privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஆப்பிள் - சாம்சங்: தொடரும் ஏகபோகச் சண்டை!

ஆப்பிள் – சாம்சங்: தொடரும் ஏகபோகச் சண்டை!

-

சாம்சங், ஆப்பிள் ஏகபோகச் சண்டைஆப்பிள் ஐபோன், ஐபேட் கருவிகளில் பயன்படும் A6 சில்லுகளின் விலையை 20 சதவீதம் உயர்த்தியிருக்கிறது சாம்சங். முதலில் விலை உயர்வை ஏற்றுக் கொள்ள மறுத்த ஆப்பிள், வேறு சப்ளையர் யாரும் கிடைக்காததால் வேண்டா வெறுப்பாக கூடுதல் விலை கொடுக்க ஒத்துக் கொண்டுள்ளது.

$17.5 விலைக்கு விற்ற சில்லுகளின் விலையை $3.50 உயர்த்தி $21க்கு ஆப்பிள் வாங்க வேண்டியிருக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு 10  கோடி கருவிகளை உற்பத்தி செய்யும் ஆப்பிளுக்கு சுமார் $350 மில்லியன் (ரூ 1,800 கோடி) கூடுதல் செலவு பிடிக்கும் அதே நேரத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு அந்த அளவு வருமானம் அதிகரிக்கும்.

ஸ்மார்ட் தொலைபேசி கருவிகள் சந்தையில் ஆப்பிள் முதலிடத்திலும், சாம்சங் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மற்ற நிறுவனங்கள் அனைத்தும் பெருமளவு பின் தங்கியுள்ளனர். கடந்த காலாண்டில் சாம்சங் 5.7 கோடி ஸ்மார்ட் தொலைபேசி கருவிகள் விற்றதன் மூலம் $4 பில்லியன் (சுமார் ரூ 22,000 கோடி) லாபம் காண்பித்திருக்கிறது. அதே காலத்தில் ஆப்பிள் 2.7 கோடி கருவிகளை விற்று $5.3 பில்லியன் (சுமார் ரூ 28,000 கோடி) லாபம் என்று தெரிவித்திருக்கிறது. அதாவது, ஆப்பிள் ஒவ்வொரு ஸ்மார்ட் தொலைபேசி கருவிக்கும் சுமார் ரூ 10,500 லாபமும், சாம்சங் ஒவ்வொரு கருவியிலும் சுமார் ரூ 3,900 லாபமும் ஈட்டுகின்றன.

இந்த லாப வேட்டையில் போட்டி நிறுவனத்தை ஒழித்துக் கட்டி ஏகபோகத்தை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதுதான் இன்றைய முதலாளித்துவத்தில் நிலவும் ‘போட்டி’.

‘2014ம் ஆண்டு முடிவடையும் இந்த சில்லுகளை வழங்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை’ என்று சாம்சங் முடிவு செய்தால் ஆப்பிளின் போட்டியை சந்தையிலிருந்து துரத்தி விடலாம் அல்லது புதிய உற்பத்தியாளரை கண்டு பிடிப்பதில் ஆப்பிளுக்கு பெரும் செலவு வைக்கலாம். அவ்வாறாக ஆப்பிள் கருவிகளின் விலை அதிகமானாலோ விற்பனை குறைந்தாலோ ஸ்மார்ட் தொலைபேசி கருவிகள் சந்தையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சாம்சங் அதனால் பெருமளவு ஆதாயம் அடையும்.

உலகெங்கும் கால் பரப்பி நிற்கும் ஆப்பிள், சாம்சங் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை தமது லாபத்தை பெருமளவில் அதிகரித்துக் கொள்வதற்கே பயன்படுத்துகின்றன. உயர்ந்த விலை கொடுத்து கருவிகளை வாங்கும் வசதி உள்ள மேட்டுக் குடியினரை குறி வைத்து அவர்களது ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படும் வகையில் தொழில் நுட்பங்களை வளைத்து வெளியிடுவது அவர்களது உத்தியாக உள்ளது.

அவ்வாறு உருத்திரிக்கப்பட்ட தொழில் நுட்பங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்படும் கருவிகள் சந்தையை விரிவாக்கும் நோக்கத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. தமது தேவைகளுக்காக வடிவமைக்கப்படாத அத்தகைய கருவிகளை உழைக்கும் மக்கள் எப்படியோ சமாளித்து பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்குள் உலகளாவிய நிறுவனங்கள் அடுத்த தொழில்நுட்பத்தின் மூலம் தமது அடுத்த கொள்ளையை ஆரம்பித்திருப்பார்கள்.

அத்தகைய கருவிகளின் வரிசையில் இப்போது முன்னணியில் இருப்பவைதான் இந்த ஸ்மார்ட் தொலைபேசிகள்.

உலகமெங்கும் தொழிற்சாலைகளை அமைத்து மேட்டுக்குடியினருக்கான இத்தகைய கருவிகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றன ஆப்பிளும் சாம்சங்கும். ஒரே நிறுவனமாக செயல்பட்டால் ஆகும் செலவுகளைக் குறைக்கவும், தொழிலாளர் உரிமைகளை மறுக்கவும் பெருமளவு வேலைகளை வெளி நிறுவனங்களிடம் விடுகின்றனர். வழங்கல் சங்கியில் பல்வேறு நிறுவனங்களை நுழைத்துக் கொண்டாலும் அவை பெரும்பாலும் ஆப்பிள், சாம்சங், நோக்கியோ போன்ற பெரும் தொழிற்கழகங்களின் கட்டுப்பாட்டில், அவர்களது சொல் படிதான் செயல்படுகின்றன. அதாவது நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தால் ஏற்க வேண்டிய பொறுப்புகள் எதுவும் இல்லாமலே, மறைமுகக் கட்டுப்பாட்டின் மூலம் ஆதாயங்கள் அனைத்தையும் கறந்து கொள்கின்றன கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள்.

கூடவே, விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையிலான பெரு நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் சந்தையில் நுழைய முடியாதபடி சட்ட நடைமுறைகளையும், தொழில் சூழலையும் ஏற்படுத்தியிருக்கின்றன. உதாரணமாக, 1990களில் உருவான கணினி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனி நபர்கள் கூட பாகங்களை வாங்கி மேசைக் கணினி உருவாக்கிக் கொள்ளும் வசதி, இப்போது ஸ்மார்ட் தொலைபேசிகளை செய்து கொள்ள இல்லாமல் ஆகியிருக்கிறது. அவற்றில் பயன்படுத்தப்படும் பாகங்கள் தொடர்பான பேடன்ட் காரணமாக சிறு நிறுவனங்கள் சட்ட பூர்வமாக போட்டி போட முடியாத நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

சமீபத்தில் ஓரங்களில் வளைவுகளோடு கூடிய செவ்வக வடிவம் மற்றும் தொடு திரையில் விரல் தீற்றல் மூலம் கைபேசியை அன்லாக் செய்வது உள்ளிட்ட தனது காப்புரிமைகளை மீறியதற்காக சாம்சங் மீது வழக்கு தொடுத்து வெற்றி பெற்றது ஆப்பிள். இப்போது சாம்சங் சில்லுகளின் விலையை அதிகரித்திருப்பதை ஆப்பிள் தன் மீது தொடுத்த வழக்கில் ஆன செலவை ஆப்பிள் மீதே சுமத்தியிருப்பதாக வைத்துக் கொள்ளலாம். இதன் அடுத்த திருப்பமாக ‘ஒரு பொருளுக்கு உற்பத்திச் செலவை விட பல மடங்கு அதிகமாக விலை வைப்பதற்கான காப்புரிமையை ஆப்பிள் வைத்திருக்கிறது’ என்று சாம்சங் மீது வழக்கு தொடரப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

படிக்க: