privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்கா12-12-12 : சூப்புற பாப்பா முதல் சூப்பர் ஸ்டார் வரை !

12-12-12 : சூப்புற பாப்பா முதல் சூப்பர் ஸ்டார் வரை !

-

ந்த “மேஜிக்” நம்பர் கடிகாரங்களில் கடந்து போயிருக்கிறது. பெரும்பாலான மக்கள் தமது வாழ்வில் இன்னொரு முறை பார்க்க முடியாத நூறு வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த எண்ணை இந்தியாவிலிருந்து லாஸ் வேகாஸ் வரை காதலர்களும் எண் சோதிட பைத்தியங்களும் கொண்டாடியிருக்கின்றனர்.

லாஸ்வேகஸில் உள்ள விவா திருமண அரங்கில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 40 வெவ்வேறு 12/12/12 திருமண பேக்கேஜ்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. இந்த நாளில் வழக்கத்தை விட 10 மடங்கு அதிகமாக 100 தம்பதியினர் விவா லாஸ்வேகாஸ் மேடையில் திருமணம் செய்து கொண்டார்கள். நல்லவேளை இந்த அபூர்வ நேரத்தில் பிரிந்தால் நல்லது என்று விவாகரத்து வேண்டி வழக்கறிஞர்களை யாரும் நாடியதாக தகவல் இல்லை.

எதையுமே சரக்காக்கிவிட வேண்டும் என்பது முதலாளித்துவ பொருளாதார அடிப்படை. எதையுமே மக்களை அடக்கவும் அவர்கள் மனதில் பயத்தை விதைத்து தங்கள் கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றன அர்தசாஸ்திரம் முதலான ஆளும் வர்க்க நெறிமுறைகள்.

அதைத் தவறாமல் பின்பற்றுபவர் பெரிய இடத்து நம்பிக்கையாளர் போப் பெனடிக்ட் XVI. அவர் தனது முதல் அதிகாரபூர்வ டுவிட்டர் செய்தியை 7 லட்சம் பின்தொடர்வோருக்கு 12-12-12 அன்று அனுப்பினார். ஊழல்களினாலும் செக்ஸ் மோசடிகளாலும் பூத்துக்குலங்கும் திருச்சபையின் பெருமையை இந்த மாஜிக் நேரம் மாற்றி விடுமா என்ன?

அவ்வளவு யோசிக்காத அலபாமாவைச் சேர்ந்த கியாம் மோரியா என்ற சிறுவனுக்கு ரஜினியைப் போன்ற சூப்பர் ஸ்டாராக இல்லா விட்டாலும் 12-12-12 அன்றே சரியாக 12 வயது ஆகியிருக்கிறது. ஆப்பிரிக்காவில் இறக்கும் குழந்தைகளை வெறும் புள்ளிவிவரங்களாக மாற்றியிருக்கும் பன்னாட்டு செய்தி நிறுவனங்கள் இதையெல்லாம் செய்தியாக்கி நம் தலைமையில் கொட்டுகின்றன.

தமிழகத்திலோ இந்த நிகரற்ற நாளில் பிறந்த நாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் எப்போதும் இல்லாத சிறப்புச் சலுகையாக காலை 9 மணிக்கு தனது வீட்டுக்கு வெளியில் வந்து ரசிகர்களுக்கு தரிசனம் அளித்தார். அதன் பின்னே “சிவாஜி 3 டிடி” ரிலீசும், ரிலீசாகப் போகின்ற கோச்சடையான் என்ற இரண்டு சுயநலங்களும் பச்சையாகக் கலந்திருந்தன.

தமிழ் பத்திரிகைகளும், தொலைக்காட்சி சானல்களும் ரஜினி பற்றி சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பின. சாதாரணமாகவே ரஜினி பிறந்த தினம் என்று லாபத்தை குவிக்கும் அவர்கள் ‘நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் நாளில் எல்லாம் மறந்துவிட்டு டிவி முன் உட்காருங்கள்’ கை கூப்பி அழைத்து உட்கார வைத்து கல்லா கட்டினார்கள்.

எதையும் மூடநம்பிக்கையாக்க கற்றுக் கொடுத்திருக்கும் பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவில் வேறு ஒரு சிக்கல் ஏற்பட்டது. இந்த அரிதான கணத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்ட காதலர்களும், குழந்தையை இந்த நேரத்தில் சிசேரியன் செய்து எடுக்க வேண்டும் என்று விரும்பிய இளம் பெற்றோரும் நாள் அமாவாசையாக இருப்பதால் மாற்று வழிகளை தேடினார்கள்.

மும்பையைச் சேர்ந்த ஷாலினியும் பாலாவும் திருமணச் சடங்குகளை நல்ல நாளில் வைத்துக் கொண்டு திருமணப் பதிவை 12-12-12 அன்று நடத்தத் திட்டமிட்டார்கள். சங்கேத்தும் குஷ்புவும் ஞாயிற்றுக் கிழமையே திருமணம் செய்து கொண்டு திருமணச் சான்றிதழை 12-12-12 தேதியிட்டு பெற்றிருக்கிறார்கள்.

12-12-12 அன்று குழந்தை பெற நாள் குறிக்கப்பட்ட திரிப்தி என்ற இளம் தாய் அவரது மருத்துவர் ரீஷ்மாவிடம் சொல்லி குழந்தை பிறப்பை 15ம் தேதிக்கு தள்ளிப் போட வைத்துள்ளார். 12-12-12ல் பிறந்தால் ஏற்படும் நல்லூழை அமாவாசையில் பிறந்தால் ஏற்படும் துரதிர்ஷ்டம் ரத்து செய்து விட்டிருக்கிறது.

ஒரு குழந்தை பிறக்கும் நேரம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றால் அது தாய்க்கும் சேய்க்கும் மருத்துவ ரீதியாக நன்மை தரும் நேரமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் நல்ல நேரம், நல்ல நாள், அஷ்டமி, அமாவாசை தவிர்ப்பு என மக்கள் மூட நம்பிக்கையின் நீட்சியாக தங்களுக்குப் பிடித்த நேரத்தில் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுக்குமாறு கோரும் பைத்தியக்காரத்தனம் சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

‘பந்தயத்தில் தங்கள் குழந்தை எப்பொழுதும் தனித்தும், வித்தியாசமாகவும், அறிவு ஜீவியாகவும் தெரிய வேண்டும், அது தான் இந்த நுகர்வு சமூகத்தில் குழந்தைக்கு நல்ல எதிர்காலத்தை தரும்’ என்ற குழந்தையின் எதிர்காலத்தை பற்றிய பயம்தான் அதன் பிறப்பு நேரம் குறித்தும் பதறுகிறது.

’24 மணி நேரமும் குழந்தை அதை கற்க வேண்டும் இதை கற்க வேண்டும், ஐஐடி யில் படிக்க வேண்டும், அமெரிக்க பெரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்’ அதே போல் ‘நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும்’

வாழ்க்கை இழந்த எண்ணற்ற விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மீட்கவும், வெயிலோ மழையோ நல்ல நாளோ கெட்ட நாளோ வேலைக்கு சென்றால் தான் அடுத்த வேளை சோறு என்ற நிலையில் இருக்கும் கூலி உழைப்பாளியின் விடிவிற்காகவும், ஒட்டு மொத்த மனித குல விடுதலைக்காகவும் உழைக்கும் நமக்கோ 12/12/12 என்பது மற்றுமொரு நாள். அவ்வளவே! என்றாலும் அவர்கள் ஓயவில்லை. இந்த அக்கப் போர் முடிந்த கையோடு மாயன் காலண்டர் – உலகம் அழிகிறது என்று அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டார்கள்!

படிக்க: