privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்நாட்டையே திவாலாக்கும் கல்வி!

நாட்டையே திவாலாக்கும் கல்வி!

-

ஜூன் மாதம் வந்துவிட்டால் இந்தியா முழுவதும் மேற்படிப்பு ஜுரம் தொடங்கி விடுகின்றது. உடனடியாக பணம் சம்பாதிக்கும் படிப்பு, சமுக அந்தஸ்துக்கான படிப்பு என விதவிதமான படிப்புகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துவிட வேண்டும் எனப் பெற்றோர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தன் பிள்ளை படித்து முடித்து ஒரு நல்ல வேலைக்குப் போய் விட்டால் தன் கவலைகள் தீர்ந்துவிடும். அதனால் கடன் வாங்கியாவது படிக்க வைக்க வேண்டுமென பெற்றோர்கள் கருதுகின்றனர்.

உயர் மத்தியதர வர்க்கம் மற்றும் மத்தியதர வர்க்கப் பெற்றோர்களிடம் முன்பெல்லாம் கோலோச்சிய படிப்பு மருத்துவம் அல்லது பொறியியல் தான். இப்பொழுதோ அது மெல்ல விரிந்து ஃபேஷன் டெக்னாலஜி, ஹோட்டல் மேனஜ்மென்ட், எம்பிஏ, விசுவல் கம்யூனிகேசன், ஃபோட்டொகிராபி எனப் பெருகி விட்டது. இந்தப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் படித்து விட்டால், பன்னாட்டு, தனியார் பெரு நிறுவனங்களில் நல்ல வேலை, ஐந்திலக்கச் சம்பளம், சொந்த வீடு, கார் என வாழ்க்கையில் உடனே செட்டில் ஆகி விடலாம். இந்த மாயைகளை முதலீடாகக் கொண்டு இன்று பல தனியார் கல்லூரிகள் புற்றீசல் போலப் பெருகி விட்டன.

பல லட்சம் ரூபாய் கடன் வாங்கிப் படிக்கும் இந்தப் படிப்புகளால் உண்மையில் இளைஞர்களின் வாழ்க்கை வளம் பெருகிறதா? ஏன் இந்தியாவில் இன்னும் வேலை இல்லாதோரின் சதவிகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளது? இந்தப் படிப்புகளினால் இந்தியா முன்னேறுகிறதா?

மேற்படிப்பு – தொழிற்கல்வி

இப்போது இருக்கும் கல்வி முறைக்கான வித்து பிரிட்டிஷ் காலானியாக நாம் இருந்தபோதே தொடங்குகிறது. காலனிய கால இந்தியாவில் மூலப்பொருட்களை மாத்திரம் கொண்டுசெல்ல வேண்டியிருந்ததால் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொறியாளர்கள், வல்லுநர்களின் தேவை குறைவாக இருக்கவே முதலில் நிர்வாகப் பணிக்கான எழுத்தர்களை உருவாக்கவே முக்கியத்துவம் தரப்பட்டது. அடுத்து ராணுவம், போக்குவரத்து மற்றும் ரயில்வே போன்ற துறைகளுக்காக முக்கிய நகரங்களில் மாத்திரம் தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

தொழிற் கல்வி

1947 க்குப் பிறகு நாட்டின் கட்டுமானம், தொழிற்சாலை, எந்திரம், மோட்டார் வாகனங்கள் போன்ற துறைகள் வளர வளர அது சார்ந்த படிப்புகளின் தேவை அதிகமாகியது. தேர்ந்த தொழிநுட்ப வல்லுனர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம் என ஐஐடிகளை 1957ல் உருவாகியது. மெல்ல மாநில அரசுகள் சேர்ந்துகொண்டன, குறைந்த கட்டணம் மட்டும் வாங்கி மக்கள் வரிப்பணத்தை கொண்டியங்கும் தொழில்நுட்ப கல்லுரிகளை அரசு உருவாக்கியது.1950 களில் 10க்கும் குறைவான தொழில்நுட்ப கல்லுரிகளில் இருந்து 500 க்கும் குறைவான பொறியாளர்கள் வெளிவந்தனர்.

1990 ல் உலகமயமாக்கல்- தனியார்மயமாக்கல்- தாராளமயமாக்கல் காலகட்டத்தில் இந்தியாவில் அந்நிய முதலீடு வரத்துவங்கியது. அவுட் சோர்சிங் எனும் ஒருமுறை உலகில் அறிமுகமாகியது. தங்கள் நாட்டில் அதிக சம்பளம் கொடுத்து செய்ய வேண்டிய வேலைகளை எந்த நாட்டில்  குறைந்த சம்பளத்திற்கு செய்கிறார்களோ அங்கே வேலைகள் குவியத் தொடங்கின. இதில் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் அந்நிய முதலீடு பெருகியது.

மறுபுறம் கல்வியும் தனியார்மயமாக்கப்பட்டு, பல தனியார் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல தொடங்கப்பட்டன. 70 ஆயிரம் வேலைகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்தால், அதைக்காட்டியே பல நூறு பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கும் கல்லூரிகள் முளைத்தன. 1990 க்கு முன் 400க்கும் குறைவான கல்லூரிகளில் இருந்து 20 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவந்த நிலை போய், 2011ல் 1800 கல்லூரிகளில் இருந்து 7.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 400 கல்லூரிகளிலிருந்து ஓராண்டுக்கு 2 லட்சம் பேர் வரை வெளிவருகிறார்கள்.

7.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் ஒரு ஆண்டுக்கு வெளிவந்து என்ன செய்கிறார்கள்? ஏன் இத்தனை பேர்? அவ்வளவு பேருக்கும் வேலை கிடைக்குமா?

ஒருவர் பொறியியல் பட்டம் பெற 4 ஆண்டு படிப்பதற்கு 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் 1.5 லட்சத்திற்கும் குறைவாக வசூலிக்கப்படுகிறது.

பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தரவர்க்க குடும்பத்தில் கடன் வாங்கி தான் இந்தப் படிப்புகளுக்கு அனுப்புகிறார்கள். பிள்ளை படித்து முடித்து விட்டால் தங்கள் கவலைகள் போய்விடும், கடனும் அடைக்கப்பட்டு விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

ஐஐடியில் படிப்பவர்களுக்கு படிக்கும்போதே வேலையும் கிடைத்து விடும். இது சில தனியார் பொறியியல் கல்லூரிகளில்தான் சாத்தியம். அனைத்து பொறியியல் கல்லுரிகளுமே தங்கள் மாணவர்கள் 90 சதவீதம் வரை வேலையில் இருப்பதாகப் புளுகுகிறார்கள்.

2008 உலகப் பொருளாதார நெருக்கடி வருவதற்கு முன் தனியார் கார்ப்பரேட்டுகள் ஓரளவு வேலை கொடுத்தன. ஆனால் அதன்பிறகு அதுவும் குறைந்து விட்டது. அப்புறம் ஏன் இத்தனை கல்லூரிகள்? இத்தனை மாணவர்கள்?

என்ஜினியரிங் சூதாட்டம்

அதிக கட்டணம் வாங்கியும் மாணவர்களுக்கு தரமான ஆசிரியர்கள், ஆய்வுக் கூடம், நூலகம், உணவு, தங்கும் வசதி எதுவும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சரியாக இருப்பதில்லை. அனைத்து ரவுடிகளும், ஓட்டுப்பொறுக்கிகளும் கல்வி வள்ளலாக இருப்பதால் அதிகாரிகளை சரிக்கட்ட அவர்களுக்கு வழியும் அத்துப்படி தான்.

மாணவர்களும் கல்விக்கடன் வாங்கிப் படிப்பதால் போராட்டம் அது இதுவென்று போய்விடக் கூடாது என நான்காண்டுகளைக் கெட்ட கனவாக கருதி அடிபணிகின்றனர். படித்து முடித்தவுடன் வேலை, வாழ்க்கையில் செட்டிலாவது என்ற கனவுகள் வேறு அவர்களைத் துரத்துகிறது.

ஐஐடி, ஐஐஎம் இல் மக்கள் பணம் கோடிக்கணக்கில் செலவாகிறது. ஆனால் இங்கு படித்த பலரும் வெளிநாட்டு வேலைக்கு சென்று, குடியுரிமையும் பெற்று விடுகின்றனர். கோடிக்கணக்கான மக்கள் வரிப் பணத்தில் ஐஐடியில் படிக்கும் மாணவன் அமெரிக்க நிறுவனமான ஃபேஸ்புக்கிலோ, கூகிளிலோ பல லட்சம் மாதச் சம்பளமாகப் பெற்று அமெரிக்க சென்று விடுகிறான். அவன் படித்த படிப்பால் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை.

மறுபுறம் சொந்த முதலீட்டில் படிக்கும் மாணவனுக்கு, படித்து முடித்தபின் தான் தன்னைப் போலவே பல லட்சம் பேர் அந்த ஒரு சில வேலைக்காகப் போட்டியிடுவது தெரியவரும்.

வேலை இல்லை

படித்து முடித்து, வேலை தேடும் போது தான் வேலை இல்லை என்ற உண்மை புரியவரும். வாங்கிய கடன் வட்டியுடன் குட்டி போட்டுக் கொண்டிருக்கும். வேலையில்லாத் ஒவ்வொரு நாளும் அதை நினைத்தாலே நெஞ்சு பதறும். ஒரு வேளை தனக்குத்தான் வேலைக்கான தரம் இல்லையோ என சந்தேகப்பட்டு அதனை உயர்த்த சில பயிற்சி நிறுவனங்களில் சேருவார்கள். ஆண்மைக் குறைவு சித்த மருத்துவர்களுக்கு இணையாக சும்மா பார்க்க வரும் பட்டாதாரிகளையும், உங்க இங்கிலீஷே சரியில்ல, நீங்க இருக்கிறதே வீண் என்ற அளவுக்கு முதலில் குழப்புவார்கள். சில ஆயிரம் தாருங்கள், நாங்க பயிற்சி தர்றோம், இதெல்லாம் கிடைக்கப் போற சம்பளத்துல 10% தான பாஸு என்று கூறி குழப்பி ஒருவழியாக உங்களுக்கு பயிற்சி தருவார்கள். பல ஆயிரம் செலவழித்த பிறகுதான் வேலை கிடைக்காத நிலைமை தெரிய வந்தாலும், பயிற்சியளிப்பவனிடம் அதைக் கேட்க முடியாது. வாக்குறுதியிலயே அவன் பயிற்சிதானே தருவேன் என்றான், வேலையைப் பற்றி பேசவில்லையே. ஐடி துறையில் ஒரே மாதத்தில் விண்டோஸ், லினக்ஸ், ஆரக்கிள் கற்றுத்தருவதாகக் கூறி 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கறந்து விடுகிறார்கள். மொத்தத்தில் பணம்தான் பட்டதாரிகளுக்கு விரயமாகிறது.

வேலை இல்லை ஏன்?

2000 ல் Y2K  பிரச்ச்னையைத் தீர்க்க நிறைய கணிப்பொறிப் பட்டதாரிகள் தேவைப்பட்டார்கள், சொல்லப் போனால் நிறைய பட்டதாரிகள் தேவைப்பட்டார்கள். அந்தக் காலகட்டதில் கணிப்பொறி என்றில்லாமல் எந்திரவியல் முதல் சாதாரண அறிவியல் பட்டதாரிகள் வரை கணிப்பொறி நிறுவனப் பணிகளுக்குச் சென்றனர்.

ஆனால் Y2K பிரச்சினை முடிந்தவுடன் அனைவருக்கும் வேலை போனது. இதுபோன்ற தற்காலிகத் தேவைகள் பூதாகரப்படுத்தப்பட்டு தனியார் கல்லூரிகள் பல திறக்கபட்டன. குறிப்பாக 80களின் இறுதியில் கல்வியில் தனியார் மையம் தாரளமாக புகுந்தது. அரசியிலில் கடைவிரிக்க வாய்ப்பில்லாதவர்கள் ஒதுங்கி கல்வி வள்ளல்களாக அவதாரம் எடுத்தார்கள்.

இருக்கும் 80 ஆயிரம் வேலைகளைக் காட்டி பல லட்சம் இடங்களுக்கான ஒப்புதலை வாங்கி விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் இருக்கும் அதே 70 ஆயிரம் முதல் 2 லட்சம் வரையிலான பணியிடங்களுக்கு 7.5 லட்சம் பேர் போட்டி இடுகிறார்கள்.

அடிமை வேலை

இந்த ஒரு லட்சம் வேலைக்கு 7.5 லட்சம் பேர் என்பதால் தனியார் நிறுவனங்கள் சம்பளத்தை குறைக்கவும் பேரம் பேசவும் முடிகிறது. வாங்கிய கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பட்டதாரி சம்பளத்தை உயர்த்திக் கேட்டால் உள்ளதும் போய், வேலையில்லாமல் வெளியே இருப்பவர்களுக்கு வாய்ப்பாகி விடும்.

சாதரண பட்டதாரியே போதும்

இந்தியாவில் செய்யப்படும் பல அவுட்சோர்சிங் பணிகள் சேவைத்துறை சார்ந்தவை. இதற்கு சாதாரண பட்டாதாரிகளே போதும், பொறியியல் பட்டதாரியை வேலைக்கு எடுத்தால் நிறைய சம்பளம் தர வேண்டியிருக்குமே எனப் புலம்புகின்றன நிறுவனங்கள்.

முன்னர் ஆயிரக்கணக்கில் பொறியியல் பட்டதாரிகளை அள்ளிய டிசிஎஸ், சி டி எஸ், எல் அண்ட் டி, டிவிஎஸ் நிறுவனங்கள் இப்போது பெரும்பாலும் பொறியியல் அல்லாத பட்டதாரிகளையும், பட்டயப்படிப்பு படித்தவர்களையும் மட்டுமே வேலைக்கு எடுக்கிறது. செய்யப்படும் வேலைகளுக்கு இவர்களே போதுமானதாக இருப்பதால் தரமில்லை என்ற வாதமே சொத்தை என்பது நிரூபணமாகிறது.

பொருளாதார நெருக்கடி தொடரும் இக்காலத்தில் எல்லா நிறுவனங்களும் ஆட்குறைப்பை நோக்கிச் செல்கின்றது. ஆண்டுக்கு ஆயிரம் பேராக முன்னர் வேலைக்கு எடுத்தவர்களை இன்று 100 ஆக குறைத்து விட்டதால், சாதாரண பட்டதாரிகளுக்கும் வேலை இல்லை.

அமெரிக்காவில் அதிக சம்பளம் என இந்தியாவிற்கு கடைவிரித்தனர். இப்போது சீனா மற்றும் பிலிப்பைன்சில் குறைவான சம்பளம் என்பதற்காக எல்லா முதலாளிகளும் அங்கே கிளம்பி விட்டனர். இந்தியர்களுக்குத்தான் ஆங்கிலம் நன்றாக எழுத, பேச வருகிறது என்ற வாதம் அதை சீன, பிலிப்பைன்சு மக்கள் கற்க துவங்கியவுடன் அடிபடத் துவங்கி விட்டது.

வேலையே இல்லை எனும் போது அந்த உண்மையை மறைத்து உங்களுக்கு திறமையில்லை; திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள், உங்களிடம் தரமில்லை; தரத்தை வளர்த்துக்கொள்ளுங்கள், சுய முன்னேற்ற வகுப்புகள், கூட்டம், அதைச் சார்ந்த புத்தகம், டிவிடி என பகல் கொள்ளை அடிக்கும் கூட்டம் ஒன்று உருவாகி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

வேலை இல்லை, தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மை தெரிந்தால் யாரும் முதலீடு போட்டு படிக்க வர மாட்டார்கள், அவர்களுக்கும் வேலையில்லாத ரிசர்வ் பட்டாளம் குறையும், பட்டதாரிகளுக்கான தேவை அதிகரிக்கும். அதனால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். தனியார் கல்லூரி முதலாளிகளது கல்லா பாதிக்கப்படும். இதனால் கல்வி தனியார்மயமாதல் கேள்விக்குள்ளாக்கப்படும். வேலை, 5 இலக்க சம்பளம் இது தனியார் கல்லூரிகளுக்கு மட்டுமல்ல, தனியார் பள்ளிகளுக்குமான முதலீடு. தன் பிள்ளை மருத்துவர், பொறியாளர் ஆக வேண்டும் என்று தான் தரம் என்ற பெயரில் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அங்கு படிக்கும எல்லோருக்கும் அப்படிப்பில் இடம் கிடைக்காது என்ற எளிய உண்மை பெற்றோர்களுக்கு உரைக்கும்போது கல்வி தனியார்மயத்திற்கெதிரான போராட்டம் வலுப்படும்.

குப்பை படிப்புகள்

மத்தியதர வர்க்கம், உயர் மத்தியதர வர்க்கத்திடம் விதவிதமான ஆடைகளை வடிவமைக்கும் ஃபேஷன் டெக்னாலஜி, நட்சத்திர ஹோட்டல்களில் உணவைத் தயாரித்து அதை அலங்கரிக்கும் கேட்டரிங் டெக்னாலஜி, விளம்பரம், சினிமா, டி.வி.யில் நுழைய உதவும் விஷுவல் கம்யூனிகேசன் என இவையனைத்தும் பல லட்சம் செலவழித்து கற்றுக்கொள்ளப்படும் கல்விகள். முதலில் இந்தக் கல்வியினால் என்ன பயன்?

நம் நாட்டில் 40 கோடி மக்கள் அன்றாடம் ஒரு வேளை சாப்பிடுவதே வாய்ப்பில்லாமலிருக்க, நம் நாட்டிற்கு தேவையான படிப்பு இத்தனை பேருக்கு குறைந்த செலவில் எப்படித் தரமான உணவைத் தயாரிக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். மாறாக செய்த தயிர்ச்சாதத்தில் வண்ண வண்ணமாக வட்ட வட்டமாக தக்காளி, கரிவேப்பிலை போட்டு அதை அழகு படுத்தும் படிப்பல்ல. இதை விடக் கொடுமை அதை அழகாக புகைப்படம் எடுக்க “உணவு புகைப்படக்கலை” (FOOD PHOTOGRAPHY) என ஒரு படிப்பு.

இந்திய வளங்களையும், வனங்களையும் தனியார் முதலாளிகள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுக்க பழங்குடியினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் மாணவனோ வனத்தையும், வன விலங்குகளையும் அழகாகப் படம்பிடிக்க “காட்டு வாழ்க்கை பற்றிய புகைப்படக்கலை” (­WILD LIFE PHOTOGRAPHY) படிக்க பல லட்சம் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் பல கோடி மக்களுக்கு புதுத்துணி என்பதே கனவு எனும் போது நாட்டு மக்களுக்கு தேவையான அளவு துணியை மிகவும் குறைந்த செலவில், சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் தருவதைப் பற்றிய படிப்பு தான் நேர்மையான படிப்பாக இருக்கும். ஆனால், நன்றாக இருக்கும் துணியை விதவிதமாகக் கிழித்துப் போடச் சொல்ல ஒரு படிப்பு; அதன் பேர் ஃபேஷன் டெக்னாலஜி யாம். படிக்க கட்டணம் சில லட்சம் ரூபாய் களாம்.

இந்த குப்பைப் படிப்புகள் எதுவும் இந்திய மக்களுக்கான தற்போதைய தேவை இல்லை. ஆனால் பெரு நிறுவனங்கள், முதலாளிகள், பணக்காரர்கள் அவர்களின் ஆபாச செலவுகளுக்கும், ஆட்டம் பாட்டத்திற்கும் தேவை. அவர்கள் தேவைக்காக மாணவர்கள் சொந்தப் பணத்தைப் போட்டுப் படிப்பது மேலும் ஆபாசமாக உள்ளது.

கல்வியில் தனியார்மயத்தின் சாதனைக் கற்கள் இவைதான். இறுதியில் மக்கள் கைக்காசைப்போட்டு செலவழித்து திவாலானதுதான் மிச்சம். இந்திய மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற அடிப்படைத் தேவையில் இங்கே கல்வி இல்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான கல்வி மட்டுமே இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. விளைவு இரட்டை இலக்கத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் வளர்கிறது. தாங்கள் மட்டும் முன்னேறி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் நடுத்தர வர்க்க பெற்றோர்கள் சிந்திக்கட்டும்!

____________________________________________________________

– ஆதவன்
______________________________________________________

  1. //கோடிக்கணக்கான மக்கள் வரிப் பணத்தில் ஐஐடியில் படிக்கும் மாணவன் அமெரிக்க நிறுவனமான ஃபேஸ்புக்கிலோ, கூகிளிலோ பல லட்சம் மாதச் சம்பளமாகப் பெற்று அமெரிக்க சென்று விடுகிறான். அவன் படித்த படிப்பால் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை.//

    உலகத்துக்கும் எந்த பயனும் இல்லை. அவர்களது திறமையையும் உழைப்பையும், பூனைக்கு மீசை சிரைக்கும் வேலைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். ‘பூனை அழகாக மாறி விட்டது, என்ன திறமை’ என்று பூனை வளர்க்கும் மேட்டுக் குடியினர் வியக்கிறார்கள். அவர்களிடம் இருக்கும் பண பலம் மேலும் மேலும் புதுப் புது முறைகளில் பூனைகளை அலங்கரிக்கும் சேவைகளை உருவாக்க வைக்கிறது.

  2. நல்ல கட்டுரை. தனியார் கல்வி நிறுவனம் என்பது கொள்ளை அடிக்கத்தான் என்பதை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். சாராய ரவுடிகளான கல்வு வள்ளல்கள் அடித்துத் துரத்தப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை.

  3. மிகச் சரியான பதிவு ….படிக்கும்பொழுதும் அதில் கூறப்பட்ட பல உண்மைகள் “நடுத்தர மற்றும் மேல்குடி மக்களின் “கல்வி”ப்பற்றிய உண்மை நிலவரம் தெள்ள தெளிவாக பதிவு செய்துள்ளார் …..நேர்மையான பார்வை ஆனால் அதே சமயத்தில் இதற்கான நிலையான மற்றும் நிரந்திர தீர்வு என்னவென்பது தான் மிகப் பெரிய கேள்விக்குறியாக?????!!!!! உள்ளது நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள்.. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவங்கள் ,தனியார் நிறுவனங்கள் & பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வரும்காலங்களில் நல்ல வளம் /ஆற்றல்/அறிவு மிக்க மாணவர்களையும் குடிமக்களையும் உருவாக்க பாடுபடவேண்டும் .வாழ்த்துக்கள் திரு ஆதவன்.

  4. தனியார் கல்லூரிகளை புறக்கனிக்கும் பட்சத்தில் அந்த இளைஞர்களின் நிலைதான் என்ன? அரசு ஒருபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை நிச்சயம் தொடரத்தான் போகிறது.இளைஞர்கள் என்ன செய்வது சினிமா போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்வதா.அரசியல்வாதிகளைப் பொருத்தவரை கூட்டம் கூட்டவும் ஓட்டு போடவும் படிக்காத பாமரர்கள்தான் தேவை.ஒரே ஒரு தனியார் கல்லூரியை அரசு மூடட்டும் பிறகு பொதுமக்களையே இந்த ஊடகங்கள் அரசுக்கு எதிராக திருப்பிவிடும்.

  5. தனியார் கல்லூரிகளை புறக்கணிக்க முடியாது.சட்டத்தில் இடமும் இல்லை.ஆனால் அவைகளை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம். மானில மத்திய அரசுகளின் கீழ்தான் அத்தனை பல்கலை கழகங்கலும்,controlling authorities அனைத்தும் இருக்கிறது.கல்வி எக்கேடு கெட்டால் என்ன என்று அரசியல்வாதிகள் நினைக்கும்போது என்ன செய்ய முடியும்..Let us hope for the best.

  6. A product price gets higher and higher only when the demand rises. So I would blame the so called ‘idiotic parents’ who are ready to pay many laksh of rupees to get seat in so called enginerring colleges. As long as parents are ready to give, they will keep asking for it. If demand vanish, automatically all these business man change their area of business from education system !!

Leave a Reply to Anbu பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க