் மிச்சமிருக்கும் குற்றவாளிகள் நக்சல்பாரி புரட்சியாளர்கள்தான். “வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் பாட்டாளி சொந்தங்களை விடுதலை செய்! நக்சல்பாரி புரட்சியாளர்களை கைது செய்!” என்று வன்னி அரசு சவுண்டு விட்டால், நல்லெண்ணத்துடன் கை கோர்ப்பதற்கு மருத்துவர் ஐயா உடனே முன்வந்து விடுவார்.

இதையே கொஞ்சம் ஜாடையாக சொல்லியிருக்கிறார் வன்னி அரசு. “இன்று நாயக்கன்கொட்டாய் முகப்பில் தோழர்கள் அப்புவும் பாலனும் மட்டுமே உடைபடாமல் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்குச் சிலை வைத்த மக்களோ வீடின்றி வாசலின்றித் தவிக்கின்றனர்”  என்று தனது கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருவேளை வால்டர் தேவாரம் இதைப் படிக்க நேர்ந்தால், புல்லரித்திருப்பார். “இப்படி ஒரு கைத்தடி 80 களில் நமக்கு வாய்க்கவில்லையே” என்று வருந்தி, இடிப்பதற்கு 2 கடப்பாரைகளையும் பாதுகாப்புக்கு பத்து போலீசாரையும் அனுப்பி வைத்திருப்பார்.