privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபாட்ஷா பாபாவான கதை!

பாட்ஷா பாபாவான கதை!

-

இணைப்பு:

ரஜினி-விகடன்அவதரித்த திருநாளன்றே பாபா சமாதியானார். வழக்கமாகப் படம் வெளியாகிக் கல்லா கட்டியவுடனே ஆன்மீகப் போதைக்கு ஆட்பட்டு இமயத்துக்குப் புறப்பட்டுவிடும் ரஜினி இந்த முறை கிளம்பக் காணோம். படத்தின் தோல்வி, போதையை இறக்கி விட்டது போலும்! அவதாரமாக முடியாவிட்டாலும் சூப்பர் ஸ்டார் தகுதியையாவது தக்கவைத்துக் கொள்ள அடுத்த திரைக்கதைக்கு மசாலா அரைக்கத் தொடங்கயிருப்பார்.

” பாபா படுதோல்வி ” என்று நிச்சயமானவுடன், ரஜினி புகழ் பாடுவதையே தம் குலத்தொழிலாகக் கொண்டிருந்த பத்திரிகைகளும் ரஜினிக்கு சில ஆலோசனைகள் கூறுமளவு தைரியம் பெற்று விட்டனர். செத்த பாம்புதான் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு கோடம்பாக்கத்திலிருந்தும் கூட சில சூரப்புலிகள் களமிறங்கியிருக்கிறார்கள். ‘ படத்தில் கட்டமைக்கப்படும் புனைவுகள், குறியீடுகள், சொல்லாடல்கள்’ இந்துத்வ அரசியலை முன் நிறுத்துவதாகக் கூறி, பாபா படத்தைக் கட்டுடைப்பதன் மூலம் ரஜினியின் அரசியலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சில அறிஞர் பெருமக்கள் இறங்கி விட்டனர்.

தன்னை அவதார புருசனாகவும் தனது ரசிகர்களைப் பக்தகோடிகளாகவும், தன்னை ஒரு மீட்பனாகவும் தமிழக மக்களைக் கடைத்தேற்றம் பெறக் காத்திருக்கும் மந்தையாகவும் சித்தரிக்கும் துணிச்சல் ரஜினி என்ற காரியக் கிறுக்கனுக்குத் தீடிரென்று வந்து விடவில்லை. ராமதாஸ்  இதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று எல்லோரும் தயங்கிக் கொண்டிருந்ததாகவும் தான் துணிந்து அதைச் செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

பூனைக்கு மணி கட்ட அஞ்சிச் சும்மாயிருந்திருந்தால் பரவாயில்லை. பூனையைப் புலியாகச் சித்தரித்தனர். பிறகு “புலி வருது… புலி வருது” என்று எல்லா ஓட்டுக்கட்சிகளும் பத்திரிகைகளும் பெரிதாக ஊதிவிட்டனர். பிறகு தாங்கள் ஊதிப் பெதிதாக்கிய பலூனைக் கண்டு தாமே மிரண்டனர்; வணங்கினர். அந்தப் பலூனின் மீது ஒரு சிறிய குண்டூசியை வைத்துப் பார்க்கும்  தைரியம் மட்டும் யாருக்கும் வரவில்லை – மக்கள் கலை இலக்கியக் கழகத்தைத் தவிர.

இதைப் பெருமைக்கு கூறவில்லை. தமிழகத்தின் அருவெறுக்கத்தக்க நிலையை எண்ணி வெட்கி வேதனைப் பட்டுக் கூறுகிறோம். 1995 இல் ஜெயலலிதா ஆட்சியின் மீது மக்களின் வெறுப்பு உச்சத்தில் இருந்தபோதுதான் பாட்ஷா அரசியல் பேசத் தொடங்கினார். “கட்சியும் வேணாம், ஒரு கொடியும் வேணாம் டாங்கு டக்கரடொய் ” என்ற பாடிக் கொண்டிருந்த நடிகர்களை வீடு தேடிச் சென்று இழுத்து வந்தனர் சோவும், மூப்பனாரும், அ.தி.மு.க விலிருந்து உதிர்ந்த ரோமங்களும். காரணம் ” ஆன்மீகமும் தேசியமும் இணைந்த பாரதீதய ஜனதா மற்றும் காங்கிரசுக்கு உகந்த அரசியல் கண்ணோட்டத்தை ரஜினி கொணடிருந்தார் ” என்பதுதான்  – அப்போதே கூறினோம். ” கழிசடை அரசியல் நாயகன் ரஜினி “என்று சிறு வெளியீடு போட்டு 50,000 பிரதிகளைத் தமிழகமெங்கும் பேருந்துகள், கடைவீதிகள், குடியிருப்புக்களில் விற்றோம்; பொதுக்கூட்டங்களில் பேசினோம்.

ஜெ. எதிர்ப்பு அலையின் குறியீடாகவே ரஜினியை முன்நிறுத்தி கருணாநிதி முதல் தகவல் ஊடகங்கள் வரை அனைவரும் பிரச்சாரம் செய்த அந்தக் காலத்தில் ம.க.இ.க வைத்தவிர வேறு யாரும் இதைப் பேசவில்லை; ஜெயலலிதாவுக்கு மாற்றாக இன்னொரு ஆம்பிளை ஜெயலலிதாவை முன் நிறுத்தும் பார்ப்பனக் கும்பலின் சூழ்ச்சி பற்றி யாரும் முணுமுணுக்கக் கூட இல்லை. ரஜினி ரசிகர்கள் என்ற அந்த ‘ மாபெரும் ‘ ஓட்டு வங்கியை அப்படியே களவாண்டு விடலாமென எல்லா ஓட்டுக் கட்சிகளும் வாயில் எச்சிலொழுகப் பின்தொடர்ந்தனர்; வழிபட்டனர்; வால் பிடித்தனர். ரஜினியைப் பற்றி எதிர்கருத்து வைத்திருந்தவர்கள் கூட அந்த நேரத்தில் அதைப் பேசத் தயங்கினர்; அஞ்சினர்; ராஜதந்திரமாக மவுனம் சாதித்தனர்.

பாட்ஷா ஏழாண்டுகளுக்குப் பின் பாபா ஆகிவிட்டார். இடையில் வந்த தி.மு.க. ஆட்சி ஒவ்வொரு படத்திலும் கள்ள மாக்கெட்டில் டிக்கெட் விற்று 100 கோடி ரூபாய் சம்பாதிக்க ரஜினிக்குப் பாதுகாப்பு வழங்கியது. இப்போது ரஜினியிடம் பூச்செண்டு வாங்கிய ஜெயலலிதா கள்ள மார்க்கெட் உரிமையைச் சட்டபூர்வமாக்கி விட்டார். கொள்ளைக்காரன் பாட்ஷா அவதாரபுருசன் பாபாவாகி விட்டார். இவர்கள் யாரும் பாபாவைத் தோற்கடிக்கவில்லை. ரஜினி தன் சொந்த முயற்சியில்தான் தோல்வியைச் சாதித்திருக்கிறார். “வாழ்க்கையே ஒரு சினிமாதான் ” என்ற தத்துவத்தைத் தன் சொந்த வாழ்க்கை மூலம் ரசிகர்களுக்குப் போதனை செய்ய முயன்று தோற்றிருக்கிறார்.

விடலைத்தனதமான சேட்டைகள், பொறுக்கித்தனங்கள், சினிமா வாய்ப்பு, புகழ், பார்பனக் குடும்பத்துடன் மண உறவு, பல கோடி ரூபாய் கருப்புப் பணம், துதிபாடிகளின் கூட்டம் இவையனைத்தும் தாமே உருவாக்கும் போதை மற்றும் அவர் தனியாக ஏற்றிக் கொண்ட போதை… என்பன போன்ற பலவிதமான ரசாயனப் பொருட்களின் அங்ககச் சேர்க்கையில்தான் பாபா அவதரித்திருக்கிறார்.  புளித்த ஏப்பக்காரனின் ஆன்மீகம் பசி ஏப்பக்காரர்களின் ஆன்மீகத்தோடு சேரவில்லை. பாபாவை அவதாரமாகவும், பிராண்டாகவும், அரசியல் தலைவராகவும், பொறுக்கியாகவும் ஒரே நேரத்தில் சித்தரித்து எல்லா முகங்களும் தருகின்ற வருமானத்தைப் பிழிந்து எடுத்து விடக் கனவு கண்ட லதா ரஜினியின் பேராசையும் பாபாவின் தற்கொலைக்குக் காரணமாகியிருக்கிறது.

மைனர்  கெட்டால் மாமா; மாமா கெட்டால் …? பாட்ஷா கெட்டால் பாபா; பாபா கெட்டால் …? என்ன வர இருக்கிறது என்று தெரியவில்லை. எதற்கும் ஒரு பிய்ந்த செருப்பைக் கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த படத்திற்குக் கட்டியம் சொல்ல வரும் பத்திரிகைக்காரர்களை அடிக்க உதவும்.

________________________________________________________________________

புதிய கலாச்சாரம் செப்டம்பர், 2002
________________________________________________________________________