privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாமுதலாளியை அடித்தால் இந்திய அரசுக்கு வலிக்கும்!

முதலாளியை அடித்தால் இந்திய அரசுக்கு வலிக்கும்!

-

மாலத்தீவு அதிபர் வாஹீத் ஹாசன்
மாலத்தீவு அதிபர் வாஹீத் ஹாசன்

மாலத்தீவுகளின் மாலே பன்னாட்டு விமான நிலையத்தை இந்தியாவின் ஜிஎம்ஆர் குழுமத்திடமிருந்து மீட்டு தானே நடத்தப் போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

‘ஒரு வாரத்துக்குள் மாலத்தீவு விமான நிலைய நிறுவனத்திடம் விமான நிலையத்தை ஒப்படைக்க வேண்டும்’ என்றும் ’30 நாட்களுக்குள் தனது பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறி விட வேண்டும்’ என்று மாலத் தீவு அரசு ஜிஎம்ஆர் குழுமத்துக்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது. அதன்படி வரும் சனிக்கிழமை முதல் (டிசம்பர் 8, 2012) விமான நிலையம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வரும்.

மாலத்தீவு இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கு தென் மேற்கே இருக்கும் தீவுகளின் தொகுப்பு ஆகும். வெறும் 300 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடைய மாலத்தீவுகளில் 3.2 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.

2010-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த அதிபர் ரஷீதின் அரசு உலக வங்கியின் கட்டளைகளுக்கு பணிந்து மாலத்தீவின் விமான நிலையத்தை தனியார் கட்டுப்பாட்டுக்கு விடுவதற்கான முடிவை எடுத்தது. உலக வங்கி தனது மேற்பார்வையில் அதற்கான டெண்டரை தனியார் நிறுவனங்களுக்கு விட்டது. இந்தியாவுக்கு அருகில் இருக்கும் மாலத் தீவில் தமது காலை பதிக்க இந்திய நிறுவனங்கள் போட்டி போட்டன. இறுதியில் ஜிஎம்ஆர் குழுமம் அந்த குத்தகையை வென்றது.

$511 மில்லியன் (சுமார் ரூ 2,600 கோடி) முதலீட்டில் தலைநகர் மாலேவில் உள்ள இப்ராஹிம் நாசில் பன்னாட்டு விமான நிலையத்தை நவீனப்படுத்தும் பணிக்கு ஜிஎம்ஆர் குழுமம் 77 சதவீதம், மலேசியன் ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் பெர்ஹாத் என்ற நிறுவனம் 23 சதவீதம் என்ற பங்கீட்டில் கூட்டமைப்பை உருவாக்கின. இந்த நிறுவனங்களின் கூட்டமைப்பு 25 ஆண்டுகளுக்கு விமான நிலையத்தை நடத்தி தமது முதலீட்டுக்கு லாபம் சம்பாதித்துக் கொள்ள அந்த ஒப்பந்தம் வழி செய்தது. அதன்படி ஜிஎம்ஆர் குழுமம் நவம்பர் 2010 முதல் மாலே விமான நிலையத்தை இயக்கி வருகிறது.

பொதுவாக விமான நிலையத்தை பயன்படுத்தும் விமான சேவை நிறுவனங்களிடமும் மற்ற குத்தகைதாரர்களிடமும் வசூலிக்கும் பயன்பாட்டு கட்டணம் மூலம் நிர்வாகத்துக்கு வருமானம் கிடைக்கும். ஜிஎம்ஆர் தலைமையிலான தனியார் கூட்டமைப்பு தனது லாபத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காக ஒவ்வொரு பயணியிடமிருந்தும் $25 விமான நிலைய சேவைக் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நம்பியிருக்கும் மாலத்தீவின் பொருளாதாரத்துக்கு அது ஒரு பெரிய சுமையாக மாறியது.

விமான நிலைய கட்டண வசூலை எதிர்த்து மாலத்தீவு அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கட்டண வசூலை மாலே நீதிமன்றம் தடை செய்த பிறகு அந்த கட்டணத்தை விமான நிலையத்தின் வரவு செலவு கணக்கில் சேர்த்து விடுவதாக ஜிஎம்ஆரும் அரசும் முடிவு எடுத்தன. அதன் படி மாலத் தீவு அரசு ஜிஎம்ஆருக்கு ஆண்டுக்கு $3.5 மில்லியன் கொடுக்க வேண்டியிருந்தது.

இத்தகைய பொருளாதாரக் கொள்கைகள் மூலம் நாட்டை திவாலாக்கிக் கொண்டிருந்த அதிபர் முகமது ரஷீதுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2012-ல் அவர் பதவி விலகினார். அப்போது துணை அதிபராக இருந்த முகமது வாஹீத் ஹசன் அதிபராக பதவி ஏற்றார்.

ஜிஎம்ஆர் குழுமத்திடம் விமான நிலையத்தை நிர்வகிக்க விட்டதன் மூலம் 25 ஆண்டுகளில் அரசு 8 பில்லியன் மாலத் தீவு ரூபாய்களை (இந்திய ரூபாய் 2,871 கோடி) கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என்பதை புதிய அரசு உணர்ந்தது.

‘தனியார் நிறுவனம் திறமையாக நிர்வாகம் செய்து செலவுகளைக் குறைத்து வரவை அதிகரிக்கும்’ என்று சொல்லப்படுவதற்கு மாறாக ‘தனியார் லாபத்துக்கு அரசு மானியம் கொடுக்க வேண்டும்’ என்ற உலகளாவிய உண்மையை அம்பலப்படுத்தும் இன்னும் ஒரு உதாரணம் இது.

‘முன்னாள் அதிபர் நஷீத் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் செல்லாது’ என்றும் ‘அது சந்தேகத்துக்குரிய சூழலில் போடப்பட்டிருக்கிறது’ என்றும் இப்போதைய அதிபர் வாஹீத் குற்றம் சாட்டுகிறார். ‘நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் விமான நிலைய வளர்ச்சிக் கட்டணம் என்று பயணிகளிடம் வசூலிக்கும் உரிமை ஜிஎம்ஆருக்கு இல்லை’ என்று அவர் கருதுகிறார்.

‘அரசு ஜிஎம்ஆருக்கு பணம் கொடுத்து எங்கள விமான நிலையத்தை அவர்கள் நடத்துவதற்கு பதிலாக அரசே விமான நிலையத்தை நடத்திக் கொள்ளும்’ என்றும் ‘ஜிஎம்ஆர் இது வரை முதலீடு செய்த மொத்தத் தொகையை திரும்பிக் கொடுத்து விடுவதாகவும்’ புதிய அரசு அறிவித்தது.

அதை எதிர்த்து ஜிஎம்ஆர் குழுமம் சிங்கப்பூரில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் ஜிஎம்ஆருக்கு சாதகமாக இடைக்காலத் தடை வழங்கியது. ஆனால், ‘தமது நாட்டின் இறையாண்மையில் பிற நாடுகள் தலையிட முடியாது’ என்று மாலத் தீவு அரசு உறுதியாக நிற்கிறது. ‘ஜிஎம்ஆர் குழுமம் இதுவரை முதலீடு செய்த $270 மில்லியனை திருப்பிக் கொடுத்து விடுவதால் எந்த நீதிமன்றமும் அரசின் முடிவில் தலையிட முடியாது’ என்கிறது.

இந்திய கார்ப்பரேட் ஜிஎம்ஆர் குழுமத்துக்கு ஆதரவாக இந்திய அரசு களம் இறங்கியிருக்கிறது. ‘மாலத்தீவு இப்படி நடந்து கொண்டால் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படும், எதிர்காலத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் மாலத்தீவுக்கு வர மாட்டார்கள்’ என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் மிரட்டியிருக்கிறார். மாலத்தீவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த $25 மில்லியன் (சுமார் ரூ 130 கோடி) நிதி உதவியை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.

இது தொடர்பாக மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சமது அப்துல்லா இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத்துடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். மாலத்தீவின் அதிபர் முகமது வஹீத் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விளக்கமான கடிதம் எழுதவிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

‘தன்னைப் போலவே பன்னாட்டு கார்ப்பரேட் நலன்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம்’ என்று மன்மோகன் சிங் மாலத்தீவு அதிபருக்கு கற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். எனினும் ஒரு தரகு முதலாளி கம்பெனிக்கு பிரச்சினை என்றவுடன் உறவுகளை தொடர முடியாது என்று இந்தியா கதறுகிறதே, இது தமிழக மீனவர்கள் கொல்லப்படும் எங்கே போனது? மீனவருக்கு ஒரு நீதி, முதலாளிக்கு ஒரு நீதி என்பதுதான் இந்திய அரசின் நீதி. ஆனால் இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது. அதாவது ஒரு முதலாளியை அடித்தால்தான் இந்திய அரசுக்கு வலிக்கும். போராடும் இந்திய மக்கள் இதைப் புரிந்து கொண்டால் சரி!

படிக்க: