privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தருமபுரி வன்கொடுமை : புதிய ஜனநாயகத்தின் விரிவான கட்டுரை!

தருமபுரி வன்கொடுமை : புதிய ஜனநாயகத்தின் விரிவான கட்டுரை!

-

தருமபுரி வன்கொடுமைத் தாக்குதல்:

ஆதிக்க சாதி ஓட்டு வங்கி அரசியலின் விளைவே!

யிரை மட்டும்மிச்சம் வைத்து விட்டு, வாழ்க்கையை உருத்தெரியாமல் அழிப்பது என்பதற்கு நடைமுறை எடுத்துக்காட்டுதான், நவம்பர் 7-ஆம் தேதியன்று தருமபுரி மாவட்டத்தின் 3 கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்னிய சாதிவெறியர்கள் நடத்தியிருக்கும் வன்கொடுமைத் தாக்குதல்.

தருமபுரியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது நாயக்கன் கொட்டாய். நக்சல்பாரி இயக்கத்தின் அரசியல் செல்வாக்கு காரணமாக, சாதிவெறி தலையெடுக்காமல் தடுக்கப்பட்டிருந்த மாவட்டம் தருமபுரி. தோழர் பாலன் தலைமையில் தனிக்குவளை முறை போராடி ஒழிக்கப்பட்ட இடம் நாயக்கன் கொட்டாய். தாழ்த்தப்பட்ட மக்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் அடிமைத் தொழில்கள் ஒழிக்கப்பட்டிருப்பது அந்த வட்டாரம். நக்சல்பாரி இயக்கத்தின் முன்னணித் தியாகிகளான தோழர்கள் அப்பு, பாலன் ஆகியோரது நினைவுச் சின்னம் நிறுவப்பட்டிருக்கும் இடமும், தமிழகத்தில் நக்சல்பாரி அமைப்புகள் செல்வாக்குப் பெற்றிருந்த ஊருமான நாயக்கன் கொட்டாய்தான் இன்று ஆதிக்க சாதிவெறியின் அடையாளமாகியிருக்கிறது. நக்சல்பாரி இயக்கம் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, சாதி அமைப்புகள் எனும் நச்சுப் பாம்புகள் திட்டமிட்டுத் தூண்டி வளர்க்கப்பட்டதன் விளைவே, நவம்பர்-7 அன்று நடந்திருக்கும் சாதிவெறித்தாக்குதல்.

நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் என்னும் தாழ்த்தப்பட்ட இளைஞனுக்கும், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யா என்ற வன்னியர் சாதிப் பெண்ணுக்கும் இடையிலான காதல் திருமணம்தான் இந்தத் தாக்குதலுக்கான முகாந்திரமாகப் பயன்பட்டிருக்கிறது. போலீசு வேலைக்குத் தெரிவு செயப்பட்டிருக்கும் இளவரசனும், செவிலியர் பட்டத்துக்குப் படித்து வரும் திவ்யாவும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும் என்றும், இரு சமூகங்களையும் சேர்ந்த சில இளைஞர்களின் ஒத்துழைப்புடன்தான் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் அவர்களது திருமணம் நடந்ததாகவும் நத்தம் காலனி மக்கள் கூறுகின்றனர்.

அக்டோபர் 14-ஆம் தேதி பதிவுத் திருமணம் செது கொண்டு, டி.ஐ.ஜி. சஞ்சீவ் குமார் மற்றும் எஸ்.பி. அஸ்ரா கார்க்கிடம் இளவரசனும் திவ்யாவும் பாதுகாப்பு கோரியிருக்கின்றனர். மணமகனின் பெற்றோர் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். பெண் வீட்டார் யாரும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. பெண்ணின் தந்தை நாகராஜ், இந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். சாதி உணர்வின் காரணமாக, இந்த திருமணத்தை தனக்கு நேர்ந்த தனிப்பட்ட அவமானமாக நாகராஜ் கருதியபோதிலும், அதற்கு மேல் வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடும் நோக்கம் அவருக்கு இல்லை. அன்றாடம் நத்தம் காலனி வழியாகத்தான் அவர் வேலைக்குச் செல்வார் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுடன் நட்பாகப் பழகக் கூடியவர் என்றும் நாகராஜைப் பற்றி நத்தம் காலனி மக்கள் கூறுகின்றனர். இந்த திருமணத்தைச் சாக்கிட்டு தாக்குதலை நடத்த வேண்டும் என்பதில் தீவிரம் காட்டியவர்கள் வன்னிய சாதியைச் சேர்ந்த ஆதிக்க சக்திகளும், சாதிவெறியர்களும்தான்.

வன்னிய சாதி வெறியர்கள்தான் அவரை மானங்கெட்டவன் என்றும், போறான் பாரு பறயன் சம்மந்தி என்றும் ஏசியிருக்கின்றனர். உன்னால் சாதிக்கே கேவலம் என்றும், தலைகுனிவு என்றும் தூற்றியிருக்கின்றனர். நாகராஜின் தனிப்பட்ட கவுரவப் பிரச்சினை என்ற வரம்பிற்குள் நின்றிருந்தால், இது தாக்குதலாக வெடித்திருக்காது. காலப்போக்கில் பெண் வீட்டார் சகஜ உறவுக்கும் வந்திருக்கக் கூடும்.

அப்படி ஒரு விபரீதம் நடந்துவிடக்கூடாதே என்பதுதான் சாதிவெறியர்களின் கவலையாக இருந்திருக்கிறது. அதனால்தான் திருமணம் முறைப்படி நடந்துவிட்டது என்று தெரிந்த பின்னரும், அடுத்த மூன்று நாட்களில் பையனின் தந்தையை உள்ளூர் போலீசு நிலையத்துக்கு வரவழைத்துப் பெண்ணின் பாதுகாப்புக்கு நான்தான் பொறுப்பு என்று அவரிடம் எழுதி வாங்கியிருக்கிறார்கள். பஞ்சாயத்துக் கூட்டத்தைக் கூட்டி பெண்ணைக் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு நத்தம் காலனி மக்களை மிரட்டத் தொடங்கியிருக்கிறார்கள் சாதிவெறியர்கள்.

பா.ம.க. தருமபுரி ஒன்றிய பொருளாளர் மதியழகன், கொண்டாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பொன்னுசாமி ஆகியவர்கள் இந்தப் பஞ்சாயத்தில் முன்நின்றதாகவும், கண்பார்டி முருகன் பஞ்சாயத்துக்குத் தலைமை தாங்கியதாகவும் சோல்கிறார் நத்தம் காலனியின் ஊர்த் தலைவர்.

தர்மபுரி-வன்னிய-சாதிவெறி

“பஞ்சாயத்தில் 500, 600 பேர் இருப்பார்கள். ஒரே வார்த்தைதான் – பொண்ணைக் கொண்டாந்து வுடு என்பார்கள். சட்டப்படித் திருமணம் செய்தவங்களாச்சேன்னு சொன்னா, சட்டம் கிடக்கட்டும், பொண்ண கொண்டாந்து விடுங்கன்னுதான் பேசுவாங்க. நாங்க பதில் பேசினா பறப்பசங்களுக்குத் திமிரான்னு கூட்டத்திலேருந்து திட்டுவாங்க. உன் பொண்டாட்டிய தூக்கிட்டுப் போனா ஒத்துக்குவியான்னு கேப்பாங்க. பையனோட அப்பா பொண்ணை ஒப்படைச்சிடலாம்னுதான் நெனச்சாரு. ஆனால், அந்தப் பொண்ணுக்குப் பொறுப்புன்னு கையெழுத்து போட்டிருக்கார். பொண்ண ஒப்படைச்சி, அப்புறம் அதுக்கு ஏதாவது ஆனா, தான்தான் பொறுப்புங்கிறதால மறுத்துட்டாரு. இருந்தாலும் ஊர் சார்புல கேட்டதால ஏத்துகிட்டாரு” – என்று நடந்ததை விளக்கினார் நத்தம் ஊர்த் தலைவர்.

நவம்பர் 5-ஆம் தேதியன்று பஞ்சாயத்தில் நத்தம் மக்களை மிரட்டி எச்சரிக்கை விட்டிருக்கிறார்கள். நவம்பர் 7-ஆம் தேதி காலை திவ்யா வீட்டார் சார்பில் அவருடைய அம்மா, பெரியம்மா, சித்தப்பா உள்ளிட்ட உறவினர்களும், நத்தம் ஊர் சார்பில் 10 பேரும் தொப்பூர் என்ற ஊருக்குச் சென்று திவ்யாவையும், இளவரசனையும் சந்தித்திருக்கின்றனர். திவ்யாவின் அம்மா தேன்மொழி, திவ்யாவின் காலைப் பிடித்து வீட்டிற்கு வா என அழுது கூப்பிட்டும், திவ்யா வர மறுத்திருக்கிறார். திவ்யாவின் உறவினர்கள் அவளைத் தனியாக அழைத்துச் சென்றும் பேசிப் பார்த்திருக்கின்றனர். வீட்டிற்குக் கூட்டிச் சென்று என்னைக் கொல்லத்தானப் போறீங்க, அதற்கு இங்கேயே என்னைய கொல்லுங்க” என்று அவர் கூறியிருக்கிறார்.

உன் பொண்ணு வரமாட்டேங்குறா, நீ இருக்குறதுக்கு தூக்கு போட்டு சாகலாம்” என்று உறவினர்கள் நாகராஜிடம் சொன்னதாகவும், அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர். அவருடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறுகிறார்கள் நத்தம் காலனி மக்கள். நாகராஜின் மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள், அது தற்கொலையாக இருக்க முடியாது என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றன.

நாகராஜின் உடலை அன்று மாலை 4 மணிக்கு நத்தம் காலனிக்குள் கொண்டு வந்து, பையன் வீட்டு வாசலில் வைத்து, அந்தப் பையன் வீட்டை முதலில் உடைத்திருக்கிறது நூறு பேர் கொண்ட கும்பல். பிறகு உடலை தருமபுரி – திருப்பத்தூர் சாலைக்கு கொண்டு சென்று, அங்கே வைத்து மறியல் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். பைக், வேன், டெம்போ, மினி லாரியில் சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் திரண்டுள்ளனர். ஒரு கும்பல் சடலத்தின் அருகில் இருக்க, இன்னொரு கும்பல் மரங்களை அறுத்துப் போட்டுச் சாலைகளை மறித்தது. மீதமுள்ளவர்கள் 400, 500 பேர் கொண்ட மூன்று குழுக்களாகப் பிரிந்து நத்தம் காலனி, கொண்டாம்பட்டி, அண்ணாநகர் ஆகிய கிராமங்களுக்குள் வெறிக்கூச்சலுடன் புகுந்திருக்கின்றனர்.

கடப்பாரை, சம்மட்டி, கோடாரி, பெட்ரோல் கேன், பெட்ரோல் பாம் பாட்டில்களுடன் வெறிக்கூச்சலிட்டுப் புகுந்துள்ளனர். ஒவ்வொரு வீடாகச் சென்று, கதவினை உடைத்து உள்ளே புகுந்து பீரோக்களை உடைத்து நகைகளையும் பணத்தினையும் கொள்ளையடித்துள்ளனர். துணிமணிகள், புத்தகங்கள், குடும்ப அட்டைகள், சான்றிதழ்கள், நிலப்பத்திரங்கள், மெத்தை, சோபா போன்றவற்றைக் கிழித்தெறிந்து மொத்தமாக எரித்துள்ளனர். கேஸ் சிலிண்டர்களைக் கழற்றி தாங்கள் கொண்டுவந்த வாகனங்களில் ஏற்றியுள்ளனர். தாங்கள் கொண்டுவந்திருந்த பெட்ரோலை பெயின்ட் அடிக்கும் ஸ்பேரேயரில் நிரப்பி வீடு முழுவதும் பீச்சி அடித்துள்ளனர். பிறகு வெளியிலிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசித் தீக்கிரையாக்கியுள்ளனர்.

ஓட்டு வீடுகளின் மேலே ஏறி, பெரிய கல்லால் அவற்றினை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர். மின்சார மற்றும் தண்ணீர் பைப் லைன்களையும், மீட்டர் பெட்டிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். வெளியே நின்றிருந்த சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்ற இரு சக்கர வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். உடைக்க முடியாத பீரோக்களையும், ஆடுகளையும் தங்களது வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். நத்தம் காலனி கொடகாரி அம்மன் கோயிலுக்குச் சோந்தமான 5 கிலோ தங்கம் மற்றும் 22 கிலோ வெள்ளி போன்ற விலை உயர்ந்த நகைகளை, அவை பாதுகாக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைத்துக் கொள்ளையடித்திருக்கின்றனர். மூன்று ஊர்களிலுமாக மொத்தம் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. 100-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சைக்கிள்கள், சில நான்கு சக்கர வாகனங்கள் உருத்தெரியாமல் எரித்துச் சிதைக்கப்பட்டிருக்கின்றன.

நாயக்கன் கொட்டாய், சோனயம்பட்டி, புளியம்பட்டி, சவுலுப்பட்டி, சீராம்பட்டி, ஒன்னியம்பட்டி, குடூர், ஆண்டிப்பட்டி, கதிர்நாயக்கன் நள்ளி, கொல்லுப்பட்டி, மொரப்பூர், கெங்குசெட்டிப்பட்டி, குண்டல்பட்டி – எனப் பல ஊர்களிலிருந்து சாதி வெறியர்கள் திரட்டப்பட்டிருக்கின்றனர். காரிமங்கலம் பெட்ரோல் பங்கிலிருந்து பெட்ரோலும், ஒன்னியம்பட்டி, கோணம்பட்டி ரேஷன் கடைகளிலிருந்து மண்ணெண்ணையும் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராஜா, மெடிகல் சிவா, கவுன்சிலர் பச்சையப்பன், லாரி மாது (செங்கல்மேடு), கொண்டம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பொன்னுசாமி, பா.ம.க. ஒன்றியச் செயலர் மதியழகன் போன்றோர் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியிருக்கின்றனர்.

தாக்குதல் தொடங்கிய நேரம் மாலை 4 மணியாதலால் ஊரில் ஆண்கள் இல்லை. பெண்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு கரும்புக்காட்டுக்கு உயிர் தப்பி ஓடி, இரவு முழுவதும் அங்கே ஒளிந்திருக்கின்றனர். தீயும் புகையும் சூழ்ந்து மூச்சடைத்துப் போன குழந்தைகளை, மற்ற குழந்தைகளின் சிறுநீரைக் குடிக்க வைத்துக் காப்பாற்றியிருக்கிறார்கள் பெண்கள்.

நடக்கவிருக்கும் தாக்குதல் பற்றி போலீசுக்கு ஏற்கெனவே தெரியும். நாயக்கன் கொட்டாய் பகுதியில் நிரந்தரமாகக் குடியிருக்கும் நக்சல் பிரிவு மற்றும் க்யூ பிரிவு போலீசார், கிருஷ்ணாபுரம் இன்ஸ்பெக்டர் போன்றோரிடம் நத்தம் காலனியிலிருந்து புகார் செய்து தாக்குதலைத் தடுக்குமாறு மன்றாடியிருக்கின்றனர். போலீசார் கண்டுகொள்ளவில்லை. சுமார் 100 போலீசாரும், தீயணைப்பு வண்டிகளும் தாக்குதலை வேடிக்கைதான் பார்த்திருக்கின்றனர். மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் பரமக்குடியிலிருந்து வந்து சேர்ந்த பின்னர்தான் கைது நடவடிக்கைகளே தொடங்கியுள்ளன. சுமார் 2000 பேருக்கு மேல் வன்முறையில் ஈடுபட்டிருந்தும், பத்து சதவீதம் பேர்கூட இதுவரை கைது செயப்படவில்லை.

அழிவு வேலையைக்கூட நுணுக்கமாகவும் வக்கிரமாகவும் நிதானமாகவும் செய்து முடித்திருக்கிறார்கள் சாதி வெறியர்கள். தரைக்கு டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடுகளில் அவை தூள் தூளாக நொறுக்கப்பட்டிருக்கின்றன. மாடி வீட்டின் மொட்டை மாடி உட்பட அனைத்தும் சேதமாக்கப்பட்டு, சுவர்களும் கூரையும் பிளக்கப்பட்டிருக்கின்றன. பெட்டிக்கடை, சவுண்டு சர்வீஸ், மரச்சாமான் வியாபாரம், பாத்திர வியாபாரம் போன்ற தொழில் செய்வோரின் ஆதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கின்றன. 4 நாட்களில் நடக்கவிருக்கும் மகளின் திருமணத்திற்கு வாங்கி வைத்த நகைகள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன.

இந்த தாக்குதல் திடீரென்று நடத்தப்பட்டதல்ல. மிகவும் நிதானமாக சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து வன்னிய சாதியினரைத் திரட்டி, ஆயுதங்கள் – எரிபொருள் ஆகியவற்றைக் கையாளும் முறை பற்றி சொல்லிக் கொடுத்து, திருட்டில் கைதேர்ந்தவர்களை வைத்துக் கொள்ளையடிக்கவும் ஏற்பாடு செய்து, உயிர்ச்சேதத்தை மட்டும் தவிர்த்து இந்த வெறியாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. குஜராத்தில் இந்துவெறியர்கள் நடத்திய வன்முறையைப் போன்றே இது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இத்தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் காடுவெட்டி குரு அப்பகுதிக்கு வந்து சென்றதாகவும் கூறுகின்றனர். இது மேலிருந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இது ஒரு காதல் திருமணம் தோற்றுவித்த கோபத்தில் வெடித்த வன்முறை அல்ல. நீண்டகாலமாக கனன்று கொண்டிருந்த சாதிவெறி. இப்பகுதியில் பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் கோவையிலும், திருப்பூரிலும், பெங்களூரிலும் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தில் ஓரளவு வசதிகளோடு வாழ்ந்துள்ளனர். தங்களிடம் கைகட்டி நிற்காமல், சுயமாக அவர்கள் அடைந்திருந்த வாழ்க்கைத் தரம்தான் சாதிவெறியர்களின் ஆத்திரத்தில் எண்ணெ வார்த்திருக்கிறது. தங்களுடைய வீட்டில் சாப்பிட்டவர்கள்தான் வீட்டின்மீது பெட்ரோல் குண்டுகளை எரிந்த தாகவும், காலையில் தன்னிடமிருந்து பைக்கை வாங்கி ஓட்டியவன், மாலையில் அதனை எரித்திருப்பதாகவும் கூறுகின்றனர் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களுடைய வாழ்க்கைத் தரம் சற்று மேம்பட்டிருப்பதைப் பார்க்கச் சகிக்காமலும், வயிறெரிந்து கொண்டிருந்த ஆதிக்க சாதிவெறி, தாக்குதல் நடத்துவதற்கு ஒரு தருணத்திற்காக காத்திருந்ததையே இந்த வெறியாட்டம் காட்டுகிறது. கடுமையாக உழைத்துச் சேர்த்த பணத்தில் அம்மக்கள் தங்கள் தலைமுறையிலேயே முதன்முறையாக எட்டியிருந்த பல வசதிகளை, ஒவ்வொன்றாகத் தேடிக் கண்டுபிடித்து அழித்திருக்கின்றனர். ஓலைக்குடிசை, அலுமினியப் பாத்திரம் என்ற வாழ்நிலைக்கு மீண்டும் அம்மக்களைத் துரத்தவேண்டும் என்ற வன்மத்தை மனதிற்கொண்டுதான் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

கொண்டம்பட்டியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞரும் வன்னிய சாதிப் பெண்ணும் திருமணம் செய்திருக்கின்றனர். அப்போது தேர்தல் நேரம் என்பதால், ஓட்டுகள் போய்விடும் என்று கருதி ஏதும் செய்யவில்லை. அன்று வருத்தத்தில் இருந்த பெண் வீட்டார் இப்போது சகஜமாகி, மருமகனுடன் சுமுக உறவு வைத்திருக்கின்றனர். இது சாதிவெறியர்களின் வெறியை அதிகப்படுத்தியிருக்கிறது. கொண்டம்பட்டிமீது தாக்குதல் நடத்துவதற்கு இது முக்கியமான காரணம்.

அண்ணா நகரில் அருந்ததியர் காலனிக்கு நிலம் ஒதுக்கீடு செய்தபோது, காலனி வந்தால் தங்கள் நிலத்துக்கு சுற்றித்தான் செல்லவேண்டும் என்பதால், அதனைக் கட்டக்கூடாது என்று வன்னியர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். எதிர்ப்பை மீறி இடம் ஒதுக்கப்பட்டு காலனி வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து, தற்போது தாக்குதல் தொடுத்திருக்கின்றனர் சாதிவெறியர்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட ஆதிக்க சாதிவெறியர்கள் ஆத்திரம் கொள்வதற்கு அவரவர்க்கு உரிய காரணங்கள் இருந்திருக்கின்றன. குறிப்பான காரணம் ஏதும் இல்லையென்றாலும், தங்களைச் சார்ந்திராமல், சொந்தக்காலில் அம்மக்கள் நிற்பதும், கவுரவமான வாழ்க்கை வாழ்வதுமே சாதிவெறியர்கள் ஆத்திரம் கொள்ளப் போதுமான காரணமாக இருந்திருக்கிறது. இளவரசன் – திவ்யா காதல் திருமணம் என்பது இத்தாக்குதலுக்கான ஒரு முகாந்திரம் மட்டுமே.

இந்தச் சாதிவெறியர்கள் பெரும் நிலவுடைமையாளர்கள் இல்லையென்றபோதிலும், இவர்கள் ஒரு புதியவகை ஆதிக்க சக்திகள். இட ஒதுக்கீட்டுக்காகப் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்றும்; சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கு சத்திரிய சாதியினர் என்றும் தம்மை அழைத்துக் கொள்ளும் வன்னியர், தேவர், கவுண்டர் போன்ற சாதிகளில் தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் புதிய ஆதிக்க சக்திகளை உருவாக்கியிருக்கின்றன. சுயநிதிக் கல்லூரி, ரியல் எஸ்டேட், பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜென்சிகள், செக்யூரிட்டி ஏஜென்சிகள், கந்துவட்டி பைனான்சு, பிற ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் போன்றவற்றில் ஈடுபட்டுக் கொழுத்திருக்கும் இந்தச் சாதிகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகள்தான், சாதிக்கட்சிகளின் தூண்கள். தத்தம் சாதிகளில் தமக்குத் தேவைப்படுகின்ற சமூக அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டு, அரசியல் அதிகாரத்தில் பங்கு பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் இவர்கள்தான், தற்போதைய சாதிவெறி நடவடிக்கைகளின் பின்புலத்தில் இருப்பவர்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தனது வன்னிய சாதிச் சங்க முகத்தை மறைத்துக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி என்று பொய்முகம் காட்டி, வன்னிய, தாழ்த்தப்பட்ட, இசுலாமியக் கூட்டணி கனவு கண்ட ராமதாசின் பிழைப்புவாதம் இன்று அம்பலப்பட்டு விட்டது. இனி எந்தக் கொள்கையையும் சொல்லித் தனது சொந்த சாதியினர் மத்தியிலேயே தான் செல்வாக்கு பெற முடியாது என்ற நிலையில்தான், வெளிப்படையாகவும் கிரிமினல்தனமாகவும் ராமதாசு சாதிவெறியைத் தூண்டுகிறார்.

வன்னியப் பெண்களை மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட அல்லாத எல்லா சமூகத்துப் பெண்களையும் தலித் இளைஞர்கள் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றிப் பணம் பறிப்பதாக ஒரு கட்டுக்கதையைப் பரப்பி, ஆதிக்க சாதியினர் அனைவரையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகத் திருப்பி, அவர்கள் அனைவரின் பிரதிநிதியாகத் தன்னை முன்நிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக சாதிக் கட்சிகளின் கூட்டணி என்று ராமதாசு முன்வைப்பது முக்குலத்தோர், கவுண்டர் உள்ளிட்ட எல்லா ஆதிக்க சாதியினருக்கும் உவப்பானதொரு முழக்கம். அதனால்தான் நாயக்கன் கொட்டாயில் இத்தகையதொரு கொடூரமான வன்கொடுமைத் தாக்குதலை நடத்திவிட்டு, நாகராஜை தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடு என்று திமிர்த்தனமாக பா.ம.க. பேசுகிறது.

மருத்துவர் ஐயாவுக்கு முற்போக்கு முகச்சாயம் பூசியவர்களும், தமிழ்க்குடிதாங்கி பட்டம் கொடுத்தவர்களும், தாழ்த்தப்பட்டோர்-பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை பேசியவர்களும், சாதிகளுக்கிடையிலான ஒற்றுமை பேசியவர்களும் இப்போது பம்முகிறார்கள். பார்ப்பனரல்லாத இடைநிலைச் சாதிகளின் ஆதிக்க சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்கொடுமை இழைப்பதென்பது புதிதல்ல. சாதிவெறி இலைமறை காயாக இல்லாமல் வெளிப்படையாக வருகிறது என்பதுதான் இப்போது புதியது.

சாதி, உட்சாதி அடையாளங்களை அங்கீகரிக்க வேண்டுமென்றும், கம்யூனிஸ்டுகள் அவற்றை அங்கீகரிக்க மறுப்பதாகவும் கூறி கம்யூனிச எதிர்ப்பு அரசியலை முன்நின்று நடத்தியவர்கள்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். அடையாள அரசியல் என்பது சாதி அடையாளங்களை உறுதிப்படுத்தவும், சாதி – உட்சாதிப் பிளவுகளை அதிகப்படுத்தவும்தான் பயன்பட்டிருக்கிறது. அது அவ்வாறு மட்டுமே பயன்பட முடியும். சாதி என்ற நிறுவனமே ஜனநாயகத்துக்கு எதிரானது. சாதியின் அடிப்படையில் திரட்டப்படும் மக்களை வைத்து சாதி ஒழிப்பையோ, ஜனநாயகத்தையோ ஒருக்காலும் கொண்டுவர முடியாது. எந்த முற்போக்கான கோரிக்கையையும் சாதிக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டோர் மத்தியிலான சாதிகள் – உட்சாதிகளுக்கும் இது பொருந்தும்.

நக்சலைட்டு அரசியலின் செல்வாக்கு இருந்தவரை சாதி ஆதிக்கம் இல்லை என்பது, நத்தம் காலனி உள்ளிட்ட ஊர்களின் மக்கள் மட்டுமின்றி, முதலாளித்துவ ஊடகங்களும் இன்று ஒப்புக்கொள்ளும் உண்மை. இது வெற்றுப் பெருமை அல்ல, வர்க்க அரசியலின் வலிமை. புரட்சிகர அரசியலை நசுக்கி விட்டு, அந்த இடத்தில் சாதிய அரசியலையும், ஓட்டுச்சீட்டு பிழைப்புவாதத்தையும் மாற்றாக நுழைத்ததன் விளைவுதான் சாதிவெறியின் செல்வாக்கு.

வன்னிய சாதிவெறியர்கள் மற்றும் ஆதிக்க சாதிவெறியர்களுக்குத் தண்டனையும், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிவாரணமும், நீதியும் கிடைக்கப் போராடுகின்ற அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் தலையெடுத்து வரும் சாதிய அரசியலை நேருக்குநேர் மோதி முறியடிப்பதும் அவசரக் கடமையாக இருக்கிறது.

தகவல் உதவி : விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம் மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

___________________________________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
___________________________________________________________