privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காSalt of the Earth (1954) - மண்ணின் உப்பு! அமெரிக்க அரசின் வெறுப்பு!!

Salt of the Earth (1954) – மண்ணின் உப்பு! அமெரிக்க அரசின் வெறுப்பு!!

-

சால்ட் ஆஃப் த எர்த் 1ருத்துச் சுதந்திரம் தழைத்தோங்கும் நாடு, பூவுலக சொர்க்கம், ஜனநாயகமே அதன் சுவாசம்  என்றெல்லாம் பீற்றிக்கொள்ளப்படும்  அமெரிக்காவில் 1954 இல் வெளிவந்த படம் கூடஞு The Salt of the Earth –  தி சால்ட் ஆஃப் த எர்த் (மண்ணின் உப்பு).

இதனை வெளிவராத படம் என்று கூறுவதே பொருத்தம். ஏனென்றால், அமெரிக்க அரசு பல ஆண்டுகள் இதனை  அதிகாரபூர்வமற்ற முறையில் தடை செய்திருந்தது. குப்பைகள் முதல் காமக் களியாட்ட வக்கிரங்கள் வரை சகலத்தையும் அனுமதித்து, கருத்துச் சுதந்திரத்தின் சொர்க்கம் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் அமெரிக்கா, இந்தப் படத்தை தடை செய்யக் காரணம் என்ன? அமெரிக்க அரசு பயந்து, தொடை நடுங்கும் அளவுக்கு இந்தப் படத்தில் என்ன இருந்தது?

பதில் எளிமையானது – படத்தில் உண்மை இருந்தது.

000

மெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் டெலவேர் ஜின்க் கம்பெனி என்ற பெரும் நிறுவனத்தின் சுரங்கத்தில் அமெரிக்கத் தொழிலாளர்களும், புலம்பெயர்ந்த மெக்சிகன் தொழிலாளர்களும் பணிபுரிகிறார்கள். வேலை நிலைமையைப் பொறுத்த வரையில் அமெரிக்கர்களுக்கும்  மெக்சிகர்களுக்கும்  எந்த வித்தியாசமுமில்லை. மிக மோசமான ஆபத்தான பணிச்சூழல், பாதுகாப்பு நடைமுறைகளைப் புறக்கணித்து அலட்சியப்படுத்தும் நிர்வாகம், எந்நேரமும் உயிர் போகலாம் என்ற நிலைமை, காயமடைந்தாலோ, இறந்தாலோ கேட்க யாருமில்லை என்பது தான் அங்கே நடைமுறை.

’உயிரைப் பணயம் வைத்து சுரங்கத்தில் உழைக்கும் அமெரிக்க மற்றும் மெக்சிகன் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து உரிமைகளுக்காகப் போராடி விடக் கூடாது’ என்பதற்காக தந்திரமாகச் செயல்படுகிறது நிர்வாகம். அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு மட்டும் சுகாதாரமான குடியிருப்பு போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கிறது. மெக்சிகர்களுக்கான குடியிருப்புப் பகுதிகளோ மிக மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன.

தமது பணிச் சூழலை மேம்படுத்திடப்  போராடுவதற்காக மெக்சிகன் தொழிலாளர்கள் தமக்குள் சங்கம் அமைக்கிறார்கள். ஆனால் அதில் அமெரிக்கத் தொழிலாளர்கள் கலந்து கொள்வதில்லை.  வேலை நேரத்துக்குப் பிறகு இரவெல்லாம் சங்கத்தில் கூடி,  தமது உரிமைகளுக்காகப் போராடுவதைப் பற்றி பேசுகிறார்கள் தொழிலாளிகள். அவர்களில் ஒரு தொழிலாளி  ரமோன்.

சங்கக் கூட்டம் முடிந்து வீட்டிற்கு வருகிறான் ரமோன். ‘ சுகாதாரமான குடியிருப்புகள் வேண்டும்,  கழிவு நீர் அகற்றும் வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தொழிலாளர் சங்கம் மூலம் முன் வைக்க வேண்டும்’ என்று ரமோனிடம் சொல்கிறாள் அவன் மனைவி எஸ்பிரன்சா.

இதையெல்லாம் கோரிக்கையாக வைக்க  முடியாது என்று அவளை ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன் கேலி செய்கிறான் ரமோன்.  எஸ்பிரன்சா தன் இயலாமையை எண்ணி வேதனைப்படுகிறாள். ஆனால் வேறு வழியில்லாமல் அப்போது அடங்கிப் போகிறாள்.

ஒரு  நாள் தொழிலாளி ஒருவர் விபத்தில் சிக்கிக் காயமடைகிறார். தொழிலாளிகளிடையே அத்தனை நாள் மனதில் பொங்கிக் கொண்டிருந்த கோபம் வெடித்துக் கிளம்பி வேலை நிறுத்தமாக மாறுகிறது. ஆனால் ஆலையிலிருந்த அமெரிக்க வெள்ளைத் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் போராட்டத்தில் கலந்து கொள்ள முன்வரவில்லை. மெக்சிகன் தொழிலாளர்கள் மாத்திரம் தளராமல் போராட உறுதி ஏற்கிறார்கள்.

சுரங்கத்திற்குச் செல்லும் வழியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; பாடல்கள் பல பாடியும், முழக்கமிட்டும்  போராட ஆரம்பிக்கிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தை நிர்வாகம் முதலில் கண்டுகொள்ள மறுக்கிறது. இந்தப் போராட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டு, வேறு பகுதிகளில் வேலை செய்யும் சுரங்கத் தொழிலாளர்கள் பணம், உணவுப் பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்து உதவுகிறார்கள். போராடும் தொழிலாளர்கள் வரும் பொருட்களைத் தங்களுக்குள்  சமமாகப் பங்கிட்டுக் கொண்டு போராட்டத்தைத் தொடருகிறார்கள்.

நிறுவனம் காவல்துறைக்கு கையூட்டு கொடுத்து போராட்டத்தைக் கலைக்கச் சொல்லுகிறது. போலீசால் கலைக்க முடியவில்லை.  எனவே, போராட்டத்தின் முன்னணியாளர்களில் ஒருவரான ரமோனை, போலீசு  தந்திரமாக கைது செய்து சித்திரவதை செய்கிறது. ரமோன் சிறை சென்று திரும்புகிறான். பிறகு நடக்கும் தொழிற்சங்க கூட்டத்தில் போராட்டத்தைத் தொடர முடிவு செய்கிறார்கள் தொழிலாளர்கள்.

சால்ட் ஆஃப் த எர்த் 2அதே வேளையில் தொழிலாளிகளுடைய மனைவிமார்களும், வீட்டிலுள்ள பெண்களும் ஒன்றாக இணைகிறார்கள். ‘சுகாதாரமான குடிநீர், தூய்மையான சுற்றுப்புறம்’ ஆகியவற்றையும் போராட்டத்தின் கோரிக்கைகளில் சேர்க்க  வேண்டும் என்று தொழிலாளர் சங்கத்தில் எடுத்துக் கூற முடிவு செய்கிறார்கள். ஆனால் அப் பெண்களுடன் சேருவதற்கு எஸ்பிரன்சா தயங்குகிறாள். ‘தான் ஒரு பெண்; வீட்டைப் பார்த்துக் கொள்வது, குழந்தைகளை வளர்ப்பது தான் தன்னுடைய வேலை; யூனியன் கூட்டத்திற்குத் தான் செல்வதை கணவர் ரமோன் விரும்ப மாட்டார். பிரச்சினைகள் வரும்’ எனப் பயப்படுகிறாள். ஆனால் மற்றவர்களின் வற்புறுத்தலைத் தவிர்க்க முடியாமல் தொழிலாளர்களின் சங்கக் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்கிறாள்.

சங்கத்தில் வேலை நிறுத்தத்தைப் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள். இதற்கிடையில் பெண்களின் வருகையும், அவர்கள் வைக்கின்ற  கோரிக்கைகளும்  ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தெரிகிறது; எரிச்சல் அடைகிறார்கள். பெண்களோ விடாப்பிடியாக  தங்களது கருத்துக்களை தொழிலாளர்கள் சங்கத்தின் முன்பு வைக்கிறார்கள். அது நிராகரிக்கப்படுகிறது. அன்றிரவு வீட்டில் எஸ்பிரன்சாவை ரமோன் கண்டிக்கிறான். ”வீட்டு வேலைகள் செய்தால் போதும், சங்கம் போராட்டம் எல்லாம் பெண்களின் வேலையல்ல” என அறிவுறுத்துகிறான்.

சுரங்கத் தொழிலாளிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது சட்ட விரோதம் என நீதிமன்ற தீர்ப்பைப் பெறுகிறது நிர்வாகம். போராட்டம் தோல்வியை நோக்கிப் போகும் தருணத்தில் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் அடுத்த கட்டத்தைப் பற்றி விவாதிக்கிறது.

அந்தக் கூட்டத்திற்கு வந்து சேரும் பெண்கள் குழுவினர்  “சுரங்கத் தொழிலாளர்களாகிய நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தான் கைது செய்யப்படுவீர்கள். ஆகவே நாளை முதல் நீங்கள் பின்னணியில் இருங்கள். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்” என்கிறார்கள். இந்தக் கருத்தை தொழிற்சங்க உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு விடலாம் என்கிறார்கள் தொழிலாளர்கள். “முதலில் பெண்களுக்கும் ஓட்டுரிமை கொடுங்கள்” என்று கேட்கிறாள் எஸ்பிரன்சா. தொழிற்சங்கக் கூட்டம் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை கொண்ட சமூகக் கூட்டமாக மாற்றப்படுகிறது. இறுதியில், தீவிரமான எதிர்ப்புக்கிடையில்,  பெண்கள் முன்நின்று  போராட்டம் நடத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

“பெண்கள் என்ன கிழித்து விடப் போகிறார்கள்” என ஆண்கள் நினைக்க, பெண்கள் உற்சாகமாகப் பாடல்கள் பாடியும், கோஷமிட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பிக்கிறார்கள். எஸ்பிரன்சா தன் கைக்குழந்தையுடன் அவர்களுக்கு தேநீர் கொடுத்து உதவுகிறாள். ஆனால் ரமோன் இதைக் கடுமையாக எதிர்க்கிறான். எனினும் உற்சாகம் பொங்கும்  எஸ்பிரன்சாவை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பெண்களது  போராட்டம்  தீவிரமடையவே, போலீசார் அவர்களைப் பயமுறுத்த முயற்சிக்கின்றனர். போலீசு சுடுவேன் என்கிறது – முழக்கம்  உயருகிறது. போலீசு கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசுகின்றது. பெண்கள் சிறிது பின் நகர்ந்துவிட்டு, மீண்டும் போராட்டத்தைத் தொடருகிறார்கள். போராடும் பெண்கள் மீது போலீசார் கார் ஏற்றி காயமுறச் செய்கின்றனர். பதிலுக்கு பெண்கள் செருப்பால் அடித்துப்  போலீசைத் துரத்துகிறார்கள். போலீசின் துப்பாக்கி பயனற்றுப் போகிறது.

தொழிற்சங்கத்தில் ஒரு கருங்காலியை முதலாளிகள் விலைக்கு வாங்குகின்றனர். அவன் மூலம் முன்னணிப் பெண்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு  கைது செய்யப்படுகிறார்கள். எஸ்பிரன்சா தன் கைக்குழந்தையுடன் சிறைக்குச் செல்கிறாள். வெளியில் இருக்கும் பெண்கள் போர்க்குணத்துடன் ஆர்ப்பாட்டத்தைத் தொடருகிறார்கள்.

சிறையிலும் பெண்கள் தொடர்ச்சியாகக் கோஷமிடுகிறார்கள். அவர்களின் விடாப்பிடியான போராட்டத்தைக் கண்டு அஞ்சிய போலீசு அவர்களை விடுவிக்கிறது. வீடுகளில் பெண்கள் ஒன்றாகக் கூடி, அடுத்து எப்படிப் போராடலாம் எனத் தங்களுக்குள் விவாதிக்கிறார்கள். மறுபுறம் ஆண்கள் இந்த மாற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டு, வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்கின்றவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கும் போதுதான்,  பெண்கள் முன் வைத்த கோரிக்கைகளின் நியாயத்தை சொந்த முறையில் உணர்கிறார்கள். தொழிலாளர்களது  கோரிக்கைகளில் சுகாதாரமான குடியிருப்புகள், சுத்தமான தண்ணீர்  ஆகிய இரண்டும்  சேர்க்கப்படுகின்றன.

அதே நேரத்தில் பெண்களின் தலைமையில் நடக்கும் போராட்டம் கணவன்மார்களுக்கு  எரிச்சலூட்டுகிறது. ரமோன் எஸ்பிரன்சாவை கோபமாக த் திட்டுகிறான்.  அடங்கி இருக்குமாறு எச்சரிக்கிறான். எஸ்பிரன்சா அவன் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட மறுக்கிறாள்.  ரமோன் மனம் வெதும்பி வீட்டை விட்டுச் செல்கிறான்.

கம்பெனி நிர்வாகமும், போலீசும் ரமோன் வீட்டைத் தந்திரமாகக் காலி செய்யத் திட்டம் தீட்டுகின்றனர். சிலரை மாத்திரம் இப்படி விரட்டியடித்தால் உளவியல் ரீதியாக மற்றவர்கள் பயந்து போராட்டத்தைக் கைவிடுவார்கள் என நினைக்கின்றனர். ரமோன் வீடு காலி செய்யப்படுவதைக் கண்டு, எல்லாத் தொழிலாளர்களும்  அவன் வீட்டின் முன் கூடுகிறார்கள். சுரங்கத்தில் வேலை செய்யும் வெள்ளை அமெரிக்க தொழிலாளர்களும் ரமோன் வீட்டின் முன் குவிகிறார்கள்.

போலீசு வீட்டில் உள்ள பொருட்களை வெளியே வைக்க, பெண்களும், சிறுவர்களும் அவர்களை எதிர்த்து அவற்றை வீட்டின் உள்ளே மீண்டும் வைக்கிறார்கள். சோர்ந்து போகும் போலீசார் மீது சிறுவன் ஒருவன் கல்லெறியத் துவங்க, கூடி நிற்கும் தொழிலாளர்கள் ஒற்றுமையைப் பார்த்து போலீசார் அஞ்சி ஓடுகின்றனர். இதைத் தொடர்ந்து நிறுவனமும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்யவே, போராட்டம் வெற்றியடைகிறது.

000

1950 களின் துவக்கம் என்பது இரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை வீழ்த்தி சோவியத் யூனியன் மீண்டெழுந்த காலம். ‘கம்யூனிச பூதம் அமெரிக்காவைப் பற்றி விடுமோ’ என அமெரிக்க முதலாளி வர்க்கம் அஞ்சியது. கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற  வெறியின் அதிகார வர்க்கப் பிரதிநிதியாக அப்போது வந்தவர் தான் மெக்கார்த்தி.

சால்ட் ஆஃப் த எர்த் 3அறிவுத்துறையினர், கலைஞர்கள் ஆகியோர் மத்தியிலிருந்து மட்டுமின்றி, மொத்த சமூகத்திலிருந்துமே கம்யூனிசத்தைக் களையெடுக்கவேண்டுமென வெறிகொண்டிருந்த து மெக்கார்த்தியிசம்.  அன்று தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமின்றி, கலைஞர்கள் மத்தியிலும் கம்யூனிசம் செல்வாக்கு பெற்றிருந்தது.  சுதந்திரம், மக்கள் விடுதலை, மக்களுக்காகக் கலை என்ற விவாதங்கள் தீவிரமாக நடந்த காலம் அது.  உழைக்கும் மக்களின் பால் அன்பு கொண்ட கலைஞர்கள் கம்யூனிசத்தையும் நேசித்தனர்.

1947 முதல் 1975 வரை அமெரிக்கத்தன்மைக்கு முரணான நடவடிக்கைகளை ஆய்வதற்கான குழு, என்ற பெயரில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, கம்யூனிச ஆதரவாளர்களென்று சந்தேகப்படும் அனைவரையும் வேட்டையாடியது.  சார்லி சாப்லின் உள்ளிட்ட ஹாலிவுட் கலைஞர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தியது. இந்த விசாரணைக்கு வரமறுத்த 10 கலைஞர்கள்  சிறைவைக்கப்பட்டனர்.  ‘ஹாலிவுட் டென்’ என்று அழைக்கப்பட்ட இவர்களில் ஒருவர்தான் இப்படத்தின் இயக்குநர் பிபர்மேன்.

கம்யூனிச ஆதரவுக் கலைஞர்களை யாரும் வேலைக்கு அமர்த்தக் கூடாது என  ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கு அமெரிக்க அரசு ரகசிய உத்தரவைப் பிறப்பித்திருந்ததால்,   இச்சவாலை எதிர்கொள்ள சுயேச்சையான தயாரிப்பாளர் கழகம் என்ற அமைப்பை தொடங்கினார்கள் இக்கலைஞர்கள். இக்கழக்த்தின் முதல் தயாரிப்புதான் சால்ட் ஆப் த எர்த்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில்  எம்பயர் சின்க் கார்ப்பரேசன் என்ற சுரங்க நிறுவனத்தில் நடைபெற்ற  நடந்த உண்மையான தொழிலாளர் போராட்டம்தான் இந்தத் திரைப்படத்தின் கதை. தொழிலாளர்களிடையே  நிறவெறி அடிப்படையில் பாகுபாடு காட்டியது, ஆண் தொழிலாளர்கள் பெண்களை ஆணாதிக்க கண்ணோட்டத்துடன் அலட்சியப்படுத்தியது, அதை எதிர்த்து வென்று பெண்களும் போராட்டத்தில ஈடுபட்டது ஆகிய அனைத்துமே உண்மையில் நடந்த நிகழ்வுகள்.

இப்போராட்டம் முடிந்த சில மாதங்களுக்குள்ளாகவே திரைப்படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டார் இதன் இயக்குநர். ரசிய அரசின் நேரடி உத்தரவின் கீழ் ஹாலிவுட்டிலேயே ஒரு கம்யூனிசப் படம்  தயாராகிக் கொண்டிருப்பதாக பீதியைக் கிளப்பியது ஹாலிவுட் நியூஸ் என்ற செய்திப்பத்திரிகை.  இதன் படப்பிடிப்பையே ஹாலிவுட்டிற்கு  வெளியேதான் நடத்தினார் இயக்குநர் பெபர்மேன். படத்தில் நடித்த பெரும்பான்மையினர் தொழில்முறை நடிகர்களும் அல்லர். அவர்கள் போராட்டத்தில் உண்மையிலேயே பங்கு கொண்ட தொழிலாளர்கள் மற்றும் பெண்கள்.

படப்பிடிப்பையே ரகசியமாக நடத்த வேண்டியிருந்தது மட்டுமல்ல, படச்சுருள்கள் அழிக்கப்படலாம் என்பதால் அவற்றைப் பாதுகாப்பது கூட படக்குழுவினருக்கு பெரும் சிரமமாக இருந்தது. படம் வெளிவரத் தயாரான பிறகு படத்தைத்  திரையிட முனையும் திரையரங்குகளுக்கு மிரட்டல்கள் பறந்தன. படத்திற்கு நிதியுதவி செய்ததாக சந்தேகப்பட்டவர்கள் மீது சோதனைகள் நடந்தன. படத்தில் எஸ்பிரன்சாவாக நடித்த மெக்சிகோ நடிகை ரோசாரா ரெவுல்டாஸ் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் அளவுக்கு வெறித்தனமாக நடந்து கொண்டது அமெரிக்க அரசு.

மொத்த அமெரிக்காவிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில திரையரங்குகள் மட்டும்தான் படத்தைத் திரையிட முன் வந்தன. படத்தை நியூ மெக்சிகோ சுரங்கத் தொழிலாளர்களும், பிற சுரங்கத் தொழிலாளர்களும் உச்சி மோந்து வரவேற்றனர். அமெரிக்கா முழுவதும் இருந்த பல தொழிலாளர்கள் இயக்கங்கள் இந்தப் படத்தை அப்படியே வாங்கிக் கொண்டன. அவற்றில் சில தமது பெயரையே ‘சால்ட் ஆப் த எர்த்’ என மாற்றிக் கொண்டன.

சமூகத்துக்கு ஆரவாரமின்றித் தொண்டாற்றும் எளிய மனிதர்களே ‘மண்ணின் உப்பு’ என்றழைக்கப்படுகிறார்கள். இம்மண்ணின் உப்பாகிய தொழிலாளி வர்க்கம்,  முதலாளி வர்க்கத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தின் ஊடாக,  தன்னிடம் நிலவிய ஆணாதிக்க கண்ணோட்டத்தையும், வெள்ளை நிற மேட்டிமைத்தனத்தையும் எப்படி களைந்து கொள்கிறது என்பதை அழகாக விளக்கிச் செல்கிறது இப்படம். பெண்விடுதலையும், நிறவெறி ஒழிப்பும் எங்ஙனம் தமது வெற்றிக்கு இன்றியமையாதவை என்று தொழிலாளி வர்க்கம் தனது சொந்த அனுபவத்தின் ஊடாகப் புரிந்து கொள்வதையும் வெற்றி காண்பதையும்   குறிப்பான நிகழ்ச்சிகள், சிக்கனமான வசனங்கள் மூலம் காட்சிப்படுத்துகிறது இந்தப் படம்.

இதன் காரணமாகத்தான் அன்று அமெரிக்க முதலாளி வர்க்கம் இப்படத்தைக் கண்டு அஞ்சியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இன்றும் இந்தப்படம் வெளியிடும் உண்மையின் அழகு நம்மை ஈர்க்கிறது.

_____________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
______________________________________________________